THIRUPATHI RAHASYAM – J K SIVAN

திருப்பதி வெங்கடேசன் ரஹஸ்யம்:  நங்கநல்லூர்  J K  SIVAN
வழக்கம் போல  இன்று சனிக்கிழமை நம் மனக்கண் முன் முழுமையாக தரிசனம் தருபவர்  திருப்பதி வெங்கடாசலபதி, எத்தனையோ குடும்பங்களுக்கு  குலதெய்வம்.  அவரைப் பற்றி  எது சொன்னாலும், எவ்வளவு சொன்னாலும்,  அது முழுமை பெறாது. ரஹஸ்யங்கள், ஆச்சர்யங்களின் மொத்த உருவம்  வேங்கடேசன் . இன்றும் கொஞ்சம் அவற்றில் சிலவற்றை அனுபவிப்போம். எந்த சாத்வீக, சாந்தமான தெய்வத்தின்  விக்ரஹத்தை பார்த்தாலும் அந்த தெய்வத்தின் கரங்களில் ஏதாவது ஒரு ஆயுதம்  தாங்கியபடி  நிற்கும்.ஆனால் ஏழுமலையான் திருவுருவச்  சிலையில்   ஏனோ  எந்த ஆயுதமும் கிடையாது. அவர் நிராயுதபாணி. அதனால்தான் தமிழ் இலக்கியத்தில் நம் முன்னோர்களால், ஸ்ரீனிவாசன் ”வெறுங்கை வேடன்” என்று அறியப்பட்டார்.
வெள்ளைக்கார  ஆட்சியோ, நம்மவர்கள்  ஆட்சியோ, யாராக இருந்தாலும்  எல்லோர் கண்ணும்  திருப்பதி வெங்கடாசலபதியின்  ஆபரணங்கள், காணிக்கைகள், உண்டியல் பணத்தின் மேல் தான். இது காலம் காலமாக  பல நூற்றாண்டுகள் தொடர்வது. 1781 ஆம் ஆண்டு  வெள்ளைக்காரனின்  பீரங்கிப்படை தக்கோலம் என்ற இடத்தில் முகாமிட்டிருந்தது. அப்படையின் 33 ஆவது பிரிவைச் சேர்ந்த தளபதி லெவெல்லியன் என்ற போர் வீரன்.  யுத்தத்தில்  அவனுக்கு  படுகாயம்.  எந்த ஜென்மத்தில் செய்த புண்யமோ, லெவெல்லியனுக்கு  திருமலை ஸ்ரீனிவாசன் மேல் கொஞ்சம் பக்தி மனதில் உண்டு. நான் குணமடையவேண்டும் நீ உதவி செய் என்று வேண்டிக்கொண்டான்.  அப்புறம் என்ன, ஏழுமலையான் அவனை  பூர்ண குணமடையச் செய்து விட்டான்.   நன்றி மறவாத லெவெல் லியன் ஓர் இந்து சிப்பாயை  திருப்பதிக்கு அனுப்பி  தனது நேர்த்திக்கடனை  செலுத்தினான் என்பது சரித்திரம்.
ஏற்கனவே இன்னொரு வெள்ளைக்காரர்  சர் தாமஸ் மன்றோவின்  வேங்கடேச  பக்தி பற்றி எழுதி இருக்கிறேன்.  அதே மாதிரி இன்னொரு கர்னல் ஜியோ ஸ்டிராட்டன் என்பவனும் ஏழுமலையான் பக்தன்.
ஒரு விஷயம்.  வெள்ளைக்காரர்கள் கிறிஸ்தவர்கள் என்றாலும்  வெங்கடேசனின் மேல் மரியாதை இருந்தது, ஹிந்துக்களின்  பக்தி பற்றி தெரியும். ஆகவே  திருமலையின் புனிதத்தன்மை கருதி 1759 முதல் 1874 வரை எந்த ஆங்கிலேயரும் மலை ஏறவில்லை. ஆங்கிலப்பாதிரிகள் மலையில் ஏதாவது ஒரு பகுதியில் ஒரு சிலுவை நட விரும்பினார்கள். ஆனால் அதற்கு ஆங்கிலேயத் தளபதிகளே அனுமதி அளிக்கவில்லை. திருமலை திருக் கோயிலில் நித்யபடி பூஜைகள் நடக்க வேண்டும் என்று ஆங்கிலேயர்கள் விரும்பினார்கள். பூஜைகள் சரிவர நடக்காவிட்டால் தங்கள் ஆட்சிக்கு பங்கம் வரும் எனக் கவலைப் பட்டார்கள்.
கீழ் திருப்பதியில் அலமேலு மங்காபுரத்தில் தாயாருக்கு உள்பாவாடை கத்வால் என்ற வடக்கே உள்ள ஊரில்  இருந்து பருத்தியில் தயார் செய்யப்படுகிறது. செஞ்சு இனத்தைச்சேர்ந்த நெசவாளர்கள் இதை பயபக்தியுடன் நெய்கிறார்கள். உள் பாவாடை சீமாட்டியின் திருமேனியில் படுவதால், இதை நெய்யும் போது நெசவாளர்கள் மூன்று வேளை குளிப்பார்கள். அவர்கள் மது, மாமிசம் உண்ணமாட்டார்கள். வெள்ளிக்கிழமை அபிஷேகத்திந்கு பரிமள அறையில் வியாழன் இரவு அறைத்து தயார் செய்யப்படுகிறது. குங்குமப்பூ கலவையும் அபிஷேகத்துக்கு சேர்க்கப்படுகிறது. வெளிநாடுகளிலிருந்து வாசனை திரவியங்கள் பக்தர்கள் அனுப்பிய வண்ணம் உள்ளனர். ஒரு வாரத்திற்கு ரூ,50000 மதிப்புள்ள வாசனை திரவியங்கள் வருகின்றன என்று  அறிகிறோம்.
ஒரு  ரஹஸ்ய செய்தி. ஏழுமலையான் வாரத்தில் நான்கு நாட்கள் அம்பாளாகவும், 2 நாட்கள் விஷ்ணுவாகவும், ஒரு நாள் சிவனாகவும் கருதப்பட்டு பூஜை  இன்றளவும்  நடைபெற்று வருகிறது.
ஏழுமலையானின் அபிஷேக நீர் குழாய் மூலம் புஷ்கரணியில் கலக்கிறது. ஆகவே இது புனிதமான நீராகும். இங்கே குளித்துவிட்டு நீரில் நின்ற படியே இரு கைகளாலும் தண்ணீரை எடுத்து குளத்திலேயே விடவேண்டும். இது விசேஷ வழிபாடாகும்.
வெள்ளிக்கிழமைகளில் விடியற்காலையில்   அபிஷேகத்திற்கு முன்பு ஒரு விசேஷ சாத்து முறை நடக்கும்.வடகலை சம்பிரதாயத்தில் “வேங்கடமெனப்பெற்ற” என்ற பாசுரமும், தனியன்களும் இடம் பெறும். சாத்துமுறையின் போது பூ, வஸ்திரம் இல்லாமல் ஏழுமலை யான் திருமேனியுடன் இருப்பார். முதலில் ஒரு தீபாராதனை பெறுவார்.  பிறகு தென்கலை சாத்துமுறை சேவிக்கப்படும். பிறகு நைவேத்தியம் செய்யப்படும். பிறகு ஒரு தீபாராதனை செய்வார்கள்.  ஏழுமலையான் அந்த தீப ஒளியில் கண்ணைப் பறிக்கும் அழகோடு இருப்பார்.
அப்புறம் அடுத்த  சனிக்கிழமை வேங்கடேசனை  தரிசிப்போம்.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1426

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *