KALIYUGAM – J K SIVAN

ஸ்ரீ மத் பாகவதம் – நங்கநல்லூர் J K SIVAN

”கலி காலம்,கலியுகம், எப்படி இருக்கும்?- சுக ரிஷி கணிப்பு”

கலியுகத்தில் சில நல்ல சேதிகளும் காதுக்கும் கண்ணுக்கும் கிடைக்கிறது. நமது பூமியை நாம் பூகோள புத்தகத்தில் கோடுகளாக பார்த்திருக்கிறோம், வரைபடங்கள் எனும் MAP இது தான் இந்தியா, ரஷ்யா அமேரிக்கா ஆஸ்திரேலிய கண்டங்கள் என்று வர்ணம் அடித்து காட்டுவது தெரியும். பூமி உருண்டை என்பதை சொல்லிக் கேட்டிருக்கிறோம். பூமியில் இருந்து கொண்டே பூமி உருண்டையாக நீளமாக ஆகாசத்தில் தெரிவதை நாம் பார்த்ததுண்டா? இதோ இப்போது சந்திராயண விண்கலம் நமக்கு எவ்வளவு துல்லியமாக காட்டி இருக்கிறது. நிறைய தங்கப்பாறைகள் இருக்கிறதாம். GRT அங்கே போய் தங்க நகை கடை வைக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை போலிருக்கிறது. நாமும் இன்ஸ்டால்மென்டில் தங்கம் வாங்கலாம். இப்படிப்பட்ட கலிகாலத்தை நன்றாக யோசித்து சுகப்பிரம்ம ரிஷி பரீக்ஷித் மகாராஜாவுக்கு சொல்வதை தான் நாம் ஸ்ரீமத் பாகவதத்தில் படிக்கிறோம்.

श्रीशुक उवाच ततश्चानुदिनं धर्म: सत्यं शौचं क्षमा दया । कालेन बलिना राजन् नङ्‌क्ष्यत्यायुर्बलं स्मृति: ॥12.2.1 ॥
śrī-śuka uvāca tataś cānu-dinaṁ dharmaḥ satyaṁ śaucaṁ kṣamā dayā kālena balinā rājan naṅkṣyaty āyur balaṁ smṛtiḥ

பரீக்ஷித் ராஜாவுக்கு அவனது வாழ்வின் கடைசி ஏழு நாட்களில் எத்தனையோ விஷயங்களை சொல்கிறார் சுக ப்ரம்மம். அதில் அவர் அவனுக்கு பிறகு இந்த உலகம் கலியுகத்தில் எவ்வாறு இருக்கும் என்று தனது ஞான த்ரிஷ்டியால் கவனித்து சொல்வது நமது இன்றைய நிலைமையை தான். ஆஹா எப்படித்தான் இவ்வளவு கன கச்சிதமாக சுக ப்ரம்ம ரிஷி முன்கூட்டியே ஆணி அடித்தது மா திரி சொல்கிறார்! இந்த ருசிகரமான தகவலை தெரிந்துகொள்ளவேண்டாமா? ஸ்ரீமத் பாகவதத்தில் 12வது காண்டம் 2வது அத்தியாயத்தில் இதெல்லாம் அப்பட்டமாக இருக்கிறது.

”பரீக்ஷித், மதம், சத்யம், சுத்தம், பொறுமை, கருணை, இரக்கம், வாழ்வின் அளவு, தேக பலம், , ஞாபக சக்தி எல்லாமே கலியுகத்தில் குறைந்து போகும். அது கலி புருஷனின் சக்தி.

वित्तमेव कलौ नृणां जन्माचारगुणोदय: ।धर्मन्यायव्यवस्थायां कारणं बलमेव हि ॥ २ ॥ 12.2.2
vittam eva kalau nṝṇāṁ janmācāra-guṇodayaḥ dharma-nyāya-vyavasthāyāṁ kāraṇaṁ balam eva hi

கலியுகத்தில் எல்லோரும் பணம் ஒன்றை தான் மதிப்பார்கள். பணம் உள்ளவன் தான் சிறந்த குலத்தில் உதித்தவன், காசே தான் கடவுளடா பாட்டு எங்கும் கேட்கலாம். காசுள்ளவன் தான் நல்லவன், அருமையான குணம் படைத்தவன். நேர்மை, நீதி, நாணயம் எல்லாம் அவன் பக்கம் தான் பேசும். நீதி அவன் பக்கம் பேசுவதை தான் இப்போது கண்கூடாக பார்த்து, படித்து அதிசயிக்கிறோம்.

दाम्पत्येऽभिरुचिर्हेतुर्मायैव व्यावहारिके ।स्त्रीत्वे पुंस्त्वे च हि रतिर्विप्रत्वे सूत्रमेव हि ॥ ३ ॥12.2.3
dāmpatye ’bhirucir hetur māyaiva vyāvahārike strītve puṁstve ca hi ratir vipratve sūtram eva hi

தேகத்தின் மேல் உள்ள ஆசை தான் ஆண் பெண்ணை தம்பதியாக்கும். ஏமாற்றுவது தான் சிறந்த புத்திசாலித்தனம் என்று வியாபாரம் நடக்கும். ஆணும் பெண்ணும் உடல் கவர்ச்சியால் தான் மதிக்கப்படுவார்கள். வெறும் பூணல் கயிறை, நூலை மாட்டிக்கொண்டவன் பிராமணன் என்று அறியப்படுவான்.

लिङ्गमेवाश्रमख्यातावन्योन्यापत्तिकारणम् । अवृत्त्या न्यायदौर्बल्यं पाण्डित्ये चापलं वच: ॥12.2.4
liṅgam evāśrama-khyātāv anyonyāpatti-kāraṇam avṛttyā nyāya-daurbalyaṁ pāṇḍitye cāpalaṁ vacaḥ

கலிகாலம் மனிதனின் மனம் குரங்கு என்பதை நிரூபிக்கும். பக்தி ஊசலாடும். ஒருவனின் பக்தி அவன் மனநிலையை, நம்பிக்கையைப் பொறுத்தது. அது ஒருநாள் சிவன் உலகிலேயே உயர்ந்த தெய்வமாக வழிபட வேண்டியவர் என்று நினைக்கும். பத்து நாள் கழித்து வேறே ஒருவர் விஷ்ணு மஹாத்ம்யம் சொன்னதை கேட்டு இனிமேல் நமக்கு ஒரே தெய்வம் மஹா விஷ்ணுவே, இந்த சுடுகாட்டு சாம்பல் சிவன்இல்லை என்று சிவ வழிபாட்டை நிறுத்த வைக்கும். ரெண்டு நாள் தான் இது. யாரோ ஒரு சிலர் சாமர்த்தியமாக பேசுவதைக் கேட்டு அம்பாள் சக்தி தான் சிறந்த தெய்வம் என்று பேசும். அப்புறம் கிருஷ்ணன் தான் பெஸ்ட் BEST என்று சொல்லும். அவ்வளவு தான் ஒரு வாரம் கூட ஆகியிருக்காது. யாரோ சொல்வார் கிருஷ்ணன் புல்லாங்குழல் படம் வீட்டில் இருக்கக்கூடாது. நரசிம்மர் வேண்டாம் என்றெல்லாம். இதெல்லாம் மனதில் தோன்றும் சாதக பாதக சமாச்சாரங்கள். இதற்கு முக்கியம் வேண்டாம்.
உனக்கு எந்த உருவத்தில் நம்பிக்கையோ அதில் நான் இருப்பேன் என்கிறான் கிருஷ்ணன். சரியாக நமது மகோன்னதமான கோட்பாடுகளை புரிந்து கொள்ளாததால் வேறு மதங்களில் ஈர்ப்பு உண்டாகிறது. யாரும் சரியாக நமது சனாதன தர்மத்தை அறியாமலும் யாரிடமும் கேட்டு ஞானம் பெறாததாலும் இந்த சங்கடம். அடிக்கடி நமது மேன்மையான கோட்பாடுகளை உணர்த்திக் கொண்டே இருக்கவேண்டும். அதற்காக தான் திரும்ப திரும்ப சொன்னதையே நானும் மீண்டும் மீண்டும் எழுதிக் கொண்டே இருப்பது. பலபேர் பலமுறை படிக்கட்டும், அல்லது சிலர் ஒருமுறையாவது படிக்கட்டும்.. தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளட்டும். தெரிந்தவர்கள் மறக்காமலிருக்கட்டும் என்பதற்காக.

சுக ப்ரம்ம ரிஷி தீர்க்க தரிசி. கலியுகத்தில் எப்படி மக்கள் இருப்பார்கள், வாழ்க்கை எவ்வாறு நடக்கும் என்று நன்றாக அறிந்தவர. இன்னும் எழுநாளில் சாகப்போகும் பரிக்ஷித்துக்கு கலிகாலம் எப்படி இருக்கும் என்று எதற்கு தேவை? இருந்தாலும் அவர் அவனுக்கு சொல்வது நமக்காக சொல்லப்பட்ட சமாச்சாரம்.

கலியுகத்தில் வார்த்தை ஜாலங்கள், பொய்யில் கோட்டை கட்டுபவன், சிறந்த கல்விமானாக அறிஞனாக, கலைஞனாக, கவிஞனாக கெட்டிக்காரனாக மதிக்கப்பட்டு, மரியாதை பெற்று, கை தட்டப்படுவான். வெறும் வேஷதாரி, ஞானியாக, பக்திமானாக காட்சி அளிப்பான். காசு பண்ணுவான்.

எவ்வளவு தான் யோக்கியனாக, நாணயமாக, நேர்மையாக இருந்தாலும் காசில்லாதவன் நிராகரிக்கப்படுவான். அவனுக்கு சமூகத்தில் அந்தஸ்து பெருமை இருக்காது. இதனால் தான் வாயுள்ள பிள்ளை பிழைக்கும் என்ற பழமொழி உருவானதோ? என்ரூ தோன்றுகிறது மேலே உள்ள சுகப்ரம்மரின் ஸ்லோகம் படிக்கும்போது.

வெறும் வேஷத்தில் தான் ஒருவனை ஆன்மீக வாதி, என்று மதிப்பார்கள். ஒவ்வொருவனும் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு வேஷம் போட்டு வாழ்வான். பணத்தை வைத்து தான் ஒவ்வொருவனையும் எடை போடுவார்கள். வார்த்தை ஜாலத்தால் ஆகாசத்தில் பந்தல் போடுபவர்கள் தான் புத்திசாலிகளாக, சிறந்த அறிஞனாக கருதப்படுவார்கள். அடேயப்பா எவ்வளவு துல்லியமாக சுகப்பிரம்ம ரிஷி 5000 வருஷங்களுக்கு முன்பே இப்போதுள்ள நிலையை அற்புதமாக விவரிக்கிறார். சரியான ப்ரம்ம ஞானி!.

अनाढ्यतैवासाधुत्वे साधुत्वे दम्भ एव तु । स्वीकार एव चोद्वाहे स्न‍ानमेव प्रसाधनम् ॥ ५ ॥12.2.5
anāḍhyataivāsādhutve sādhutve dambha eva tu svīkāra eva codvāhe snānam eva prasādhanam

பணமில்லாதவன் அசுத்தமானவன் என்பார்கள். ஏமாற்று வித்தை நயவஞ்சகம் போன்றவை ஒருவனின் சிறந்த குணமாக ஏற்கப்படும். கல்யாணம் என்பது பேச்சு சாமர்த்தியத்தால் நிச்சயிக்கப்படும். ஒரு பக்கெட் தண்ணியோ, ஐந்தாறு சொம்பு தண்ணீரோ மேலே ஊற்றிக்கொண்டாலே ஒருவன் சமூகத்தில் சுத்தமானவனாக அங்கீகாரம் பெறுவான்.

என்ன நடக்கிறது இங்கே என்பதை சுகர் சொல்கிறார் கேளுங்கள்:
பரீக்ஷித் மஹாராஜா, கலியுகம் என்பது எப்படி இருக்கும், மக்கள் எவ்வாறு நடந்துகொள்வார்கள் தெரியுமா?ஸ்ரீமத் பாகவதம் 12.2. 6 ஸ்லோகம் இது தான்

दूरे वार्ययनं तीर्थं लावण्यं केशधारणम् । उदरंभरता स्वार्थ: सत्यत्वे धार्ष्ट्यमेव हि । दाक्ष्यं कुटुम्बभरणं यशोऽर्थे धर्मसेवनम् ॥ ६ ॥
dūre vāry-ayanaṁ tīrthaṁ lāvaṇyaṁ keśa-dhāraṇam udaraṁ-bharatā svārthaḥ satyatve dhārṣṭyam eva hi
dākṣyaṁ kuṭumba-bharaṇaṁ yaśo ’rthe dharma-sevanam

ஊரைக்கூட்டுற அளவு மூக்கைத் துளைக்கிற சென்ட், பளபள ஜிலுஜிலு பட்டு சட்டை வேஷ்டி, புடவை நகைகள், இதனால் அலங்காரம் செய்தவர்கள் எல்லாம், அழகானவர்களாக அறியப்படுவார்கள். இயற்கையான இன்றெல்லாம் பார்த்துக் கொண்டே இருக்க தோன்றும் சுதந்திர அழகு புறக்கணிக்கப்படும். முரட்டுத் தனமான பொய் நிறைய கலந்த அடாவடி பேச்சு, உண்மை என்று எளிதில் நம்பப்படும். வயிற்றை நிரப்புவது மட்டுமே வாழ்க்கையின் குறிக்கோளாக அமையும். பணத்துக்காக மதம் மாறும் . வெறித்தனமாக மேலே மேலே எல்லோரையும் பிடித்து காசு கொடுத்து ஆட்களை மதம் மாற்றி தமது மதத்தாராக சேர்த்துக் கொள்வதையும், பெருக்கிக் கொள்வதையும் மட்டுமே லக்ஷ்யமாக இருக்கும்.
இப்போது இது அன்றாட சர்வ சாதாரண நிகழ்வு என்பதை நாம் கண்கூடாக இப்போது பார்க்கிறோம். ஆனால் சுகப்ரம்மம் அப்போதே இதை அறிந்திருக்கிறாரே ! (12.2.6)

க்ஷேத்ரம் என்றால் பகவான் அவதரித்த ஸ்தலம், புண்ய காரியங்கள் நடந்த இடம், பல மஹான்கள் சஞ்சரித்த, அவதரித்த, வாழ்ந்த இடம், சில நல்ல பலன்களை கொடுக்கும் ஸ்தலம் என்பதெல்லாம் ஏனோ கலிகாலத்தில் நமக்கெல்லாம் மறந்து விடும், எல்லாம் போகப்போக மறைந்தும் விடும். எங்கோ ஒரு இடத்தில் பூமியில் பள்ளத்தில் சற்று நீர் நிறைந்திருந்தால் அந்த குட்டை தான் புனித ஸ்தலம், க்ஷேத்ரம் என்று கலியுகத்தில் மக்கள் நம்பி மகிழ்வார்கள். இது அவர்கள் தப்பில்லை. இப்படி கொஞ்சம் கொஞ்சமாகி அழிவை நோக்கி நாம் நகர்ந்துகொண்டிருக்கிறோம் என்பதன் ஆதாரம்.

அழகு என்பது சாமுத்திரிகா லக்ஷணம் இல்லை. ஒருவன் தலைமுடி ஸ்டைல் எப்படி இருக்கிறதோ அது தான் அழகு என்ற நிலை வந்துவிடும். இப்போது MKT பாகவதர் கிராப் யாராவது அழகு என்று ஒப்புக் கொள்வார்களா? யாராவது கிருஷ் ணன், ராமன் மாதிரி நீளமாக தலைமுடி வளர்த்துக் கொண்டு மயில் இராகு செருகிக் கொள்வோமா? ஒரு காலத்தில் கை ரிக்ஷா இழுத்துக்கொண்டு போகிறவன், குதிரை வண்டி ஓட்டுபவன் கூட MKT பாகவதர் மாதிரி தலை முடி வளர்த்து ”மன்மத லீலையை” பாடிக்கொண்டு போவதை நானே சிறுவபதில் கோடம்பாக்கத்தில் பார்த்திருக்கிறேன். இப்போது யாரிடமாவது பாகவதர் படம் வீட்டில் இருக்கிறதா? எவனாவது அவர் பாட்டை பாடுகிறானா? அவர்போல் ஜில்பா, கடுக்கன், அங்கவஸ்திரம், ஜவ்வாது பொட்டுடன் திரிவானா? ஊரே அவனைக் கேலியாக பார்க்காதா?? இது தான் கலி முற்றிக்கொண்டே வருவதன் அடையாளம்.

அமெரிக்காவில் புதுப் புது HAIR ஸ்டைல். ஏன் நாம் பார்க்கும் IPL விளையாட்டுகளில், ஒலிம்பிக் விளையாட்டுகளில் பங்கேற்கும் சில வீரர்கள், வீராங்கனைகள் தலைகாலை சிகை அலங்காரத்தை பார்க்கும்போதே பொட்டுக்கூடை தகவல் அது சொல்ல வில்லையா? அதற்கென்றே நிறைய பணம் செலவு செய்து நம் வீட்டு பிள்ளைகள் தலையை அப்படி அலங்கரித்துக் கொண்டு வந்து, வீட்டில் தாத்தா பாட்டிகளிடம் சாபம் வாங்குவது தெரியாதா? சமீபத்தில் கரோனா சமயத்தில் பலர் தலைகள் முகங்கள் எல்லாமே ரிஷிகள் தலைகளாக காணபட்டாலும் இன்னும் அப்படியே இருக்கிறார்களே. தாடி குடுமி இல்லாத பையனை பார்க்கமுடிகிறதா? அப்படியே ஒருவேளை நிலைத்துவிடுமோ? அப்படித்தான் தோன்றுகிறது. அட கலிகாலமே !

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1426

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *