PALANIYANDI – J K SIVAN

என் அப்பன் பழனியாண்டி –    நங்கநல்லூர்  J K   SIVAN

அசோக் நகரிலிருந்து வடபழனி நடந்து சென்று திரும்பி வர முடியுமா என்ற சநதேகம்  ஏன்?  முக்கிய காரணம், எவ்வளவு குறைந்த தூரமாக இருந்தாலும் கூட நடக்காமல்  இரு சக்ர வாகனத்திலேயே  போய் வழக்கமாக்கிக் கொண்ட கெட்ட  பழக்கம். 84 வருஷங்களில் இந்த இரு கால்கள் எத்தனை மைல்கள்  நடந்திருக்கிறது!  இன்னும் அது பழுது படவில்லையே.  இப்போது  71கிலோ வை தூக்கிக்கொண்டு நடக்க வேண்டி இருக்கிறது. இப்போது  கொஞ்சம்  நரம்புகள் தசைகள் எல்லாம் old  அவ்வளவு தானே.  அதை வழி நடத்தும் கண்பார்வையும் கொஞ்சம் weak வீக். 

வடபழனி என் ஆரம்பகால வாழ்க்கையின் முக்கிய அங்கம்.  நினைவு தெரிந்து நான் மண் தெருவில் ஓடி ஆடி  மகிழ மரத்தடியில் இளம்பிள்ளை வாதம் காரணமாக  ஊனமாக நடக்கும்  நவநீதத்தோடு  பாண்டி  ஏரோ ப்ளேன் விளையாடி இருக்கிறேன். ரங்கநாதன் பிள்ளை பெண் அவள். கிட்டத்தட்ட என் வயது.
அவர்கள் வீட்டு தோட்டம் ரொம்ப பெரிது, தென்னந்தோப்பு,பனை மரங்கள்   மா பலா கொய்யா, நாவல்பழ மரம், செடிகொடிகள், பூச்செடிகள் எல்லாம் உண்டு.  சுற்றி விளையாடுவோம்.  தோப்பில்  மரத்திலேறி  கள்  சட்டிகளில் இறக்குவதை பார்த்திருக்கிறேன்.  பனை  மரத்தடியில் சில மண்  சட்டிகளில், பல்லா என்று சொல்வார்கள். அதில் வரிசையாக   கள்  இறக்கி வைத்திருந்ததை  பார்த்து விட்டு அதை பால் என்று நினைத்து  கொஞ்சம் குடித்ததற்கே  என் அண்ணா ஜம்பு மயங்கி விழுந்து அப்புறம் அவனை வீட்டுக்குள்  தூக்கிக்  கொண்டு போய்  சரிப்  படுத்தினார்கள். அப்புறம் முதுகில் அடியும் வாங்கினான். அப்போது அவனுக்கு  9 வயது.

ரங்க நாதம்  பிள்ளை முருக பக்தர். கிருத்திகை விரதம் இருந்து   முருகன் படத்தின் மேல் சாத்தி இருக்கும் பிரம்பினால் முதுகில் படேர் படீர் என்று விளாசிக் கொள்வார். பயந்து ஓடி இருக்கிறேன்.  அவர் மேல் சாமி வரும் எங்கள் வீட்டுக்கும் வடபழனி ஆண்டவர் கோவிலுக்கும்  கூப்பிடு தூரம் என்பார்களே  அவ்வளவு கிட்டே .

கார்த்திகை   கிருத்திகை  என்றால்  உடனே கண் முன் தோன்றுபவன்  கார்த்திகேயன் எனும் சுப்ரமணியன் எனும் முருகன். என் வடபழனி முருகன். மறக்க முடியாதவன்.   27 நக்ஷத்திரங்களில் மூன்றாவது  கிருத்திகை. முருகனுக்கு உகந்த நாள். அதிலும் ஆடி கிருத்திகை ரொம்ப விசேஷம்.  ஆடி கிருத்திகை விரதம் எத்தனை யோ பக்தர்களால் அனுஷ்டிக்கப்படுகிறது.  ஏகாதசி போல் கிருத்திகை அன்றும் விரதம் இருப்பவர்கள் இன்றும் இருக்கிறார்கள்.  அன்று சாப்பிட்டாலும் உப்பு சேர்த்துக் கொள்வதில்லை.

கார்த்திகை பெண்களால் வளர்ந்தவன் அறுமுகனான கார்த்திகேயன்.ஆடி கிருத்திகை அன்று அறுபடை வீடுகளிலும் சிறப்பு மிக்க மற்ற  முருகன் ஆலயங்களிலும் பக்தர்கள் திரள்வார்கள்.
நான் வாழ்ந்த கோடம்பாக்க வடபழனி இப்போது  ஜனவெள்ளத்தில் இருக்கிறது. எங்கும் வண்டிகள், நடக்கவே இடமில்லை. தெருவில் கொஞ்சம் அசந்தால் ஏதாவது ஒரு வண்டி நமக்கு மேலே ஏறி சென்றுவிடும். தெருவின் இரு  பக்கங்களிலும்  ஒரு இஞ்சு இடமில்லாமல்  கடைகள், உணவு விடுதிகள்.  தெரு   ஓர வியாபாரிகள். முருகன் கோவிலிலும்   இப்போது நிற்க இடமில்லை.  கம்பிகள் கட்டி  வரிசை வரிசையாக வளைந்து வளைந்து செல்ல  ஏற்பாடுகள் செய்திருக்கிறார்கள்.

அக்கால  சுந்தர  குருக்களின் இனிமையான அர்ச்சனை குரல் இன்னும் காதில் ஒலிக்கிறது. அவருடைய  பிள்ளைக்கு இப்போது  ஐம்பது வயகத்துக்கு மேல் இருக்கும். அவரும் அர்ச்சகராக இருக்கிறார்.  26.10.23 அன்று  அவரிடம் என் பழைய ஞாபகங்களை சொன்னேன். சுந்தர குருக்களின்   அற்புதமான கணீர் குரல் பாட்டுகள் ஸ்தோத்திரங்களை பற்றி சொன்னேன். ரொம்ப சந்தோஷத்தோடு கண்ணீர் வடித்தார்.  ” என்னால்  அப்பாவை போல் பாட  முடியவில்லை”   என்று அழுதார்.  ஆண்டவன் மேல் இருந்த ஒரு மாலையை  எடுத்து என் கழுத்தில் அணிவித்தபோது நான் கைலாசத்தில் இருந்தேன்.  எவ்வளவு  வடபழனி முருகன் நிர்மால்ய மாலைகளை ஐந்தாறு வயதில் போட்டுக் கொண்டிருக்கிறேன்.
1942-43 ல்  நாங்கள் அங்கே பிள்ளைமார்  தெருவில் குடியிருந்த போது  வட பழனியாண்டவர் கோவில் ஒரு சிறிய குடிசை  க்ஷேத்ரம்.    அப்போது  முருகனுக்கு கோவில்  இல்லை. கீற்றுக் கொட்டகை. ஓலை தட்டி  தான் வாசல். .உள்ளே ஒரு பெரிய அழகான முருகன் படத்தில்  தரிசனம் தருவான். அதை இணைத்திருக் கிறேன். வடபழனி முருகன் என் பால்ய வாழ்க்கையோடு இணைந்தவன். அவனோடு விளையாடி இருக்கிறேன்.
இந்த ஒரு கோவிலில் ஸ்பெஷலாக  என்ன விசேஷம்தெரியுமா?   பழனி ஆண்டவன் பாத ரக்ஷையுடன் தாமரை இதழ்மேல் நின்று அருள் பாலிப்பது தான்.  வலது பாதம் சற்று முன்னால் வைத்திருப்பார். நான்கு ஐந்து வயதில் எனக்கு இது தெரியவில்லை. ஸ்தல விருக்ஷம் அத்திமரம்.
கிராம நிர்வாகிகள், பிள்ளைமார்களுக்கு என் அப்பா J. கிருஷ்ணய்யரை ரொம்ப பிடிக்கும். நிறைய படித்தவர். அவர்களுக்கு விஷயங்களை வாரி வழங்குவதில் பிள்ளைமார் குடும்பங்கள் திருப்தி அடைந்து எங்களை ஆதரித்து வந்தனர்.
வடபழனி முருகன் கோவில் பின்னல் நிறைய மரங்கள் நந்தவனமாக இருந்தது. பூக்களை பறித்து படத்துக்கு போடுவோம். என்னை வடபழனி ஆண்டியாக்கி விபூதி பூசி கோவணத் தோடு கையில் ஒரு கொம்பை கொடுத்து (அது தான் வேல்) வெகுநேரம் நிற்க வைத்து தலையில் அட்டையில் கிரீடம் அணிவித்து அலங்கரித் து விளையாடுவார்கள். எனக்கு இப்படி ஒரு பாக்யம் சின்ன வயசில் கிடைத்ததா? பிறகு தான் நான் பாக்கியசாலி என்பதை புரிந்துகொண்டேன்.
ஊர்க்காரர்கள் சொல்வதைக்  கேட்டு அம்மா  சொல்லி தான் எனக்கு   வடபழனி முருகன் சரித்திரம் தெரிந்தது.  அண்ணாசாமி நாயக்கர்  தீவிர முருக பக்தர். மஹான்.  அவருக்கு  தீராத வயிற்றுவலி. எப்போதுமே சிவ, முருக, பக்தர்களுக்கு வயிற்று வலி ஒரு காரணமா?  இறைவனின் சோதனையா? .திருநாவுக்கரசருக்கு வந்த  மாதிரி  நாயக்கருக்கும்   சூலை நோய். நாயக்கர் எங்கெல்லாமோ அலைந்து பல கோவில்களுக்கு சென்று வேண்டினார். ஹுஹும். வயிற்று வலியால் துடித்தார். தீரவில்லை. பழனிக்கு சென்றபோது  முருகன் வலி தீர்த்தான். நாயக்கர் நன்றிக்கடனாக தனது நாக்கை அவன் முன்னால் துண்டித்து பேச்சிழந்தார். நாக்கை அறுத்து காணிக்கையாக கொடுப்பதற்கு ‘பாவாடம்’  என்று பெயர்.
பழனி முருகன் கோயிலை  ஒட்டிய  கடைகளில் ஒன்றில் அண்ணாசாமி நாயக்கர் கண்ணில் ஒரு முருகன் படம் தென்பட்டு  காந்தமாக அது அவரை ஈர்க்க அதை வாங்கினார். அது தான் என் மனதில் பதிந்த இன்றும் வாழும் வடபழனி முருகன்.   அந்த படத்தை தலையில் சுமந்துகொண்டு  கோடம்பாக்கம் புலியூர் வந்தார். அப்போது வடபழனி ஏரியாவுக்கு புலியூர் கோட்டம் என்று பெயர்.
அண்ணாசாமி நாயக்கருக்கு  கோடம்பாக்கத்தில் ஒரு வீடு விஸ்தாரமாக இருந்தது. அதில் ஒரு கீற்றுக் கொட்டகை நிர்மாணித்தார். அதில் அந்த படம் ஜம்மென்று வீற்றிருந்த இடம்  வடபழனி முருகன் கோவில் ஆனது. அதில் தான்  விளையாடியிருக்கிறேன். அந்த ஊரே  வடபழனி ஆகிவிட்டது.
அண்ணாசாமி நாயக்கர்  கொண்டுவந்த முதல் வடபழனி முருகன் படம்  இன்றும்  வடபழனி முருகன் சந்நிதியில் உள்  ப்ரஹாரத்தில்  வடக்கு மண்டபத்தில் இருக்கிறது. படத்தில் உள்ள வடபழனி முருகன் சிலையாகி  உலகமெங்கும் அவன் பக்தர்கள் மகிழ்கிறார்கள். 

 26. 10.2023  அன்று  நான் வடபழனி சென்றபோது நடந்த ஒரு சம்பவம்:”சார், நீங்கள் சிவன் ஸாரா ?”  யார் இப்படி கேட்பது?  இளம் வாலிபர் இவர் யார், எனக்கு இவர் பழக்கமில் லையே.
”ஆம் என் பெயர்  ஜே.கே.சிவன்.  என்னை எப்படி உங்களுக்குத் தெரியும்?   நாம் எங்கே பார்த்திருக்கிறோம் என்று ஞாபகமில்லையே”
”சார்  நான் உங்கள் படங்களை முகநூல்  fb இல் பார்த்திருக்கிறேன். உங்கள் எழுத்துகள் நிறைய சேர்த்து வைத்து,  வாசித்திருக்கிறேன். இதோ எதிரே என் வீடு.  மாடியிலிருந்து உங்களை பார்த்தபோது நீங்கள் தான் சிவன் சார் ஆக இருக்குமோ என்று ஆர்வம். கீழே  இறங்கி ஓடிவவந்தேன்”
இதற்குள்  முருகன் கோவில் வாசலுக்கு வந்துவிட்டோம். காலணிகளை கழற்றி வைக்கும் ஸ்டாண்டு  இருக்கிறது. அங்கே  நின்று  செருப்பை கழற்றினேன். எனக்கு அதிர்ச்சி  தரும்படியாக அந்த  என் செருப்புகளை கையால் எடுத்து ஸ்டாண்டில் அவரே வைத்துவிட்டார். தடுத்தும் கேட்கவில்லை.  உள்ளே  என்னோடு முருக தரிசனம் செய்தார். இதோ இந்த தூண் அருகே தான் MKT பாகவதர்  நின்று  ”சொப்பன வாழ்வில்”  பாட்டு பாடியதை என் சின்ன வயதில் கேட்டேன். சுந்தர குருக்கள் தான் பாட சொன்னார்” என்றேன். அந்த இளைஞர்  (MR. HAREESH)  என்  முகநூல்  நண்பர்களில் ஒருவர்.  AR  ரஹ்மான் அலுவலகத்தில் பணிபுரிகிறார். என்னோடு செல்ஃபீ போட்டோ எடுத்துக்கொண்டு எனக்கு அனுப்பினார். அதுவும் இதோடு இணைத்திருக்கிறேன்.
எண்ண  நீர்க்குமிழிகள் நிறைய  இருக்கிறது. பல பதிவுகள் இடுகிறேன்.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1426

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *