MY PLACE NANGANALLUR J K SIVAN

என் மண்   நங்கநல்லூர்  –   நங்கநல்லூர் J K SIVAN

என் வாழ்க்கையில்  பெரும் பகுதியோடு  சம்பந்தப்பட்ட  ஒரு ஊர்   இந்த  நங்கநல்லூர்.  என் கற்பனைக்  கோட்டைகள்சந்தோஷம் துக்கம்  ஏமாற்றம், ஆர்வம், வெற்றி, தோல்வி  உயர்வு  தாழ்வு  அனைத்திலும் முக்கிய  அங்கம் வகிக்கும்  என் மண் நங்கநல்லூர்.  இதில்  எதைப்பற்றி முதலில் சொல்வது, எது அப்புறம் என்ற வரிசை, என்று எதுவும் கிடையாது.  ஓடும் நீருக்கு  எது முதல்  எது பின்னால். எது மனதில் எழுகிறதோ அதை எழுதுவது தான் பொருத்தமாகிறது.
என்னவோ திடீரென்று நமது நங்கநல்லூர் பற்றி எழுதவேண்டும் என்று ஒரு எண்ணம் தோன்றி ஏதோ கிறுக்கினேன். அது காட்டுத்தீயாக பரவிபதில் ஒரு உண்மை புலப்பட்டது. நங்கநல்லூர் பல மனங்களில் இடம் பெற்றிருக்கிறது. இங்கு வாழ்ந்தவர்கள், வந்தவர்கள், இதை விட்டு பிரிந்தவர்கள், எங்கேயோ இருந்தாலும் கேள்விப் பட்டவர்கள் பலர் மனதில் இது ஒரு  போக  பூமியாக, யோக பூமியாக, ஸ்வர்க பூமியாக  இடம் பெற்றிருக்கிறது. வாஸ்தவம் இங்கு  சக்தி வாய்ந்த  தெய்வங்கள்  குடி கொண்டிருக்கிறதே.   மஹா பெரியவா இது ஒரு புண்ய பூமி என்று சொல்லி இருக்கிறார். மேலே சொன்னது அனைத்தும் அப்படியென்றால் உண்மைதானே.
கோயிலில்லா ஊரில் குடியிருக்காதே என்பார்கள். இங்கே வசிப்பவர்கள்  எல்லோரும் உண்மையில் எத்தனையோ அற்புத கோவில்களுடன் தான் நாங்களும் ஒன்றாக கூடியிருக்கிறோம். தெய்வங்களின்  அரவணைப்பில்  தான்  வாழ்கிறோம்.  முன் ஜென்ம புண்ய பலன் .
அரை நூற்றாண்டுக்கு முன்பு  ஒரே ஒரு பிரதான மண்  சாலை பரங்கிமலை தாண்டியவுடன் மீனம்பாக்கம் ஆகாய விமான தளம் முன்பு கிழக்கு பக்கம் பிரிந்து. ரயில்வே கிராஸ்ஸிங் கில் முடியும். ஒரு காக்கி அரைநிஜார் சட்டையோடு ஒருவன் பச்சை கொடி, சிகப்பு கொடியுடன் சிகப்பு விளக்கு தோன்றி டாங் டாங் என்று மணி அடித்தவுடன் ரெட்டை கேட்டை மெதுவாக மூடுவான். அது வரை கிடைத்த சந்தர்ப்பத்தை    நழுவ விடாமல் ஊருக்குள்ளும் வெளியேயும் போகும் கார்கள், குதிரை வண்டிகள், மாட்டு வண்டிகள் தண்டவாளத்தை கடக்கும். நாங்கள் சைக்கிள் காரர்கள் சைக்கிளை கேட்டுக்கு கீழே படுக்கப்போட்டு நுழைந்து இடது வலது பக்கம் ஏதாவது ரயில் வண்டி வருகிறதா என்று பார்த்துக்  கொண்டு   சைக்கிளோடு குறுக்கே கடந்து அந்த பக்க கேட்டுக்கு அடியில் மீண்டும் சைக்கிளை படுக்கப்போட்டு நகர்த்தி பிரயாணம் செய்வோம். இடது பக்கம் துரைராஜ் வீதி, அதன் உப வீதிகள், சந்துகள், பாரதியார் சந்து ஒன்று, 

வலதுபுறம் திரும்பி நடந்தால் எதிரில் வேம்புலியம்மன் கோவில் நிறைய மரங்களுடன் அடர்ந்து நிற்கும். சக்தி வாய்ந்த எல்லை காவல் தெய்வம். ரத்தினம் பூசாரி  நெற்றியில்  சாம்பல் இட்டு விடுவார். தலையில் சடை. காவி இடுப்பு துண்டு, கழுத்தில் மாலைகள். நெற்றி நிறைய குங்குமம். ரொம்ப பேசமாட்டார். ஒரு அணா தகர உண்டிலில் போட்டால் சிரிப்பார். அரசு வேம்பு மரங்கள் ஒன்றோடொன்று பின்னி பெரிதாக இருந்தது. குடும்பத்தில் குழந்தைகளுக்கு உடல் நிலை சரியாக இல்லை என்றால் வேம்புலி அம்மனுக்கு பால், இளநீர் வாங்கி அபிஷேகம் செய்வதாக வேண்டிக் கொள்வோம்.
விடிகாலையில் நடந்து போய், அல்லது சைக்கிளில் போய் பால், இளநீர் காய்கள் பூசாரியிடம் கொண்டு போய் கொடுத்தி ருக்கிறேன். வியாதிகள்  குணமடைந்திருக்கிறது.  ஆஸ்பத்திரி பக்கம்  போனதில்லை. 

மரங்களை தாண்டி கிராம வீதியில்  நிறைய நாயுடுமார்கள் வசித்த இடம்  . நங்கநல்லூரில் நிறைய இடம் அவர்கள் கைவசம் இருந்தது. GD நாயுடு, மிலிட்டரி நாயுடு நம்மாழ்வார் என்று எல்லாம் பெயர்கள். தெலுங்கு பேசுபவர்கள். தலக்கணாஞ்சேரி, பழவந்தாங்கல் என்றால் தான் தெரியும். நங்கநல்லூர் என்ற பெயர் அப்போது தெரியாது  பிரபலமாக வில்லை.

நங்கநல்லூர் பிரதான சாலையில் ஒரு பழைய கால புற்றுக்கோவில் இருந்தது. பனச்சி அம்மன் கோவில் இன்னும் உண்டு. அதை ஒட்டி தான் நங்கநல்லூர் குளம்.

வடக்கே ராஜராஜேஸ்வரி கோவில் கட்ட ஆரம்பித்தார்கள். ராஜகோபால சுவாமிகள் முயற்சியால் உருவானது. ஸ்வாமிகள் எண்ணெய் பார்க்கும்போதெல்லாம்  கப்பல் கம்பெனியா  என்று சிரித்துக் கொண்டே  தலையாட்டுவார்.  அவர் கையால் குங்கும பிரசாதம் வாங்குவது பாக்யம்.  நங்கநல்லூர் வருவோர் போவோர் ராஜேஸ்வரி தரிசனம் செய்யாமல் போவதில்லை.  நங்கநல்லூர்  என்ற பெயரே நங்கை நல்லூர் . நங்கை  ராஜராஜேஸ்வரி என்பார்கள்.  பழவந்தாங்கலுக்கு  நங்கைநல்லூர்  என்ற பெயர்  வைக்க  ஒரு முயற்சி இருந்தது. இப்போது சுற்றிலும் வீடுகளுக்கு நடுவே அம்பாள் இருக்கி றாள். கோவிலின் ஒரு பக்கத்தில் சத்யநாராயண பெருமாள் வைணவர்களை  அதிகமாக ஆகர்ஷிக்கிறார்.
மெட்ராஸ் ஸ்டோர்ஸ் என்று ஒரு கடை முதலில் தெரியும், எதிரே வேலன் ஹார்டுவேர் கடை வீடு கட்ட சாமான்கள் விற்பவர்கள் இன்னும் இருக்கிறார்கள். ஜோதி ஸ்டோர் பள்ளிக்கூட புஸ்தகங்கள், நோட் பென்சில் இன்னும் விற்பனை செயகிறது. அடுத்த தலைமுறை பார்த்துக் கொள்கிறது. மஹேஸ்வரி ஆயில் மில் எண்ணெய் இன்னும் விற்கிறது. திருநெல்வேலி ஹல்வா கடை ஒன்று உண்டு. அப்துல் சத்தார் பாய் திக்கி திக்கி பேசிக்கொண்டே தலைகாணி , மெத்தை பஞ்சு அடைத்து கொடுப்பார். இன்னும் அந்த கடை இருக்கிறது. 18C அந்த பக்கம் திரும்பி தான் ஊருக்குள் வந்தது. துளசி மெடிக்கல் ஒரு பழைய மருந்து கடை.

டாக்டர் செல்லப்பா, டாக்டர் சீதாராமன், சுபத்திரா  சீதாராமன் டாக்டர் ஜனார்த்தனன் ஆகியோர் எங்கள் உடல் நிலைக்கு போஷகர்கள். டாக்டர்  ஜனார்தனத்தை இன்றும்  அடிக்கடி  வங்கியில்  மற்றும்  பொது இடங்களில் சந்திக்கிறேன்.  இன்னும்  அவர் பல் மருத்துவம்  தொடர்கிறது.  பல் பிடுங்க  10-20  ரூபாய்  கொடுத்த தாக ஞாபகம்.   சைதாப்பேட்டையில்  ஒரு கிளினிக் க்குக்கு வரச் சொல்வார். போயிருக்கிறேன்.  வணங்குகிறேன்.  சற்று தள்ளி தெற்கே  நடந்தால்  எங்கள்  கன்னிகா காலனிக்குப் போகும் வழியில், டாக்டர் AV  சேஷாத்திரி குடும்பம் இருந்தது. சிரித்து அன்பாக பழகுவார்.பகலில் செங்கல்பட்டு ஆஸ்பத்திரி போய்விட்டு வருவார். ஆரம்பத்தில் சைக்கிளில் தான் இவர்கள் பிரயாணம். டாக்டர் சுபத்திரா சீதாராமன், சேஷாத்திரி எல்லாருமே  எங்கள் வீட்டுக்கு  சைக்கிளில் வந்து வைத்தியம் செய்ததை நன்றியோடு நினைவு கூர்கிறேன். .

பிள்ளையார் கோவிலில் விஸ்வபதி சாஸ்திரிகள் வேத விற்பன்னர். எங்கள் உறவினர் நாகேஸ்வர கனபாடிகள் நிறைய வீடுகளில் உபாத்யாயம். மீனம்பாக்கத்திலிருந்து சூரிய நாராயண சாஸ்திரி ஜெயின் காலேஜ் பக்கம் பூந்தோட்டத் திலிருந்து நடந்து வருவார். மஹா பெரியவா அவர்  வீட்டுக்கு வந்து  பாத பூஜை பண்ணி இருக்கிறார்.
சூரிய நாரயண  சாஸ்திரி   ”சிவா,  வர வழியெல்லாம் நாய் பிடுங்க  வரது. துரத்துகிறது   கால பைரவாஷ்டகம் சொல்லிண்டே வந்தேன்”  என்று குறைபடாத நாளே இல்லை.   அவருக்கு சைக்கிள் விட தெரியாது. தேவி ஸ்டோர் ராஜாமணியின் அம்மா, கட்டுக் குடுமியுடன் அப்பா, வீட்டு மளிகை சாமான்கள் தருவார்கள். ஊறுகாய், வடாம் கூட கிடைத்தது. சிதம்பரம் ஸ்டோர்  அம்பிகா ஸ்டோர்  முருகன் ஸ்டோர் பழைய கடைகள்.   சாமான்கள் வாங்கினால் மிட்டாய், சாக்லேட், திராக்ஷை முந்திரி பருப்பு  பொட்டலம் ஒன்று கூடவே வரும்.  மாசாந்திர மளிகை சாமான் வீட்டுக்கு வந்து டெலிவரி செய்தார்கள். மாதாந்திர கணக்கு  நோட்டில்  பற்று வரவு எழுதி  வைப்பார்கள். 

எங்கள் வீட்டுக்கு பின்புறம் ஒரு பெரிய காய்கறி தோட்டம்.   எங்கள் கன்னிகா காலனியை சுற்றி  நிறைய  வயல்கள். துறவுக்  கிணறு மோட்டார் பம்ப்செட் போட்டு நீர் பாய்ச்சுவார்கள். எங்களை குளிக்க அனுமதிப்பார்கள். சோப் போடக் கூடாது. துறவு கிணற்றில்  எதிர் வீட்டு  கஸ்டம்ஸ்   உதவி கலெக்டர்  பாலக்காட்டு வாசுதேவன் மாமா பையன்கள் மற்ற காலனி பையன்கள் எல்லோரும்   குதித்து நீரில் நீஞ்சுவார்கள். கிணற்றில் கருங்கல் படிகள் இருந்தது சௌகர்யம். டபடப வென்று மோட்டார் சப்தத்துடன் தபதப வென்று தலைமேல் உடலில் எல்லாம் வேகமாக நீர் கொட்டும்போது குற்றால ஸ்னான  அனுபவம். காய்கறிகள் தோட்டத்திலேயே வாங்கி வருவோம். வெண்டைக்காய், புடலங்காய், பீர்க்கங்காய், கொத்தவரை, கத்திரி, அவரை, எல்லாம் ”தூக்கு” (விசையை விட பெரியது) என்ற கணக்கில் தருவார் தோட்டக்காரர். ஒரு ரூபாய்க்கு ஒரு பை நிறைய காய்கறி கிடைத்தது. தூக்கு என்பது ஒரு மூங்கில் கட்டை. அதன் ஒரு புறத்தில் ஓலைத் தட்டு, இன்னொருபுறம் முடிச்சு முடிச்சாக துளையில் கயிற்றில் தட்டில் காய்கறி. கட்டை சரிசமனாக நிற்கும் துளை தான் எவ்வளவு எடை என்று நிர்ணயிக்கும். சேர், பலம், வீசை கணக்கில் இருந்தது. கிலோ பிறக்காத காலம்.
எங்கள் காலனியின் கிழக்கு புறம் பள்ளம். மழைநீர் கால்வாயாக அங்கே ஒரு நதியாக செல்லும். இன்னும் அது இருக்கிறது. மடிப்பாக்கம் ஏரி யிலிருந்து ஆதம்பாக்கம் வரை செல்லும் கால்வாய். அதன் குறுக்கே தாண்டி கிழக்கே சென்றால் தான் தாம்பரத்திலிருந்து பரங்கிமலை செல்லும் மேடவாக்கம் சாலை. அங்கே ஆயில் மில் என்று எண்ணெய் வியாபாரம் நடந்து. அங்கேயே செக்கு மாடுகள் சுற்றி சுற்றி வந்து கடலை,எள் எல்லாம் அரைத்து சுத்தமான தூக்குகளில் வாங்கி வருவோம். திக்காக கண்ணாடி போட்டுக் கொண்டு செட்டியார் தினத்தந்தி சுதேச மித்ரன் பத்திரிகை படித்துக்கொண்டு அன்றாட விஷயங் களை அதை கேட்க வழக்கமாக வரும் கும்பலுக்கு சொல்வார். ரேடியோ எல்லோர் வீட்டிலும் இல்லை, டிவி என்றால் என்ன வென்றே தெரியாது.   அருகே  பாலம்மாள்  ரைஸ் மில் என்று  நெல் அரைக்கும் மிஷின் இருந்தது.  இப்போது அந்த பெரிய  இடம், கட்டிடம் பாலம்மாள் என்ற பெயருடன் மட்டும் வேறு ஏதோ   பணியில்  ஈடுபட்டிருக்கிறது. 

வாசலில் குதிரை வண்டிகள் மர நிழல்களில் நிற்கும். திரௌபதி அம்மன் கோவில் இன்னும் இருக்கிறது. தீமிதி விழா வேம்புலி அம்மன் கோவிலில், திரௌபதி அம்மன் கோவிலில் பிரசித்தம்.

இரவில் தெருக்கூத்து நடக்கும். தீவட்டி வெளிச்சத்தில் நிறைய பேர் சுற்றி வளைத்து உட்க்கார்ந்து பார்ப்பார்கள். கமர்க்கர்ட், பொறி, வேர்க்கடலை, முறுக்கு சுண்டல் வியாபாரம் வெற்றிகரமாக நடக்கும். கவர்னர் பீடி, கரீம் பீடி, ருஸ்தும், சுல்தான் பீடி, சுருட்டு புகைகளும் மயக்கத்தை உண்டாக்கும். சிகரெட் கொஞ்சம் வசதிக்காரர்களின் கையில் பார்க்கலாம். நேரு ஸ்கூல், அப்புறம் கொஞ்சநாளில் ராஜேஸ்வரி ஸ்கூல், மாடர்ன் ஸ்கூல் எல்லாம் வந்துவிட்டது. வருமானவரி  இலாகாவில் பணிபுரிந்த  ராஜகுமார்  அவர் மனைவி இருவரும்  ராஜேஸ்வரி ஸ்கூலை சிறப்பாக  நடத்தி வந்தார்கள். இன்னும் அந்த ஸ்கூல் இருக்கிறது. எங்கள் குடும்ப குழந்தைகள்  அங்கே படித்தவர்கள். 

மூவரசம் பேட்டையில்  மலையை உடைத்து  பெரிய  குட்டைகள்  குளங்கள்  அப்போதும்  இப்போதும்  இருக்கிறது.  மலைப்பாறையில் கல்லுடைக்கும்  வேட்டு வைத்து மலைகளை பிளக்கும் சப்தம் துப்பாக்கி சப்தம் மாதிரி கேட்கும்.
பரங்கிமலையில் சிப்பாய்கள் துப்பாக்கி சுட்டு பழகும் சப்தமும் கேட்கும்.
இரவில் ரயில்கள் கத்திக்கொண்டு போவது கேட்டது. விமானம் இறங்குவது மேலே ஏறுவது வீட்டிலிருந்தே பார்க்க முடிந்தது. வீட்டுக்கு சென்னைப் பட்டணத்தில் இருந்து எங்கள் வீட்டுக்கு வரும் உறவினர்கள் நண்பர்கள் குடும்பத்தினர்   பிளேன்கள் மேலே ஏறுவது, கீழே இறங்குவதை ஆச்சர்யமாக பார்க்க தவறியதில்லை. அதற்காகவே  எங்கள் வீட்டுக்கு ஞாயிறன்று வருவார்கள். 

இன்னும் எவ்வளவோ இருக்கிறது சொல்ல…

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1426

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *