பிருந்தாவனம்

பன்கே பிஹாரி கிருஷ்ணன் – நங்கநல்லூர் J K SIVAN
என் வாழ்க்கையில் ஒரு முறை தான் பிருந்தாவனம் சென்று கிருஷ்ணனை மனதார கண்டு சேவிக்க ஒரு பாக்யம் கிடைத்தது. அங்கே மறக்கமுடியாத ஒரு ஆலயம் கிருஷ்ணனின் பன்கே பிஹாரி ஆலயம். பிருந்தாவனம். மதுரா ஜில்லாவில் உத்தர பிரதேசத்தில் இருக்கிறது. எங்கு திரும்பினாலும் ராதே ராதே என்ற குரல் தான் காதை நிரப்பும். அநேகமாக ஆட்டோக்கள் தான் அதிகம் கண்ணில் படுகிறது. ஹாரன் அடிப்ப தில்லை, ”கஸ்மாலம் ஓரம் போய்யா” என்று கத்துவ தில்லை. ”ராதே ராதே” என்ற செவிக்கினிய ஒரே கோஷம் தான்.
பன்கே பிஹாரி ஆலயம் நிதி வனத்தில் இருந்ததாம். அப்புறம் 1864ல் இப்போதுள்ள ஆலயம். பன்கே பிஹாரி எனும் கிருஷ்ணன் தனியாக இல்லை. ராதையும் கிருஷ்ணனும் இணைந்த ஒரு உருவம். கிருஷ்ணன் ஒரு சிறு பாலகன். பாலகிருஷ்ணன். த்ரி பங்க உருவம். பன்கே என்றால் வளைந்த என்று அர்த்தம். இங்கு கிருஷ்ணன் மூன்று வளைவுகள் கொண்ட உருவம். தலை உடல், கால் மூன்று மூன்று வளைவுகள். கிருஷ்ணனை குஞ்ஜ் பிஹாரி என்றும் அழைப்பார்கள். குஞ்ஜ் என்றால் மரங்கள் அடர்ந்து நிரம்பிய தோப்பு, வனம். கிருஷ்ணனுக்கு அது பிடித்த இடம். கோபியருடன் விளையாடிய எண்ணற்ற வனங்கள் பிருந்தாவனத்தில் கண்டு மகிழ்ந்தேன். இந்த கிருஷ்ணனை வழிபட்டவர் ஹரிதாஸ் தாகூர் எனும் மஹான். அவரை ராதாவின் தோழி லலிதா சகி கோபியின் அவதாரம் என்பார்கள். அக்பர் அரண்மனையில் சிறந்த கவிஞரும் வித்வானுமாக இருந்த தான்சேன் என்பவரின் குரு ஹரிதாஸ் தாகூர் ஸ்வாமிகள்.
ராதா கிருஷ்ணனை ஷ்யாமா ஷ்யாம் என்பார்கள். ஹரிதாஸ் ஸ்வாமிகள் உயிர் இந்த கிருஷ்ணன் மேல் தான். அவர் மனமுருகி பாடிய ஒரு பாடல்
“माई री, सहज जोरी प्रगट भई, जु रंग की गौर-स्याम घन-दामिनि जैसैं। प्रथम हूँ हुती, अब हूँ आगें हूँ रहिहै, न टरिहै तैसैं”
Mai ri sahaj jori pragat bhai ju rang ki gaur syam ghan damini jaisen Pratham hun huti ab hun aagen hun rahihai na tarihai taisain
Ang ang ki ujraii sugharaii chaturaii sunderta aisainShri Haridas ke swami syama kunjbihari sam vais vaisain
இதன் அர்த்தம் ”ஆஹா என்ன பாக்யம் . இதோ என்றும் சாஸ்வதமான இந்த ஒன்றுக்கு ஒன்று இயற்கையாகவே அவதரித்த ஜோடி என் எதிரே காண்கிறதே. காரிருளில் பளிச்சென்று தோன்றும் மின்னலா இது. என்றும் எப்போதும் நிலையான மாறாத அற்புத ஜோடி இந்த இருவரும். அவர்களின் ஞானம், அழகு, ஒளி, வனப்பு மிகுந்த தோற்றம் நேர்த்தியான தேஹ அமைப்பு ஒப்பில்லாதது. அவர்களுக்கு ஈடு அவர்களே தான். பிறப்பு பிறப்பற்ற சாஸ்வதம் இவர்கள்.
இந்த பாடலை ஹரிதாஸ் ஸ்வாமிகள் பாடின அடுத்தகணம் கிருஷ்ணனும் ராதையுமான பன் கே பிஹாரி அவர் முன் தோன்றினான். அந்த உருவத்தை தான் சிலையாக ஸ்தாபித்து ஹரிதாஸ் ஸ்வாமிகள் பிரதிஷ்டை செய்தார்.
பாலகிருஷ்ணன் குழந்தை வடிவானவன். இங்கே மணி அடித்தோ, சங்கு ஊதியோ சப்தம் எழுப்பக் கூடாது. உள்ளே குழந்தை அமைதியாக ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறான். விஹார் பஞ்சமி அன்று விசேஷ வைபவம். வருஷா வருஷம் கொண்டாடுவார்கள். நேற்று டிசம்பர் 10, 2023 எனக்கு கிடைத்த ஒரு அற்புத அனுபவம் பற்றி அடுத்த பதிவில் சொல்கிறேன்.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1426

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *