I CAME YOU DID NOT KNOW, SEE OR FEEL ME. J K SIVAN

தீபாவளி பதிவு 8 – நங்கநல்லூர் J K SIVAN
நான் வந்தேனே.

பரந்தாமனுக்கு சாப்பாடு பிடிக்கவில்லை. தீபாவளி சமயம் என்பதால் ஒரு வாரகாலமாகவே நிறைய பக்ஷணங்கள் வந்து கொண்டே இருக்கிறது. காரம், இனிப்பு என்று பல வகை தின்பண்டங்களை சாப்பிட்டுக்கொண்டே இருந்தால் சாப்பாடு எப்படி பிடிக்கும்? அவர் சிறந்த கிருஷ்ண பக்தர்.
எப்படியாவது கிருஷ்ணனை பார்த்து விட வேண்டும் என்று ஒரு பேராசை. மிகவும் பிரயாசைப்பட்டு எல்லோரிடமும் கிருஷ்ணனைப் பார்ப்பதற்கு வழி என்ன என்று கேட்டு அதன்படி முயற்சிப்பவர். அவர் மனதில் இந்த தீபாவளி அன்றாவது கிருஷ்ணனை எப்படியாவது தரிசிக்க வேண்டும் என்ற ஒரு தீர்மானம்.
பல மாதங்களாக ஆவலுடன், ஆர்வமுடன் காத்திருந்த தீபாவளி நேற்று ராத்திரி முதல் பட்டாசு வாண வேடிக் கைகள் , மூலம் தீவிரமடைந்தது. பலத்த வெடி சத்தம்,, பளிச்சென்று சீறி வானத்தில் சென்று பட்டென்று வெடித்து பல வர்ணப்பூக்களாக சிதறும் வாணங்கள், நடுநடுவே மழையோடு,தெருவெங்கும் குப்பையோடும் இன்று காலை தீபாவளி வந்துவிட்டது. தீபாவளியின் மகிழ்ச்சியும் , குதூகலமும் நிச்சயம் இன்னும் பல நாள் மனதில் இருக்கும். இன்று தீபாவளி காலை என்ன நடந்தது?.

விடிகாலை மூன்றரை நாலு மணிக்கே வெந்நீரில் கங்கா ஸ்னானம். பரந்தாமன் புது வேஷ்டி துண்டு அணிந்து கோபிண்டார். நிறைய கங்கா ஸ்னானம் ஆச்சா டெலிபோன் கால்கள் .

(எனக்கும் அப்படி தான். பாதிக்கு மேல் புது குரல்கள். நேரில் பார்க்காத மனதில் அன்பு நிறைந்த முகநூல் வாட்ஸாப்ப் நண்பர்களின் வாழ்த்து. எங்கேயோ இருக்கும் சிலருக்கு இன்று என்னோடு பேசவேண்டும் என்ற நினைப்பு வந்ததை உணரும்போது கிருஷ்ணா, உன்னால் சேர்ந்த நண்பர்கள் இவர்கள் என்று அவனுக்கு மனதார நன்றி தெரிவித்தேன்)

. நானும் பரந்தாமனும் ஒரே வயதுக்காரர்கள். இதோ அவரே இனி பேசட்டும்:

”எண்பத்து நாலரை வயதாச்சு. எண்பதுக்கு மேல் தீபாவளி பார்த்தாச்சு. கிருஷ்ணா உன்னை மட்டும் தான் இன்னும் பார்க்கலே. படத்திலே பார்த்த உன்னை நேரில் பார்க்கணுமே? எப்படா வருவே?இன்னிக்கு வரியா’?’

எனக்கு கிருஷ்ணனை ரொம்ப பிடிக்கும். கிருஷ்ணா கிருஷ்ணா என்று தான் வாய் எந்த பையனைப் பார்த்தாலும் கூப்பிடும். எல்லோரும் என்னை கூப்பிடுவதே ”கிருஷ்ணா மாமா”என்று தான். . வீட்டில் ஒவ்வொரு கிருஷ்ணன் பொம்மைக்கும், படத்திற்கும், ஏதாவது ஒரு பெயர் உண்டு. ஆசையோடு நான் இப்படி கூட சில பேயகர்கள் வைத்தவன்: ”கருப்பண் ணன், குண்டு கோபு , கிட்டு, சுட்டி, கள்ளப்பயல், ப்ளூட்டுக்காரன், வெண்ணை திருடன், புளுகாண்டி, மாயாஜாலன் ”. இன்னும் எத்தனையோ செல்லப் பெயர்களும் இருக்கு.

கிருஷ்ணன் பேசுவானோ? பதில் சொல்வானோ? ஹுஹும்…. அதெல்லாம் சும்மா என்று தானே என் காது கேட்க பலர் சொல்கிறார்கள். சொல்லிட்டு போகட்டு மே. ஆஹா, அந்தப் பயல் கேட்டதெல்லாம் கொடுப் பவன் மட்டுமில்லே. கேட்டதுக்கு பதில் கொடுப்பவனும் கூட ”.

”கிருஷ்ணா உன்னை நான் இன்னிக்கு பார்த்தே தீர ணும். படத்திலே பார்த்த உன்னை நேரில் பார்க்கணு மே? எப்படா வருவே? ”
கிருஷ்ணன் பதிலளித்தான்:
” பரந்தாமா, இன்னிக்கு தீபாவளி. இன்றே உன் விருப் பத்தை பூர்த்தி செய்கிறேன்.காத்திரு. இதோ வருகி றேன்”- கிருஷ்ணனின் பதில் காதில் விழுந்தது.

வீட்டில் ஒரே சத்தம். நிறைய உறவினர்கள், நண்பர்கள் மாமிகள் கூட்டம். தீபாவளி கும்பல். பக்ஷண பைகள் கை மாறியது.

எனக்கு கிருஷ்ணனைத் தனியே காண விருப்பம். வீட்டின் பின் புறம் கொல்லைப்பக்கம் சென்றேன். எப்போதோ எங்கப்பா கட்டிய பெரிய பழைய தனி வீடு. கொல்லையில் பச் சென்று செடி கொடி மரங்கள். துணி தோய்க்கும் கல் (பல வருஷங்களாகிறது. இப் போது யாரு துணியைக் கல்லில் அடித்து தோய்க்கி றார்கள்?. பழைய கிணற்றில் இன்னும் தண்ணீர் வற்ற வில்லை. அமைதியாக காத்திருந்தேன். என்னைத் தவிர அங்கே யாருமில்லை. நிசப்தம். ”கிருஷ்ணா.. முகுந்தா… …” என்று ஹரிதாசில் MKT பாடின பாட்டை என்னையறி யாமல் வாய் முணுமுணுத்தது.

ஒரு குயில் எங்கிருந்தோ விர்ரென்று பறந்து வந்து எதிரே
மாமரத்தில் ஒரு கிளையில் கண்ணெதிரே உட்கார்ந் தது. பார்க்க அழகாக சின்னதாக கருப்பாக இருந்தது. மதுர குரலில் அது சில நிமிஷங்கள் ஏதோ இனிமை யாக ஒரு ட்யூன் (tune) கூவி விட்டு என்ன தோன்றியதோ சட்டென்று பறந்தும் போயிற்று.

காத்திருந்தேன். கைக் கடியாரம் காலை 9 மணி என்று காட்டுகிறதே..கிருஷ்ணன் எப்போ வருவான்??

பிசு பிசுவென்று மழைத்தூத்தல். வானில் சூரியனைக் காணோம். பனி மூட்டம் மாதிரி கருப்பு மேகங்களும் எங்கோ ஒரு பேரிடி முழக்கமும். உள்ளே டிவியில் காலையிலேயே ”மழை பெய்யலாம். சில பகுதிகளில் கனத்த மழையாகவும் இருக்கலாம். பெய்யாமல் இருக் கவும் வாய்ப்புண்டு ” என்ற வழக்கமான ஆரூடம் கேட்டு சிரிப்பு வந்தது.

மழை பெய்தாலும் வீட்டுக்குள் போகமாட்டேன். கிருஷ்ண , உன்னைப் பார்த்துவிட்டு தான் எல்லாம். மழையில் நனைந்தால் என்ன? பரவாயில்லை. ”வரேன்” என்றவன் இன்னும் ஏன் வரவில்லை?”

‘கிருஷ்ணா, உன்னைப் பார்க்க, கேட்க ஏன் தொட கூட முடியுமாமே? எங்கோ புஸ்தகத்தில் எழுதி இருந்ததை படித்திருக்கிறேன்.

”ஐயா உங்களை எங்கே ல்லாம் தேடறது. இங்கே வந்து தனிச்சு குந்திக்கிட்டிருக்கீங்க?
”யாரு?”
திரும்பிப் பார்த்தேன். பல வருஷங்களாக வீட்டில் வேலை செய்யும் பெரியாயி ஒரு சிறு குழந்தையை பொட்டலமாக மடியில் அணைத்துக்கொண்டு அருகில் வந்தாள்.
”என்னம்மா வேணும் ?”
”அம்மா கிட்டே புதுசா பொறந்த என் பேராண்டியைத் தூக்கி யாந்து காட்டி ஆசீர்வாதம் கேட்டேன். ஐயா தோட்டத்திலே இருக்கார் அவர் கிட்டேயும் காட்டு ”ன்னு சொன்னாங்க.”
”ஆஹா! பேஷ் பேஷ். ஜாக்ரதையா சீக்ரம் உள்ளே எடுத் துண்டு போ. மழை வரும்போல இருக்கு..” வாய் மட்டும் பேசியதே தவிர மனம் கவனம் எல்லாம் இன்னும் வராத கிருஷ்ணனின் மேல் தான் இருக்கிறது . துணிப் பொட்ட லத்தில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை பார்க் கவே இல்லை.

”எங்கிருந்தோ ஒரு பாதி அணில் கடித்த கொய்யா பழம் வலது தோளின் மேல் தொப்பென்று மரத்தின் மீதிலிரு ந்து விழுந்தது. மேலே பார்த்தேன் . எப்படி காலம் ஓடறது? இப்போது தான் செடி வைச்ச மாதிரி இருக்கு பதினைந்து வருஷத்தில் எப்படி கொய்யா மரம் இவ்வளாம்பெரிசு வளர்ந்துட்டுது.

இன்னும் வராத கிருஷ்ணன் மீது எனக்கு கொஞ்சம் கோபமும் வந்தது.வெகு நேரம் ஆகியும் ஏன் அந்த கருப்புப்பயல் கிருஷ்ணன் வரவில்லை? மஞ்சள் கருப்பு புள்ளிகளோடு ஒரு பட்டாம்பூச்சி முகத்திற்கு நேரே பறந்து வந்தது வந்தத. என்ன தைரியமோ?

ரெக்கையை அடித்துக்கொண்டு வலது கைமேல் வந்து உட்கார்ந்தது. ஹை ஹை என்று என்று அதை விரட்டி வெடுக்கென்று கையை உதறினேன். மழை சிறு தூற்றல் இப்போது பெரிய மழையாக வலுத்தது. ” ++
மழை தூற்றல் வலுத்து மழை பெரிதாக வந்த தால் பரந்தாமன் வீட்டுக்குள் ஓடினார். பெரும் ஏமாற் றம்.”வரேன்” என்று சொன்ன கிருஷ்ணன் வராவிட்டால் சந்தோஷமாகவா இருக்கும்?

உள்ளே இன்னும் தீபாவளி கும்பல் கலையவில்லை. . சிலர் பாடினார்கள் எதிரே பெரிய ராதா கிருஷ்ணன் படம். நிறைய அலங்காரம் செய்து, மலர் மாலைகள் சூட்டி தூப தீபங்களோடு காட்சியளித்தது. தீபாவளி அல்லவா? எதிரே தட்டுகளில் பக்ஷணங்கள் பழங்கள், நைவேத்யம். புல்லாங்குழல் ஊதிக்கொண்டு புன்ன கைத்த கிருஷ்ணனைப் பார்த்ததும் பரந்தாமனுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது.

” கிருஷ்ணா நீ இப்படி பண்ணலாமா? ‘வரேன் என்று சொல்லி ஏன் வரவில்லை. எத்தனை நேரம் காத்திருந் தேன்? இவ்வளவு யுகம் ஆகியும் இன்னும் பொய் சொல்ற பழக்கம் உனக்கு போகலையா?”
கிருஷ்ணன் பேசாமல் சிரித்தான்
”கிருஷ்ணா , மாயாவி, என்னை ஏமாற்றியதில் உனக்கு இத்தனை சந்தோஷமா?”
கிருஷ்ணன் பேசினது பரந்தாமன் காதில் மட்டும் விழுந்தது.
‘என்னையா பொய் சொல்றவன் என்கிறாய் நீ . உன் கிட்ட உடனே வரேன் என்று சொல்லி விட்டு தான் நான் உடனேயே வந்தேனே.”
”ஹா ஹா ஹா… இது தான்டா கிருஷ்ணா, நீ சொன் னதில் எல்லாம் ரொம்ப பெரிய அண்ட புளுகு, ஆகாச புளுகு. எப்போ வந்தாய் நீ? நான் உனக்காக எவ்வளவு நேரம் காத்திருந்தேன் தெரியுமா ? ‘உடனே’ ன்னா என்ன அர்த்தம்னு தெரியாதா உனக்கு?

”நான் தான் வந்தேனே . நீ என்னைப் பார்த்தாய். என் குரல் கேட்டாய். நான்தான் அந்த கருப்பு சின்ன குயி லாய் வந்து உனக்கருகிலேயே அமர்ந்து பாடினேன். நீ கேட்கவில்லை.
”சரி ஒருவேளை காது கேட்கவில்லையோ என்று ஒரு பேரிடியாக சத்தம் போட்டேன். உன் டமார காதில் அதுவும் கேக்கலியா? .
” சரி, அப்படி என்றால் ஒருவேளை என்னைப் பார்க்க மட்டும் தான் விருப்பமோ என்று ஒரு குழந்தையாய் உன்னிடம் வந்தேன். துளிக்கூட என்னை பார்க்க வில்லை நீ. தொடக்கூட இல்லை போ போ என்று என்னை நீ விரட்டி விட்டாய்.
”ஓஹோ, நீ என்னைத் தொட விரும்பவில்லை நானாவது உன்னை தொடறேனே என்று தான் ஒரு அழகிய பட்டாம் பூச்சியாய் வந்து ஆசையாக உன் கையைத் தொட் டேன். ஹை ஹை என்று வெடுக்கென்று என்னை உதறி தள்ளிட்டியே .இவ்வள வையும் நீ செய்து விட்டு என்னை குறை சொல்கிறாயே?
ஞாயமா பரந்தாமா?’

பரந்தாமன் கண்களில் குளம். கண்ணன் எங்கும் எதிலும் உள்ளான். எல்லா ரூபத்திலும் அவனைக் காணலாமே, கேட்கலாமே, உணரலாமே!! நிறைய படித்தும், கேட்டும், இன்னும் இது ஏன் எனக்கு புரியவில்லை? வாயினால் மட்டும் He is omnipresent ,omniscient , omnipotent என்று சொல்லி படித்து என்ன லாபம்? என்னுள்ளே காணாமல் வெளியே தேடி என்ன பயன்? என்று தன்னைத் தானே இகழ்ந்து கொண்டார் பரந்தாமன்.

தீபாவளி வாழ்த்துக்கள்

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1426

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *