THIRUPPAAVAI 13 J K SIVAN

அழகிய  ஆழ்வாரே ,  ஆண்டாளே !     #நங்கநல்லூர்_J_K_SIVAN

 

திருப்பாவை.      மார்கழி 13ம் நாள்

13 புள்ளின் வாய் கீண்டான்

 

நாட்கள் வெகு வேகமாக ஓடிக்  கொண்டிருக்கின்றன. சரி, அதற்காக,   புதிதாக ஓமிக்றான்   நம்மைத் துரத்திக்கொண்டே இருப்பதில் என்ன ஞாயம்? மறுபடியும் கட்டு திட்டமா, ஊரடங்கு உத்தரவா? எல்லோரும் குலச்சிறை நாயனாரா? வாய்க்கு மூடியா? ஆண்டாளே உன்னைப்   போல நாங்களும் வெளியே நாலு பேரோடு செல்ல வேண்டாமா? என்ன  எப்போது பார்த்தாலும் ஏதாவதொரு   பெயர் சொல்லி  வாய்க்கு மூக்குக்கு  கவசம்?
திருப்பாவையின் சிறப்பு அதை எழுதியவள் ஒரு சிறு பெண். அமரத்துவம் பெற்ற ஒரே பெண் ஆழ்வார். இறைவனை விரும்பிய , இறைவனால் விரும்பப்பட்ட, இறைவனோடு கலந்தவள். காலத்தால் அழியாத ஒரு பெண் தெய்வம். ஆண்டாள் என்று வைணவ ஆலய சந்நிதிகளில்  பெருமாளோடு  அவளும்  அருள் பாலிப்பவள்.
படிக்காதவள் என்று சொல்வது தவறு. பீஸ் fees கட்டி பள்ளியிலோ காலேஜிலோ முதுகில் பொதி சுமந்து பொருத்தமில்லாத ஒரு வர்ணத்தில் ஒரு உடையை   யூனிபாரம் என்று அணிந்து விஷயமே தெரியாதவர்களிடம் எதையாவது பாடம் என்று தெரிந்து கொள்வது தான் படிப்பு என்று நாம் எண்ணினால் அது கிருஷ்ணனால் கூட மன்னிக்க முடியாத ஒரு தவறு. நமது குழந்தைகளை இந்த மா பெரும் தவறு செய்ய நாம்  வைத்து விடுகிறோம்.   பணம் ஒன்றே லக்ஷியம் என்று மனது இருகி விடும் போது நல்லது கெட்டது நமக்கு எங்கே தெரியப் போகிறது?   மந்தைகளாக சேற்றில் எல்லோரும் விழுவதில் யாரை யார் குறை சொல்ல முடியும்?. ஒண்ணாம் கிளாசுக்கு  மூணு நாலு லக்ஷம் கட்டணமா ? என்ன அநியாயம்?
கல்வி நிச்சயம் புத்தகத்தில் மட்டும் இல்லை. அனுபவத்தில் உள்ளது. அதை உணர்விப்பவர் பொறுப்போடு, விருப்போடு தனக்குத் தெரிந்ததை புரியும்படியாக பாலாடையில் புகட்டுவது போல் உள்ளே செலுத்தினால் அது தான் உபயோகமான படிப்பு. முன்னோர்கள் எந்த தேசத்திலும் அப்படித்தான் கற்றனர்.  தாத்தா  பாட்டிகளிடம்  அறிவு, பாடம்,  நீதி நேர்மை கதை பெறாதவன்  முழு மனிதன் இல்லை என்றே சொல்வேன்.   ஆண்டாளின் திருப்பாவை தமிழ் யாப்பு இலக்கணத்தில் அளவான சீர் வரிசைகளோடு மிளிர்கிறது. ஆண்டாள் எங்கே எந்த தமிழ் வாத்தியாரிடம் இதைப் பயின்றாள் ?. பெரியாழ்  வாரிடமிருந்து என்றால் அங்கே அவர் பாசுரங்களில் நெருடுகிறதே?. எளிதில் புரியும் படியாகவும் அமைத்துள்ளது. அர்த்தம் பலமுள்ள தாகவும் இருக்கிறது. ஆண்டாள் திருப்பாவை பாசுரங்கள் பெரிய அளவில் சிந்திக்க வைக்கும சிறு சங்கதிகள். பாடுவதற்கு எளியதானவை. வேதத்தின் வித்து என்று அதனால் தானே அதற்குப் பெயர்.
M L வசந்தகுமாரி , அரியக்குடி ராமானுஜ ஐயங்கார், அவர்களைத் தொடர்ந்து காலம் காலமாக எத்தனையோ பேர் இன்று சாயந்திரம் கூட பாடுகிறார்களே, ஒருவராவது திருமுருகாற்றுப் படையை இப்படி பாட முடிகிறதா? உபமானம் உபமேயம் எத்தனை அழகாய் எல்லோருக்கும தெரிந்ததாக கொடுத்திருக்கிறாள் ஆண்டாள். அதனால் தான் வருஷத்தில் குறைந்தது ஒரு மாதம் முழுதுமாகவாவது ஆண்டாள்  நம்  மனதைக்  குளிர்விக்கிறாள்.
விஷ்ணு சித்தர் நன்றாகவே புரிந்து கொண்டு விட்டார். இது அந்த மாயன் ரங்கனின் அருள். தாயாரையே அவன் தன்னிடம் அனுப்பி தமிழில் விளையாட விட்டிருக்கிறான். என்னே அவன் கருணை!.
”இன்னிக்கி என்னம்மா பாடப்போறே.?” விஷ்ணு சித்தரின் குரலில் ஆர்வமும் தாகமும் தெரிந்தது. அதி காலையிலேயே எழுந்து மெதுவாக வந்து அவள் அருகில் அமர்ந்துகொண்டு விட்டார் அந்த முதியவர் . அவர் கை அந்த புண்யவதி கோதை யின் சிரத்தை தடவிக்கொடுத்தது.
”இதோ பாருங்கள் அப்பா. இந்த அகலமில்லாத சிறு ஓலையில் எழுத்தாணியால் தாராள மாக எழுத்துக்களை வடிவமைக்க இயலாதல்லவா?. ஆகவே இதை உங்களால் படிக்க முடியாது. ரொம்பவுமே நெருக்கி நெருக்கி எழுதியிருக்கிறேன். நானே படிக்கிறேன். அப்பறமா அதை பாடிக் காட்டுகிறேன்”. பாசுரத்தை வார்த்தை வார்த்தையாக கோதை வாசித்தாள்:

” புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்தி மை பாடிப் போய்ப்
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக் கிடத்தியோ. பாவாய். நீ நன் நாளால்
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்.”
இந்த பாசுரம் விஷ்ணு சித்தரின் மனதில் ஆயர்பாடி நிகழ்ச்சியை, கண்கள் மூடியிருந்தும் தெளிவாக மனத்திரையில் பளிச்சிட்டது. அவள் பாடும்போது அவர் வைகுண்டத்தில் இருந்தாரா வில்லிப்புத்தூரிலேயே இருந்தாரா? என்றால் ரெண்டிலு மே இல்லாமல் இரண்டும் கலந்த தெய்வீக ஆயர்பாடியாகிய பிருந்தாவனத்தில் ஆண்டாள் அருகே தான் இருந்தார். இடைச் சிறுமிகள் அங்கே ஆண்டாளுடன் பேசுவது காதில் விழுகிறதா?.
“இன்று என்ன கிழமை ஆண்டாள்? வெள்ளிக்கிழமைதானே?”
”தாமோதர கிழமை”
”அப்படி ஒரு கிழமை இருக்கா என்ன?”
“எல்லா நாளும் தாமோதரன் எனும் கிருஷ்ணன் நாள் தான் எனக்கு” என்று சொல்லி மேலே பார்த்தாள் ஆண்டாள்.
”என்ன பார்க்கிறே?”
”அதோ மேலே பார். வெள்ளி முளைத்து விட்டது. அப்படியென்றால் வியாழன் முடிந்து விட்டது, மார்கழி 13வது நாள் என்று எடுத்து கொள்ளேன்? சரி சரி, வாருங்கள். இன்று வராதவள் யார்? அவள் வீட்டுக்குப் போய் எழுப்பி கூப்பிட்டு கூட்டிச் செல்வோம். நல்லவேளை, இந்த பெண்ணின் வீடு நாம் வழிபடும் யமுனை நதிக்கரை அருகிலேயே இருக்கிறதே.
 வெள்ளியை பற்றி சொன்னபோதே அந்த வெள்ளை நிற கொக்கு ராக்ஷசன் பகாசூரன் தான் என் ஞாபகத்துக்கு வருகிறான். அவன் கிருஷ்ணனை மோதி பாவம் வாய் கிழிந்து வசமாக மாட்டிக் கொண்டு வதமானதையே இன்று பாடுவோம்.
”ஏ, தூங்கு மூஞ்சி பெண்ணே, சீக்கிரம் வெளியே வா, அற்புதமாக பறவைகளின் கானம் மரங்களில் கேட்க, யமுனையின் குளிர்ந்த நீர் சுகமாக முகம் கை கால் உடம்பு பூரா சில்லென்று புத்துணர்ச்சி அளிக்க எங்களுடன் சேர்ந்து வந்து நீராடு, நமது பாவை நோன்பு இன்று நன்றாக நடக்கட்டும் .
ஒரு சிறுமி மற்றோருவளிடம் சொல்கிறாள்:
“ஆனாலும் இந்த ஆண்டாள் ஒரு ராணி தாண்டீ. என்னமாய் நம் எல்லோரையும் கவர்ந்து நோன்பை நடத்தச் செய்கிறாள்.”
மேலே சொன்ன காட்சி எளிதாக ஓடினாலும் பெரியாழ்வார் அந்த சிறிய எளிய பாசுரத்தின் உட்பொருளில் மூழ்கினார். உள் அர்த்தம் மனதில் ஆழ பதிந்தது.
ராமனும் கிருஷ்ணனும் ஒருவரே. ராவணனின் 10 தலைகளையும் நொடியில் கிள்ளி எறிந் தான் ராமன். பகன் என்னும் நாரை வடிவில் வந்த அசுரனையும் கிருஷ்ணன் அவ்வாறே எளிதில் வாயைக் கிழித்து கொன்றான். என்ன சொல்கிறாள் இந்தச் சிறுமி ஆண்டாள்?
உலக ஆசா பாசங்கள் என்னும் அலைமோதும் உலகம் ஆகிய சம்சார சாகரத்தில் மூழ்கி நாம் எல்லோரும் தத்தளிக்கிறோம் . இந்த கடலில் ஒவ்வொரு சிறு தீவு நாம் எல்லோரும். ஆண்டாள் ஏன் ராமனை நினைக்கிறாள் தெரிகிறதா? இந்து மகா சமுத்ரத்தில் இலங்கை ஒரு துக்குணியூண்டு தீவு. அதற்கு சர்வாதிகாரி இராவணன் எனும் அரக்கன். உலக சமுத்ரத்தில் நாம் ஒரு கொசு அளவு தீவு. நம்மை ஆட்டுவிப்பவன் ‘மனம்’  எனும் ராவணன். அந்த தீவில் சிக்குண்டு தவிக்கும் ‘சீதை’  தான் நமது மனத்தின் தளைகளால் கட்டுண்டு தவிக்கும் ஜீவாத்மா. நிர்கதியான சீதைக்கு ஒரு ‘ஹனுமான்’. நமக்கு வழி காட்டுபவள் ஆண்டாள். இலங்கையை அடைந்து ராவணனைக் கொன்று சீதையை காப்பாற்றினவன் ‘ராமன்’. சிக்குண்டு தவிக்கும் நமது ஆன்மாவுக்கு தெம்பு அளிப்பது கிருஷ்ணனின் மூல மந்த்ரம்.” ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே, ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே’.
ராமன் வந்து ராவணனைக் கொன்று சீதையை மீட்டது போல் நாம் அவன் தாளையே சரணாகதி என்று அடைந்தால் நம்மை சம்சார சாகரத்திலிருந்து மீட்டு கண்ணன் மோக்ஷ பதவி பெற வைப்பவன்.
இந்த எண்ணம் பெரியாழ்வார் சிந்தனை மூலம் நமது மனத்திலும் இடம் பெற்று வேலை செய்யட்டும். நாளை சந்திப்போம்.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1426

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *