DEVANGUDI RAMAR TEMPLE J K SIVAN

ஒரு சேவை நமக்காக காத்திருக்கிறது. நங்கநல்லூர் J K SIVAN

இதோ இன்னும் 72 மணி நேரத்துக்குள் தீபாவளி.

அப்படிஎன்றால் நண்பர்கள் விருந்தினர்களுடன் ஏதோ ஒரு பெரிய ஹோட்டலில் வாசலில் பிச்சைக்காரன் போல் காத்திருந்து,உள்ளே இடம் இருக்கிறது வா என்று சொன்னவுடன்வ விழுந்தடித்துக்கொண்டு ஓடி ஒரு நேபாளியோ, பீஹாரியோ இதற்கு முன் அங்கே யாரோ சிந்திய சாம்பார் சட்னியை துடைத்து அதே கையில் நமக்கு தீர்த்தம் அருளி, அப்புறம் ஒரு பேண்ட் , டை , ஆசாமி என்னவேண்டும் என்று கேட்டுக்கொண்டு ஒரு அட்டையை நீட்ட அதில் சிலவற்றின் பேர் கூட புரியாமல், தெரியாமல் எதையோ சுட்டிக்காட்டி, ஆர்டர் பண்ணி, அது அரைமணி நேரத்தில் வந்துசேர ருசி தெரியாமல் புரியாமல், அதன் விலை மட்டும் தெரிந்து, அதெல்லாம் தின்றுவிட்டு மடித்து வைத்திருக்கும் அட்டையில் நீளமான கம்பியூட்டர் பில் ஒன்று தலை நீட்ட, சில ஆயிரம் ரூபாய்கள்,காசாகவோ, card ரூபத்திலோ,அதை லேட்டாக கொண்டு வந்து தந்த பணியாளுக்கு போனஸும் சேர்த்து தான், நம்மை விட்டு நீங்க, வெளியே வரும்போது பசி முழுதும் தீராமல் தண்ணீர் குடித்து விட்டு தான் வெளியேறுகிறோம்.

பட்டாசுகள் காசைக் கரியாக்க தவறுவதில்லை. இந்த நேரத்தில் இந்த சந்தோஷமான காரியம்! செய்யும்போது நான் ஒரு உண்மையை ஞாபகப்படுத்தினால் என்ன. எந்த மஹானோ, ராஜாவோ, நல்லஇதயமோ பல நூறு வருஷங்களுக்கு முன் நமக்கு அருள் புரிவதற்காக கட்டி கவனிப்பாரற்று, சிதிலமான கோவிலொன்றுக்கு மேலே சொன்ன விரயமாகும் காசில் கொஞ்சம் அனுப்பி புனருத்தாரணம் பண்ண தோன்றினால் அது நமது அதிர்ஷ்டம். புண்யம். சத் காரியம். நல்லகர்மா.

மஹா பெரியவா ”எங்கேயும் புதுசு புதுசாக கோவிலெதுவும் கட்டாதீங்கோ, ஏற்கனவே இருக்கிற பழைய கோவில்களை பராமரியுங்கோ, அது தான் உங்களுக்கு க்ஷேமத்தை தரும்” என்று அடிக்கடி சொல்வார்.

இதோ ஒரு கோவில் பற்றிய விஷயம் தானாகவே என்னைத் தேடி நேற்று வந்தது.

திருவாருர் மாவட்டத்தை சேர்ந்ததும் மன்னார்குடி மற்றும் நீடாமங்கலத்துக்கும் அருகில் உள்ள தேவன்குடி கிராமத்தில் 500 வருஷங்களுக்கும் பழமையான ஸ்ரீ கோதண்ட ராமர் கோயில் இருக்கிறது. கோரையாற்றின் தென்கரையில் [காவிரியின் துணை நதி] மற்றும் மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமியின் வடகிழக்கு திசையில், திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த இந்த அமைதியான கிராமம், தேவன்குடி 612803. முற்காலத்தில் தேவர்கள் இந்த கிராமத்தில் வசித்து வந்ததால் இவ்வூரின் பெயர் தேவன்குடி ஆகிவிட்டது. இவ்வாலயத்தில் உள்ள சிவனை இந்திரன் பூஜித்ததால் இந்திரபுரீஸ்வரர் என்ற நாமத்தில் வழிபடுகிறார்கள்.

ஒரு அற்புத விஷயம். மஹா பெரியவா இந்த ஆலயத்துக்கு வந்து இந்திரபுரீஸ்வரரை வழிபட்டிருக் கிறார் என்கிற சேதி ஒன்றே போதுமே.

தேவன்குடி கோவில் பற்றி ஒரு டாண் டாண் சேதி சொல்கிறேன் கேளுங்கள்: இந்த கோவில் மணி சுமார் 800 கிலோ எடை என்பதால் எவரும் இதை எழுதும் வரை கடத்த முடியவில்லை. இதன் டாண் டாண் சப்தம் அக்கம்பக்கத்து ஆறு ஏழு
6,7 கிராமங்களுக்கும் கேட்குமாம். இந்த ஆலயத்தின் புஷ்கரணியின் [கோயில் குளம் ] படிக்கட்டுகள் இந்த ஊர் கிராம பெண்மணிகளாலேயே கட்டப்பட்டதாம் . நல்ல பெண்மணி என்ற பாட்டு இவர்கள பார்த்த பிறகு தான் பாடி இருக்கலாம்.

ஒவ்வொரு கனு பொங்கல் நாளிலும் வருஷா வருஷம் இன்றுவரை கிராமத்தார், அண்டை அசலார் பலர் சித்ரான்னங்கள் பண்ணிக்க கொண்டு வந்து இந்த குளக்கரையில் உண்டு களித்து மகிழ்கிறார்கள்.

இந்த ஊர் கோதண்டராமர் ஆலயம் பற்றி ஒரு ஸ்வாரஸ்யமான விஷயம் தெரிகிறது. ஸ்ரீ ராமர் கோயிலில் கண் தெரியாத ஒருவர் ப்ரதக்ஷிணம் செயது வந்தார் . ஒருநாள் இவ்வாறு வலம் வருகையில் திடீரென்று கண் பார்வை திரும்ப பெற்றதால் தன்னுடைய நிலங்களை இந்த கோவிலுக்கு நன்றியுடன் கொடுத்துவிட்டதாக நிகழ்வு . அதனால் இந்த ராமருக்கு “கண் கொடுத்த கோதண்டராமர்” என்கிற பெயர் சேர்ந்தது.

இன்னொரு விஷயம்: தமிழ் தெரிந்தவர்களுக்கு தி. ஜானகிராமன் ( அம்மா வந்தாள் ,மரப்பசு நாவல்கள் ஞாபகம் இருக்கிறதா?) தெரியுமே. அவர் பிறந்த ஊர் இந்த தேவன்குடி.

இந்த கிராமம் தேவன்குடியில் இருந்து கையில் கூஜா, தலையில் துணி மூட்டை, இன்னொரு கையில் தடியுடன் ,முகத்தில் தாடியுடன், விறுவிறுவென்று நூறு வருஷம் முன்பு காசிக்கு நடந்தே போய் திரும்பிய காசி தாத்தா என்பவரால் 1909ல் துவக்கப்பட்டு பிறகு 2.6.1916ல் ஸம்ப்ரோக்ஷணம் செய்யப்பட்ட ஒரு பஜனை மண்டலி வேறு இங்கே உள்ளது. ஏகாதசி மற்றும் பெருமாள் விசேஷ தினங்களில் இன்று வரை தவறாமல் ஸம்ப்ரதாய பஜனைகள் கிராமத்தாரால் இன்றும் தொடர்கிறது என்பது ஒரு நல்ல விஷயம்.

மேலும் உள்ளூர்காரர்களால் ஒவ்வொரு புனர் பூச நஷத்திரதினன்றும் சிறப்பு திருமஞ்சனம் ,பூஜை நடந்து வருகிறது. வந்திருக்கின்றன.

சிதிலமான இந்த ஆலயத்தை பொறுப்புள்ள அரசின், அதிகாரியின் கவனத்தை ஒருவேளை கவரவில்லையோ? திரும்பிக் கூட பார்க்கக் கூட நேரம் கிடைக்காத அளவு பொறுப்புள்ள வேலைகள் அவர்களுக்கு இருக்கலாம். குறை சொல்ல முடியாது. கூடாது. பொறுப்புள்ளவர்கள் தானே அதிகாரிகள். அவர்களைத் தொந்தரவு செய்யாமல் நாமே அதை சீர்திருத்தி திருப்பணி மேற்கொள்ளலாம் என்று சில உள்ளூர் நல்ல உள்ளங்களுக்குத்தோன்றி இருக்கிறது.

நவம்பர் 16ம் தேதி [வியாழன் ] மதியம் முதல் விஷ்ணுபதி புண்ணிய கால உற்சவங்கள்தொடங்கி 17ம் தேதி ஸ்ரீ ராதா மாதவ கல்யாண மஹோத்ஸவம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகளும் நடைபெற உள்ளன. 18ம் தேதி காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை ஸ்ரீ ராமர் கோயில் ஸம்ப்ரோக்ஷணம் நல்ல முறையில் நடைபெறவும் உலக மக்களின் க்ஷேமத்திற்கும் பகவான் ஸ்ரீராமர் அருள் வேண்டி அகண்ட ராம நாம ஜபம் நடக்கிறது. மூன்று நாட்களுக்கும் பிரசாத விநியோகம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எல்லா பக்தர்களும் வந்து ஸ்ரீ ஸீதா லக்ஷ்மண பரத சத்ருக்ன ஹனுமத் ஸமேத ஸ்ரீ கோதண்டராமரின் அனுக்ரஹத்தை பெற்றுக்கொள்ளுமாறு ஆஸ்திக மஹாஜனங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் ;;என்று டாக்டர் சுந்தரம் என்பவர் எனக்கு மின் அஞ்சல் அனுப்பியிருக்கிறார். அவரை எனக்கு முன் பின் பழக்கமில்லை. நல்ல காரியங்கள் செய்வதற்கு முன் பின் தொடர்பு வேண்டாமே. மனதில் அன்பு, எல்லோரையும் பிணைக்கிறதே.

கோயில்இருக்கும் வரைபடம் map https://maps.app.goo.gl/xqV1onR71Fpr217GA
ஒவ்வொருவரும் அவராலான சிறு தொகையை ராமர் சேது பாலம் கட்டும்போது உதவிய அணில் போல், மின்சார கம்பியை கடித்த அணில் போலல்ல, உதவுவோமா? தீபாவளி செலவில் கொஞ்சம் நல்ல செலவும் சேர்ந்தால் சந்தோஷம் தராதா? மன திருப்தி தான் பெரிய உச்ச பக்ஷ சந்தோஷம்.

இந்த கோவில் பற்றிய வீடியோ ஒன்று கிடைத்தது. அதை இணைத்திருக்கிறேன் https://www.youtube.com/watch?v=YkAsFcOUSSE&t=17s

Dr சுந்தரம் @ 9480173760 or கோபாலன் @9840941499 ஆகியோரை தொடர்பு கொண்டால் இன்னும் இந்தக்கோவிலைப் பற்றி சொல்வார்கள். இக்கோவிலின் கடைசியாக கும்பாபிஷேகம் [ஸம்ப்ரோக்ஷணம்] 1942 ல் நடந்திருக்கிறது. என்பது வருஷங்கள் கழித்து இப்போது அடுத்த கும்பாபிஷேகம். உங்கள் காணிக்கையோடு நடைபெறப்போகிறது. 2024 ஸ்ரீ நாம நவமி க்குள் ஸம்ப்ரோக்ஷணம் [கும்பாபிஷேகம் ] செய்யப்பட வேண்டும் என்று திட்டம். கைங்கர்ய பணிகள் சீரமைப்பு வேலைகள் விடாமல் நடக்கிறது. 20 ஆண்டுகளாக தினசரி பூஜைகள் செய்யப்படாமல் உள்ள நிலையில் சில வருடங்களாக ஒரு கால பூஜை மட்டும் தற்போது கோயில் நடந்து வருகிறது. ஸ்ரீ கோதண்ட ராமர் கோவிலின் திருப்பணிகள் ,செப்டம்பர் மாதம் பூமி பூஜை யோடு தொடர்கிறது. குறைந்தது ரூ 1 கோடி .திருப்பணி நிதி தேவைப்படும் போல இருக்கிறது.

உலகெங்கும் உள்ள ஸ்ரீ ராம பக்தர்கள் தாராளமாக பெரும் நிதி உதவி செய்வார்கள் என்ற நம்பிக்கை பொய்க்காது. ஸ்ரீ ராமனின் கருணை கடாக்ஷத்திற்கு அளவேது.

காணிக்கை, நிதி தானம், உபாயம் செய்ய வங்கி கணக்கு விபரம் QR CODE தந்திருக்கிறார்கள். AADHAR எண்ணோடு நிதிஉதவி செய்வோமா?

Devangudi Sri Kothanda RamaSwami Temple Kainkarya Sabha
Ac no:510909010240371
IFSC: CIUB0000286
City Union Bank , Selaiyur Branch ,Chennai.600073
விபரங்களுக்கு Dr சுந்தரம் @ 9480173760 or கோபாலன் @9840941499 தொடர்பு கொள்ளவும்

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1426

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *