PESUM DEIVAM MADURAI MEENAKSHI 3 – J K SIVAN

பேசும் தெய்வம்  –   நங்கநல்லூர்   J K   SIVAN 

அங்கயற்கண்ணி  மீனாக்ஷி  – 3

மதுரை மீனாக்ஷி அருளால்  கண் பார்வை திரும்பப்  பெற்றவுடன்  நீலகண்ட  தீக்ஷிதர்  மீண்டும்  மன்னனி டம்  உத்யோகம்  பொறுப்பு  எதுவும்  எடுத்துக் கொள்ள வில்லை.  ராஜா  திருமலை நாயக்கர் எவ்வளவோ மன்றா டியும்  தீக்ஷிதர்  திட சித்தமாக இருந்து விட்டார்.
இதுவரை  புரிந்த ராஜ ஸேவகம் போதுமென்று  தீக்ஷிதர்  பதவியை  ராஜிநாமா பண்ணிவிட்டுத் தாம்ர பரணி தீரத்தில் பாலாமடைக்குப் போய்ச் சிறிது காலம் வாஸம் செய்து விட்டு ஸந்நியாஸம் வாங்கிக் கொண்டு ஸித்தியாகி விட்டார். அதனால் அவ்வூருக்கு ‘நீலகண்ட ஸமுத்ரம்’ என்று பெயர் ஏற்பட்டிருக்கிறது. அந்த நீலகண்டரே அநுபவித்த ஸமுத்ரம், ஸாகரம், ஆனந்த ஸாகரம் எதுவென்றால் மீனாக்ஷியின் அநுக்ரஹம் தான்.

இப்படி இருக்கிறது மீனாக்ஷியின் பெருமை. மிகவும் உயர்ந்தவர்களாக இருக்கிற குமர குருபரர், நீலகண்ட தீக்ஷிதர் ஆகியவர்களுக்கு மட்டுமில்லாமல், ‘இந்த அம்பாளுக்கு என்ன சக்தி இருக்கிறது?’ என்று கேலி பண்ணின ஒரு வெள்ளைக்கார கலெக்டருக்கு கூடப் பரம கருணையோடு அநுக்ரஹம் பண்ணியிருக்கிறாள். ஞாபகமிருக்கிறதா  உங்களுக்கு?  மதுரை கலெக்டர்  வெள்ளைக்கார துரை  ரோஸ் பீட்டர்  கொட்டும் மழை தொடர்ந்து மதுரையை  விழுங்கிக்கொண்டிருந்த போது , ஒரு இரவு  படுத்துக் கொண்டிருந்த பங்களாவின் மீது இடி விழ இருந்த போது தூக்கத்திலிருந்த  ரோஸ் பீட்டரை எழுப்பி வெளியேறும்படி எச்சரிக்கைப் பண்ணிக் காப்பாற்றினாள் . அதனால் உயிர் பிழைத்த  அந்த துரை  மீனாக்ஷியின் பரம பக்தனாகி அம்பா ளுக்குத் திருவாபரணம் – stirrup என்பதான குதிரை மீது ஏற உதவும் அங்கவடி – பண்ணி அர்ப்பணம் செய்த    ஆச்சர்ய  விவரம் அது.    நீங்கள்  எல்லோரும்  விருப்பப் பட்டால் மீண்டும்  ரோஸ் பீட்டருக்கு   மதுரை மீனாக்ஷி   உயிர்ப்பிச்சை அளித்த  விஷயத்தை  பதிவிடுகிறேன்.   நிறைய  பேர்  கேட்டால்  தான். ஓரிருவர் கேட்டால் எல்லோரும்  பதிவிட வேண்டாம் என்று கட்டளை இட்டதாக ஏற்றுக் கொள்கிறேன். 

இப்படி ஆதியிலிருந்து இன்று வரை மஹிமையோடு இருந்து கொண்டிருக்கிற மீனாக்ஷியை, கண்ணழகை வைத்தே பெயர் பெற்றிருப்பவளை, தேவி ஸ்தோத்தி ரங்களுக்குள் இரண்டு கண்கள் மாதிரி இருக்கும் ஸஹஸ்ரநாமத்திலும் ஸெளந்தர்ய லஹரியிலும் சொல்லவில்லை என்றால், குறையாக, ஏமாற்றமாக இருக்கிறது.

ஆனால் நன்றாக கவனித்துப் பார்த்தால் குறை நிறை யாகிறது. இரண்டிலுமே மீனாக்ஷியை நேராகச் சொல்லாவிட்டாலும் ஸூசனையாகச் சொல்லித்தான் இருக்கிறது. உடைத்துச் சொல்லாமல் ஸூசனையாகச் சொன்னதாலேயே அவளுக்கு ஜாஸ்தி விசேஷம் என்று தோன்றுகிறது
அது எப்படி?
எப்போதுமே ஸ்தூலத்தைவிட ஸூக்ஷ்மத்துக்குத் தானே மதிப்பு ஜாஸ்தி? அதனால் வெளிப்படையாகச் சொல்வதைவிட மறைத்துச் சொல்லுவதில் தான் மஹிமை ஜாஸ்தி.

விலை உயர்ந்த ரத்தினம் இருந்தால் அதை எல்லார் கண்ணும் படும்படியாகப் போட்டு வைப்பார்களா? பெட்டிக்குள் வைத்து, அதை இன்னொரு பெட்டியில் போட்டு, வீட்டின் உள்ளறையில்தானே பத்திரப்படுத்தி வைப்பார்கள்? அப்படித்தான் மீனாக்ஷியை ஸஹஸ்ர நாமத்திலும் ஸெளந்தர்யலஹரியிலும் ரஹஸ்யமாகச் சொல்லியிருப்பதாலேயே அவளுக்கு விசேஷ மதிப்புக் கொடுத்ததாகிறது.

ரொம்பவும் ப்ரியமானவர்கள், ரொம்பவும் மரியாதைப் பட்டவர்கள் ஆகியோரின் பெயரைச் சொல்வதில் லையல்லவா? இப்படித்தான் பாகவதத்தில் கூட ராதையின் பெயரைச் சொல்லாமலே ஒரு இடத்தில் மட்டும் ஸூசனையாகக் கோடி காட்டியிருக்கிறது என்று சொல்வதுண்டு. ராதா  கிருஷ்ண பக்திக்காரர்கள் கிருஷ்ணனை  விட ராதை ஒரு படி உசத்தி என்பார்கள். கிருஷ்ணனே அவள் காலில் விழுந்து பிரணய கலஹத் தை (ஊடலை)த் தீர்த்திருப்பதை எடுத்துக் காட்டுவார் கள். அத்தனை உசந்தவள் பேரை மண்டையி லடித்த மாதிரி சொல்லக்கூடாதென்றுதான் பாகவதத்தில் ஒரு இடத்தில் மட்டும் மறைமுகமாகச் சொல்லி அதோடு விட்டிருக்கிறது என்கிறார்கள். 

கோபியரோடு ராஸலீலையில் ஆடிக் களித்த கண்ணன் திடீரென மறைந்த போது கோபிகள் அவனை தேடிச் செல்கையில் அவன் ஒரே ஒரு  கோபியை மட்டும் உடன் அழைத்துச் சென்றதற்கான தடயத்தைக் காண்கி றார்கள். இவளே ராதை. ஆயினும் நேராகப் பெயர் சொல்லாமல் அவர்கள் “இவளால் கண்ணன் விசேஷ மாக ஆராதிக்கப்படுகிறான்” (“அநயா (ஆ) ராதிதோ நூநம்”) என்னும்போதே ராதா நாமத்தைக் குறிப்பாலு ணர்த்தி விடுகிறார்கள் (  ஸ்ரீ  மத்  பாகவதம்  10.3.28).
இம்மாதிரி மீநாக்ஷியை ஸஹஸ்ரநாமம், ஸெளந்தர்ய லஹரி இரண்டிலும் நேராகச் சொல்லாமல் மறைமுக மாகச் சொல்லியிருப்பதாலேயே அவளுக்கு ஏற்றம் கொடுப்பதாகத்தான் ஏற்படுகிறது.

சரி, ‘லலிதா ஸஹஸ்ரநாமம்’ மீநாக்ஷியை எங்கே சொல்கிறது? என்ன சொல்கிறது?   என்பதை  அடுத்த பதில்  மஹா பெரியவா சொல்வதை அறிவோம். 

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1426

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *