MY BOOKS J K SIVAN

என் புஸ்தகங்கள் –  நங்கநல்லூர்   J K  SIVAN 

ஷேக்ஸ்பியர், ஷெல்லி,  மில்டன், பைரன்  என்று   படா படா  BADAA    பிரபல   பெயர்கள் சொல்வேன் என்றால்  ஏமாந்து போவீர்கள்.  அதற்கு முன்னால்  நானே சமர்த்தாக  என்னைக் கவர்ந்த புஸ்தகங்களை பற்றி சொல்லி விடுவது நல்லது.   என்  ஷேக்ஸ்பியர், ஷெல்லி, மில்டன்கள்  வேறுமாதிரி.

 பொறுமையாய் இதை படிப்பவர்களுக்கு  ஒரு நிபந்தனை,கண்டிஷன். இதை புரிந்து கொள்ள  நீங்கள்  குறைந்தது  75 வயதாவது  ஆகியிருந்தால்  தான்  நான் சொல்லும் புஸ்தகங்கள், அதில் வரும் பெயர்கள் நன்றாக புரியும், நினைவுக்கு வரும். ஞாபகப்படுத்தும்.   மற்றவர்கள்  புரியாமல்  தண்டத்துக்கு  படிக்கும்  எத்தனையோ  விஷயங்களில்  இதையும்  ஒன்றாக கருதி மேயலாம்.

அணில் என்று  ஒரு   புத்தகம் ஒரு கையடக்க புத்தகமாக  16  பக்கங்களில்  வாரம்  ஒரு முறை வந்தபோது  அதற்கு  நல்ல  டிமாண்ட்  வாண்டுகளிடம்  இருந்தது.    (வாண்டு மாமா என்ற  பெயர்  குழந்தைகள் உலகில் அப்போது  பிரபலம்.ரேடியோவில் கதை சொல்வார்)

அணிலின் விலை  ஒரு  அணா  என்று  ஞாபகம். பச்சையிலும்  சிகப்பிலும்  படங்களின் மேல்  வர்ணம்  தீட்டியிருந்தாலும்  வர்ணங்கள்   படத்தின்  எல்லை தாண்டி எழுத்துகளின் மேல்  கூட  வியாபித்து இருக்கும். பின் பக்கம் பேப்பரில் எழுத்துக்களை மறைத்துக்கொண்டு  பச்சை,  நீளமாக  சிகப்பாக வர்ணம்  தெரியும்.  

நிறைய  தாத்தா  பாட்டி,  குரங்கு கதைகள்  விருப்பமாக  படித்திருக்கிறேன்.   சூளைமேட்டில் செல்வராஜ் தான் இந்த புத்தகங்களை வாங்கி பத்திரமாக  வைத்திருப்பவன்.  நான்  ஓசியில்  புத்தகம்  படிக்கும், இரவல் வாங்கும்  வர்க்கம் அப்போதும் கூட.  லேசில் புத்தகம் தரமாட்டான். ரொம்ப பிகு பண்ணிக்  கொண்டு  பலமுறை  அலைக்கழிப்பான்.
 சனிக்கிழமை  தான் புத்தகம் வரும்.   சைக்கிலில் ஒரு முண்டாசு  ஆசாமி  கொண்டு  கடையெல்லாம்  போடுவான்.  சத்தார்  கடையில்  புளி  டப்பா  மேல்  இந்த  மாதிரி  புத்தகங்களை  வைத்திருப்பார்.   அந்தகால  சினிமா பாட்டு புத்தகங்கள் , ஜோசிய  புத்தகங்கள்,  கைரேகை  சாஸ்திரம்  என்று சில  புஸ்தகங்கள் இருக்கும். அவர் கடையில்  மஞ்சள் கலர்  அட்டை,  பழைய  கிண்டி குதிரைப்  பந்தயத்தில்  ஓடும்  அஸ்வங்களின்  ஜாதகங்களை ராசிபலனைப் பற்றிய    புத்தகங்களை வாங்க ரசிகர்கள்  குதிரைப் பைத்தியங்கள்  நிறைய  வட்டமிடும். 

சிலநாளில்  ”டமாரம்”  புத்தகம் வந்தது.  வந்த வேகத்தில்  மறைந்தது. ”அணில்”  அதிகமாக  ஜீவிக்க வில்லை.   அல்ப  ஆயுசோடு தான்  இருந்தது. கல்கண்டு  புரட்சிகரமாக  புகுந்து   அதன் இடத்தை  பிடித்துக்கொண்டது.   தமிழ் வாணன்  எழுதும்   நடை எல்லோருக்கும்  பிடித்தது.  கேள்வி பதில்   சுவாரஸ்யமாக இருக்கும்.  எந்த  நோய்க்கும்  மருந்து சொல்வார்.   ஆனால் அவர் சொல்லும்  வஸ்துக்களை தினமும்  புடைத்து, ஊறவைத்து  அரைக்க, அம்மி  வேண்டும்.  வடிகட்டி குடிக்க சொல்வார். எத்தனை பேர்  செய்தார்கள்.  வியாதிகள்  குணமாகியதா  நூறு வயது வாழ்ந்தார்களா?  என்ற  விவரம்   இன்னும்  காதுக்கு  எட்ட வில்லை.  வயிற்று வலியைப்  போக்குவது எப்படி?  நூறு வயது வாழ்வது எப்படி?, சம்பாதிப்பது எப்படி  என்று  எப்படி எப்படி புஸ்தகங்களாக  நிறைய  எழுதுவார்.

 சங்கர்லால்  இந்திரா  கல்யாணத்தை  வெகு சிறப்பாக  அறிவித்து,  கல்கண்டு  பத்திரிகை  கலர்  கலராக  தோரணமாக  வந்தது  ஞாபகம் இருக்கிறது.  கத்திரிக்காய்  குள்ளமாய்  தொப்பை மேல்  அரை நிஜாருடன், சட்டையில்லாமல்  தலையில்  கிரிக்கெட் தொப்பியுடன்  நிற்பது.  நெட்டையாக  மாணிக்கம். ஒரு கட் பனியனுடன்  இருப்பான்.    முழுக்கை சட்டையை  பேண்டுக்குள் நுழைத்து  வாராமல்  கலைந்த  தலை  கருப்புக்  கண்ணாடியுடன்  சங்கர்லால்  மேஜைமேல்  இரு  கால்களையும்  நீட்டியவாறு  60 டிக்ரீயில்  நாற்காலியில்  சாய்ந்திருக்கும்  படம்  இன்னும்    நினைவில் இருக்கிறது.சங்கர்லால்  தான் எங்களுக்கு ஷெர்லாக் ஹோம்ஸ். வெள்ளைக்கார துப்பறிபவனை அறியாத  வயது.

சங்கர்லால் கதை  விறுவிறுப்பாக  வரும்.  துப்பாக்கி  எடுத்துக்  கொண்டு ஒருவன் சங்கர்லாலை  சுட  குறி  வைத்திருப்பான்.  அப்போது..”டமால்”   குபீர்…. இப்படி   பாதியில்   கதையை  நிறுத்திவிட்டு   ஒருவாரம், அடுத்த  பிரதி வரும் வரை  நம்மை  குடைந்து   தூக்கமின்றி  செய்து  விடுவார் தமிழ் வாணன்.  அது  அவர்  பாணி.  இதற்கு  அடிமைகள்  என்னைப்போல்  எத்தனையோ  ஆயிரம் பேதை  ரசிகர்கள்.  அடுத்த   வாரம்  சத்தார்  கடைக்குப்போய்  கல்கண்டு வந்து விட்டதா என்று   அடிக்கடி பார்த்து வருவதற்குள்  பொறுமை  போய் விடும்.. வந்திருந்தால்  அடுத்த   படையெடுப்பு செல்வராஜ்  வீட்டுக்குத் தானே.  மீசைக்காரர்  ஒருவர்  கடு கடு  வென்று  எப்போதுமே  மிளகாய் தின்ற மாதிரி  அவன்  வீட்டில்  காலை வேளைகளில் வாசல் கம்பிக்கு பின்னால்   சைக்கிள் பக்கத்தில்  உட்க்கார்ந்து இருப்பார்.  அவர்  இருந்தால்  செல்வராஜை  பார்க்க   விடமாட்டார் .  ”செல்வராஜ் வேலையா  இருக்கான் போய்ட்டு அப்புறம்  வா”   என்று விரட்டி விடுவார்.  அவர் செல்வராஜ்  வீட்டு எஜமானன். செல்வராஜ்  அவர் இருக்கும்போது கண்ணிலேயே படமாட்டான்.   ”கடவுளே நான்  அவர்  கண்ணில் படக் கூடாது” என்று எத்தனையோ முறை கடவுளை வேண்டிக்  கொண்டிருக்கிறேன்.
சங்கர்லால் மாது போட்டு தரும்  டீ  அடிக்கடி குடிக்கும்  துப்பறிவாளன். இன்ஸ்பெக்டர்  வஹாப்  அவரோடு அடிக்கடி  மோதுபவர்.  பெர்ரி மேசன் கதையில் வரும்  லெப்டினண்ட்  ட்ராக்   TRAGG   மாதிரி. இந்திரா  தான்  டெல்லா  ஸ்ட்ரீட். DELLA  STREET.    தமிழ்  வாணனை   கருப்பு  கண்ணாடி  தொப்பியுடன்  தான் போட்டோவில்  பார்த்திருக்கிறேன். கல்கண்டு ரெண்டணா .அதாவது  12  பைசாவுக்கு  விற்றது என்று ஞாபகம்.

ஆனந்த  விகடன்  வியாழக்கிழமை சாயந்திரம் வரும்.    எங்கள்  தெரு கடைசியில் ஒரு  பஜனை கோவில்  அதற்கு முன்பு  ஒரு  விறகு  தொட்டி..  அதில் பாதி பாகம் அதன் அதிபர்  சத்தார் வீடு. அதன் முகப்பில் தான்  ஒரு சிறிய பலசரக்கு  கடை. அதில் A  டு Z எல்லா  வஸ்துக்களும் அவர் கடையில்  கிடைக்கும்.  எங்களது  எக்ஸ்பிரஸ் அவினியு   அது.  அதை விட்டால்  சூளைமேடு தெருவில் நடந்து  கால் மணி நேரம்  கடந்து  ஆர்காட் ரோடு  போனால்  கிடைக்கும். கொஞ்சம் விலை குறைவாக  சாமான் மொத்தமாக  வாங்குபவர்கள்  அங்கு  தான்  போவார்கள்.  

நான்   செல்வராஜ் வீட்டுக்கு தான் போவேன்.  ”ஐந்து  நாடுகளில் அறுபது  நாள்”  என்று  தேவன்  தென் கிழக்கு  ஆசிய  விஜயம்   பற்றி எழுதியதை ஆனந்த விகடனில் படிப்பேன்.  கருப்பு வெளுப்பு படங்கள் போட்டிருப்பார்.  அப்போது  தான் வெளிநாட்டு  படங்களை முதன் முதலில்  பார்த்தேன்.  தேவனின் CID , சந்துரு, மிஸ்டர் வேதாந்தம், ஜஸ்டிஸ் ஜகந்நாதன்,     லக்ஷ்மி  எழுதிய நாயக்கர்  மக்கள், பண்ணையார்  வீடு  எல்லாம் என்  தாயார் விரும்பி  படிப்பாள் . கல்கியும்   விகடனுமே   நாலணா தான்.  கல்கி  அசகாய  சூரர்.  பார்த்திபன் கனவு,  சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன், அலையோசை என்று  பின்னி விடுவார். மக்கள்  அலைமோதும்  ஒவ்வொரு வாரமும் படிக்க.  அடாடா  மணியம்  போடும் படங்கள்  கல்கியின் அட்டைப்படங்களாக  தத்ரூபமாக இருக்கும்.  பெரிய பழுவேட்டரையர், சின்ன பழுவேட்டரையர், வந்தியத்தேவன்,குந்தவை, நந்தினி   ஆழ்வார்க்கடியான்  படங்கள் கொஞ்சமும் முகம் மாறாது. எல்லா படங்களும் போட்டோ பிடித்த மாதிரி இருக்கும்.  எப்படிதான்  மணியம்  கற்பனையில்  இவர்கள்  பிறந்தார்களோ என்பது  உணமையிலேயே  ஒரு  அதிசயம். கல்கியின் வர்ணனை தான்  அஸ்திவாரம்.

இவர்களுக்கு  சற்றும்  சளைத்தவர்கள்  அல்ல  கோபுலுவின்  சாம்பு, நாயர்,  சந்துரு, சுதர்சனம்,  வேதாந்தம்  ஆகியோர்.  தேவனின்  அமர காவியங்களில் வரும்  கதா பாத்ரங்கள்  இவர்கள்.  கோபுலுவின்  மைதிலி   இன்னும்  நாணத்துடன் 9 கஜத்தில்  கோணல் சிரிப்புடன்  நெஞ்சில்  குடி கொண்டுள்ளாள்.  அட்டையில்  விசிறிக் காம்புடன் ஒரு சிறு   விளக்கெண்ணை குடிக்க வைக்கும்  சித்திரம் மறக்க முடியவில்லை.  அடிக்கடி  இன்னும்  அந்த படத்தை என் கட்டுரைகளில் உபயோகிக்கிறேன். 

நாடோடி  என்ற  வெங்கடராமன், ஒரு பக்கத்தில்  அல்லது  ஒரு   கட்டுரையில்  குணச்சித்ரங்களை அசத்திவிடுவார். அவர்  ஹாஸ்யம்   கற்பனை  தனி ரகம்.   சசி  என்பவர்  ஒரு பக்கத்தில்  ஒரு கட்டுரை எழுதுவார்.  டர்னிங் பாய்ன்ட்  ரகசியம்  கடைசி  பாராவில்  அல்லது  வாக்யத்தில்   தான் வரும்.  சித்திர ராமாயணம் படங்கள்  நன்றாக இருக்கும். தென்னாட்டு  சிற்பங்கள்  என்று  ஒரு   தமிழ் கட்டுரை  விடாமல்  வந்தது.  தெ .போ . மீனாக்ஷி  சுந்தரனார் என்று   ஒருவர் எழுதுவார்.   சாரி. ஒப்புக்கொள்கிறேன்.  இன்று  வரை  அன்றுமுதல்   அதை படித்ததில்லை.  படம் மட்டும்  பார்த்துவிட்டு  பக்கம் புரட்டியிருக்கிறேன்.  சில்பி யின்  ஆலய,  விக்ரஹ படங்களில்,  விளக்கு  எரியும்  ஜோதியில்,  உடைத்த தேங்காயின்  உள்  வெண்மையில்,  சிலைகளின்  தத்ரூபங்களில் என்னை  இழந்திருக்கிறேன். இன்றும்  அவற்றை பார்க்க நேரும்போது  நானே சிலையாகிறேன்.  

இதற்கும்  முந்தைய  விகடன்களில்  கல்கி  கர்நாடகம் என்று  எழுதுவது,  ஆடல்  பாடல் பகுதி,   சாமாவின் படங்கள்,  சாமா   சாஸ்த்ரி பாகவதர்  சிரீஸ்,    ராஜுவின் படங்கள்  என்றும்  நினைவில்  அழியாதவை.

அம்புலிமாமாவில்  விக்ரமாதித்தன் வேதாளம் கதைகள் என் மனதை   கொள்ளை கொண்டது.  சித்ரா,  சங்கரின்  படங்கள்  கண் முன்னே நிற்கிறது.

அவ்வப்போது தெருவில் ஒத்தை மாட்டு  வண்டியில்,  ஆரியமாலா   போஸ்டர்கள் ரெண்டு பக்கமும் வண்டியின்  பக்கங்களில் கூம்பாக மாட்டிக்கொண்டு,  உள்ளே  ஒரு  கிளாரினெட்  ஆசாமி வாசித்துக்கொண்டு,  ஒருவன்  பிட் நோட்டிஸ் கொடுத்துக்  கொண்டு  வருவான்.  கூடவே ஓடிப்போய்  நிறைய  நோட்டிஸ்  வாங்கியிருக்கிறேன். பச்சை, மஞ்சள், ஆரஞ்ஜு   கலரில்  கதை சுருக்கம் போட்டு,  மற்றவை  வெள்ளித்திரையில்  காண்க  என்று ஆசையைக்  கிளப்பி  விட்டிருப்பார்கள்.

தினமணி கதிர்  என்ற ஒரு  வாரப்பதிப்பு  அதில்  டப்பாச்சி   என்று மரப்பாச்சி  போன்ற  பொம்மை  கதை  வரும்.  

தினத்தந்தி  என்ற  பத்திரிகை  அப்போது  நிறைய  பேர்  வாங்குவார்கள்.  அதில்   ஏதோ ஒரு  கார்ட்டூன்  தினமும்  வரும்.  அதை  அக்கு வேறு   ஆணிவேராக  மேலும் கீழும்  அலசுவார்கள்.  மேலும்  கீழும்  திருப்பி  என்னவோ  தேடுவார்கள்.  இதற்காகவே அதை  வாங்குவார்கள். என்ன  என்று  பிறகு  தெரிய  வந்தது. காட்டன் என்ற  சூதாட்டத்துக்கு  எந்த  எண்  அதிர்ஷ்ட  நம்பர் என்று அந்த  கார்ட்டூனில்   வருமாம்.   அதை  தான்  தேடிக்கொண்டிருப்பார்கள்.  இப்போது  சிரிப்பு  வருகிறது.  முட்டாள்கள் எப்போதுமே  உண்டு.அ  தில்  ஒரு  ஆண்டி  வேதாந்தம்  அன்றாடம் சினிமா பாட்டுடன்  வரும். வெங்காய சருகு சேலை கட்டிய  பெண்கள்  காணமல் போனது, போன்ற  செய்திகளை  நிறைய  பேர்  விரும்பி படிப்பார்கள். எங்கள்  வீட்டில் அந்த பேப்பரை பார்த்ததில்லை.  கொண்டுவந்தால் அப்பா  வெட்டிப் போட்டுவிடுவார். எத்தனையோ இன்னும்  சொல்லவில்லை… ;நேரமோ  இடமோ  இல்லையே. நீளமாக  போய்க்கொண்டே  இருக்கிறதே. திட்டமாட்டீர்களா?

 

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1426

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *