நவராத்ரி கொலு – நங்கநல்லூர் J K SIVAN

இன்று  மஹாளய அமாவாஸ்யை முடித்த சூட்டோடு நவராத்ரி கொலு  பொம்மைகள்  பரணிலிருந்து இறக்கப்
பட்டன.  கிட்டத்தட்ட  50 வருஷத்துக்கு மேல்  வயதான  பொம்மைகள் இன்னும் சில  இருக்கிறது. சிலது ஒரிஜினல் கலர் போனாலும்  அதன் உருவம்  பாராட்டும்படி இருக்கிறது.  பழைய ஞாபகங்கள் வருஷா வருஷம்  அவற்றைப் பார்க்கும்போது வரட்டும்.
 ”ஆத்துக்கு பெரியவா  உங்க கையாலே  முதல் கொலு பொம்மை வையுங்கோ”
என் கையால்  வீணை மீட்டும்  வெள்ளைப்  புடவைக்காரி  சரஸ்வதி,   செங்கமலத்தில் வீற்றிருக்கும் லக்ஷ்மி   பச்சைப் பெண்  பார்வதி  பொம்மைகளோடு விக்னேஸ்வரர் பொம்மை ஒன்றும்  வைத்து நமஸ்கரித்தேன்.  பழைய கால  களிமண் பொம்மைகள்  ரொம்ப  கனமானவையாக  இருக்கும்.
என் அறையில்  வருஷம் முழுதும்  புத்தக அலமாரியாக இருந்த  ஸ்டீல் பீரோ உருவத்தை மாற்றிக்கொண்டு  ஹாலில் புரட்டாசி மாசம்  நவராத்ரி ஆரம்பமாகும்போது  பத்து நாளைக்கு   உரு மாறி கொலுப்படியாக காட்சி தரும்.  புத்தகம் சுமந்த அந்த ஸ்டீல்  கொலுப்படி   கலர் புடவையை போர்த்திக்கொண்டு  பொம்மை களை சுமக்கும்.இன்று  கொலுப்படி  அமைக்கும்போது  வரிசையாக  பாகிஸ்தான் வீரர்கள் அவுட்டாகி  அஹமதாபாத்தில் தலையை தொங்கப்போட்டுக்கொண்டு  பாவில்லியன் திரும்பியதை  லக்ஷோப  லக்ஷம்  இந்திய கிரிக்கெட் ரசிகர்கள்  ரசிப்பதை டிவியில்  பார்த்து எத்தனையோ  ரசிகர்கள் மகிழ்ந்தார்கள். நரேந்திரமோடி தான் உலகத்திலே  பெரிய பிரதமர் என்று கோபி பட்டிருக்கிறேன். ஆனால் அவர் பேர் கொண்ட ஸ்டேடியமும்  அப்படித்தானாம்.   எல்லோரும்  விரும்பியபடி  இந்தியா  ரோஹித் ஷர்மாவின் பல சிக்ஸர்களோடு  பாகிஸ்தானுடன் ஆன  உலகக் கோப்பை  மேட்ச் வென்றதால் அதன்   சாம்பியன் உலகக்கோப்பை கனவு நிறைவேற்றலாம்.
நவராத்திரியின் போது நிறைய வீடுகளில் தேவி பாகவதம் படிப்பார்கள்,  அதில் ஒரு சுவாரஸ்யமான  சம்பவம் சொல்கிறேன்
சும்பன், நிசும்பன் என இரு ராக்ஷஸர்கள். ராக்ஷஸர்கள் பலமும்,  பிடிவாதமும், நெஞ்சுரமும்,   தன்னம்பிக்கையும் அதிகம் கொண்டவர்கள். யாராலும் தங்களுக்கு மரணம் கிடையாது என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு  கடும் தவம் செய்வார்கள்.

சிலர் வெள்ளையும் சொள்ளையுமாக, பாக்கெட்டில் யாரோ சிரிக்கும் பொம்மை தெரிய, ரெண்டு கை கூப்பி நெற்றியில் விபூதி குங்குமத்தோடு நம்மை அணுகி நம் வாக்கு கேட்டு வாங்கி அரசாளும் பதவி பெற்றதும் நாம் படும் துன்பம் தாங்க முடியாத அனுபவம் என்று நமக்கே இருக்கும்போது, சும்ப நிசும்பர்கள் வரம் பெற்ற பிறகு படுத்திய துன்பம் தாங்காமல் தேவர்கள் மஹா விஷ்ணுவிடமும், சிவனிடமும் முறையிட மாட்டார்களா?
ப்ரம்மா விஷ்ணு சிவனால் அழிக்க முடியாத அந்த ராக்ஷஸர்களை அன்னை ஆதி சக்தியால் மட்டுமே வதம் செய்ய முடியும். ஆகவே பிரம்மா, விஷ்ணு, சிவன் தங்களுடைய சக்திகளை எல்லாவற்றையும் ஒன்று திரட்டி அம்பாளுக்கு அளிக்க சக்தி இழந்த ப்ரம்மா விஷ்ணு சிவன் தேவர்கள் ரிஷிகள் அனைவருமே வெறும் பொம்மையாகி விட்டார்கள்.அதனால் தான் பொம்மைக் கொலு வைக்கும் பழக்கம் வந்தது.
அன்னை பராசக்தி திரிமூர்த்திகள் தந்த ஆயுதங்களை பத்துக் கரங்களில் ஏந்தி. போர்க் கோலம் பூண்டு சும்ப, நிசும்பர்களையும், அவர்களது படைத்  தளபதிகளான மது, கைடபன், ரக்த  பீஜனையும் அழித்து தர்மத்தை நிலைநாட்டினாள். ஒன்பது நாள் யுத்தம். அவள் வெற்றி பெற்ற தினமே விஜயதசமி.

அம்பாள் யுத்தம் செய்த அந்த ஒன்பது நாட்களை நவராத்திரியாகக் கொண்டாடுகிறோம். அந்நாட்களில் . மாலை நேரம் சூரிய அஸ்தமனம் ஆன பிறகு போர் புரிய மாட்டார்கள். படைகள் தங்கள் கூடாரங்களில் ஓய்வெடுத்துக் கொள்ளும். அப்போது அன்னையின் படைக்கு ஊக்கம் கொடுக்கவும், மறு நாளைய போரில் உற்சாகமாகப் போரிடவும் வேண்டி அன்னையைக் குறித்த ஆடல், பாடல் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். இப்படி ஒன்பது இரவுகள் நடந்தது. அதனாலேயே நாம் நவராத்திரியின் பொது காலை நிகழ்ச்சிகள்,  விழா,  கொண்டாடு கிறோம். நவராத்திரியில் அம்பிகையை வெவ்வேறு வடிவங்களில் அலங்கரித்து வழிபடுகிறோம்..

அம்பிகையை.துர்க்கையாக, முதல் மூன்று நாள், லக்ஷ்மியாக அடுத்த மூன்று நாள், கடைசி மூன்று நாட்கள் ஸரஸ்வதி யாகவும், இப்படி முப்பெரும் சக்தியாக வழிபடுகிறோம்.
பத்தாம் நாள் அசுரர்களை அழித்து அம்பிகை பெற்ற வெற்றியைக் குறிப்பது தான் விஜயதசமி. அன்று அன்னை வெற்றித் திருமகளாக அலங்காரத்தோடு  ஆராதிக்கப்படுகிறாள். எடுத்த காரியம் யாவினும் வெற்றி அன்று.   இப்படி அம்பாளை வழிபடுவோர்  நவநிதிகளும் பெற்று, நீடுழி வாழ  அன்னை அருள் புரிவாள்.

 வருஷத்தில் ரெண்டு முறை நவராத்திரி என தேவி புராணம் சொல்கிறது. சித்திரையில் வரும் நவராத்திரி வசந்த நவராத்திரி. இப்போது புரட்டாசியில் வரும் நவராத்திரி சாரத  நவராத்திரி. இந்த ரெண்டுமே எமனுடைய கோரைப் பற்கள். கோடை, குளிர் என பருவகாலம் மாறும் போது நோய் நொடிகள் பரவும். இந்த ஆபத்திலிருந்து மக்களைக் காக்கும்படி தேவியைப் பூஜிக்க பழைய காலத்தில் இந்த ஏற்பாடு.

புரட்டாசி சாரத நவராத்திரி தான் பிரபலம். நவராத்திரி பூஜையை,  தெய்வங்களும், தேவர்களும்கூட செய்து பலன் பெற்றுள்ளனர். நாரதர் அறிவுரைப்படி ராமர் கடைப்பிடித்து ராவணனை அழித்து சீதையை மீட்டு வந்தார். கண்ணபிரான், சியாமந்தக மணி காரணமாக அடைந்த அபவாதம் இப்பூஜை செய்ததால் நீங்கியது. பஞ்சபாண்டவர்கள் பாரதப் போரில் வென்றதும் இந்த பூஜை செய்ததால்தான். தீய சக்தி மேலோங்கும்போது காத்திட வேண்டினால் அம்பாள் சண்டிகையாக ஒன்பது கோடி வடிவங்கள் எடுத்து தீமையை அழித்து நன்மை செய்வாள் என தேவி மகாத்மியம் கூறுகிறது.

நவராத்திரியில் 9 நாட்களும் பூஜை விரதம் அனுஷ்டிக்க இயலாதவர்கள் அஷ்டமி நாளில் மட்டுமாவது விரதம் இருந்து பூஜை செய்யலாம். விஜயதசமி தினத்தில் அம்பிகை அசுரர்களை அழித்து வெற்றிவாகை சூடினாள். ஆணவம் சக்தியாலும், வறுமை செல்வத்தினாலும், அறியாமை ஞானத்தினாலும் வெற்றி கொள்ளப் பட்ட தினம் என்பதால் வீரம், செல்வம், கல்விக்கு உரிய தேவியரான துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி என முப்பெரும் தேவியர்க்கும் உரியதாக இதை சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். அன்றைய தினம் புதிதாக காரியங்கள் துவங்கி எளிதாக நன்மை பெறுவார்கள். அன்று அபிராமி அந்தாதியினைப் படிப்பது மிகச் சிறந்த பலன் தரும்.

இன்னல்களை நீக்கி, தேவியின் இன்னருளைப் பெற்றுத் தரும் வழிபாட்டு நியதிகளை நவராத்ரி சொல்லித் தருகிறது. இந்த ஒன்போது நாளும், ஒவ்வொரு வடிவில் அம்பாளை தியானித்து, பூஜித்து வழிபட வேண்டும்.

”நவராத்ரி வ்ரதப் பூமௌ குருதேயோ நரோத்தம தஸ்ய புண்ய பலம் வக்தும் ஸக்தா ஸா பரமேஸ்வரீ.” இந்த ஸ்தோத்ரம் நவராத்ரி விரத பூஜாபலன் பற்றி சொல்கிறது.

கொலு வைப்பது நவராத்திரி சமயத்தில் எல்லோர் வீட்டிலும் ஒரு உற்சாகமான சம்பவம். எத்தனையோ வருஷங்கள், எத்தனையோ வம்சங்களாக,  கொலு வைத்தாலும், இன்னும் அந்த உற்சாகம் குறையவே இல்லை. இப்போதெல்லாம்  ஒற்றைப்படையில் 11-13 படிகள் வைக்க வீடுகளில் இடம் கிடையாது.  3-5 என்பதோடு கொலு நின்றுவிடுகிறது.  இந்த வருஷம்  நிறைய  பேர்  ”நாங்களே  கொலுப்படி, பொம்மை எல்லாம் கொண்டுவந்து வீட்டில் வைத்து, 10நாள் வாடகை பெற்று எடுத்துச் செல்கிறோம்” என்று விளம்பரங்கள் .
கலியுகத்தில்  ”உங்களுக்காக நாங்களே சாப்பிடுகிறோம். வாடகை இவ்வளவு ரூபாய் கொடுத்தால் போதும் ” என்றும் விளம்பரம் வரலாம்.  சோம்பேறித்தனத்துக்கு எல்லையே இல்லாமல் போய்விட்டது.

மார்க்கண்டேய புராணத்தில் ஒரு ராஜா, சுரதா என்பவன்.தனது குரு சுமதாவிடம் ”குருநாதா, என் எதிரிகளை எப்படி ஜெயிக்கலாம்? என்று ராஜா சுரதா தனது குரு சுமதாவைக் கேட்கிறான் .

”அதோ அங்கே பார், அங்கு தெரியும் பரிசுத்தமான ஆற்று மணலில் ஒரு காளி பொம்மை செய்து பூஜை பண்ணு போ ” என்கிறார் சுமதா.
ராஜா காளி பொம்மை பண்ணி அலங்கரித்து, உபவாசம் இருந்து, மனதாலும் மெய்யாலும் வேண்டுவதால் அம்பிகை அவன் எதிரிகளை அழைக்கிறாள் என்று வரும்.   அதனால் மண் பொம்மைக்கு மவுஸு அதிகம். இப்போதெல்லாம் பேப்பர் மெஷ், பிளாஸ்டிக், பிளாஸ்டர் ஆப் பாரிஸ் என்று என்னென்னவோ வகையில் பொம்மைகள் வந்துவிட்டன. ”மண் பொம்மை யால் என்னைப் பூஜி.உனக்கு சகல சுகங்க ளையும், சௌபாக்கியங்களையும் அளிக்கிறேன் ” என்கிறாள் அம்பிகை. இதனால் தான் நவராத்திரியில் கொலு வைத்து அம்மனை பூஜிக்கிறோம்.
கொலு என்றால் அழகு என அர்த்தம். அந்த கால ராஜாக்கள் கொலு வீற்றிருந்தார்கள் என்றால் பொம்மை மாதிரி சும்மா உட்கார்ந்து இருப்பது என்று கூட சிலர் அர்த்தம் எடுத்துக் கொள்ளலாம். மழை பெய்கிறதா என்று கூட மந்திரி தான் மேலே பார்த்துவிட்டு சொல்வான். .
கொலு வைப்பதற்கு முன்பு வீட்டை சுத்தம் செய்து, ஐந்து அல்லது ஏழு அல்லது ஒன்பது படிகளுடன் கொலு வைக்கப்படும். கடவுள் பொம்மைகள் கொலுப்படிகளில்  ஜாஸ்தியாக இருக்கும் .
என் இளவயது ஞாபகம் வருகிறது.   புரட்டாசி வருவதற்கு முன்பே வீட்டில் கொலு பத்தி பேச்சு அடிபடும். அப்பா பரண் மேல் ஏறி பெட்டிகளை இறங்குவார். எல்லாம் பழங்கால பொம்மைகள். வர்ணம் போனவை . அதெல்லாம் எடுத்து துடைத்து வைக்க வேண்டிய வேலை. ட்ரங்க் பெட்டிகள், மர பெஞ்ச், மேஜை, ஜன்னல் மேடை, ஸ்டூல், இரவல் வாங்கிய செங்கல்கள், பலகைகள், அரிசி ட்ரம். இதெல்லாம் ஒன்று சேர்ந்து  ஏழு அல்லது ஒன்பது  கொலுப்படி தயாராகும். அப்பாவின் அத்தனை வேஷ்டிகளும் அதன் மேல் போர்த்தி அங்கங்கே பின் குத்தி ஒட்டு மொத்தமாக உறை போட்டிருக்கும். 5. 7, 9, என்று ஒற்றைப்படை படிகள். எங்கள் வீட்டில் எப்போதும் 9. கொலுப்படி கட்டும் திறமை அப்போது எல்லா வீடுகளிலும் அப்பாக்களுக்கு இருந்தது.

கொலு வைக்க அதிக சிரத்தை ,பக்தி இருந்தது. மிக்சி, கிரைண்டர் இல்லாத காலத்தில் தினமும் வீட்டில் வித வித பக்ஷணங்கள் தயாராகும். அண்டை அசல் வீடுகள், உறவினர்கள் கட்டாயம் வருவார்கள். சுண்டல் பரிமாற்றம் ஜரூராக நடக்கும். பெரிய மாமிகள், பாட்டிகள் கூடி நிறைய பேசி, தினமும் மஞ்சள் குங்குமம் கொடுப்பதும் பெறுகின்றதும் வழக்கம். சுண்டல்களை சிறுவர்கள் நாங்கள் கவனித்துக் கொள்வோம். யார் வீட்டில் என்ன பக்ஷணம் என்று செய்தி கிடைத்துவிடும். சுற்றிக்கொண்டே இருப்போம். பலவித குரல்களில் மாமிகள் பாட்டிகள் எல்லாம்  சுவாமி பாட்டு பாடுவார்கள்.

பண்டிகைகள் உறவுகளை இணைத்தது. ஒற்றுமை நிலவியது. குழந்தைகளுக்கும் கலாச்சாரம் புரிந்தது. வளர்ந்தது. முக்கியமாக அப்போது பெண்கள் வேலைக்கு போகவில்லை. ஹார்மோனியத்தோடு ஸ்வர மாகவோ அபஸ்வரமாகவோ பாடினார்கள். பத்து நாட்கள் பண்டிகை ஒரு விறுவிறுப்போடு அமைந்தது. உடலிலும் உள்ளத்திலும் ஏனோ தானோ என்ற சலிப்பு கிடையாது. பணத்துக்கு யாரும் முக்யத்வம் கொடுக்க வில்லை. மன நிறைவு இருந்தது . பூக்களை வீட்டிலேயே செடியில் பறித்து மாலைகள் தொடுத்தார்கள். ஒரு காலை  நீட்டி தூணிலே சாய்ந்து கொண்டு அத்தைகள் பாட்டிகள் பெரியம்மாக்கள் சித்திகள் ஒன்று சேர்ந்து  பூ தொடுத்தார்கள். முழம் என்று சொல்லி அரையோ முக்காலோ முழமாக்கி நாற்பது ஐம்பது ரூபாய் கேட்க தெரியவில்லை. வெற்றிலை வீட்டிலேயே கிடைத்தது. கடையில் இப்போது சின்னதாக ஒரு வெற்றிலை ரெண்டுரூபாய்.

முதல் படியில் கலசம் பின் ஆண்,பெண் மரப்பாச்சிக்களுடன் ஆரம்பித்து மனித குல வளர்ச்சியோடு படிகள் மேலே மேலே சென்று உச்சிப்படியில் தெய்வங்கள் முக்கியமாக முத்தேவிகள், ப்ரம்மா விஷ்ணு மஹேஸ்வரன் பொம்மைகள் வைப்பது சம்ப்ரதாயம்.     சில வீடுகளில் இருப்பதை எல்லாம் அடுக்கி வைத்தனர். வண்ணான் இடுப்பில் வேஷ்டி, முதுகில் மூட்டை, தலைப்பாகையோடு, அருகே வண்ணாத்தி இடுப்பில் குழந்தையோடு, ஒரு கையில் கஞ்சி கலயம். செட்டியார் செட்டியாரம்மா எதிரே பாத்திரங்களில் அரிசி பருப்பு வகைகள். போஸ்ட் பாக்ஸ். கையில் ஒரு கஞ்சிரா மாதிரி ஒரு வாத்யத்தோடு டான்ஸ் பண்ணும் வெள்ளைக்கார வடக்கத்தி கிராப் தலை பெண்கள். எங்கம்மா  பார்ஸி காரி  என்பாள்.  நாய் குட்டி பக்கத்தில் நாரதர். சல்யூட் அடிக்கும் நேதாஜி. அவர் பக்கத்தில் அனந்த சயனர் ஆதிசேஷனோடு. யானை பொம்மைகள்! சில பொம்மைகள் ஜோடியாக அந்த பக்கம் ஒன்று இந்தப்  பக்கம் ஒன்று என்று வைத்திருப்போம். பார்ஸிக்காரி, மான், தொப்பி போட்ட பையன், கருப்பு வெளுப்பு  நாய்கள் இதுபோல் பல ஜோடி இருந்தது. காந்திஜி, நேருஜி பொம்மை நிறைய வீட்டில் கொலுவில் பார்க்க முடிந்தது.

தசாவதாரம் செட். எம தர்மன் தர்பார், சிவபெருமான் கைலாச மலை பூத கணங்கள் செட். கல்யாண ஜான் வாஸா ஊர்வலம் செட் பொம்மைகள் ரொம்ப பிரபலம். எங்கே அதெல்லாம் இப்போது ?

பார்க் என்று தரையில் கொசகொச வென்று நிறைய மண் கொட்டி பாத்தி கட்டி. திட்டு திட்டாக செடிகள் புல் நட்டு நடுநடுவே சின்ன சின்ன பிளாஸ்டிக் மண் பொம்மைகளை நிரப்புவோம். இதில் குழந்தைகள் பங்கு ரொம்பவே அதிகம். ரெண்டு பக்கமும் குத்து விளக்கேற்றி கோலங்கள் போட்டு தட்டில் வெற்றிலை பாக்கு பழங்கள்.  அபிராமி அந்தாதி, தேவி பாகவதம்,  ஒப்பிப்பார்கள். நிறைய கேட்டிருக்கிறேன். காது ரொம்பி இருக்கிறது.

எங்கள் வீட்டுக்கு எதிர் வீடு பெரியது. வாசலில் பூவரச மரம் வீட்டின் மேல் சாய்ந்து கொண்டு நிற்கும். திண்ணை ரேழி தாண்டி போனால் முற்றம்.  மேலே கூரையில். சூரிய வெளிச்சம்  பளிச்சென்று அங்கே  இருக்கும். அதற்கு வலது பக்கம் பெரிய ஹால் மாதிரி ஓபனாக இருக்கும்.  எதிரும் புதிரும் ரெண்டு இருட்டு அறைகள். கதவு நாதாங்கியிலிருந்து சங்கிலி கதவு மேல் வாசல்கால் நிலையில் ஹூக் ஒன்றில் மாட்டி யிருக்கும். வீட்டுக்காரர் குப்பு மாமா போஸ்ட் மாஸ்டர். நிறைய சின்ன  சின்ன  பல்புகள் மேல் கலர் காகிதம் சுற்றி பளிச் பளிச் என்று  பல வித வண்ணங்களில் ஒளி விட செய்வார். எலக்ட்ரிக் விஷயங்கள் கொஞ்சம் அத்து  படி போஸ்மாஸ்டருக்கு. இன்னும் எத்தனை எத்தனையோ   கலைந்த கரைந்த கொலு ஞாபகங்கள் கொஞ்சம் கொஞ்சமாக  அப்பப்போ  வரும்போது சொல்கிறேன். 

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1426

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *