NAWAB’S CONFUSION J K SIVAN

நவாபுக்கு சேவகம் –  நங்கநல்லூர்  J K  SIVAN 

கிருஷ்ணன் கருப்பு, அவன் பாண்டுரங்கனாக  காட்சி தந்தபோது அவனை வெள்ளை நிறத்தவன் என்று ருக்மணியே அழைத்தாள் .  அவன் இன்னொரு பெயர்  விட்டலன். விட் என்றால் செங்கல். விடோபா, செங்கல் மேல் இருகைகளையும் இடுப்பில் தாங்கி நிற்பவன்.  பண்டரி புறத்தில் இன்றும் அருள் பாலிக்கும் பண்டரி நாதன்.

ஸ்ரீமத் பக்த விஜயம் என்ற அற்புத நூல் பாண்டுரங்க
னின் மஹாத்மியத்தை தோண்டத் தோண்ட சுரக்கும் சில ஊற்றுக் கண்கள் கொண்ட கிணறு போல நிறைய  சொல்கிறது.  ஆங்கிலத்தில் VITOBA THE NECTAR   என்றும் தமிழில் தெவிட்டாத விட்டலா என்றும்  அவனைப்பற்றி நூறு நூறு கதைகள் எழுதியபோது என் மனம் ஆனந்த மயமாகியது. (there is no stock of the tamil book, but i have a few copies of the english book for children at Rs 200 per copy by way of donation. if interested contact me through whatsapp no 9840279080 ) எண்ணற்ற குட்டி கதைகளை உங்களுக்கு வாரி வழங்க இதுவரை அருள்புரிந்த பாண்டுரங்கன் தொடர்ந்து என்னை அவனைப்பற்றி எழுத வைக்க வேண்டும் என்பது தான் என் பிரார்த்தனை.
++
சேனாயி  என்பவர் பண்டர்பூரில்  ஒரு நாவிதர். மனது பூரா விட்டலன்  நாமம் இருப்பவர்.  தனது குடிசையில் அழகிய பாண்டுரங்கன் ருக்மணி சிலைகளை வைத்து இரவும் பகலும் பாண்டுரங்கன் பஜனை செய்வார். மற்ற பக்தர்களும் அவரோடு சேர்ந்து அகண்ட பஜன் செய்வதும் வழக்கம். அவர் வாழ்ந்த காலம் நமது தேசத்தை முகலாயர்கள் ஆண்ட நேரம் அல்லவா?.
பண்டர்பூர் மற்றும் பல ஊர்களுக்கும் அதிகாரியாக ஒரு நவாப் முகலாய சக்கரவர்த்தியின் பிரதிநிதியாக அப்போது ஆட்சி செலுத்தி வந்தான். அவனுக்கு ஒரு பிரத்யேகமான நாவிதன் தேவைப்பட்டது. அந்த நாவிதனை அவனது மாளிகை அருகிலேயே இருக்க இடம் கொடுத்து, சகல குடும்ப செலவுகளையும் ஏற்று, சவுகரியமாக வைத்துக்  கொள்வதாக அறிவித்தான். அந்த நாவிதன்   நவாபைத் தவிர மற்றெவர்க்கும் பணி புரியக்கூடாது. இதிலென்ன கஷ்டம்? வேலைக்கு வேலையும் மிச்சம், கை நிறைய காசு, . இருக்க வீடு, சகல தேவைகளும் நவாப் செய்து கொடுப்பார். தினமும் ஒரு அரைமணி நேரம் நவாபிடம் வேலை. அவ்வளவு தானே? நிறைய நாவிதர்கள் இந்த வேலைக்கு போட்டி போட்டார்கள். சேனாயிக்கு இது தெரியாது. தெரிந்து  கொள்ள எந்த முயற்சியிலும் போட்டியிலும் ஈடுபடவும் இல்லை. ஆனால் விட்டலன் அருளால் இந்த உத்தி யோகம் சேனாயிக்கு மட்டும் கிடைத்தது. இதில் என்ன சந்தோஷம் அவருக்கு என்றால் காலையில் சிறிது நேரம் மட்டும் தான் வேலை. மற்ற நேரமெல்லாம் வீட்டில் பாண்டுரங்கனோடும் மற்ற பக்தர்களோடும் விட்டல னைப் பாட நிறைய நேரம் கிடைக்குமல்லவா?

மனிதனாக பிறந்தாலே போட்டி, பொறாமை, வயிற்றெ ரிச்சல் இல்லாமல் இருக்குமா? மற்ற நாவிதர்களுக்கு “இந்த சேனாயிக்கு வந்த வாழ்வைப்  பார்த்தாயா? கை நிறைய சம்பளம். அதிகாரம். பணம். வேலையும் இல்லை. மதிப்பு கவுரவம். எப்போது நமக்கு இந்த வாய்ப்பு கிடைக்க வில்லையோ, இவனை எப்படியாவது இந்த வேலையிலிருந்து வெளியேற்ற  வேண்டும் என்று வழி தேடிக் கொண்டிருந்தனர். சமயம் வந்தது லட்டு மாதிரி அவர்களுக்கு.

நல்லவர்கள் எப்போதெல்லாம் தோன் றுகிறார்களோ  அப்போது கட்டாயம் அவர்களுக்கு துன்பம் விளைவிக்க என்றே  மற்றும்  சிலர்  உருவாவது  நியதி அல்லவா?  அது அவன் சோதனை.

அன்று ஏகாதசி. நிறைய பாண்டுரங்க பக்தர்கள் வெளியூரி லிருந்து கூட்டமாக பஜனை ஆட்டம் பாட்டத் துடன் பண்டரிபுரம் விட்டலனை நோக்கி நடந்து கொண்டி ருப்பதை சேனாயி  பார்த்து விட்டார். அவர்களது தீஞ்சுவை விட்டல கானம் அவரைக்  கவர்ந்தது. அவரையறியாமல் தலை கால் கை எல்லாம் அந்த பக்தி ரசத்தில் ஆடி அவரை தன்னை மறக்கச் செய்தது. அந்த நேரம் அவர் வழக்கம்போல  நவாப் மாளிகைக்கு பணி புரிய சென்று கொண்டிருந்தார். ஆனால் மனம் பாண்டுரங்கன் மீது இருந்ததால், வேலையை மறந்து சேனாய் அப்படியே  அந்த பக்த கோஷ்டியோடு பண்டரிபுரம் கிளம்பி விட்டார். அவருக்கு வீடு வாசல், நவாப், அன்றைய சேவகம் கடமை எல்லாமே சுத்தமாக மறந்து போனது.

இதை கவனித்துக் கொண்டிருந்த ஒருவன், இந்த அருமையான சந்தர்ப்பத்தை  நழுவவிடுவானா? நேராக நவாபிடம் சென்றான். 

”யார் நீ  என்ன வேண்டும் உனக்கு?”
“ஐயா. நவாப் மகராஜ் தென்டனிடறேனுங்க?
“யார் நீ என்ன விஷயம்?
“ஐயா  இன்னிக்கு சேனாயி  உங்களுக்கு  வேலை செய்ய வரமாட்டானுங்க” .
“ ஏன்?
“பண்டரிபுரம் பாண்டுரங்கன் கோவிலுக்கு போகப்போறேன் என்று சொன்னானுங்க”
“அங்க என்ன?
“எங்க சாமியிருக்கு. அது தான் எனக்கு முக்கியம். நவாப்புக்கு சேவகம் பண்றது முக்கியம் இல்லை. அதனாலே இன்னிக்கு நவாபை போய் பாக்கமாட்டேன்” வேணா நீ போய் அவன் கிட்ட சொல்லிடுன்னு சொன் னான்.  அதனாலே நான் உங்க கிட்ட விஷயம்  சொல்ல வந்தேங்க”

இதைக்கேட்டதும் நவாபுக்கு கண்களில் தீப்பொறி பறந்தது. உஷ்ணமாக  மூச்சு  வெளிவந்தது. கோபம்   நவாபுக்கு  உள்ளங்காலிலிருந்து உச்சந்தலை வரை எகிறியது . ஆட்களை ஏவி ”அந்த சேனாய் நாயைக் கட்டி இழுத்துவா இங்கே, நானே அவனை என் வாளுக்கு இறையாக்குகிறேன் ” என்று கொதித்தான்.

அவன் கட்டளையிட்டு மூன்று நிமிஷங்கள் கூட ஆக வில்லை. அவன் எதிரே சேனாய் வழக்கம் போல குறித்த நேரத்தில்  கைகட்டி சேவகத்துக்கு நின்று கொண்டி ருந்தார். நவாபுக்கு தன்னிடம் வேண்டுமென்றே யாரோ தப்பாக தகவல் சொல்லியிருக்கிறான் என்று தோன்றி யது. அவன் எதிரே அமர்ந்து வழக்கம் போல சேனாய் முடி திருத்தும்போது இன்று என்றுமில்லாத ஒரு சந்தோ ஷம் நவாபுக்கு மனதில் ஏற்பட்டது. ஒவ்வொரு முறை சேனாயி நவாப்  முகத்தைத் தொட்டும், நேரே பார்த்தும் வேலை செய்யும்போது நவாபின் மனமெல்லாம் ஒரு அமைதி, சொல்ல  வொண்ணா களிப்பு ஆகியவற்றால் நிரம்பி வழிந்தது. நவாப் இன்ப வானில் பறந்து கொண்டிருந்தான். .

“சேநாயி, இன்று உன் வேலை பிரமாதம். என்ன அப்படி இன்று விசேஷம்” என்று கேட்டுக் கொண்டிருந்தபோது அவன் முன் விட்டலனின் அழகிய முகம் ஒரு கணம் தோன்றி மறைந்தது. காந்த கண்கள், புன்முறுவல், செந்தா மரை முகம், கஸ்தூரி திலகம் அனைத்தும் அவனை புளகாங்கிதமடையச் செய்தது.

அந்த நேரம் பார்த்து சேவகர்கள் சேனாயியை பாதி வழியில் பிடித்துக் கட்டி இழுத்துக் கொண்டு வந்து நவாப் முன் நிறுத்தினர். திகைத்த நவாப் எதிரே இதுவரை அமர்ந்து சேவகம் செய்த சேனாயியைத் தேடிய போது அவன் இல்லை.

கைகள் கட்டப்பட்டு, உடம்பெல்லாம் புண்ணாகி ரத்தம்  சொட்ட நின்ற சேநாயி யைப் பார்த்தான் நவாப். அவனது வீரர்கள்  சேனாயியை பண்டரி புரம் போகும் பாதையில் பாண்டுரங்க பக்தர்கள் கூட்டத்தில் பார்த்தது, அவனைக் கட்டி இழுத்து வந்தது எல்லாம் சொன்னார்கள்.  அப்போது  தனக்கு  சேவை செய்த சேனாயி  யார், எங்கே இப்போது திடீரென்று மாய மானான்?
என்ன இது ? என்று திகைத்த நவாபைப் பார்த்து சேனாயி நவாப் சேவகத்திற்கு கிளம்பியது, வழியில் பாண்டுரங்க பஜனையில் தன்னை மறந்தது. வேலை யை மறந்து அவர்களோடு பண்டரிபுரம் சென்றது பாதிவழியில் சேவகர்கள் அவனை பிடித்து கட்டி இழுத்து வந்தது அனைத்தும் சொல்லப்பட்டாலும் நவாபின் காது தான் இதை கேட்டதே தவிர அவன் சிலையாக அமர்ந்து, பாண்டுரங்கனே தன் முன் தோன்றி தனது பக்தன் சேனாயியாக அவன் வேலை யை தனக்குச்  செய்தான் என்பதைப்  புரிந்து கொண் டான்.

உடனே சேநாயியை விடுவிக்க உத்தரவிட்டு, அவனுக்கு சகல உபசாரங்களையும் செய்து, அவனுக்கு பஜனை யில் முழுநேரமும் இனி ஈடுபட எல்லா உதவியும் செய் தான் நவாப். தன்னிடம் வந்து புகார் சொன்ன நாவித னுக்கு தக்க தண்டனை கொடுத்தான்.

இதிலிருந்து நாம் ஒன்று புரிந்துகொள்வோம்.
செய்யும் தொழிலே தெய்வம் என்பது தெரியும். தொழில் தெய்வமானால் தொழிலாளியும் தெய்வம் தானே, ஆனால் சேனாயி  கதையில் தெய்வமே தொழி லாளி ஆகியிருக்கிறது! இல்லையா !   அளவற்ற பக்தி யினால். தன்னையே  பகவானுக்கு  அர்ப்பணித்த பக்தனுக்கு  உதவ  அந்த  பரந்தாமன் என்றும் தவறியதில்லையே.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1428

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *