SOBAKRUTHU – TAMIL NEW YEAR – J K SIVAN

”வா  சோபக்ருது வா. நன்மை செய்”….  நங்கநல்லூர்  J K  SIVAN

விடிந்தால்  புது வருஷம்.  14.4.2023.  புதுசு என்றால் பெரிசுகளுக்கு கூட ஒரு தனி உத்ஸாகம். பழசெல்லாம் நினைத்துப் பார்க்கும். காது கேட்காமல் பல்லில்லாமல் வாய் நிறைய சிரிக்கும்.

ஆம். நாம் எல்லோருமே புதுமை விரும்பிகள். புதுசா துணி, புஸ்தகம், படம், என்பதிலிருந்து ஆட்சிவரை புதியதைத் தேடுபவர்கள். அறுபது வருஷ ப்ரயோஜனமில்லாத அருதப் பழசுக்கு பதிலாக அஞ்சு வருஷ புதுசு தொடர்ந்து இருந்தாலே போதும் என்று புரிந்தவர்கள்.
இதில் என்ன ஒரு சந்தோஷமான விஷயம் என்றால் ஒவ்வொரு பகுதியிலும் வெவ்வேறு மொழி பேசுபவர்கள் நாம் இருக்கிறோம். அந்த ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நாளில் புது வருஷம் வரும்.

நமக்கு நாளை  சித்திரை மாச பிறப்பு.  உத்தராயணம், வசந்த ருது. மேஷ மாசம், கிருஷ்ண பக்ஷம், ப்ருகு வாஸரம்,   வெள்ளிக் கிழமை, நவமி திதி.  உத்ராஷாடா (உத்தராடம்) நக்ஷத்திரத்தில்  நமக்கு  தமிழ் புத்தாண்டு மலர்கிறது.  இந்த வருஷத்தில் பெயர்  சோபக்ருது, அதாவது  அறுபது வருஷங்களில் 37வதாக வரிசையாக திரும்ப திரும்ப வருவது.இந்த வருஷம் எப்படி இருக்குமாம் தெரியுமா?  ஒரு வெண்பா சொல்கிறது:
சோபகிருது  தன்னில்  நெல்லுல கெல்லாம் செழிக்கும்.கோபமகன்று  குணம் பெருகும்- சோபனங்கள்  உண்டாகும் மாறி பொழியாமல் பெய்யுமெல்லாம் உண்டாகும் என்றே யுரை”     – அர்த்தம் புரியும் என்பதால் விளக்கம் தேவையில்லை.  பஞ்சாங்கம் மூலம் அறியும் ருசியான விஷயம்:இந்த சோபகிருது  வருஷத்துக்கு ராஜா  புதன்:  மந்திரி சுக்ரன். சேனாதிபதி வியாழன். தான்யாதிபதி சனி.  மேகாதிபதி வியாழன்.  வருஷ தேவதை:  லக்ஷ்மிநாராயணன்.  பசு நாயகன்: கோபாலன்.  வடமேற்கு திக்கில் வாயு  உற்பத்தியாகி. மழைமேகம் மழை எவ்வளவு கொட்டும் என்று ஒரு அளவு சொல்கிறது: தேவமானத்தால்  100 யோஜனை  உயரம், 60 யோஜனை அகலம் கொண்ட  ஒரு மரக்காலால்  (நெல்லை அளக்கும் படி போன்ற உருவம்) மொத்த மழையை அளந்து   3 மரக்கால் மழை பெய்யுமாம்.   இதில் 10 பாகம் சமுத்திரத்தில், 6 பாகம் மலையில், 4 பாகம்  பூமியிலும் ஜோ என்று மழை பொழியுமாம்.ஏப்ரல் மாதம் வெயில் கொளுத்தும் சமயம்.  தமிழ் புத்தாண்டு அன்று அதிகாலையிலேயே தூக்கம் விழித்து, இந்த சித்திரை மாதம் முதல் தினத்தன்று புத்தாண்டு பிறக்கும் புண்ணிய காலத்தில் உடல் வெப்பம் குறைந்து நோய்கள் தீரவும் தோஷ நிவர்த்திக்காகவும்  நீராடுவது வழக்கம்.  ‘மருந்து  நீரில்’  அனைவரும் குளியலை மேற்கொள்ள வேண்டும்.  மருந்து நீரா? அதை எப்படி செய்வது?ஒரு பாத்திரத்தில் சுத்தமான நீரை ஊற்றி அதில் தாழம்பூ, தாமரைப்பூ, மாதுளம் பூ, துளசி, விஷ்ணுகிராந்தி, , வில்வம், அறுகு, பீர்க்கு, பால், கோசலம், கோமயம், கோரோசனை, மஞ்சள், மிளகு, திப்பிலி, சுக்கு ஆகியவற் றில் சிறிதளவை போட்டு நன்கு காய்ச்சி நீரை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். இது தான் மருந்து நீர். செய்யமுடியாவிட்டால் பரவாயில்லை. குழாயில் தண்ணீர் வந்தால் அதுவே சிறந்த மருந்து.
மஞ்சள் நிறம் என்பது வளமை, தெய்வீகம் மற்றும் நன்மையை குறிக்கும் ஒரு நிறமாக நமது கலாச்சாரத்தில் போற்றப்படுகிறது. எனவே புத்தாண்டு தினத்தில் மேற்கண்ட முறையில் குளியலை முடித்த பின்பு , மஞ்சள் நிறப் பட்டாடை அல்லது மஞ்சள் கரை வைத்த வெள்ளை நிற புதிய ஆடைகளை அணிந்து கொள்வதால் பிறக்கின்ற புத்தாண்டு உங்கள் குடும்பத்தில் வளமையை கொடுக்கும் என்பது ஐதீகம்.மஞ்சள் நிற ஆடை இல்லாவிட்டாலும் புதிய ஆடையில் ஒரு சிறு பகுதியிலாவது மஞ்சள் அரைத்துப் பெற்ற கலவையை பூசி விட்டு அணிந்து நன்மை பெறுவோம்.

பூஜையறையில் பூரண கும்பம், கண்ணாடி, தீபம், போன்றவற்றை வைத்து, இஷ்ட தெய்வம் மற்றும் குல தெய்வ படங்களையும் தரிசித்து வணங்க வேண்டும். வயதில் மூத்தோரான தாத்தா, பாட்டி, தாய், தந்தை மற்றும் இன்ன பிற பெரியோர்களை வணங்கி, அவர்களின் நல்லாசிகளைப் பெற்றுக் கொள்ளுதல் வேண்டும். பிறகு அருகிலுள்ள கோயிலுக்கு சென்று இறைவனை வழிபட வேண்டும்.
மாங்காய் பச்சடி புது வருடத்தின் சிறப்பு அங்கம் என்பது நாம் அறிந்ததே. மாங்காயின் புளிப்போடு சேர்ந்த துவர்ப்பும், வெல்லத்தின் இனிப்பும், வேப்பம்பூவின் கசப்பும், மிளகாயின் காரமும் சேர்ந்த பச்சடி வாழ்வின் பல சுவைகளை நினைவுறுத்தும் வண்ணமாக அமைகிறது. இதனை உண்ணுவதன் மூலம் வாழ்வின் பலவிதமான நிகழ்ச்சிகளையும் ஒரே மாதிரி ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை புது வருட ஆரம்பத்தி லிருந்தே வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதே இதன் கருத்து. மேலும் இதோடு உவர்ப்பு சுவையும் சேரும்போது அது அறுசுவையாகி மகிழ்ச்சியளிக்கிறது.
வருடத்தின் முதல் நாள் போலவே அனைத்து நாட்களும் அறுசுவை நிரம்ப வேண்டும் என்பதற்காகவே அறுசுவை உணவு உண்டு பலவிதமான பட்சணங்களுடன் விருந்தினர்களை உபசரித்தல் புத்தாடை அணிதல், பெரியோரை வணங்கி ஆசி பெறுதல், நமது பாரம்பரிய வழக்கம்.
அன்று எல்லோருமே மொத்தத்தில் வீடுகளை சுத்தமாக்குவார்கள். பழசு வெளியேறும். புது துணிகள் மாவிலை, தென்னை ஓலை தோரணங்கள். குடி என்றால் பொம்மை. மரப்பாச்சி யாக கூட இருக்கலாம். வீட்டு வாசலில் மூங்கில் பொம்மைகள் வேப்பிலை அலங்காரம் பண்ணி நிறைய தொங்கவிடுவார்கள். குளிக்காதவர்கள் கூட காலையிலேயே குளித்து எண்ணெய் தடவி தலை வாரி நெற்றிக்கு எது வழக்கமோ அதை பூசி நிறைய பேர் புதுவருஷ பஞ்சாங்கம் அந்தந்த பாஷையில் படிப்பதை கேட்க போய்விடுவார்கள். சாயந்திரம் கேளிக்கைகள், டான்ஸ். கூத்து கும்மாளம், சாப்பாடு.

துன்பம், கசப்பான நிகழ்ச்சிகள் போக வேப்பம்பூ வெல்ல பச்சடி. வேப்பம் பூ துயரத்தையும் வெல்லம் சந்தோஷத்தையும் சேர்த்து அனுபவித்ததை நினைவூட்ட. பச்சை மிளகாய் கோபம். உப்பு : பயம் . புளி : அருவருப்பு. அரை பழுத்த மாங்காய் : ஆச்சர்யம் இதெல்லாம் சேர்ந்தது தானே மனித வாழ்க்கை.

இந்த சமயத்தில்  மஹா பெரியவா எனும் பேசும் தெய்வத்தை, மனம் நினைக்கிறது…..
”மஹா பெரியவா, எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. ஒரு தமிழ் புத்தாண்டு அன்று உங்களை தரிசித்தபோது எனக்கு உங்களோடு பேசும் பாக்யம் கிடைத்தது. நான் யார் என் பூர்வோத்தரம், என் தாய் வழி பாட்டனார் உங்களிடம் ”புராண சாகரம் ” என்ற   விருது பெற்றது எல்லாம் சொன்னேன்.
”அவரை ஞாபகம் இருக்கு, புரசவாக்கம் வசிஷ்டபாரதி பேரனா நீ ? ராமாயணம் புராணங்களில் அசாத்திய ஞானம் ” தமிழ்க் கடல் அவர். ”
பெரியவா எனக்கு பிரசாதம் தந்தபோது நான் அடைந்த சந்தோஷம் எழுத முடியாதது. தமிழ் தந்த பாக்யம். அருணாசல கவிராயரின் ராம நாடக கீர்த்தனைகளை பாடி வளர்ந்தது எங்கள் தாத்தா  குடும்பம். வடமொழியிலும் தேர்ச்சி. குடும்பத்தில் எல்லோருக்கும் ராமன் பெயர்…. அந்த தமிழ் எனக்கும் பெருமை சேர்த்தது. நிறைய எழுத வைத்தது. அது தொடர்கிறது….

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1426

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *