THE GOOD KING J K SIVAN

தாத்தாவும் ராஜாவும் – நங்கநல்லூர் J K SIVAN

கதை சொல்கிறேன் என்றால் மழலைப் பட்டாளம் சூழ்ந்து கொண்டு விடும். எந்த கதை ஆரம்பித்தாலும் இங்கிலீஷில் once upon a time என்று தான் ஆரம்பிக்கிறோம். தமிழில் ”ஒரு காலத்தில்” என்று ஆரம்பிக் கும்போதே சூடு பிறக்கும். உன்னிப்பாக குழந்தைகள் அடுத்த என்ன சொல்லப்போகிறேன் என்று ஆவலாக காத்திருப்பார்கள்.
ஆகவே இப்போது உங்களுக்கு என் கதையை ”ஒரு காலத்தில்” என்றே ஆரம்பிக்கிறேன்.

ஒரு காலத்தில் எங்கோ ஒரு நாட்டில் ஒரு ராஜா இருந்தான். ரொம்ப நல்ல ராஜா. ஜனங்களுக்கு ஏதாவது நல்லது செய்து கொண்டே இருப்பவன் .அக்காலத்தில் ராஜாக்கள் மாறுவேஷம் போட்டுக்கொண்டு ஜனங்களோடு பழகுவார்கள். மக்களோடு மக்களாக பழகினால் தான் உண்மை நிலை புலப்படும்.
அப்படி ஒருநாள் மாறுவேஷத்தில் ராஜா போனபோது ஒரு கிழவரைப் பார்க்கிறான். அவர் ஒரு காளை மாட்டை அழைத்துக் கொண்டு முதுகில் பெரிய மூட்டையோடு தள்ளாடி நடந்து கொண்டிருந்தார். ராஜாவுக்கு இதைப்பார்த்ததும் நெஞ்சு வலித்தது. அவரிடம் போய் ராஜா கேட்டான்.

”தாத்தா நான் உங்களுக்கு உதவட்டுமா?உங்க மூட்டையை நான் சுமந்துகொண்டு வரேன்.”
”தம்பி, ரொம்ப சந்தோஷம் என்று சொல்லி மூட்டையை கீழே இறக்கினார் தாத்தா. நான் உனக்கு எப்படியப்பா நன்றி சொல்வேன்?நான் ஏழை, காசில்லாதவன் “
”அதெல்லாம் ஒண்ணும் வேணாம் தாத்தா. உன் கஷ்டம் குறைஞ்சதே அதுவே எனக்கு சந்தோஷம் ”
ராஜா மூட்டையை முதுகில் சுமந்து கொண்டே கிழவரோடு அவருடைய வயலுக்கு சென்றான்.
”நீ மகாராஜனா இருக்கோணும் தம்பி. உன் பேர் என்ன,எங்கே இருக்கே நீ?’
ராஜாவால் பேச முடியவில்லை, இவ்வளவு கனமான மூட்டையை அவன் வாழ்க்கையில் சுமந்ததில்லை. மூச்சடைத்து. தரையில் உட்கார்ந்தான்.

”தாத்தா எதுக்கு என் பேர் ஊர் எல்லாம்? எனக்கு எதுவும் நீ செய்ய வேண்டாம். ஒண்ணு மட்டும் சொல்லு? எதுக்கு இந்த வயசிலேயும் இப்படி கஷ்டப்பட்டு உழைக்கணும்?
”நான் என்னத்தை சொல்றது? பேசாம இருக்கிறது தான் நல்லது. என் துரதிர்ஷ்டம் எல்லாத்தையும் இழந்துட்டேன், நினைச்சா நெஞ்சு வெடிக்குது.”
”என்ன ஆச்சு தாத்தா,சொல்லு?
”சொல்லி என்ன லாபம், இருந்தாலும் நீ கேக்கறதாலே சொல்றேன். எனக்கு ரெண்டு புள்ளைங்க. என் வயசான காலத்திலேயே அவன்களை தான் நம்பி இருந்தேன். மூணு வருஷம் முன்னாலே கடுமையான பஞ்சம் இந்த ஊர்லே. பெரிய பையனை பக்கத்து ஊருக்கு போய் கோதுமை வாங்க அனுப்பிச்சேன். சின்ன பையனும்கூட போனான். ஒரு பணக்கார வியாபாரி கிட்டே பேரம் பேசினானுங்க . இன்னொருத்தன் அதை கவனிச்சிட்டுருந்தான். அவன் ஒரு திருடன். வியாபாரியுடைய எதிரி. வியாபாரி ஒரு தடவை அவன் திருடினதுக்கு சாக்ஷி சொல்லி தண்டனை வாங்கி கொடுத்து ஜெயிலுக்கு அனுப்பிச்சதிலே ஆத்திரம். எப்படியாவது வியாபாரியை பழி வாங்க காத்திருந்தான். இப்போ ஒரு சான்ஸ்.

”என் பசங்க வியாபாரம் முடிஞ்சு கோதுமை வாங்கிக்கிட்டு திரும்பிட்டானுங்க. அப்போ தனியா இருந்த வியாபாரியை கத்தியால் குத்தி திருடன் கொன்னுட்டு வியாபாரியின் பணத்தை எல்லாம் எடுத்துண்டு ஓடிட்டான்.கொஞ்ச நேரம் கழிச்சு வ்யாபாரியுடைய வேலைக்காரன் ஒருத்தன் வந்து ரத்த வெள்ளத்திலே எஜமான் செத்து கிடக்கிறதை பார்த்துட்டு ‘ஐயோ ஐயோ’ ன்னு கத்தினான். கூட்டம் சேர்ந்துட்டுது. போலீஸ் வந்தது. வேலைக்காரன் மேலே சந்தேகத்தில் பிடிச்சுண்டு போச்சு. அவன் என் பசங்க ரெண்டு பேர் தான் அவன் வெளியிலே போகும்போது முதலாளி கிட்டே கோதுமை மூட்டை வாங்க பேரம் பேசிக்கிட்டு இருந்தாங்க, நான் திரும்பி வந்தப்போ முதலாளி செத்துக்கிடந்தார் ன்னு என் புள்ளைங்க அடையாளத்தை சொல்லி அந்த கொலைகாரங்களை போய் பிடிங்க ன்னு சொல்லிப்பிட்டான். போலீஸ் என் பிள்ளைங்களை பிடிச்சு கடைக்கு கூட்டியாந்தா அங்கே செத்துக்கிடக்கிற வியாபாரியைப் பார்த்து திடுக்கிட்டு பேச்சு வரலே என் பசங்களுக்கு. கூட இருந்தவங்க என் பசங்க தான்கொலைகாரனுங்க ன்னு அடிச்சிட்டாங்க . மயக்கம் போட்டு பெரிய புள்ளை ரத்தத்தோடு கீழே விழுந்திட்டான். நான் விஷயம் கேட்டு ஓடினேன். எவ்வளவோ மன்னாடினேன். கேக்கலே. என்னையும் ஜெயில்லே போடுவேன்னாங்க. தம்பி பாரத்தியா நம்ம ராஜா அரசாங்கம் எப்படி நடக்குதுன்னு? ராஜாவோட அரசாங்கத்தில் என் பெரியபிள்ளை தான் கொலைகாரன், சின்னவன் உடந்தைன்னு தீர்ப்பு கொடுத்து. பெரியவனை தூக்கிலே போட்டாங்க. சின்னவனுக்கு 7 வருஷம் ஜெயில். கடவுள் தான் காப்பாத்தணும்.
”அப்புறம் என்னாச்சு தாத்தா?”
கொஞ்ச நாள்லே அந்த திருடன் இன்னொரு வியாபாரியை கொள்ளையடிச்சு கொன்னுட்டான். அப்போ மாட்டிக்கிட்டான். அவனுக்கு தூக்கு தண்டனை கொடுக்கும்போது முதல்லே ஒரு வியாபாரியை கொன்னதை ஒப்புக்கிட்டான். என் பிள்ளைங்க நிரபராதின்னு போலீஸ் நீதி மன்றத்துக்கு தெரிஞ்சு என்ன பிரயோஜனம். பெரிய பையன் செத்துட்டான். சின்னவனும் மனம் ஒடைஞ்சு போய் ஏழு வருஷ தண்டனையில் மூணாவது வருஷமே ஜெயில்லே செத்துட்டான். என் விதியை நினைச்சு நான் தனியா காலம் ஒட்டிக்கிட்டு இருக்கேன் தம்பி. இது தான் என் கதை”

”தாத்தா நீ இந்த ஊர் ராஜா கிட்டே போய் இதெல்லாம் சொல்லி நீதி கேக்கலியா ?”
”எத்தனையோ தடவை கெஞ்சி ராஜாவை பாக்கணும்னு சொன்னேனே என்னை அவரை பார்க்கவே உடல்லியே நான் என்ன செய்வேன்? ராஜா நல்லவரு என்கிறாங்க. அதிகாரிங்க மோசமா இருந்தா? ராஜாவுக்கு உண்மையை எடுத்து சொல்லாதவங்க”.
”தாத்தா என்னாலே முடிஞ்ச உதவி பண்றேன். உங்க பிள்ளைங்க உயிரை மீட்க முடியாது”
”இப்போ யாரும் உதவ இல்லையா?”
எல்லோரும் அவங்கவங்க சோலியை பார்த்து கஷ்டப்படறாங்க. ஒருத்தர் இன்னொருத்தருக்கு உதவின்னு யாரும் செய்யறதில்லே. பணக்காரங்க ஏழைங்க எல்லோரும் கஷ்டத்தில் தான் இருக்காங்க. நான் ஒருகாலத்தில் ராஜாவாட்டமா சந்தோஷத்தில் இருந்தேன்.இப்போ கஷ்டத்திலேயும் ராஜாவட்டமா தான் மனசிலே சந்தோஷத்தை நினைச்சிக்கிறேன்.”
”ராஜா உங்களை கூப்பிட்டா அவர் அரண்மனைக்கு போவீங்களா?
”ராஜா மட்டும் சந்தோஷமாவா இருப்பார்? அவங்கவங்க குடிசையில் இருக்கறதை வெச்ச்சு திருப்தியாக இருந்தா அதுவே சந்தோஷம் தான். நான் பட்ட கஷ்டங்கள் எனக்கு பாடம். அறிவைக் கொடுத்தது. என்னிக்கோ ஒருநாள் என் பசங்க என்னை விட்டு பிரியத்தானே வேணும். நானும் ஒருநாள் போக வேண்டி யவன் தானே னு மனசை தேத்திக்கிட்டேன் பா. இதோ இப்போ நீ தூக்கி வந்த மூட்டையில் இருக்கிற தானியத்தை நிலத்தில் வயலில் தூவப்போறேன். பழசு போய் புதுசா செடி விளையும். அது போல் தான் நம்ம ஆத்மாவும் புதுசா வேறெ உடம்பு எடுக்கப்போவுது.”
”தாத்தா, உன் பேச்சு எனக்கு கண்ணை திறந்திடுச்சி. உனக்கு யார் இந்த ஞானத்தை கொடுத்தது?’
”தம்பி, என் கஷ்டத்தை பார்த்து ஒருநாள் ஒருத்தன் என்னோடு பேசினான். படிச்சவன்.அதனாலே நிறைய நீதி விஷயம் எல்லாம் சொன்னான். என் துக்கத்தை எல்லாம் வைச்சான். கடவுள் மாதிரி வந்தான் பா அந்த மனுஷன்”
”தாத்தா உன்னை பார்த்ததில் எனக்கு ரொம்ப சந்தோஷம்”

ராஜா அரண்மனை போனதும் அதிகாரிகளை அழைத்து விசாரித்தான். தாத்தா சொன்னது அத்தனையும்
உண்மை என்று தெரிந்தது. அதிகாரிகள் போலிஸ் சம்பந்தப்பட்ட எல்லோருக்கும் ராஜா கடும் தண்டனை வழங்கினான். தாத்தாவை அரண்மனைக்கு அழைக்க ஆள் அனுப்பினான்.
தாத்தாவுக்கு ராஜா தான் மாறுவேஷத்தில் வந்து மூட்டை தூக்கியது என்று தெரிந்ததும் பரம சந்தோஷம். அப்படியே கட்டிக்கொண்டார். ராஜா தாத்தாவுக்கு சொச்ச காலத்தை சௌகர்யமாக வாழ சகல வசதிகளும் அளித்தான்.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1426

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *