PESUM DEIVAM – J K SIVAN

பேசும் தெய்வம்  –  நங்கநல்லூர்  J K  SIVAN 

அங்கயற்கண்ணி  மீனாக்ஷி 

இன்று  புரட்டாசி  வெள்ளிக்கிழமை.  அம்பாளை  நினைத்து வணங்கும் ஒரு நன்னாள்.  காமாக்ஷி மீனாக்ஷி, விசாலாக்ஷி, திரிபுர சுந்தரி, அன்னபூரணி அடேயப்பா அவளுக்கு தான் எத்தனை பேர்கள்.   திருநெல்வேலியில் கோமதியம்மன்  இன்னிக்கு  தங்கப்பாவாடையோடு  தரிசனம் தருவாள்.  அம்பாள்
என்று சொல்லும்போதே,  என் மனதில்   முழுதுமாக  மஹா பெரியவா  நிற்கிறார். பேசும் தெய்வம் என்று நான் போற்றும் அந்த ஞானி இதோ என் எதிரே  படமாக  என்னை  கருணைக் கண்களோடு வழக்கமான  புன் முறுவலோடு  அபய  ஹஸ்தம் காட்டி  தாயன்போடு  தரிசனம் தருகிறார்.  அவரோடு நான் பேசும் வழக்கம் உண்டு.  நேரிலேயும்   பல  சந்தர்ப்பங்களில் அவரை  தரிசித்து பேசி இருக்கிறேனே.  

பேச்சு என்பது நாம்  ஒவ்வொருவரும் வாயால் வார்த்தைகளை பரிமாறிக்கொள்வது. ஆனால் என் விஷயத்தில் நான் வாயால் அவரை கேள்விகள் கேட்ப துண்டு, அவர்  பேசாமலேயே பேசுபவர்.  என் கேள்வி களுக்கு பதிலை என் மனம் அறியுமாறு  என்னுள் செலுத்துபவர். துல்லியமாக அவர் பேசுவது என் மனதில் பதியும்.   அடிக்கடி  பெரியவா உபதேசம் இப்படி  நான் பெற்றிருக்கிறேன். எனக்கு அவர் உபதேசிப்பது ஏற்கனவே  யாரோ  எங்கோ   பெற்ற  பாக்யம் தான்.  உங்களுக்குகே  தெரியுமே. எத்தனையோ  பக்தர்கள்  ”எனக்கு அம்பாள்,  சுப்பிரமணியர், விக்னேஸ்வரர், சாஸ்தா, ப்ரத்யக்ஷம் ..பேசுவேன் என்று சொல்வார்கள்.  நம் வாழ்க்கையே  பகவானால் தான் செலுத்தப் படுகிறது என்பதால்  இதில் சந்தேகமே வேண்டாம்.
இதோ என் கேள்வியும்  மஹா பெரியவா  பதிலும் :’மஹா பெரியவா  சமீபத்திலே மதுரை போயிருந்தேன். மீனாக்ஷி  தரிசனம் பண்ணினேன்.  என்னவோ அங்கே கூட  உங்க  ஞாபகம் தான் வழக்கம்போல் வந்தது..  உங்களை காமாக்ஷி என்கிறோம். நீங்க  மீனாக்ஷியையும்  நிறைய  தரிசித்தவர். இன்னிக்கு  மீனாக்ஷி பத்தி சொல்லுங்கோ”

இதை நான் ஏற்கனவே  சொல்லி இருக்கேண்டா. நீ தான் படிக்கிறதே இல்லை… சரி கேள்.:

” மதுரைக்கு  த்வாதசாந்தம் என்று சாக்த தந்த்ரத்திலே  ஒரு  பேர்  உண்டு. தெரியுமா உனக்கு?”

”தெரியாது பெரியவா”  சொல்லுங்கோ” ‘

‘நான்  ஒரு தடவை ராமேஸ்வரத்திலிருந்தபோது, “த்வாத சாந்தம்” என்று ஒருவர் வந்திருந்தார். இப்படி ஒரு அற்புதமான பேர் கொண்டவர் அதிகம் இல்லைனு  நினைக்கிறோம்.  . அவருடைய தகப்பனார் பிள்ளை பிறக்கணுமென்று மதுரையில் ப்ரார்த்தனை பண்ணி அவர் பிறந்ததாலே  அந்த  பேர்  வைச்சாளாம் .   எத்தனையோ  பேருக்கு பழனி, மதுரை,  சிதம்பரம், திருப்பதி, திருமலை  என்று பேர் இருக்கு இல்லியா. இவருக்கு மதுரையின் பேர்.  என் பக்கத்திலிருந்த  ஒரு  வித்வான் கிட்ட  ‘‘த்வாதசாந்தம்’  னா  என்ன தெரியுமா? ன்னு கேட்டேன்.
 ”பெரியவா,  எனக்கு தெரிஞ்சு,  ராமேஸ்வரத்திலே   சங்கர மண்டபத்தில் ஆசார்யாள் ஸ்தோத்தித்திலே  த்வாதச (பன்னிரண்டு) ஜ்யோதிர் லிங்கங்களைச் செதுக்கியிருக்கிறது.  அந்த பன்னிரண்டு ,  த்வாசத லிங்கங்களில் தெற்குக் கோடியில் இருக்கும் லிங்கம்
ராமேச்வர ராமநாதர்தான் த்வாதசாந்தம்” என்று சொல்வார்கள்; 

”அது ஸரியில்லை. மூலாதாரத்திலிருந்து பிரம்மரந்திரம் வரை ஷட்-சக்ரம் (ஆறு சக்ரம்)  இருக்குன்னு  பொதுவா  சொல்கிறோம். இன்னும் ஸூக்ஷ்மமாக அலசினா  கடைசியில் வரும் ஆஜ்ஞா சக்ரத்திற்கும் ஸஹஸ்ரார சக்ரத்திற்கும் நடுவிலேயே பன்னிரண்டு ஸ்தானங்கள்  இருக்குன்னு  சொல்லியிருக்கிறது. அவற்றில் உச்சியில் ஜீவ-ப்ரம்ம ஐக்கிய ஸ்தானமாக இருக்கிறது தான்  த்வாதசாந்தம்.

‘த்வாதசாந்தம்’ என்றால்  பன்னிரெண்டுலே  கடைசி.  இது எதுன்னு தந்திர சாஸ்திரங்களில், யோக சாஸ்திரங் களில் உச்சி நிலையாக, மிக  உயர்ந்ததாக  சொல்லி இருக்கிறது மதுரை தான்.   அது தான்   “த்வாதசாந்த க்ஷேத்ரம்” எனப்படுவது.   இந்த  உலகத்தில்  ப்ரம்ம
 ரந்திரத்தில் ப்ரம்மானந்த ஸ்வரூபிணியாக இருப்பவள்  ஸ்ரீ  மீனாக்ஷி, மதுரை ராணி. ”மதுரை ஸ்தலத்தில் இருக்கிற  பெரிய பெரிய கோபுரங்கள்,  ப்ரஹாரம்  எல்லாத்தையும் பார்த்துட்டு  வெள்ளைக் காரர்கள்  பிரமித்துப்  போய்ட்டா.  அப்படி நேர்த்தியாக  எல்லோ ரும் கொண்டாடும் ஆலயம் மீனாக்ஷிக்கு மட்டும் தான்  கிடைச்சிருக்கு.  அங்கே இருக்கிற சிற்பச் செல்வங்க ளுக்குக் கணக்கு வழக்கில்லை. மற்ற க்ஷேத்ரங்களில் ஈஸ்வரன் பேரிலேயே கோவிலைச் சொல்லி அதில் இன்ன அம்பாள் ஸந்நிதி இருக்கிறது என்போம்.  ரொம்பவும் சக்தியோடு, ஜீவகளையோடு பாலாம்பாள், கல்பகாம்பாள், மங்களாம்பாள் முதலிய தேவீ மூர்த்தங் கள் இருக்கிற கோயில்களைக்கூட வைத்யநாத ஸ்வாமி கோவில் (அல்லது முத்துக் குமார ஸ்வாமி கோவில்) , கபாலீச்வரர் கோவில், கும்பேச்வர ஸ்வாமி கோவில் என்றுதான்   ஈஸ்வரன் பேரைச் சொல்லி   அடையாளம் சொல்கிறோம். 

ஆனால் மதுரையில் மட்டும் ஸுந்தரேச்வரர் கோவில் என்று சொல்வதில்லை.   மீனாக்ஷியம்மன் கோவில்னு தான் சொல்றோம். அங்கேதான் ஸுந்தரேச்வரர், சொக்கேசர்,  அறுபத்துநான்கு திருவிளையாடல்கள் பண்ணியிருக்கிறார். ஸுந்தரேச்வரரை ஸ்தோத்திரம் பண்ணி, விபூதி மஹிமையாலேயே ஞான ஸம்பந்தர் பாண்டிய ராஜாவின் வெப்பு நோயைத் தீர்த்து, அதுவரை ஜைனனாக இருந்த அவனை சைவனாக்கினார். இப்படி நம் தேசத்தில் மறுபடி வைதிக மதம் நன்றாக ஸ்தாபித மாவதற்கே ஸுந்தரேச்வரர் தான் காரணமா யிருந்தி ருக்கிறார். ஆனாலும் அவர் பெருமையை எல்லாம் ஒன்றுமில்லை என்று பண்ணிக்கொண்டு அம்பாள் மீனாக்ஷியே அங்கே முக்யமா யிருக்கிறாள். மீனாக்ஷி யம்மன் கோயில் என்றே சொல்கிறோம்.

காஞ்சி  மண்டலத்தில்  இருக்கிற  ஈஸ்வரன் கோவில்கள் எல்லாத்திலேயும்,  எதிலும் அம்பாள் ஸந்நதியே இல்லா மல் இருக்கிறது. அதற்கு எதிர்  வெட்டாக அம்பாள் மட்டும் ஈஸ்வரன் இல்லாமல் காமாக்ஷி கோவிலில் இருக்கிறாள்! அ தனால் அதைக் காமாக்ஷியம்மன் கோவில் என்கிறோம்.  இதில்  ஒரு ஆச்சரியமுமில்லை.
சைவாகமங்களின்படி ஈஸ்வரனின் ஆலயமாகவே உள்ள மதுரையில் ‘மீனாக்ஷியம்மன் கோவில்’ என்று பெயர் ஏற்பட்டிருப்பதுதான் விசேஷம்!

ஜம்புகேச்வரத்தில் அகிலேண்டேஸ்வரி ஆலயம் என்று சொல்கிற வழக்கம் இருந்தாலும், ஊருக்கே ‘ஜம்பு கேச்வரம்’ என்பதாக ஸ்வாமி பெயர்தான் ஏற்பட்டி ருக்கிறது!

மீநாக்ஷியை ஆதி காலத்திலிருந்து அநேக மஹான்க ளும் கவிகளும் ஸ்தோத்திரம் பண்ணி இருக்கிறார்கள்.
‘ச்யாமளா தண்டகம்’என்று காளிதாஸன் செய்திருக்கிற பிரஸித்த ஸ்துதியில் சொன்ன ச்யாமளாதான் மீனா க்ஷி. ச்யாமளா, மாதங்கி, மந்த்ரிணி என்றெல்லாமே மந்திர தந்திர சாஸ்த்ரங்களில் மீனாக்ஷிக்குப் பேர். ஸங்கீதத்துக்கு அதிதேவதையாக எப்போதும் மாணிக்க வீணையை மீட்டிக் கொண்டிருக்கிறவள் அவள். கானாம்ருதத்தாலேயே மோக்ஷாம்ருதத்தை ஸாதித்துத் தருகிறவள்.

குறிப்பாக “ச்யாமளா தண்டக”த்தில்
மாதா மரகத ச்யாமா மாதங்கீ மதசாலிநி | குர்யாத் கடாக்ஷம் கல்யாணீ கதம்பவநவாஸிநீ ||
என்று வருகிறது. மரகதப் பச்சையாக ஜ்வலிக்கிற மீனாக்ஷியைச் சொல்கிறது. ‘கதம்ப வனம்’ என்பதுதான் மதுரை. ‘கடம்ப வனம்’ என்று தமிழில் சொல்றோம்.  “ஓங்கார பஞ்ஜர சுகீம்” என்று ஆரம்பிக்கிற ‘நவரத்ன மாலிகை’யிலும் அம்பிகையை ஸங்கீத தேவதை யாகத்தான் காளிதாஸன் வர்ணித்திருக்கிறான். “ஓங் காரம் என்ற கூட்டிலிருக்கும் கிளி” என்று அம்பிகை யை வர்ணிக்க ஆரம்பிக்கிறான். மதுராபுரியில் மீனாக்ஷி வீணாதாரிணியாக இல்லாமல், கிளியைத்தான் கையில் வைத்துக் கொண்டிருக்கிறாள்!

‘மீநாக்ஷி பஞ்சரத்னம்’ என்று  ஆதி சங்கர  ஆசார்யா ளும் பண்ணியிருக்கிறார்.

”பாதி மாதுட னாய பரமனே  ஞால நின்புக ழேமிக வேண்டும் – தென் ஆல வாயில் உறையும் எம் ஆதியே”
என்று ஞானஸம்பந்தர் ஈஸ்வரனைப் பாடுகிறபோதுகூட ‘பாதிமாது’ என்று முதலில் ஈஸ்ரவனுடைய அர்த்தாங்க னாவாக இருக்கிற அவளைத்தான் சொல்லியிருக்கிறார்.

இப்படிப் நிறைய  கவிவாணர்கள் அம்பாளைப் பாடியிருக்கிறார்கள். குமரகுருபரர் ‘மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்’ என்று, ஸாக்ஷாத் ஜகன்மாதாவைக் குழந்தையாக வைத்து  துதிப்பாடல்கள் பண்ணி இரு க்கிறார்.  அதை  மீனாக்ஷி  கோவிலிலேயே அரங்கேற் றம் பண்ணினார்கள். அப்போது ஆட்சி செய்து கொண்டிருந்த திருமலை நாயகரின் அக்ராஸனத்தில் அரங்கேற்றம் நடந்தது. குமரகுருபரர் பாட்டுகளைச் சொல்லிக் கொண்டு வரும்போதே திடீரென்று அங்கே அர்ச்சகருடைய பெண் குழந்தை வந்து, திருமலை நாயகரின் கழுத்தில் போட்டுக்கொண்டிருந்த முத்து மாலையைக் கழற்றிக் குமரகுருபரரின் கழுத்திலே போட்டுவிட்டதாம். ‘இதென்னடா, இந்தப் பெண் இப்படிப் பண்ணுகிறது?’ என்று எல்லோரும் பிரமித்துப் போயிருக் கும்போது அந்தப் பெண் அப்படியே கர்ப்பக்ருஹத் துக்குள் போய் அந்தர்தானமாகி விட்டதாம்!
அப்போதுதான் எல்லோருக்கும் மீனாக்ஷியே இந்த ரூபத்தில் வந்து குமரகுருபரருக்கு பஹுமானம் பண்ணிவிட்டுப் போயிருக்கிறாள் என்று தெரிந்தது.

தமிழில் ‘அங்கயற் கண்ணி’ என்று அம்பாளைச் சொல்வார்கள். ‘அம்’ என்றால் அழகிய, ‘கயல்’ என்றால் மீன். மீன் போன்ற அழகிய கண்ணுள்ளவள், மீனாக்ஷி என்று அர்த்த்ம். ‘அங்கச்சி, அங்கச்சி’ என்றே மதுரையில் எந்தப் பெண்ணையும் கூப்பிடுவது இதனால்தான்.

மஹா பெரியவா  மீனாக்ஷி  வைபவத்தை சொல்வது இன்னும் இருக்கிறது.  அடுத்த பதிவில்  இடுகிறேன். ரொம்ப நீளமாக  பதிவு ஓடிவிடுகிறதல்லவா?

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1426

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *