Sankara & Sri chakra – J K SIVAN

சங்கரரும்  ஸ்ரீ சக்ரமும் –  நங்கநல்லூர்  J K  SIVAN
என்னுடைய  இணை பிரியா நிழல் என்னுடைய  கம்ப்யூடர்  என்னால்  பாட்டு கேட்க முடிகிறது, பாட  கற்றுக்கொள்ளமுடிகிறது, பாடி பதிவு செய்ய முடிகிறது, அதை நண்பர்கள் உங்களுக்கு  பகிர முடிகிறது, படிக்க முடிகிறது, புரிந்துகொண்டு எழுத முடிகிறது, இதற்கு மேல் எனக்கு தினமும் நேரமும் இல்லை  வேறு ஆர்வமம் இல்லை.
தை கடைசி வெள்ளிக்கிழமை எந்த அம்பாளை பற்றி எழுதலாம் என்று நினைத்தபோது என் கம்ப்யூடர் தான்  ஏன் திருவானைக்கோவில் போயிருக்கிறாயே, அகிலாண்டேஸ்வரி ஞாபகம் வரலியா உனக்கு?” என்று உசுப்பியது.
திருவானைக் காவல் அகிலாண்டேஸ்வரி ஆலய அர்ச்சகர் ஒருவர்  சொன்னதாக ஒரு சம்பவம் முன்பு படித்தது இது.  60  வருஷங்களுக்கு முன்பு  மஹா பெரியவா திருச்சி அருகே ஒரு கிராமத்தில்  தங்கி  ஒருநாள்  வழக்கம் போலவே   சந்திரமௌளீஸ்வரர் பூஜை செய்து கொண்டிருந்தார். என்ன தோன்றியதோ தெரியவில்லை,  ”மானேஜர் எங்கே  வரச்சொல்லு” என்றார். மடத்து மானேஜர் வந்தபோது சொன்னார்:

இன்னும் சித்தே நேரத்தில் இங்கே திருவானைக்கா  அம்பாள் அகிலாண்டேஸ்வரி கோவில் அர்ச்சகர்கள் சில பேர் வருவா. அவாளுக்கு போஜனம் ஏற்பாடு பண்ணி வை. மத்தியானம் ரெண்டு மணி போல என்கிட்டே அவர்களை அழைச்சிண்டு வா”.
சிறிது நேரம் மௌனம். அருகே இருந்த ஒரு அணுக்க தொண்டனை கூப்பிட்டார்.
”ஸ்தபதிகளில் ஒருத்தரை உடனே போய்ப்பார் . ரெண்டடி உசரத்திலே ஒரு விநாயகர் சிலை பண்ணிண்டு எடுத்துண்டு வரச்சொல்லு”
மத்தியானம் அகிலாண்டேஸ்வரி ஆலய அர்ச்சகர்கள் வந்துவிட்டார்கள். மடத்து மேனேஜர் அவர்களை வரவேற்று உபசரித்து போஜனாதிகள் அளித்து ரெண்டு மணி வாக்கில் பெரியவாளிடம் அழைத்துச் சென்றார் . பெரியவா அவர்களது க்ஷேமலாபங்களை விசாரித்தார்.

”பெரியவாளைப் பார்த்து ஒரு முக்கியமான விஷயம் கேட்க தான் வந்தோம்.”
”என்ன சொல்லுங்கோ”.
காலம்பற ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பாள் சந்நிதி கதவைத் திறந்து பக்தர்கள் தரிசனத்துக்கு ஏற்பாடு பண்ணும் போது ஒவ்வொரு நாளும் எதனாலோ தெரியவில்லை, அர்ச்சகர் மயங்கி தொப்புனு விழுந்திடறார். ஒருத்தர்னா பரவாயில்லே. தினமும் யார் கதவைத் திறக்கிறாளோ அவர்கள் மயக்கமாகி கீழே விழறா. ஏன்? எதனாலே?ன்னு சங்கடமாக இருக்கு. பத்து நிமிஷம் கழிச்சு எழுந்து வழக்கம் போல நடமாடறா. கொஞ்சநாளா யாரும் காலம்பற சந்நிதி திறக்க வர மாட்டேங்கிறா பெரியவா”
”ஓஹோ” …. பெரியவா சிறிது நேரம் கண்ணை மூடி மௌனமா இருந்தார். பிறகு அர்ச்சகர்களிடம்
”சரி, நாளைக்கு நான் காலம்பற வரேன். நான் வந்தாவிட்டு அம்பாள் சந்நிதி கதவை திறங்கோ”அர்ச்சகர்கள் மன நிறைவோடு பிரசாதம் வாங்கிக்கொண்டு புறப்பட்டார்கள். பெரியவா ஆசிர்வதித்து அனுப்பினார்.
மறுநாள் காலை ஐந்தரை மணிக்கே மஹா பெரியவா திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி சந்நிதி சென்றுவிட்டார். கதவைத் திறந்த அர்ச்சகர் வழக்கம்போல் தடுமாறி, மயக்கமடைந்து விழுந்துவிட்டார்.பத்து நிமிஷம் கழித்து சுதாரித்துக் கொண்டு வழக்கமாக செயல்பட்டார்.
இதைப் பார்த்த மஹா பெரியவா அங்கேயே நிஷ்டையில் ஆழ்ந்துவிட்டார்.
கோவில் பிரதான சிவாச்சாரியாரை கூப்பிட்டார்.
”நாளையிலிருந்து அம்பாள் சந்நிதி திறக்கும்போது பக்கத்துலே இருக்கிற சின்ன வாசல் கதவை திறந்துண்டு உள்ளே போகச்சொல்லுங்கோ. எப்படி திறக்கணும்னு சொல்றேன். கதவை திறந்ததும் உடனே உள்ளே போகவேண்டாம். ரெண்டு மூணு நிமிஷங்கள் கழிச்சு உள்ளே போகட்டும் ”சாயந்திரம் நாலு மணி வாக்கில், அன்று பெரியவாளின் சிஷ்யன் சொல்லி அனுப்பிய ஸ்தபதி வந்துவிட்டார். அவர் கையில் ரெண்டடி உயர பிள்ளையார்.  மஹா பெரியவா பிள்ளையார் சிலையைப் பார்த்து சந்தோஷப்பட்டார்.
”ஸ்தபதி, உடனே ஆகம சாஸ்திரப்படி, ஒரு சின்ன ஸ்தூபி கட்டுங்கோ. அம்பாள் சந்நிதிக்கு நேரா இருக்கட் டும் அந்த பீடத்தில் பிள்ளையார் பிரதிஷ்டை பண்ணி, அவர் கண்ணும் அம்பாள் கண்ணும் நேராக சந்திக்கிற மாதிரி இருக்கணும்” உடனே ஏற்பாடு ஆகி பிள்ளையார் ஸ்தூபத்தில் பிரதிஷ்டை ஆகி அம்பாளை நேராக பார்த்தார். அதற்குப் பிறகு கதவைத் திறந்த எந்த அர்ச்சகரும் மயக்கமாகி கீழே விழவில்லை. இன்றும் அந்த ஸ்தூபியில் விநாயகர் அம்மாவைப் பார்த்துக்கொண்டு  நிற்கிறார். அம்பாளின் தாய்ப்பாச பார்வை முதலில் கதவைத் திறந்ததும் ஜேஷ்ட குமாரன் மேல் பாசமாக விழுகிறது. அந்த அன்பு தொடர்ந்து வரும் பக்தர்கள் மேலும் விழுகிறது என்று சொல்லவேண்டிய அவசியமில்லை.
 திருவானைக்கா  அகிலாண்டேஸ்வரி கோவில் தாடங்க பிரதிஷ்டை  என்று கேள்விப்பட்டதுண்டா? தாடங்கம் என்பது  காதில் அணியும்  ஆபரணம், ஓலை, அது சாதாரணமானது அல்ல, மிகவும் சக்தி வாய்ந்த  ஸ்ரீ சக்ரம்.என்னை ஒரு அன்பர்  வெகு காலத்துக்கு முன் கேட்டார்?
”அம்பாளுக்கு  முன்னாலே   ஸ்ரீ  சக்கரம் பார்த்தியா?”
”ஓ  பார்த்தேனே.  ரொம்ப  அழகா  பெரிசா  கோலம்  போட்டிருக்கிறதே. ”
”சே   இவனுக்கு  தெரிந்தது  இவ்வளவு தானா  என்று   பாத்ரூமில் கரப்பாம்பூச்சியைப் போல் என்னை பார்த்த பிறகு தான் அதைப் பற்றி நானும் படித்து அறிந்து கொண்டேன்.
நவசக்ரம் ,  ஸ்ரீ சக்ரம் என்பது  64 கோடி பரிகார  தேவதைகள் (யோகினிகள்) ,  வாசம் செய்வது.  அவர்கள் அத்தனை பேரும் சக்தி பெறுவது  லலிதா பரமேஸ்வரியிடமிருந்து.  தாந்த்ரீக  உபாசனையில் இது முக்கியம். பிரபஞ்சம்  உருவானது மட்டுமல்ல  மனோதத்வம் அடங்கிய விஷயம்.  நமது உடலில்  ஆறு சக்ரங்கள் இருக்கிறது.   64   என்பது   ஷஷ்டி (6) + சதுர் (4)  உள்ளடக்கியது.  இப்படி  யோகினிகளால் வழிபடப்படும்  சக்தி ஸ்வரூபிணியை  சக்ர வடிவில்  அமைத்தவர்  ஆதி சங்கர பகவத்பாதாள் .  சர்வ சக்தி ஸ்ரீ சக்ரத்தை அம்பாள் காதில் தாடங்கம் எனும் ஆபரணமாக  அணிவித்து பிரதிஷ்டை செய்து அவள்  உக்ரத்தை சாந்த ஸ்வரூப மாக்கினார்  சங்கரர்.
ஸ்ரீ சக்ரம்  வெறும் கோடுகள் , கோலம் இல்லை.  ரொம்ப  உயர்ந்த நமக்கு புரியாத  பீஜ அக்ஷர கணக்கு, ஞானம்  உள்ளவர்கள் மட்டுமே  ஸ்ரீ சக்ரம் வரைய முடியும்.  அப்படி சரியாக வரைந்தால் தான் பலன் கை  மேலே.
திருவானைக்காவல் அம்பாள்  அகிலாண்டேஸ்வரி,   காமாக்ஷி  உக்ரமானவளை எப்படி சாந்தமடைய செய்வது?  ஸ்ரீ சக்கரம் ஒன்று தான் வழி என்பது ஆதி சங்கரருக்கு தெரிந்தது.    ஸ்ரீசக்ரத்தில் 9  கட்டுகள்.  நவ ஆவரணங்கள் . ஒன்பது சுற்றுகள்.   நம் கண்ணுக்கு சாதாரண கோடுகள், முக்கோணங்கள்  மாதிரி தெரியும். . அடேயப்பா.  இதில் தான் சர்வ சக்தியும்  அடக்கம்.  நடுவில் தெரியும் முக்கோண மத்தியில் தான் ஸ்ரீ சக்ரராஜ சிம்ஹாசனி  உறைகிறாள். பிந்து  என்கிற  புள்ளி.  ஓம்  என்கிற சப்தத்துக்கு  உருவம்  உண்டு.  அது ஸ்ரீ சக்ரமானது.  மனிதன் புலனடக்கி ஆத்ம ஸ்வரூபமாக  காண்பது தான் ஸ்ரீசக்ர தத்வம்.  ஸ்ரீ சக்ர ராஜம்.
ஸ்ரீ சக்ரத்தை பார்த்தால்  கீழ் நோக்கி  5 த்ரிகோணம்,  மேல் நோக்கி 4 முக்கோணம்,  இதையே சிவாத்மகம் என்கிறோம்.  64 கோடி யோகினிகள் தேவதைகள் தவிர 51 கணேசர்கள், 9 கிரகங்கள், அஸ்வினி முதலான 27 நட்சத்திரங்கள், 7 யோகினிகள், 12 ராசிகள், 51 பீட தேவதைகள் என்று 157 தேவதைகளின் ரூபமாக அம்பிகை ஸ்ரீசக்கரத்தில்  இருக்கிறாள்  என்றால் எவ்வளவு சொல்லமுடியாத  சக்தி கொண்டவளாக அவள் இருக்க வேண்டும். நாம் பக்தியோடு சக்ர ஸ்வரூபமாக , மஹா மேருவாக அதனால்  ஸ்ரத்தையோடு  வழிபடு கிறோம்
சென்னையை ஒட்டிய  திருவேற்காட்டில்  கருமாரி,, மாங்காடு காமாக்ஷி.   தென் குன்றத்தூர் காத்யாயனி அம்மன் ஆகிய மூவரையும் பவுர்ணமி தினத்தன்று ஒரே நாளில் தரிசனம் செய்வது தான்  திரிசக்ர தரிசனம்.
ஆதி சங்கரர்  காஞ்சி, திருவானைக்கா, மாங்காட்டுக்கு எல்லாம்  வந்திருக்கிறார் போல் இருக்கிறது.  தனது கையாலேயே  அர்த்த மேருவை பிரதிஷ்டை செய்தார். அதில் அஷ்ட கந்தங்கள் எனப்படும்  சந்தனம். அகில், பச்சைக்கற்பூரம், குங்குமப்பூ, கோரோஜனை , சிவாஜித், ஜடாமாஞ்சில், கச்சோலம்  எனும்   எட்டு விதமான  சுகந்தமான  பொருள்கள்  அடக்கம். .  ஆதிசங்கரர்  இன்னொரு முக்கிய சென்னையிலுள்ள  அம்பாள்  கோவிலுக்கும் வந்து  சக்ரப்ரதிஷ்டை செய்தார்.  அது  தான்   தம்பு செட்டித்தெரு  காளிகாம்பாள்  கோவில்.  குபேரன் வழிபட்ட தலம். ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த அர்த்தமேரு சக்கரம்  இன்றும் பார்க்கலாம்.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1426

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *