olden days recalled j k sivan

அப்போதைய  வாழ்க்கை முறை  –  நங்கநல்லூர்  J.K. SIVAN

எண்பது  கடந்தவர்களைப் பற்றி  கொஞ்சம்  உரிமையோடு பேசலாம் என்று தோன்றுகிறது. என் வயதுக்காரர்களும் நான் சொல்லப்போவதெல்லாம்  தெரிந்திருக்கும். அவர்களும்  அனுபவித்ததை தான் நான் நினைவூட்டுகிறேன்.

எங்கள் காலத்திய வாழ்க்கை வேறு. இப்போதுள்ள  விஞ்ஞான வசதிகள் வேறு. இதெல்லாம் இல்லாமலேயே வாழ முடியுமா?என்றால்  அதன் ருசி பயன் தெரியாதவரை அவற்றை நாங்கள்  அறியாததால் பெரிய நஷ்டமாக கருதவில்லை. சுகமாக வாழ்ந்தோம்.  

 எங்கும் நடை, எல்லாம் பேப்பர் பென்சில், பேனா. அச்சு புத்தகங்கள். புகைவண்டி ரயில். குதிரை வண்டி  பனையோலை விசிறி என்று தான்  எங்கள் சுகங்கள் அப்போது இருந்தது.  ஆற்றில் குளத்தில் நீந்துவது, துவைக்கும் கல்லில் வேஷ்டி சட்டையை தோய்த்து  காயப்போட்டு உடுத்துவது. இஸ்திரி கிடையாது. வேஷ்டியில் அலைந்தவர்கள்.  பேண்ட் முழுச்சட்டை  யாரிடமும் இல்லை.  சோபாக்களை  தேடாமல் தரையில்,பாயில் உட்கார்ந்தவர்கள்.  பெரியவர்களுக்கு சாஷ்டாங்க நமஸ்காரம், அபிவாதி சொல்லி
வணங்கியவர்கள்.

ஆஸ்பத்திரிகள், பிரைவேட் டாக்டர்கள்  கிடையாது.  எங்கள் வியாதியை  குணப்படுத்த  நாட்டு மருந்து, பத்திய சாப்பாடு,  ரொம்ப பெரிசாக வந்தால்  குலதெய்வத்துக்கு  முடிகொடுக்க வேண்டிக்கொண்டு  மஞ்சள் துணியில் வெளி  ரூபாய் முடிந்து வைத்தவர்கள். இந்த நம்பிக்கை அநேகரை காப்பாற்றியது,  எங்களுடையது  இயற்கையோடு ஒட்டிய  வாழ்க்கை.  

கொலஸ்ட்ரால், புதுசு புதுசாக இப்போது சொல்லும் வியாதி பெயர்களே தெரியாமல் ஆரோக்யமாக  நீண்ட நாள் வாழ்ந்த  கூட்டுக் குடும்பங்கள் வாழ்ந்தவர்கள்.
பொடி  நடை என்று வெகு தூரம்  நடந்தே பழக்கமான கால்கள்.
ஹோட்டல்கள், pub   இதெல்லாம்  எங்களுக்கு தெரியாது. வீட்டில் கடலை எண்ணையில்  பண்ணின பக்ஷணங்கள்.  விறகு அடுப்பில் வேகவைத்த இட்டலி, சாதம்,கல்லுரலில் அரைத்த மாவில் வார்த்த தோசை, அடை  இதைத் தின்று   வளர்ந்த உடம்பு.

சனிக்கிழமை தவறாமல் நல்லெண்ணெய்  மிளகாய்ப்பழம் போட்டு காய்ச்சிய சூடான, பொறுக்கும் சூட்டில் தலையில்  பரக்க  பரக்க   எண்ணெய்  தேய்த்து குளிப்பாட்டிய  உடம்பு. அரைமணி முக்கால் மணியாகவாவது  ஊறியபின்  கிணற்றங்கரையில்  வாளியில் துத்தநாக  பக்கெட் தாம்புக்கயிற்றில் கட்டி நீர் இறைத்து குளித்தவர்கள்.  நாட்டு வைத்தியர்,  குடும்ப நாவிதர், மற்றும்  விசேஷங்களுக்கு நாயன  தவில் வித்வான்.  அவர் கொடுத்த பேதி மாத்திரை   குறைந்தது ரெண்டு மாதத்துக்கொரு தடவையாவது குழந்தைகளுக்கு கொடுத்து  வயிற்றை சுத்தம் செய்த பெற்றோர்.

பிள்ளையார் பெருமாள் சிவன் கோவில்களில்  சாயங்கால வேளைகளில்  பிரசங்கம், உபன்யாசம் நடக்கும். அது தான் பொழுது போக்கு.  வீட்டில் பெண்கள்  ஹார்மோனியம் வைத்து பாட்டு கற்றுக்கொண்டார்கள்.
ஊரில்  கவர்மெண்ட் பள்ளிக்கூடங்கள் தான் எங்கள் கல்விநிலையம்.  தனியார் பள்ளிக்கூடங்கள்  கிடையாது.தெரியாது.  சிலர்  வீட்டில் ரேடியோ கொரகொரவென்று பாடும்.

உலக குடும்பசெயதிகள்  தபால் கார்டில் தான் அநேகமாக  பரவியது.  தந்தி அவசரமான சமயங்களில் தான். முக்கால்வாசி சாவு செய்திகள் தான் தந்தியில் வந்தது. தீட்டு காக்க,   குளிக்க,  கோவிலுக்கு போகாமல் இருக்க, சுபகாரியங்களில் ஈடுபடாமல் இருக்க  உறவினருக்கு அது ஒன்றே  உதவி.ஒன்றிரண்டு  ஆங்கில,தமிழ் தினத்தாள்கள்  ஊரில்  பொது நூல் நிலையத்தில்,  இல்லை  பட்டமணியம் வீட்டில் இருக்கும்.படிக்க தெரிந்தவர்கள் அங்கேயே  திண்ணையில் உட்கார்ந்து படித்து சொல்வார்கள்.

அவரவர்  வீட்டிலே  பணத்தை நகைகளை  ஜாக்கிரதையாக  புளிப்பானை , அரிசிப்பானை அடியில் மூட்டை கட்டி  பாத்திரத்தில் போட்டு ஒளித்து வைத்தது தான்  அக்கால பேங்க் லாக்கர்.

ஆறு மணியானால் தெருக்கள் இருளோ என்று ஆகிவிடும்.  ரோடுகள் கிடையாது. ஒத்தையடிப்பாதை  தான்  சுருக்கு  குறுக்கு வழி.  ஹரிக்கேன் விளக்கு  வெளிச்சத்தில்  நாங்கள்  படித்தவர்கள்.   மின்சாரம் ஊரில் எங்கும்கிடையாது.தெரு  லாந்தர் விளக்குகள்,  நக்ஷத்ர, சந்திர பகவான் வெளிச்சம் தான். தீவட்டி வெளிச்சத்தில் பொது நிகழ்ச்சிகள்,  கரகம்,தெருக்கூத்து,  நாடகம் எல்லாம் நடந்தது. கோவில் பிராகாரங்கள் தான் ஸ்டேஜ்.ஒவ்வொரு வீட்டிலும்  வாசல்,கொல்லைக்  கதவுகளுக்கு  இரும்பு சட்டம் குறுக்கே  போட்ட  பாதுகாப்பு.

வெளியூர் போகும்போது புளியஞ்சாதம், தயிர் சாதம்  வழியில் சாப்பிட  உதவியது. வீட்டில் வறுத்த  வாழைக்காய் உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு வருவல்களும், மோர் மிளகாய்,  நார்த்தங்காய் ஊறுகாய் தான் சைடு டிஷ். மரங்களை வெட்டி  விறகு, காயப்போட்டு எரித்தார்கள்.  ஆற்றங்கரையில் பிணத்தை எரித்தார்கள். பசும்பால்  எருமைப்பால்  தாராளமாக  கிடைத்தது.  வீட்டிலேயே காப்பிக்கொட்டை வறுத்து, மெஷினில் கையால் அரைத்து  ஜம்மென்று மணக்க  காப்பிப்பொடி தயார் பண்ணி  கள்ளிச்சொட்டு பாலில் டிகிரி காப்பி  குடித்தவர்கள் நாங்கள்.

ஒவ்வொரு வீட்டிலும்  தோட்டம் பெரியதாக இருந்தது. புளி, மாங்காய்,தேங்காய், மற்ற பச்சைக்காய்கறிகள்,  கிடைத்தது.  வயலில் நெல். ஒவ்வொரு வீட்டிலும்  உரல்,உலக்கை சத்தம் கேட்கும்.  தயிர் பானைகள் உண்டு.
வெண்ணை எடுத்து நெய்  காய்ச்சி  கலப்படம்  இல்லாத  நெய்யில் பருப்பு சாதம் சாப்பிட்ட குழந்தைகள் குறைந்து எண்பதாவது வரை வாழ்ந்தனர்.அன்றாட நேம நியமங்களோடு தெய்வ பக்தி மனத்தை நிரப்பி இருந்தது. அவசரம் இல்லாத  நிதான வாழ்வு மாரடைப்பை விலக்கியது .

இதில் ஏதாவது இப்போது இருக்கிறதா என்றால் இல்லை.  உடல் உழைப்பு குறைந்து  கலப்படம் பெருகி, எண்ணங்கள் வித்யாசமாகி  அன்பு மறைந்து போய்,  பொய்  பெருகி, உடல் குன்றி, உள்ளம் நைந்து, மரணத்தை சீக்கிரமே நெருங்கும் பகட்டு  ஆடம்பர  வாழ்வு  பிடிக்குமா எங்களுக்கு? ஆனால் காலத்தோடு ஒட்டி தாமரை இலை த்தண்ணீராக தனித்து வாழ்கிறோம்.  

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1426

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *