ANDAL AND THIRUPPAVAI J K SIVAN

அழகிய  பெண் ஆழ்வாரே !ஆண்டாளே !      –   நங்கநல்லூர்_J_K_SIVAN

ஸ்வாகதம்.    இன்று  முதல் ( 17.12.2023)   மார்கழி  எனும்   தெய்வீகமான, பகவான்   விஷ்ணுவுக்கு, கிருஷ்ண னுக்கு என்றே  ஒதுக்கப் பட்ட  சிறப்பான  மாதம்.. இந்த  மகத்தான  மாதத்தில்  ஸ்ரீ  ஆண்டாள் பற்றிய ஒரு  சிறு   கதைத்  தொகுப்பை அவள்  அற்புதமாக  எழுதிய  திருப்பாவை,  மேலோட்ட அர்த்தத்தோடும் , உள்ளர்த் தத்தோடும் , ஒவ்வொரு நாளும்  ஒரு காட்சியாக  மார்கழி முழுதும்  சமர்ப்பிக்க  அடியேன் சித்தம்.
நமது  பாரத தேசம் ஒரு புண்ய பூமி தான்  என்பதில்  யாருக்காவது  துக்குணியூண்டேனும்  சந்தேகம் இருக்கு மானால்   கொஞ்சநாள்   அண்டை நாடுகளில், அதாவது  ஆப்கானிஸ்தானிலோ பாகிஸ்தானிலோ பர்மா,  ரஷ்யாவிலோ,   இரான் இராக்கிலோ  அல்லது எங்கோ ஒரு  நாட்டில் இருந்து விட்டு  மீண்டும் இங்கே வரவும்.   யாரும் சொல்லாமலே  தானே உண்மை  தெரியவரும்.    இந்த புண்ய தேசம் இவ்வாறு  பரிமளிக்க யார்  காரணம், எது  காரணம்?  

இங்கு வாழ்ந்த நம் எந்தையர் முன்னோர்   இசைந்து குலாவி வாழ்ந்து களித்த அற்புத தேசம்  என்று  பாரதி யார் சொல்லி லிருக்கிறாரே.   நமது மூதாதை யரும்,  அவர்களோடு  சேர்ந்து  நாம்  வணங்கும்  தெய்வங்க ளும்,  நலமோடு வாழ வழிகாட்டி வாழ்த்திய புண்ய புருஷர்களும்  கூட  காரணர்கள்.    

பிரபஞ்சம் எனும்  இயற்கை என்றும் அன்று போல்  இன்றும் இருக்கிறதே தவிர  அதை அசுத்தமாக்கி,  சின்னா பின்னமாக்கி  நாகரிகம் என்ற  போர்வையில்  நாமே உண்டாக்கிக்  கொண்ட குளிரில்  வாடுகிறோம்.  டிசம்பர் எனும்  இயற்கைக்  குளிர்  மழை,  ஊதல் காற் றோடு இன்னும் சிறிது  காலம் நம்மை வாட்டி விட்டுத் தான்  போகும்.  ஆனால்   நாம் உண்டாக்கிக் கொள்ளும்  குளிர்   போக  மனம் முதலில்  குளிர வேண்டும்.

நாம்  இப்போது  ஐந்தாயிரம் வருஷம் பின்னோக்கி செல்வோம்.  கிருஷ்ணன் காலத்தில் இருப்போம்.   குளிர்   என்று  சொன்னதால்  மார்கழி பற்றியே   ஆரம்பிப்போமே.

 ”மார்கழி திங்கள் என்ற பாடல்  மட்டும் நமக்குப்  போதும்,  மடி நிறைய  பொங்கல்   வேண்டாம்.    ஒரு தொன்னையே  போதும். பிரசாதம்  உணவல்ல. இறை  அருள்   பெற  விழைய, ஒரு  தூண்டு கோல்.

மார்கழியை  மணக்க வைத்த  மா  மனிதை  (மனிதன் என்ற பதத்துக்கு இணையாக  உருவாக்கிய  ஒரு  வார்த்தை என்று எடுத்துக் கொள்வோம்)  ஆண்டாள்.  பன்னிரு  ஆழ்வார்களில்   ஒரே பெண். எட்டாம் நூற் றாண்டில் வாழ்ந்தாலும் மனதிற்கு எட்டிய தூரத்தில் என்றும் நம்  கண் முன்னே  நின்று, மனத்தை  ஆக்ரமிக்கும் பெண்   தெய்வம். பெருமாள்  இருக்கும்  இட மெல்லாம்  ஒரு  சந்நிதியில் தானும்  நின்று  என்றும்  நமக்கு  அருள்பவள். மூன்றாயிரம்   ஆண்டுகளுக்கு முன்  வாழ்ந்தாள் என்று சொல்கிற வர்களும் உண்டு.
கண்ணன் இருந்த காலத்தில் தானும்  வாழ்ந்ததாக தானே  ஒரு காட்சி அமைத்து  மனத்தில்  வாழ்ந்து நம்  மனத்தில்  இடம் பிடித்தவள்  ஆண்டாள்.

 வில்லிப்புத்தூரில்   ஆடிப்பூரத்தில் துளசியோடு துளசியாக பெரியாழ்வார் கண்டெடுத்த,  அவதரித்த, கோதை  எனும்  பெயர் பெற்றவள்.  

அரங்கனுக்கு, ரங்க மன்னாருக்கு   பூச்சூட   ஒரு பெரும் நந்த வனமே  வளர்த்த பெரியாழ்வார்  தனது வழியி லேயே சுடர்க் கொடியை  வளர்த்தார். தமிழ்  கலந்த  பக்தியை வளர்ப்பு மகளுக்கு  ஊட்டினார். தேனிலே  ஊரினவள் தேனான பாசுரங் களை  இயற்ற வழி காட்டினார்.  தனக்குத்  தெரிந்த    சாஸ்திரம், வேதம், பக்தி  மார்க்கம், தீஞ்சுவைத் தமிழில் கலந்து ஊட்டி   அவளைப் பக்குவப் படுத்தினார்.   திருப்பாவை  பிறந்தது.

திருப்பாவை 30 பாசுரங்களையும் கோதைநாச்சியார் எழுதிய போது  தன்னை கண்ணன் ஆயர்பாடியில் இருந்த காலத் தில் அந்த  ஊர்  சிறுமிகளில் ஒருவளாக  உருவகப் படுத்திகொண்டு அந்த இடைச் சிறுமிகளோ டு பாவை நோன்பு நோற்றபோது அவள்  கிருஷ்ணனின் பெருமையை  உணர்த்தியதிற்கு ஈடு இணை இல்லை.

மார்கழி முழுதும்  ஒரு  நாளைக்கு ஒன்றாக  அந்த பாசுரங்களை  தொடர்  நிகழ்ச்சியாக தொகுத்து அந்த சிறுமியர்களின் பேச்சு வாயிலாக  திருப்பாவை பாசுரங்கள்  உங்களை வந்தடைகிறது.

என்  பதிவுகளில் ஸ்ரீ  ஆண்டாள்  ஆயர்பாடி  இடைச் சிறுமிகளில்  ஒருவளாகவும் அதே நேரம்   வில்லிப் புத்தூரில்   விஷ்ணு பக்தர், பெரிய ஆழ்வார் என்று போற்றப்பட்ட விஷ்ணு சித்தர் கண்டெடுத்த வளர்ப்பு மகள்  கோதையாகவும்  ஒரே சமயத்தில் அறிமுகமா கிறாள்.  ஆகவே  நீங்கள்  ஆண்டாளையும் கோதை யையும்   சந்திப்பீர்கள்.

மார்கழி 1ம்   நாள் ‘
”ஏம்மா   குழந்தை வழக்கத்தை விட  சீக்கிரமே எழுந்துட்டே.?  உன்னுடைய  திவ்ய  குரல்லே  நீ பாசுரங் கள்  பாடும்போது   என்னை  ஸ்ரீ  வைகுண்டத் துக்கே  கொண்டு  சேர்க்கிறதம்மா”.     விஷ்ணு சித்தர்  என்கிற பெரியாழ்வார் குரல்  தழுதழுத்தது.

”அப்பா. எல்லாம்  நீங்க  கத்துக் கொடுத்தது தானே.   எனக்கு  நீங்க  இல்லாட்டா இதெல்லாம்  வருமா அப்பா?.  அரங்கனை அறிமுகப்படுத்தியதே  நீங்கதானே.  காரணமே  நீங்க தானே.  என்  ரங்கனை பத்தி  பாட தோண  வச்சதே நீங்க தானேப்பா?

”ஆமாம்  தாயே,   நான்   செஞ்ச   பெரிய பாக்கியம்  உன்னை அடைந்தது.  உன்  மூலமா  அந்த  ரங்கனை  நினைக்கிறது,  அவனைப் பத்தி பேசறது,   பாடறது எல்லாம்.   இப்படியே  என்  வாழ்நாள் பூரா போகணும்னு தோணறது அம்மா. இப்பல்லாம்   நீயே எழுத்தாணி  பிடிச்சு   ஓலைச்  சுவட்டிலே நிறைய  எழுத  ஆரம்பிச்சுட்டே.  ரொம்ப  சந்தோஷம் தாங்கலை  எனக்கு.”

” நிறைய  எழுத  மனது துடிக்கிறது  அப்பா.   ஆனா,  ஒண்ணை  நினைச்சு எழுதறத்துக்குள்ளே அதைக் காட்டிலும்  அருமையா வேறே  ஒண்ணு மனசுக்குள்ளே ஒடறதாலே  முதல்லே   நானே  அதை பாடிப் பார்த்து   அனுபவிச்சு அப்புறம் ஓலையிலே வடிக்கிறேன்.”  

‘ஏன்  எழுந்துட்டே ன்னு  கேட்டேளே. வாசலைப் போய்  பாருங்கோ,  பெருக்கி, சாணம்  தெளிச்சு,மெழுகி,  பூ செருகி   பெரிய   கோலம் போட்டிருக்கேன், ” ரங்கா வா” என்றும்  எழுதி இருக்கேன்”

 ”மார்கழி மாசம்.  பிரம்ம  முகூர்த்தத்திலே  சகல தெய் வங்களும்   பூமிக்கு வரா  அம்மா.  நீ  வான்னு எழுதி  கூப்பிடறத்துக்கு முன்னாலே  உன் குரல் கேட்டே  ஓடி  வருவான்,  அந்த  ரங்கன்,   எனக்கு தெரியாதா?  நீ என்ன  புதுசா  பாடினே இன்னிக்கு ?”

 ”அப்பா,  மார்கழிலே  விடியறதுக்கு  முன்னே  எழுந்து  நீராடி  விரத மிருந்து   முப்பது  நாளும்  அந்த நாரா யணனையே  நினைத்து நோன்பு  நோற்றால்  அந்த  ரங்கன்  வேண்டியதை  தருவான் என்கிறதாலே  எனக்கு அவனே  வேண்டுமென்றே   இந்த  முப்பது நாளும்  நோன்பு நோக்கறேன்.

 அந்த  மாய கிருஷ்ணன்  இருந்த  ஆயர்பாடியிலேயே நான்  இருக்கிறதா   மனசாலே அங்கே போய்  மீதி  பெண்களோடு சேர்ந்து  கொண்டு அவர்களில் நானும்  ஒருத்தியா  அங்கே  ஒரு ஆண்டாள் ஆகிட்டேன் பா.  நான்  உடம்பிலே  இங்க  இருந்தாலும் மனத்திலே  கிருஷ்ணன் வீட்டையே   ஆண்டாளா, சுத்தி  சுத்தி  வரது  தான்   ரொம்ப  சந்தோஷமாக  இருக்கு  அப்பா. ”

”என்ன  எழுதினே படியேன் கேக்கறேன்.  கண்ணு  சரியா தெரியலை.  ஓலைச்சுவடு படிக்க வெளிச்சம் போறலே.”

++++

கோதை ஆயர்பாடி  ஆண்டாள் ஆகிவிட்டாள்.  மார்கழி மாதம்  குளிர்.  யமுனை உறங்குவது போல் அமைதியாக  இருக்கிறது. அதை  எழுப்புகிறாள்   ஆண்டாள்.  முதலில்  தூக்கம் கலைந்து  எழுந்தவள் தன் குடிலை விட்டு  வெளியே  வந்தாள்.

‘’மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்;
     நீராடப் போதுவீர்! போதுமினோ, நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!
     கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்,
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்,
     கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
நாராயணனே, நமக்கே பறைதருவான்,
     பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய். ‘’

கணீரென்று  கோதையின் குரலில் திருப்பாவை தோன்றியது.  விஷ்ணு சித்தர்  கண்களில்  நீர் மாலை.
”அசாத்யம்,  ஸ்ரீயப்பதே,  ரங்கநாதா,  எல்லாம்  உன்  கிருபை.  என்ன  அற்புதம் இந்தக் குழந்தையின் பக்தி ஸ்ரத்தை.  இவ்வளவு  காலம்  நான்  எழுதியதெல்லாம்  இந்த  ஒரு பாசுரத்துக்கு ஈடாகாது,  அம்மா  தாயே,கோதை,  நீ   லக்ஷ்மி அம்சம்  என்பதில்  சந்தேகமே இல்லை.  என்ன  திவ்யமாக  எழுதியிருக்கிறாய். நான் எழுதினத்துக்  கெல்லாம் சிகரமாக  உன்  எழுத்தில் பாசுரங்கள்  மிளிர்கிறதே. எல்லாம்  அந்த  ரங்கன் செயல்.

 நாளைக்கு  நீ   எழுதப்போவதையும்  ஆவலாக கேட்க காத்திருக்கேன்”.
”ஓவ்வொரு நாளும்  பாசுரம்  எழுதப்போறேன்.  நீங்க எனக்கு அறிமுகப்படுத்திய அந்த  நாராயணன் அவதாரமான  கிருஷ்ணன் இருந்த  ஆயர்பாடியிலே இடைச்சிறுமிகள் ஒன்றாககூடி யமுனையில்  நீராடி நல்ல  கணவன் கிடைக்க  காத்யாயனி விரதம் இருந்த நோன்பு பற்றியும் எழுதப்போகிறேன்.
+++
இப்போது ஆயர்பாடியில் உள்ளோம். அங்கு சில  பெண்கள்  விடியற்காலையில்  கூடியிருக்கிறார்கள்.  மற்றும்  சிலரை எழுப்ப செல்கிறாள்  ஆண்டாள் என்கிற சிறுமி. ‘

”மார்கழி வந்து விட்டதே. எழுந்திருக்க வேண்டாமா.  நாம் எல்லாருமாக  யமுனைக்கு செல்வோம். அங்கு புனித நீராடி ஸ்ரீ  கிருஷ்ணனைப் பணிவோம்.  அவன் ஒருவன் போதுமே நாம் கேட்டதெல்லாம் அருள. தோழியர்களே எழுந்திருங்கள்”
”என்னடி ஆண்டாள் , இந்த  மார்கழி குளிரில் அதிகாலையில் வந்து எங்களை எழுப்பி வா குளிப்போம், பாடுவோம்” என்கிறாய். எதற்கு ஏன் என்கிற விஷயம் சொல்லேன்?  என்றனர்  அந்த  ஆயர்பாடி சிறுமியர் அவளிடம் .  

”நான் சொல்றேன் ஆனால் ஒரு நாளைக்கு ஒரு விஷயம்  தான் சொல்வேன். அப்போ  தான் உங்களுக்கு கொஞ்சம்   கொஞ் சமா புரியும். ஒரே அடியா  ஒரு மாச விஷயத்தை  ஒரே நாளில்  சொல்லித்  திணிக்கக்  கூடாது.  இன்னிக்கு மார்கழி 1ம்  நாள்”
 ஆண்டாள் என்கிற சிறுமி சொல்ற விஷயம்இது:
“இந்த  மார்கழி  என்கிற  மாசம் ரொம்ப  ஒசத்தியானது.  எனக்கென்னமோஇந்த மாதம் தான் ரொம்ப பிடிக்கும். வெயில் கிடையாது  தண்ணீருக்கு பஞ்சமில்லை. இந்த  ஊர் என் உயிர். ஏன் என்றால்   இதில் தான் கிருஷ்ணன், அந்த ஆணழகன்,  கருநீல வண்ணன் செவ்விதழ், கன்னம் உடையவன்-கண்களோ செந்தாமரை.   அவன் இருக்கும் நம்முடைய இந்த  ஆயர்பாடி,  ஒரு ஸ்வர்க பூமி என்பதில் என்ன சந்தேக மடி உங்களுக்கு!!. அவன் சாதாரண மானவனாயிருந் தால்  இந்த பேச்சுக்கே  இடமிலையே! எதிர்த்தவர் களின்உயிர் குடிக்கும் வீரன் அந்த நந்த கோபனின் பிள்ளையை  தவிர வேறு யார்?  அவன் தாய் பற்றி  சொல்ல வில்லை யே, இந்த   சிங்கக்குட்டியை  பெற கொடுத்து வைத்தவள் அவள். யசோதை  அவள் பேர்.
”நேரமாச்சே  சீக்கிரம் வாருங்கள் தோழியரே, குளிர்ந்த யமுனையில் குளித்து  அவனைப்  பாடுவோம்’

”’ஆண்டாள்,  கொஞ்சம்  விவரமாத்தான்  சொல்லேன்  அப்படி என்ன  இதுக்கு  முக்கியம்?”  

”எதற்காக இந்த  மார்கழி மாதம் நோன்பு என்று தெரிய ணும்னாக்க, இந்த  மாசம்தான்  அந்த கிருஷ்ண னுக்கு, நாராயண னுக்கு  பிடிச்ச மாசம். மாதங்களில் அவன்  மார்கழியாகவே இருக்கானாம்.  நாமெல்லோரும் ஏன்   இந்த உலகில் எவருமேஸ்வர்கமடைய நாம் செய்யும்  இந்த பாவை நோன்பு  தவிர  குறுக்கு வழி வேறே எஎதுவும் இல்லையே””

பெண்கள்  ஸ்நானம்  முடித்து  கூட்டமாக  சேர்ந்து   நாராயணனை நெக்குருகி, மனமுருகிப்  பாடி , வெள்ளை உள்ளத்தோடு வேண்டி அன்றைய நோன்பைத் தொடங்கினர். பிறகு  தத்தம்  வீடு திரும்பினர்.  

மார்கழி மாதம் நம்அனைவராலும் ஸ்ரீ வில்லிப்புத்தூர்  சென்று ஆண்டாளை  தரிசனம் செய்ய இயலுமா?  சென்னை வாசிகளே! திருவல்லிக் கேணி தான்  நமக்கு வில்லிப்புத்தூர்.  அங்கு மார்கழி முழுதும்  கோலாகல மாக   விமரிசையாக ஆண்டாள்  நீராட்டு விழா, பிரபந்த பாசுரம் எதிரொலிக்க, விடியற்காலை பிரம்ம  முகூர்த் தத்தில் திவ்யதரிசனம் கிடைக்கிறதே, விடாமல் போவோம். நம்மால் முடிந்த நோன்பு இதையாவது செய்வோமே. கிளம்புங்கள் எல்லோரும் உடனே  போவோம்.   அசைந்து நடந்து செல்ல முடியாதவர்கள் மனதார யூட்யூபில்  தரிசனம் பார்ப்போம். 

 https://youtu.be/GtFwQLhFWzI?si=in_Z4GPoV9moUDgp

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1426

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *