SOUNDARYA LAHARI 21/103 J K SIVAN

ஸௌந்தர்ய லஹரி – 21/103 – நங்கநல்லூர் J K SIVAN

21. சக்தியின் மின்னல் கொடி போன்ற வடிவம்

तटिल्लेखातन्वीं तपनशशिवैश्वानरमयीं निषण्णां षण्णामप्युपरि कमलानां तव कलाम् ।
महापद्माटव्यां मृदितमलमायेन मनसा महान्तः पश्यन्तो दधति परमाह्लादलहरीम् ॥ २१॥

taṭillēkhātanvīṃ tapanaśaśivaiśvānaramayīṃ niṣaṇṇāṃ ṣaṇṇāmapyupari kamalānāṃ tava kalām ।
mahāpadmāṭavyāṃ mṛditamalamāyēna manasā mahāntaḥ paśyantō dadhati paramāhlādalaharīm ॥ 21 ॥

தடில்லேகாதன்வீம் தபனஶஶி வைஶ்வானரமயீம் நிஷண்ணாம் ஷண்ணாமப்யுபரி கமலாநாம் தவகலாம்
மஹாபத்மாடவ்யாம் ம்ருதித மல மாயேன மனஸா மஹாந்த: பஶ்யந்தோ தததி பரமாஹ்லாத லஹரீம் 21

இந்த ஸ்லோகத்தின் விசேஷம் என்ன தெரியுமா? தபஸ்விகள், மாயையை கிட்டேயே அணுகவிடாத வைராக்ய புருஷர்கள், ஸ்ரீ லலிதா உபாசகர்கள், பரிசுத்தமான மனசில், அம்பாளை தரிசிக்கிறார்கள். மின்னல்கொடியாகவும், சூர்ய பிரகாசமாகவும், சந்திரனின் குளிர்ந்த அம்ருத ஒளியாகவும், அக்னியின் பரிசுத்தமாகவும் குண்டலினி ஆறு சக்ரங்களை எல்லாம் கடந்து ஸஹஸ்ராரத்தில் அனுபவித்து ஆனந்திக்கிறார்கள் என்கிறார் ஆதி சங்கரர்
ஆறு குண்டலினி சக்ரம் எனும்போதே அது மூன்று க்ரந்திகளில் , முடிச்சுகளில் அடக்கம் என புரியுமல்லவா, ப்ரம்மா, விஷ்ணு, ருத்ர முடிச்சுகள் மீதான தியானம் என்று நினைவுக்கு வரும்.
இடா பிங்கள நாடிகளை சீராக கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு நடுவே சுஷும்னா நாடியில் குண்டலினி சக்தியை மேலே ஏற்றுகிற ஞானி, மாயையால் பாதிக்கப் படாதவன். பரமானந்தத்தை துய்ப்பவன். இடது நாசி, வலது நாசி துவாரங்களில் மூச்சை உள்ளே இழுத்தும், வெளியே செலுத்துவதிலும் ஒரு சரியான கால ப்ரமாணம் காணப்படும். இதற்கு சமனா என்று பெயர். குண்டலினி தியானத்தில் பிராணாயாமம் ஒரு முக்கிய அங்கம்..
நடு முதுகெலும்புக்குள் சுஷும்னா நாடி எனும் குலுக்கிய நரம்புப்பாதைக்குள் குண்டலினி சக்தி மேலே ஆறு சக்ரங்களை கடந்து சிரசுக்குள் ஸஹாஸ்ராரம் வரை செல்வது எளிதல்ல. ஸஹஸ்ராரத்தில் அம்பாள் சிவனோடு ஐக்யமாகிறாள். அந்த க்ஷணத்தில் சக்தி மின்னல் கீற்றாக, நெற்றியில் வெளிப்படும். நிலையான ஒளி அல்ல அது. சிவனும் சக்தியும் இணைவது இரு ஒளிக்கீற்றுகள் ஒன்று சேர்வது. அம்பாள் சிவனைப் போல் தானே ஒளிரும் சக்தி இல்லை. சிவனோடு சேர்ந்ததும் தான் அவள் சக்தி பெருகுகிறது. அர்த்தநாரி அவள். சிவனை இடைவிடாது பிரியாதவள்.
மனசின் அழுக்குகள், காமம், அகம்பாவம், லோபம், மோகம், க்ரோதம் போன்றவை. உலக வஸ்துக்களின் ஈர்ப்புகள் இந்த உணர்வுகளை உடலில் தூண்டிவிடுகிறது. மனதை இழுப்பவை. மனதை இதிலிருந்து விலகி திடமாக இருக்கச்செய்ய சக்தி உபாசனை அவசியமாகிறது. அதன் மூலம் ஆத்ம ஞானம் பெற இயலும்.
சிவனின் இயற்கையான சக்திக்கு ஸ்வாதந்த்ரிய சக்தி என்று பெயர். அதை முழுமையாக அம்பாளுக்கு, சக்திக்கு சிவன் அளித்துவிடுவதால் அம்பாள் தானும் ஸ்வயமாக அந்த சக்தியை வெளிப்படுத்துவதால் அவளையும் ஸ்வாதந்த்ரிய சக்தி என ஸ்லோகத்தில் சொல்லப்படுகிறது. பிந்துவை ஆசனமாக்கி அதில் அமர்கிறாள் சக்தி. ”லலிதா சஹஸ்ரநாமம் 905 வது நாமம் அம்பாளை ”பைந்தவாசனா” பிந்து எனும் ஆசனத்தில் அமர்பவள் என்று போற்றுகிறது.
ஏற்கனவே சொன்னதை ஞாபகப்படுத்துகிறேன். ஸ்ரீ சக்ரத்தின் மத்யபாகம் பிந்து. எல்லாவற்றுக்கும் உள்ளே திகழும் முக்கோண சக்ரத்தின் பெயர் சர்வானந்தமய சக்ரம். அது தான் பைந்தவ ஆசனம். நவாவரணத்தில் ஸ்ரீ மஹா த்ரிபுரசுந்தரியாக விளங்கும் அம்பாளுக்கு ஷோடசி மந்த்ர உபாசனையில் பராபட்டாரிகா என ஒரு நாமம். உயர்ந்த வித வழிபாட்டுக்குரியவள் என்று அர்த்தம். காமகளாவில் மூன்று பிந்துக்கள். வெள்ளை, சிவப்பு, மற்றும் வேறு பல வண்ணங்கள் கொண்டவை அவை. வெள்ளை: சிவன், சிவப்பு: சக்தி எனும் அம்பாள், அவை சுருங்கி விரிந்து பிரபஞ்சம் உருவாகிறது. பல வண்ணங்கள் கொண்டது சூர்யன். VIBGYOR எனும் 7 வர்ணங்கள் கொண்டது சூர்யன் இல்லையா? காம: சூர்யன், களா : வெள்ளை சிவப்புபிந்துக்கள், எல்லாம் ஒன்றாகி அம்பாள் காமகளா காமேஸ்வரி எனப்படுகிறாள்.
ஸ்ரீ சக்ர உபாசனை வழிபாட்டில் ஷட்கோண சக்கரத்தின் மத்தியில் பிந்துவை எழுதி அதன்மேல் ஐந்து முகமுள்ள தீபத்தை ஏற்றிவைத்து தேவியை ஆவாஹனம் செய்து பூஜித்து ஆயிரம் தடவையோ முன்னூறு தடவையோ நூறு தடவையோ மேலே கண்ட ஸ்லோகத்தை தினந்தோறுமோ வெள்ளிக்கிழமை பௌர்ணமி போன்ற விசேஷ நாட்களிலோ பாராயணம் செய்வது வழக்கம். இந்த பூஜையில் ஆவாஹன மந்த்ரம்: ”மஹாபத்ம வனாந்தஸ்தே காரணானந்த விக்ரஹே | ஸர்வபூதஹிதே மாத: ஏஹ்யேஹி பரமேஶ்வரி ||”
சகோதர சகோதரிகளே, ஸௌந்தர்ய லஹரி ஸ்லோகங்கள் உள்ளே ரொம்ப விவரமாக சென்று உடனே லலிதாம்பிகையை, நவாவரண காம களாவாக புரிந்து கொள்வது கஷ்டம் என்று எழுதும் எனக்கே தெரியும்.
ஒவ்வொரு ஸ்லோகத்தையும் பற்றி சொல்லும்போது அதைக் கொஞ்சம் விளக்க இதை சொல்வது அவசியமாகிறது. படிப்படியாக முன்னேறுவோம். துளித்துளியாக புரிந்து கொள்வோம்.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1426

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *