KALA BAIRAVAR – J K SIVAN

கால பைரவர் –   நங்கநல்லூர்   J K SIVAN ஆனந்த பைரவர்.
சிவபெருமானை பிரிந்த ஆதி சக்தி பிரம்மாவின் மானசீக குமாரனான பிரஜாபதி   தக்ஷனின்  மகளாக பிறக்கிறாள். அவள் பெயர் அதனால் தான்  தாக்ஷாயினி, சதி தேவி  ஆனது.  பருவ வயதில் சிவபெருமானின் மீது காதல் கொண்டு, தந்தை தக்ஷனின் விருப்பமின்றி சிவ பெருமானை திருமணம் செய்து கொள்கிறாள். ஆணவம் கொண்டிருந்த பிரம்ம தேவரின் தலையைக்  கொய்து பூவுலகில்  பூஜையின்றிப்  போக சாபம் அளித்த மையினால் சிவபெருமான் மீது பிரம்ம குமாரனான தக்ஷனுக்கு  கோபம்.  ஆகவே  சிவபெருமான் தாக்ஷாயினி  இருவரையும்  மதிக்காமல், அழைப்பு அனுப்பாமல் யாக மொன்றை தக்ஷன்  தொடங்குகிறான். . தனது கணவன் பரமசிவனை தக்க மரியாதையோடு அழைக்காத காரணத்தால் தந்தை மூட்டிய அந்த யாகத்தீயில் சதிதேவி விழுந்து இறக்கிறாள்.

விஷயம் சிவபெருமான் காதில் எட்டுகிறது. கடும் கோபத்தோடு சிவன் சதிதேவியாரின் பூத உடலோடு அலைவதைக் கண்ட திருமால், சிவபெருமானை அந்த மாயையிலிருந்து அகற்றுவதற்காக சக்ராயுதத்தினால் திருமால் அவ்வுடலை தகர்த்தார். சதி தேவியாரின் உடல்கள் பல்வேறு பாகங்களாக பூமியில் சிதறுண்டது. அவ்வாறு சிதறு ண்ட சதிதேவியின் உடல் பாகங்களை சிவபெருமான்  51  சக்தி பீடங்களாக உருவாக்குகிறார்.  தாராகாசுரன் போன்ற அரக்கர்களிடமிருந்து சக்தி பீடங்களையும், அங்குவரும் பக்தர்களையும்  காக்க ஒவ்வொரு சக்தி பீடத்திற்கும் ஒரு பைரவரை காவல் தெய்வமாக நியமனம் செய்தார்.

குத்தாலம் என்றவுடனே இந்த கோடையில் ஜிலுஜிலு என்ற நீர்வீழ்ச்சி நினைவுக்கு வந்தால் நான் சொல்லும் கோவிலை அங்கே காணமுடியாது.   அது குற்றாலம், இது  குத்தாலம்.   தஞ்சாவூர் ஜில்லா வில் இருக்கிற ஊர். அதிலிருந்து ரெண்டு கி.மீ. தூரம் சென்றால் ஒரு சின்ன கால பைரவ க்ஷேத்ரத்தை காணலாம். அந்த ஊருக்கே க்ஷேத்ரபாலபுரம் என்று பெயர்.   கோமல் ரோடு பஸ் நிறுத்தத்தில் இறங்கி, அங்கிருந்து 100 மீட்டர் தூரம் நடந்து சென்றால் கோவில் வரும். கும்பகோணத்தில் இருந்து சென்றால் மயிலாடுதுறை யிலிருந்து  28 கி.மீ. .
ஊருக்கே பிரதானம்  கால பைரவர் கோயில் தான்.  ஆனந்த காலபைரவர் என்று பெயர். பைரவர் என்றாலே  கோபம் பொங்கும்  உக்ரமானவர் என்று நமக்கு தெரியும். ஆனால் க்ஷேத்ரபாலபுரத்தில் அவர் ஆனந்தமாக இருக்கிறார்.  அதற்குக்  காரணம் இங்கே தான் அவருக்கு பிரமனின் ஐந்தாம் சிரத்தைக்  கொய்த ப்ரம்மஹத்தி தோஷம் நீங்கியது .  முதலில் சிவனைப் போலவே பிரம்மாவுக்கும் ஐந்து தலை. தானும் சிவன் போலவே என்று  கர்வத்தில் சிவனை அலட்சியம் செய்த ப்ரம்மாவின் ஐந்தாம் தலையை  பைரவர் கொய்ததால்  ப்ரம்மஹத்தி தோஷம் பிடித்து இந்த ஆலயத்தில் தான் அது நீங்குகிறது.

பைரவருக்கு என்றே தனியாக உள்ள கோவில் இந்த தேசத்திலேயே இந்த சின்ன க்ஷேத்ரபால கிராமத்திலே தான். மேற்கே பார்த்த ஆலயம். ஸ்வேத விநாயகர் இருக்கிறார். பைரவர் நான்கு கரங்களில் கபாலம், சூலம், பாசம், டமருகம் எல்லாம் ஏந்தி நிற்கிறார். பைரவரைப் பார்த்தபடி நந்தி தேவர்.

பைரவர் தனது ப்ரம்மஹத்தி தோஷம் நீங்க சிவனை வேண்டியபோது    ”நீ பூலோகம் செல். அங்கே திருவலஞ்சுழி சென்று பிக்ஷை எடு.என்னை நினைத்து வழிபடு” என்கிறார்.

திருவலஞ்சுழி ஒரு அற்புதமான க்ஷேத்ரம். கும்பகோணம், சுவாமிமலை அருகில் இருக்கிறது. இந்திரன் தேரோடு அங்கே வந்து அது புதைந்தது. கல் சிற்பங்கள் நிறைந்த புதைந்த அற்புதமான தேர் அங்கே காணலாம். ஸ்வேத விநாயகர் (வெள்ளை கடல் நுரைப் பிள்ளையார் இன்னும் இருக்கிறார். சென்று காணலாம்) . பைரவர் அங்கே செல்கிறார். வெள்ளைப் பிள்ளையாரை சந்திக்கிறார்.

”கணேசா, நான் உன் தந்தை ஆணைப்படி என் ப்ரம்ம ஹத்தி தோஷம் நீங்க இங்கே வந்துள்ளேன்.   நீ எனக்கு உதவி செய்” .

”பைரவரே, உமது கையில் உள்ள சூலத்தை அதோ அந்த பக்கம் தூக்கி எறியும்” என்கிறார் ஸ்வேத விநாயகர்.
”பைரவர் எறிந்த சூலம் விழுந்த இடம் தான் க்ஷேத்ரபால புரம். அமைதியான சின்ன ஊர்.

” பைரவரே நீங்கள் அந்த கிராமத்துக்கு சென்று தியானம் செய்யும்” என்கிறார் விநாயகர். க்ஷேத்ரபாலகனான காலபைரவர் தங்கிய இடம் ஆகையால் அந்த ஊர் இன்றும் க்ஷேத்ரபாலபுரம் என்று அழைக்கப்படுகிறது.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1426

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *