CHANDRASHTAM EFFECTS – J K SIVAN

சந்திராஷ்டமமா?  அப்படியென்றால்??  –   நங்கநல்லூர்   J K  SIVAN

வீட்டில்  அடிக்கடி அப்பா  அம்மா, அத்தை, பெரியம்மா, சித்தி தாத்தா பெரியப்பா சித்தப்பா போன்றவர்கள்  பேசும் ஒரு வார்த்தை  காதில் விழுந்தது நினைவிருக்கிறது. நான் சொல்வது இப்போதிருக்கும் அம்மா அப்பா  இத்யாதிகள் இல்லை.  எங்கள் கால  அப்பா அம்மாக்கள். அதாவது குறைந்தது 30 வருஷங்களுக்கு முன்பாவது இருந்த காலம்.  ”அந்த பிள்ளையாண்டானுக்கு  சந்திராஷ்டமம் இருக்கா  பார்த்தீளா”?  அதென்ன  சந்திராஷ்டமம்?  இப்போதுள்ள பெற்றோருக்கு தெரியாது, தெரிந்துகொள்ள விருப்பமும் இல்லை, தேவையில்லாத ஒன்று என்று நினைக்கிற காலம்.

சந்திராஷ்டமம் என்பது  ஒவ்வொருவருடைய ஜாதகத்திலும் ஜென்ம ராசிக்கு எட்டாமிடத்தில் சந்திரன் நிலைபெறும் காலமான இரண்டே கால் நாட்களாகும். சந்திரன் என்பது கோசார சந்திர கிரஹம்.  அஷ்டமம் என்பது எட்டாமிடம் என்று பொருள்படும்.   உதாரணமாக அசுவினி நட்சத்திரத்தில் பிறந்திருந்தால் அவரது ஜென்ம ராசி மேஷம். மேஷத்திற்கு எட்டாம் ராசியான விருச்சிகத்தில் சந்திரன் சஞ்சரிக்கும் நாள் மேஷ ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் ஆகும்.

இது ஒவ்வொருநாளும்  சந்திரனின் சுழற்சி காரணமாக ஏற்படும் தோஷமாகும்.  உதாரணமா  என்னை எடுத்துக் கொள்ளுங்கள்.  எனக்கு  விருச்சிக  ராசி ஜென்ம ராசி என்று வைத்துக் கொள்வோம்.  அனுஷம் ஜென்ம நட்சத்திரம் என்றும் அமைந்துள்ளது என்றால், விருச்சகத்திற்கு எட்டாம் ராசியான மிதுன ராசியில் சந்திரன் சஞ்சரிக்கும் காலம்  என்னைப்போன்ற விருச்சிக  ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் ஆகும்.
மிதுன ராசியில் மிருகசீரிடம் 1, 2, பாதங்கள், திருவாதிரை 1, 2, 3, 4 பாதங்கள் மற்றும் புனர்பூசம் 1, 2, 3 ஆகிய மூன்று நட்சத்திங்கள் (ஒன்பது பாதங்கள்) உள்ளன.

மற்றொரு கணித முறையில் குறிப்பிட்ட ஜாதகரின் ஜென்ம நட்சதிரத்தில் இருந்து சரியாக  எண்ணி 17 ஆவது நட்சத்திரம் முதல் உள்ள காலம் சந்திராஷடமம் ஆகும். இது ஒரு துல்லியமான கணக்கீட்டு முறை என்று கருதப்படுகிறது.

சந்திரனின் காரகத்துவம்  என்பது ஒருவருடைய ஜாதகப்படி நடக்கும் தசாபுத்தி காலங்களிலும், கோசார காலங்களிலும் கிரகங்கள் அளிக்கும் பலன்கள் செயல்படுவது.     சந்திரனை மனோகாரகன் என்றும் போக்குவரத்துகளுக்கு காரகன் என்றும் சோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன. எனவே மனோகாரகன் எட்டில் மறையும்போது மன உளைச்சல்களையும், பொறுமையின்மை, ஆத்திரம், எரிச்சல், கோபம் போன்ற எதிர்மறை குணங்களையும் தருகிறார். இக்காலங்களில் வாகனங்களில் செல்லும் போது கவனமாக செல்ல வேண்டியதும் அவசியமாகிறது.
சுபமான நிகழ்வுகளை சந்திராஷ்டம காலங்களில் நடத்தும் வழக்கம் கிடையாது.   இக்காலங்களில் முக்கிய முடிவுகளை எடுக்காமல் ஒத்தி வைக்கலாம். கடன், கொடுக்கல் வாங்கல்களை, தவிர்க்கலாம். பேச்சைக் குறைத்து இறைவனை மனதில் வழிபட்டு தியானித்தல் நல்ல பலன்களைத் தரும்.     அன்றைய தினம் மறதி காரணமாக அலைச்சல், காரிய தோல்வி, வாக்குவாதம் போன்றவை ஏற்படலாம் என்பதால் முக்கிய காரியங்களை தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. சந்திராஷ்டமத்தில், மறதி ஏற்படுவது கண்கூடாகத் தெரிகிறது. மற்ற பல விஷயங்கள் மறதியின் விளைவாக சிலருக்கு ஏற்படலாம். உதாரணமாக அலுவலகம் செல்லும் போது வீட்டில் எதையாவது மறந்து விட்டுச் சென்றுவிட்டு பின் தேடி திரும்ப அலையும் நிலை, அதனால் வீட்டிலோ அலுவலகத்திலோ சில சமயம் சிக்கல்கள் நிகழ்வதுண்டு.
போக்குவரத்துகளுக்கு காரகன் சந்திரன், மேலும் வாகனம் என்று பார்க்கும் போது சுக்கிரனுக்கு அடுத்து கவனிக்கப்பட வேண்டியவர் வாகனம் இயக்குவதற்கான காரகர் சந்திரனே. எனவே வாகனங்களில் செல்லும் போது கவனமாக செல்ல வேண்டியது அவசியமாகிறது.

தெளிவாக, பாதிப்புகள் என்று பார்த்தால் லக்கினத்திலிருந்து சந்திரனின் ஆட்சி வீடான கடகம் எத்தனையாவது வீடோ, அதற்குண்டான காரகங்களில் பாதிப்புகள் ஏற்படலாம். உதாரணமாக மிதுன லக்கினக்காரர்களுக்கு சந்திரன் தன, வாக்கு, குடும்பாதிபதி. இவர்களுக்கு சந்திராஷ்டமம் என்றால் பேசும்போது கவனமாக இருக்கலாம், முக்கியமான கொடுக்கல் வாங்கல்களை தவிர்க்கலாம், குடும்பத்தில் முக்கிய முடிவுகள் எடுக்காமல் இருக்கலாம், கையேந்தி பவன்களில் கண்டதை சாப்பிடாமல் இருக்கலாம்.

வழக்கமான ராசிபலன் போன்றது தான் இது. சிலருக்கு அனுபவத்தில் ஒத்து வருவதில்லை. ஆயினும் சுப காரியங்களை சந்திராஷ்டம தினத்தில் நடத்துவது வழக்கமல்ல, நல்லதல்ல. வழக்கமான காரியங்களையும், முன் கூட்டியே முடிவு நிச்சயிக்கப்பட்ட செயல்களையும் தாராளமாக செய்யலாம்.
சந்திரன் லக்கினத்திற்கு 6 அல்லது 12ல் அமையப் பெற்றவர்களுக்கு சந்திராஷ்டமம் குறிப்பிடத்தக்க எந்த விளைவுகளையும் ஏற்படுத்துவதில்லை. மாறாக பலருக்கு நல்ல முறையில் நிகழ்வுகள் நடைபெறுகின்றன.
ஜாதகத்தில் 8 இல் சந்திரன் அமைந்திருந்தாலும் சந்திராஷ்டமம் பெரிய விளைவுகளை ஏற்படுத்தாது என்று சிலர் கூறுகின்றனர், ஆனால் நடைமுறையில் ஒத்து வரவில்லை. இவர்களுக்குத்தான் பாதிப்பு குறிப்பிடத்தக்க வகையில் ஏற்படுகிறது.
பொதுவாக ஒவ்வொரு கிரஹமும் ஒவ்வொரு ராசியில் சஞ்சரிக்கின்ற கால அளவானது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அந்த அளவின்படி சந்திரன் ஒவ்வொரு ராசியிலும் ரெண்டே கால்  நாட்கள் அதாவது, தோராயமாக 54 மணிநேரம் வாசம் செய்வார். அந்த அடிப்படையில், ஒவ்வொருவரின் ஜென்ம ராசிக்கு எட்டாவது ராசியில் சந்திரன் பயணிக்கின்ற காலத்தை சந்திராஷ்டம காலம் என்று சொல்கிறார்கள்.
உதாரணத்திற்கு, சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு மீன ராசியில் சந்திரன் இருக்கும் காலம் சந்திராஷ்டமமாக இருக்கும். மொத்தம் 27 நட்சத்திரங்கள் என்பதால் கிட்டத்தட்ட 25 அல்லது 26 நாட்களுக்கு ஒருமுறை இதனை ஒவ்வொருவரும் சந்திக்க வேண்டி வரும். சரி, இந்த சந்திராஷ்டமத்தினால் என்ன பிரச்சனை உண்டாகும் என்பதே உங்கள் சந்தேகம் அல்லவா… அதற்கான பதிலையும் விளக்கமாக தெரிந்துகொள்வோம். கோள்களுக்கு உரிய பணியில் சந்திரனை மனோகாரகன் என நிர்ணயம் செய்திருக்கிறார்கள்.

நமது மன நிலையை பராமரிப்பதே சந்திரனின் பணி.  எட்டாம் இடம் என்பது அசுபமான பலன்களை உண்டாக்கக் கூடியது என்பதால், எட்டாம் இடத்திற்கு சந்திரன் வருகின்ற அந்தக் குறிப்பிட்ட இரு நாட்கள் மன நிலை டென்ஷனாக இருக்கும். அவ்வளவுதான்.
மனதை அடக்கி ஆளத் தெரிந்தவர்களுக்கும், எதையும் தாங்கும் இதயம் கொண்டவர்களுக்கும் பிரச்சனை இல்லை. மனதில் குழப்பத்தினைத் தோற்றுவிக்கும்படியான நிகழ்வுகள் நம்மைச் சுற்றி நடக்கும் என்பதால், சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது என்பதற்காக மாத ராசிபலன்களிலும், காலண்டர்களிலும் சந்திராஷ்டம நாட்களை தனிப்பட்ட முறையில் குறிப்பிடுகிறார்கள்.

‘பதறாத காரியம் சிதறாது’ என்று சொல்வார்கள் அல்லவா, சந்திராஷ்டம நேரத்தில் ஒருவித பதட்டத்தோடு செயல் படுவோம். அதனால், இறங்கிய காரியங்களில் எளிதான வெற்றி கிடைக்காது போகும். எடுத்த காரியத்தில் அற்ப காரணங்களினால் இழு  பறி உண்டாகும். இதனால், டென்ஷன் மேலும் அதிகரிக்கும். உடனிருப்பவர்களிடம் எரிந்து விழுவோம் அல்லது அவர்களின் எரிச்சலுக்கும் வசவுகளுக்கும் ஆளாவோம்.

இது போன்றவை சந்திராஷ்டம நாட்களில் உண்டாகும் பொதுவான பலன்கள். மருத்துவ ஜோதிடத்தைப் பொறுத்த வரை சந்திரன் நம் உடலில் ஓடுகின்ற இரத்தத்தைக் குறிக்கின்றவர்.   சந்திராஷ்டம நாட்களில் உண்டாகும் பதட்டத்தின் காரணமாக ரத்தம் சூடேறும். டென்ஷன் அதிகமாகும். இரத்தக் கொதிப்பு நோய் உள்ளவர்கள் சந்திராஷ்டம நாட்களில் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இதுபோன்ற காரணங்களால்தான் திருமணம், க்ருஹப்ரவேசம் போன்ற சுபகாரியங்களில் சந்திராஷ்டம நாட்களை விலக்குகிறார்கள்.

வாழ்க்கையின் மிக முக்கியமான பகுதிக்குள் அடியெடுத்து வைக்கும் மணமக்களுக்கு ஏற்கெனவே ஒருவித ஆனந்த பூரிப்புடன் கூடிய டென்ஷன் இருக்கும். இதில், சந்திராஷ்டமத்தின் காரணமாகத் தோன்றும் பதற்றமும் இணைந்தால் என்னாவது? முதல் கோணல், முற்றிலும் கோணலாகி விடாதா? மணமக்களுக்கு மாத்திரமல்ல, மணமக்களின் தாய் தந்தையர்க்கும் சந்திராஷ்டமம் இல்லாமல் இருக்கிறதா என்று பார்த்து பிள்ளைகளின் திருமண நாளைக் குறிக்கின்ற பெற்றோர்களும் இருக்கிறார்கள். அதுபோன்றே அதிமுக்கியமான அறுவை சிகிச்சைகளை செய்யவிருக்கும் மருத்துவர்களும், செய்யப்பட உள்ள நோயாளிகளும் தங்கள் சந்திராஷ்டம நாட்களைத் தவிர்த்து விடுவார்கள்.

மருத்துவர் அன்றைய தினத்தில் தனக்கு உண்டாகும் பதட்டத்தின் காரணமாக ஏதேனும் தவறு செய்து விடலாம். நோயாளிக்கு இரத்த அழுத்தத்தில் மாறுபாடு தோன்றுவதன் காரணமாக அறுவை சிகிச்சை தோல்வியில் முடியலாம் என்பதே இந்நாட்களை தவிர்ப்பதற்கான காரணம். சந்திராஷ்டம நாட்கள் டென்ஷனை உண்டாக்கும் என்பது சரி, அதற்காக அந்த நாட்களில் பணி ஏதும் செய்யாமல், வெளியில் போகாமல் முடங்கிக் கிடக்க முடியுமா? விபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் மனிதருக்கு சிகிச்சை செய்ய உள்ள மருத்துவருக்கு அன்றைய தினம் சந்திராஷ்டம நாள் ஆயிற்றே என்று சிகிச்சை அளிக்காமல் சும்மா இருந்துவிட முடியுமா?

இதற்கு பரிகாரம் ஏதும் கிடையாதா என்றால் நிச்சயமாக பரிகாரம் உண்டு. சந்திரனுக்குரிய திரவம்  பால்.   பாலைக்  குடித்துவிட்டு வேலையைத் துவக்கலாம். குளிர்ச்சியான பாதாம்பால் போன்றவையும் பதட்டத்தினைக் குறைக்கும். (முதலிரவில் மணமக்கள் பால் சாப்பிட வேண்டும் என்ற பழக்கத்தை நம்மவர்கள் வைத்திருப்பதும் இதற்காகத்தான்). சந்திராஷ்டம நாட்களை ஜோதிடர்கள் முன்பே குறித்துக்கொடுப்பது கூடுதல் கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்பதற்காகத்தானே தவிர பணி செய்யாமல் சும்மா இருப்பதற்காக அல்ல. சந்திராஷ்டம நாட்களில் விநாயகருக்கு சிதறு தேங்காய் உடைத்துவிட்டு வேலையைத் துவக்குங்கள். வெற்றி நிச்சயம்.
அஷ்டம் என்றால் எட்டு. சந்திரன் உங்கள் ராசியிலிருந்து 8வது ராசியில் சஞ்சரிப்பதற்கு சந்திராஷ்டமம் என்று பெயர்.
திருமண பொருத்தம்: ஆண், பெண்களுக்கான திருமண நட்சத்திர பொருத்தம்  ஜோசியர்கள் பட்டியகள் போட்டு தருவார்கள். மறுபடியும்  சுருக்கமாக ஒரு  அலசல்:உங்கள் ராசிக்கு 8வது இடத்தில் சந்திரன் அமைந்திருந்தால், அது உங்களுக்கான சந்திராஷ்டம காலம். மொத்தம் 27 நட்சத்திரங்கள் என்பதால், 25 நாட்களுக்கு ஒருமுறை இந்த சந்திராஷ்ட நிகழ்வு உங்களின் ஜென்ம நட்சத்திரத்திற்கும்  ஏற்படும்.ஒரு சிலருக்கு சந்திராஷ்டமம் நல்ல பலன்களை அளிக்கும். சிக்கு எட்டாம் இடத்தில் சந்திரன் வந்தால் அது சந்திராஷ்டம். நவக்கிரகங்களில் முக்கியமானவர் சந்திரன், இவர் மனது  காரகன்.மனிதனின் மனநிலைகள் இவற்றின் சஞ்சாரத்தை வைத்தே அமைகிறது. மனது, சித்தம் ஸ்வாதீனமில்லாமல் இருந்தால் ஆங்கிலத்தில் LUNATIC  என்கிறோம். LUNAR  என்பது சந்திரனை குறிக்கும் ஆங்கில சொல்.  ராசி கட்டத்தில்   சந்திரன்  எந்த இடத்தில் இருக்கிறாரோ அதுதான் ஜென்ம ராசியாகும். அவர்  வீடு. கிரஹம் .ஜென்ம  ராசிக்கு எட்டாம் இடத்தில் சந்திரன் வந்தால் அது சந்திராஷ்டம். ஒவ்வொரு ராசியிலும் சந்திரன் இரண்டேகால் நாட்கள் சஞ்சாரம் செய்வார். உதாரணமாக மேஷ ராசிக்கு, விருச்சிக ராசி எட்டாவது ராசியாகும், விருச்சிக ராசிக்குரிய நட்சத்திரங்களின் பாதங்களில் (விசாகம்4,அனுசம்,கேட்டை) சந்திரன் சஞ்சாரம் செய்யும்பொழுது,மேஷ  ராசிக்கு சந்திராஷ்டம் ஆகும். சிலருக்கு சந்திராஷ்டமம் நல்ல பலன்களை அளிக்கும். அவர்களுக்கு பிறக்கும் போதே சந்திரன், லக்னத்திற்கு 8, 6, 12-ல் மறைந்தவர்களுக்கு எல்லாம் சந்திராஷ்டம் நன்றாக இருக்கும். நமது ராசிக்கு எட்டாமிடத்தில் சந்திரன் உலா வரும் பொழுது, கவனமாக இருக்க வேண்டும். புது முயற்சிகளில் ஈடுபடும் பொழுது, மிகுந்த விழிப்புணர்ச்சி தேவை. முகூர்த்தம் வைக்கும் பொழுது, தாலி கட்டும் நேரம் சந்திராஷ்டமமாக இருந்தால், குடும்ப ஒற்றுமை குறையும். சாந்தி முகூர்த்தம் சந்திராஷ்டம நாளில் இருந்தால், தாம்பத்திய சுகம் குறையும். உடல் நலம் பாதிக்கும். இருப்பினும், விருச்சிகம், கடகம், ரிஷபம் போன்ற ராசிக்களுக்கு நீச்ச உச்ச, சொந்த வீட்டுக்காராக சந்திரன் இருப்பதால், அந்த ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் பாதிக்காது என்று சொல்வர். சந்திராஷ்டமத்தில் முக்கிய முடிவுகள் எதுவும் எடுக்கக் கூடாது.  ராசிபலன்  பார்ப்பதை விட 10 மடங்கு முக்கியமாகக் கருதி சந்திராஷ்டமத்தில் கவனம் செலுத்த வேண்டும். சம்மந்தப்பட்ட ராசிக்காரர்கள் யாரிடமும் வாக்குவாதம் செய்யக்கூடாது.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1426

One comment

  1. அருமையான விளக்கம்.
    ஐயா
    பால் காய்ச்ச தம்பதியினர் சந்திராஷ்டமம் மட்டும் பார்த்தால் போதுமா? அல்லது குழந்தைகளுக்கும் பார்க்க வேண்டுமா?
    அக்னி நட்சத்திர காலத்தில் பால் காய்ச்சலாமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *