THIRUMURUGAATRUPADAI – J K SIVAN

திரு முருகாற்றுப்படை – நங்கநல்லூர் J K SIVAN
நக்கீரர்
இரண்டாவது அறுபடை வீடு:. திருச்செந்தூர்
வரிகள் 83 முதல் 103 வரை.
திருச்சீரலைவாய் (திருச்செந்தூர்)
ஐவேறு உருவின் செய்வினை முற்றிய 83
முடியொடு விளங்கிய முரண்மிகு திருமணி 84
மின் உறழ் இமைப்பின் சென்னிப் பொற்ப, 85
நகை தாழ்பு துயல்வரூஉம் வகை அமை பொலங்குழை 86
சேண் விளங்கு இயற்கை வாள் மதி கவைஇ 87
அகலா மீனின் அவிர்வன இமைப்பத் 88
தா இல் கொள்கைத் தம் தொழில் முடிமார் 89
மனன் நேர்பு எழுதரு வாள் நிற முகனே; 90
மா இருள் ஞாலம் மறு இன்றி விளங்க 91
பல் கதிர் விரிந்தன்று ஒரு முகம், ஒரு முகம் 92
ஆர்வலர் ஏத்த அமர்ந்து இனிது ஒழுகி 93
காதலின் உவந்து வரம் கொடுத்தன்றே, ஒரு முகம் 94
மந்திர விதியின் மரபுளி வழாஅ 95
அந்தணர் வேள்வி ஓர்க்கும்மே, ஒரு முகம் 96
எஞ்சிய பொருள்களை ஏமுற நாடி97
திங்கள் போலத்திசை விளக்கும்மே, ஒரு முகம் 98
செறுநர்த் தேய்த்துச் செல் சமம் முருக்கி 99
கறுவு கொள் நெஞ்சமொடு களம் வேட்டன்றே, ஒரு முகம் 100
குறவர் மடமகள் கொடிபோல் நுசுப்பின் 101
மடவரல் வள்ளியொடு நகை அமர்ந்தன்றே 102
ஆங்கு அம்மூ இரு முகனும் முறை நவின்று ஒழுகலின், 103.
முருகப்பெருமானின் தலைமுடி தாமம், மகுடம், பதுமம், கிம்புரி என ஐந்து விதமான உருவங்களோடு கலைநயத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. கோடகம், மற்றும் வேறு விதமான வண்ணங்கள் கொண்ட நவரத்ன கற்களால் அலங்கரிக்கப்பட்டு, மின்னலின் பிரகாசத்தோடு கண்ணைப் பறிக்கிறது. சுப்பிரமணியனின் நேர்த்தியான- கைத்திறன் கொண்டு செய்யப்பட மகர-வடிவ-காதணிகள் பளபளக்கிறது. அது தொலைதூரத்தில் வானில்காணும் பூர்ண சந்திரனைச் சுற்றி மினுக்கும் நட்சத்திரங்களை நினைவூட்டுகிறது. முருகனின் ஆறு முகங்களும் ஞானப் பிரகாசத்தை அள்ளி வீசுகிறது. சதா தவத்தில் திளைத்திருக்கும் ரிஷிகளின் மனத்தை நிரப்புகிறது.
நக்கீரர் சுப்பிரமணியனின் ஆறு முகங்களை பற்றி அழகாக வர்ணிக்கிறார். ஒரு முகம் இருள் சூழ்ந்த இந்த பரந்த உலகம் ஒரு குறையுமின்றி பிரகாசிக்கச் செய்கிறது.
ரெண்டாவது முகம் புனிதம் நிறைந்த பக்தர்களால் மனதார வணங்கி போற்றப்படுகிறது. பக்தர்கள் கேட்ட, கேட்காத அனைத்து வரங்களையும் அருள்கிறது. கொடுக்கும்போது அதன் சந்தோஷம் பெறுவார்கள் மனதை விட அதிகாமாக மகிழ்கிறது.
மூன்றாவது முகம் வேதங்களின்படி யாக யஞங்களை நடத்தும் முனிவர்களின் யாக கார்யங்கள் தீய சக்திகளால் தொந்தரவு செய்யப்படாமல் பாதுகாக்கிறது. உண்மையான வேதங்களால் அறியப்படமுடியாத அரிய ஞானத்தை உண்மைகளை ஞானிகளுக்கு விளக்குகிறது.
நான்காவது முகம் உலகத்தின் அனைத்து திசைகளையும் சந்திரன் காட்டுவது போல் அவர்களின் மனதை தெளிவுபடுத்துகிறது;
ஐந்தாவது முகம் போரில் அசுர சக்திகளை அழித்து, வெற்றியைக் கொண்டாட ச் செய்வது.
ஆறாவது புனித முகம் [இச்சா-சக்தியைக் குறிக்கும்] படர் போன்ற மெல்லிய இடுப்புடைய வேடுவகுலமகள் வள்ளி-யுடன் இன்பமாக, ஆனந்தத்தோடு உறவாடுகிறது என்கிறார்
நம் எல்லோருக்கும் தெரிந்த ஒரு எளிய முருகன் பாட்டை ஞாபகப்படுத்துகிறேன். இதுவும் நக்கீரர் பாடியது என்கிறார்கள். ஆனால் அது ரொம்ப ரொம்ப சிம்பிளாக நமக்கு புரியும் பாடம். அதுவும் முருகனின் ஆறுமுகங்களை வர்ணிக்கும் பாடல்.
அஞ்சு முகம் தோன்றின் ஆறுமுகம் தோன்றும்
வெஞ்சமரில் அஞ்சல் என வேல் தோன்றும் – நெஞ்சில்
ஒருகால் நினைக்கின் இரு காலும் தோன்றும்
முருகா என்று ஓதுவார் முன் .
எப்போதாவது நமது மனதில் எதைப்பற்றியாவது ஒரு பயம் தோன்றினால் பயப்படாதேடா என்று சுப்பிரமணியனின் ஆறு முகம் இமைப்பொழுதில் நம் முன் தோன்றும். கடுமையான போராட்டத்தில் மனம் சிக்கி என்னசெய்வது என்று புரியாமல் திணறும்போது பயப்படாதேடா இதோ பார் என் வேல் அது உன்னைக்காக்கும் என்று கூரிய அவன் வேல் வந்து நம் முன் நிற்கும். மனதில் ஒரு பொழுது நினைத்தால் கூட போதும் அவனுடைய தாமரைத் திருப்பாதங்கள் நமக்கு முன்னால் வந்து தோன்றும். நாம் செய்வது ஒன்றே ஒன்று தான். முருகா முருகா முருகா என்று அவன் திவ்ய நாமத்தை வாய் மணக்க சொல்லிக்கொண்டே இருப்பது தான்.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1426

One comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *