A GOSSIP TALK J K SIVAN

”ஒரு அரட்டைக் கச்சேரி ‘ – நங்கநல்லூர் J.K. SIVAN
நங்கநல்லூரில் இப்போது தெருக்குத் தெரு சின்ன சின்ன பார்க். குழந்தைகள் விளையாட சறுக்குமரம், ஊஞ்சல், ஒரு கூரை போட்ட மேடை,சீசா, கொஞ்சம் மணல் இதோடு இருக்கிறது. சுவற்றோரத்தில் சில செடிகள்.
அறுபது வருஷங்களுக்கு முன்பு கோடம்பாக்கம், சூளைமேட்டிலிருந்து தியாகராய நகர் நடந்து போய் அங்கே பனகல் பார்க்கி ரேடியோ கேட்போம். அங்கே ஒரு குழந்தைகள், பெண்கள், வயதானவர்கள் கூட்டமே உட்கார்ந்திருக்கும். எப்போதாவது கார்பொரேஷன் பேண்ட் காரர்கள் பல விதவாத்தியங்களோடு வெள்ளை பேண்ட், கோட் தொப்பி போட்டுக்கொண்டு ரவுண்டாக நின்று வாசிப்பார்கள்.
வடக்கு மூலையில் ஒரு சிமெண்ட் பெஞ்சில் நான்கு பேர் நிச்சயம் தினமும் மாலை ஐந்து மணிக்கே சென்று இடம் பிடித்து வைத்திருப்பார்கள். அவர்கள் வேறு யாரும் இல்லை நமது நண்பர்கள் ராமோஜி குரு ராவ், பத்மநாபய்யங்கார், ரெங்குடு எனும் ரங்காச் சாரி, சுந்தர கோதண்டராமய்யர். வானத்தில் உச்சியிலிருந்து பாதாளம் வரை எதுவேண்டுமானாலும் அவர்கள் பேச்சில் இடம் பெறும். ரெண்டு நேரமாவது ஏதாவது பேசிக்கொண்டே இருப்பார்கள்.
அவர்கள் பேச்சு ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாமல் இருக்கும். எதெதையோ முடிச்சுப்போட்டு பேசுவார் கள். எப்படியோ அவர்களுக்கு அது சுவாரஸ்யமாக இருக்கும். அதால் என்ன பிரயோஜனம் என கேட்கா தீர்கள். அவர்கள் பொழுது போக்கு அது.
இதோ ஒரு மீட்டிங்கில் அவர்கள் பேசுவது:
”சுந்தர கோதண்டம் னு ஏனோ எதுக்கோ, என் தோப்ப னார் எனக்கு பேர் வச்சுட்டார். என் பேரை இந்த அம்பத் தஞ்சு வருஷமா ஒரு பயலும் முழுசா கூப்டதே இல்லை. ‘சுந்தர குண்டு’ ன்னு தான் என்னை பத்தி பின்னாலே பேசறா” என்று வருத்தப்பட்டார் அந்த மாமா. சற்று கணிசமான தொந்தி உடையவர்.
”இதுக்கு எதுக்கு உமக்கு வருத்தமோ கவலையோ? யார் எப்படி வேணா கூப்பிட்டுட்டு போகட்டுமே. பேசட்டும். நமக்கு கண் எதிரேயே, பார்த்தசாரதியை பாச்சு, அனந் தாச்சாரியை அந்து, தர்மராஜனை தம்மு ன்னு கூப்பிட றது லோகத்தில வழக்கமாயிட்டுதே”
”எதனாலே இப்படி?
”காரணம்னு எதுவும் இல்லை. ஈஸி லைஃப். சுலபமா இருக்கு வாய்க்கு என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம்.அதுக்கு மேலே எதுக்கு ன்னு எனக்கு தெரியல”
”வாழ்க்கைக்குன்னு ஏதாவது ரூல்ஸ் இருக்கா ராவ்ஜி? ஐயங்கார் கேட்டார்.”என்னைக்கேட்டா ஒரு ஒம்பது சின்ன விஷயம் சொல்வேன். அதாலே வாழ்க்கை துளியாவது மேம்படும் என்பேன்”என்று பேச்சுக்குள் புகுந்தார் ரெங்குடு.
”என்னடா ரெங்குடு எதுக்கெடுத்தாலும் ஒம்பது? அது என்னானு தான் சொல்லேன் ” என்கிறார் பத்மநாப ஐயங்கார் .
”இந்தாங்கோ எல்லோருக்கும் வாழக்கா பஜ்ஜி, ஆம்படையா கொடுத்தனுப்பிச்சா” என்று பையிலி ருந்து ஒரு அலுமினியம் சம்படத்தை திறந்தார் சுந்தரகுண்டு.
ரெங்குடு பேச சான்ஸ் கிடைச்சா விடுகிற ஆசாமியில் லை. உடனே பேச ஆரம்பித்தார்.
”பிறக்கிறவன் ஒவ்வொருத்தனும் பிறந்தவுடனே இப்படி எல்லாம் நடக்கணும் னு பிரிஜ், டிவி, AC மெஷி னுக்கு எல்லாம் தருகிறா மாதிரி கூடவே உபயோகப்படுத்த மேனுவல் ஏதாவது கொண்டுவறானா? அது தேவையில் லை. அவரவர் வாழ்க்கையை அவரவர் விரும்பியபடியே அமைத்துக்கொள்ள வழி இருக்கிறது. அதில் முக்கிய விஷயம் தானும் நிம்மதி அடைந்து மற்றவர்களையும் நிம்மதியாக வாழ விடவேண்டும் என்பது தான். வாழ்க்கையின் விதி முறைகள் நேரத்திற்கேற்றவாறு, இடம், காலத்திற்கேற்றவாறு அன்றாடம் மாறுபவை.
நிறைய பேசுகிறோமே. பேச்சிலே பிறரை வதைக்கி றோமே. ஒரு நிமிஷம் யோசிப்போம் …… எத்தனை பேரால் பேசவே முடியவில்லை !!
‘என்ன சமையல் நீ பண்ணி இருக்கே. கொழம்பிலே உப்பு அதிகம், துவையல்லே காரம், ரசம் படு தண்ணி. சே என்னிக்கு தான் உருப்படியா சமைப்பியோ” தொண தொணவென்று எத்தனை வீடுகளில் மனைவியை கறிச்சு கொட்டுகிறார்கள் ஆம்பளைகள். — ஒரு நிமிஷம் கையை வாய்க்கு கொண்டு போகும் முன்பு யோசிப்போம்…….
ஒரு பருக்கை சோறு கூட இல்லாமல் இப்போது எங்கே யோ எத்தனை ஜீவன்கள் பசியால் வாடுகிறார்கள். அவர்களைப் பார்க்கும்போது நாம்…!!”கிடைச்சதை நன்றியோடு சாப்பிடணும்னு ஏன் தோணலை?
‘ ராஜி உன்னை கோவிச்சுண்டுட்டேன். அடிக்கடி கோபம் வருதுடி” அப்புறம் யோசிச்சு பார்த்தா எனக்கு மனசு ஒடஞ்சு போறது. இனிமே உகிட்ட ஒரு வார்த்தை கோபமா பேசக்கூடாதுன்னு நினைச்சுப்பேன்”
ராஜிமாமிக்கு இந்த டயலாக் புதுசில்லே.
”இது என்ன புதுசா? எங்கப்பன் கடன்காரன் என்னிக்கு கோவிந்தப்ப நாயக்கன் தெரு சத்திரத்திலே என்னை இந்த குடும்பத்திலே கழுத்தை பிடிச்சு தள்ளினானோ அன்னிலேருந்து முப்பது வருஷமா நான் என்ன ஸ்வர்கத் திலேயா இருக்கேன். தோலே தடிச்சிப் போச்சு காது புளிச்சுப் போச்சு கேட்டு கேட்டு . நீங்க என்னத்தை வேணும்னாலும் பேசுங்கோ ”.
கணவன் மனைவி எலியும் பூனையும், கீரியும் பாம்புமாக நிறைய இருக்கிறார்கள். இருந்தாலும் இவர்கள் எல்லாம் எவ்வளவு கொடுத்து வைத்தவர்கள் தெரியுமா? ..ஆமாம். அடிச்சதுக்கொண்ணு பிடிச்சதுக் கொண்ணு பட்டு புடவையும் வாங்கி கொள்கிறார்க ளே…ஒரு நாளும் ஒருவரை விட்டு ஒருவர் பிரிய மனம் இடம் கொடுக்காது.
இபோதெல்லாம் கல்யாண மார்கெட்லே பெண்களே கிடைக்கலே. கிடைக்கிற பெண்கள் போடற கண்டிஷ னிலே கல்யாணமே வேண்டாம்னு ஓடற ஆம்பளை பசங்க தான் ஜாஸ்தி .எவ்வளவு ஆண்கள் வயது 45- 50ஐ நெருங்கியும் கல்யாணமாக இருக்கிறார்கள். எல்லாத்துக்கும் பணம் தான் காரணமா போயிடுது என்று அலுத்துக் கொண்டார் ராவ்ஜி.
”பசங்களை சொல்லப் போய்ட்டேளே. எத்தனை பெண்கள் அவர்கள் வீட்டு முதியவர்கள் பாஷையில் ” குதிராக” வளர்ந்தும், இன்னும் சரியான ”வரன்” கிடைக் கவில்லை. பெண்களுக்கு பிள்ளைகள் பிடிக்க வில்லை. எதிர்பார்ப்பு அதிகம்…” இது தான் நிலவரம் என்கிறார் சுந்தரகுண்டு .
”சார் எந்த பெண்ணாக இருந்தாலும் பரவாயில்லே. நல்ல பெண்ணாக, ஏழையாக இருந்தால் கூட பரவா யில்லே. ஜாதகம் எல்லாம் ஒன்றுமே வேண்டாம். ஒரு வயசு ரெண்டு வயசு கூட இருந்தாலும் என் மருமானுக்கு என் செலவில் பண்ணிக்கிறேன்.”
”இப்படி பெண்ணோ பிள்ளையோ கிடைக்காமல்,,,,,,,, கிடைத்த பெண்ணோ பிள்ளையோ அயோக்கிய சிகாமணியாக இருந்து கோர்ட்டில் கல்யாணம் முடிந்த கையோடு விவாக ரத்து கேஸ் நடக்கும் ஜோடிகளாக இருக்கும்போது ………நிறைய பெண்களும் ஆண்களும் தனியாக படுக்கையில் கண்ணீர் வடிய தூக்கம் இழந்து கொண்டிருக்கிறார்கள். இதெல்லாம் பார்க்கும்போது நாம் எவ்வளவு கொடுத்துவைத்தவர்கள். எனக்கு 17 வயசிலே கல்யாணம் .அக்கா கௌசி பெண்ணு பங்க ஜாவையே கல்யாணம் பண்ணி வச்சா ”என்றார் பத்மநாப ஐயங்கார் .
ரெங்குடு மீண்டும் வேறொரு சப்ஜெக்ட் எடுத்துவிட்டார்.
”சே என்ன தேசம் இது. நேர்மையில்லை. நீதியில்லை. எவனைப் பாத்தாலும் பணம் கொள்ளை அடிக்கிறான். சொந்தக்காரனை புள்ளையை, பொண்ணை, கொண்டு பதவியில் நுழைகிறான். லஞ்சம் ஊழல்.. எல்லோரையும் சகட்டு மேனிக்கு திட்டுகிறோம். குறை கூறுகிறோம். வாஸ்தவம். ஆனா எவன் திருந்தறான். அவனவன் பிழைக்க வழி தேடிண்டு நம்ம தலையை மொட்டை அடிக்கிறான்”
ரெங்குடு தொடர்ந்தார்:’எத்தனைபேர் இன்று தங்கள் கனவு நிறைவேறாமலே இன்று காலை கண் திறக்க வில்லை, மூச்சு விட மறந்து விட்டார்கள்…… நாம் எவ்வள வோ பாக்கியசாலிகள். இனி நல்லநாள் வந்தாலும் அவர்கள் நம்மைப் போல் பார்க்க முடியாதே. நாம் பாக்கியசாலிகள் அல்லவா.
எங்க வீட்டு ப்ராப்ளம் சொல்றேன் கேளுங்கோ ” என்று வேறே தலைப்பை விரித்தார் ராவ்ஜி.
‘வீடு இன்னும் உயர வாசல் படி வைத்திருக்க வேண்டும். ஜன்னலை அளவு பெரிசாக வை என்று சொன் னேன். கேக்கலே. மேலப்பக்கம் அப்துல் ஜபார் வீட்டு வாச லைப் பார்த்து கதவு வேண்டாம் என்று முட்டி ண்டேன். கேக்கல. நாலு தென்னை மரத்தில் ரெண்டை வெட்டு என்று சொன்னேன். தொப் தொப் என்று தேங்காய் கண்ணாடி கதவு மேல் விழுகிறது. சனி. கார் ஷெட் அஸ்பெஸ்டாஸ் வேண்டாம் பச்சையோ நீலமோ அக்ரி லிக் ஷீட் போடுன்னு கத்தினேன். நான் சொல்லி யார் கேக்கறா?”
”அத்தை விட்டு தள்ளுங்கோ. எத்தனை குடும்பங்கள் கொட்டும் மழையிலும் குளிரிலும் கொதிக்கும் வெயி லிலும் தெருவில் கிழிசல் துணிக்கு, பிவிசி பேன்னர்கள் அடியே பூச்சி பொட்டு கொசுக்கடியில், சிலது தலைக்கு மேலே கூரையே இல்லாமலேயே வாழறது. சின்னஞ்சிறு சிசுக்கள் அங்கே தான் பிறந்து வளர்றது. அதைப்பார்த் தா நாம் எவ்வளவு கொடுத்துவைத்தவர்கள்.!” என்று கும்பிட்டார் ஐயங்கார்.
ரெங்குடு வேறே சப்ஜக்டுக்கு போய்விட்டார்;
ட்ராபிக்லே பாருங்கோ ‘என்ன பண்றாங்க இவங்க. . சேப்பு லயிட் எப்போ பச்சைக்கு வரும்னு பல்லைக் கடிச்சுண்டு காத்திருந்து போர் அடிக்குது. ஆபிஸ் லிருந்து வீடுபோக கார்லே எவ்வளவு நாழி….?
சுந்தரகுண்டு வேதாந்தத்துக்குளே போய்வி ட்டார்: ”நமக்கு பகவான் கிருஷ்ணன் புண்யத்திலே ஒரு வேலை, வீடு, கார் எல்லாம் இருக்கே. இந்த நிமிஷம் எத்தனைபேர் எந்த வேலையானாலும் பரவாயில்லே. குறைச்ச சம்பளமானாக்கூட மேனேஜ் பண்ணிக்கி றோம்” என்கிறார்கள். வேலை கிடைக்கவில்லை. லஞ்சம் கொடுக்க கூட கடன் வாங்க தயார்…காரோ, ரெண்டுச் சக்ரமோ, எதுவுமே இல்லாமல் ஆறு ஏழு கி.மீ. நடக்கிறார்கள்… நாம் எவ்வளவு பாக்கியவான்கள்.
”சுந்து குறுக்கிட்டார்: ”அப்பப்போ என்னையே நான் கேட்டுப் பேன். எல்லோரையும் குறை நொட்டு நொசுக்கு சொல்றியே” நீ என்ன யோக்யனா. எல்லாம் சரியாத் தான் பண்றவனா. தப்பே என்னன்னு தெரியாதவனா?. செய்யறது எல்லாமே பெர்பெக்டா……….இப்படி ஒரு கணம் யோசித்தால் பேச்சு குறையும். .
ரெங்குடுக்கு இது பிடிக்கவில்லை.
”வாழ்க்கையே வெறுத்துப் போகிறமாதிரி எண்ணங்கள் வேண்டாம். எப்போ நம்ம முகத்திலே சோகம் , அதிருப் தி, ஏமாற்றத்தில் வாடுகிறதோ அப்போ ஒரு நிமிஷம் யோசிப்போம்….’
‘ஆஹா என்னால் நினைத்தால் உடனே சிரிக்க கூட முடிகிறதே…. ஏன் என்றால் நான் உயிரோடு இருக்கி றேனே……கடவுளே உனக்கு நான் வாழும் ஒவ்வொரு நாளும் நன்றி.”ன்னு சொல்லத்தோணும்.”
”மழை தூத்தல் போடறது கிளம்பனும். அதுக்கு முன்னா லே கடோசியாக ஒன்று சொல்வேன். கேளுங்கோ.
ஒவ்வொரு நாளும் ஐந்து பக்கமும் பார்க்கணும்”
.என்கிறார் ரெங்குடு.
‘நாலு பக்கம் தானே அய்யா இருக்கு எப்படிஐந்து பக்கம் பார்க்கிறது?” என்று கேட்டார் ஐயங்கார் .
”எதிரே, முன்னாலே: ..எங்கே, எதுக்கு, ஏன், போக வேண் டும் என்று ஒரு திட்டம் வகுத்துக் கொண்டு நகர்வோம்.
பின்னாலே :. எங்கேயிருந்து, எப்படி, எப்போது வந்த வன் நீ ..அதை ஞாபகப் படுத்திக் கொள் . செய்த பழைய தவறுகள் இனி நெருங்காமல் பார்த்துக் கொள் .
கீழே : எந்த உயிரையும் காலின் கீழே மிதித்து கொல்
லாதே. உனக்கும் கீழே உள்ளவர் கோடி. நினைத்து பார்த்து நிம்மதி நாடு.. எவரையும் மிதித்து நசுக்கி முன்னேற்றம் வேண்டாம்.
அக்கம் பக்கம் : யாராவது இருக்கிறார்களா நமக்கு உதவ, அல்லது நம் உதவியை நாடி, தேடி..ஓடிப்போய் செய்வோமா?
மேலே: ” டேய் , நீ என்னவெல்லாம் செய்கிறாய், சொல் கிறாய். நான் பார்த்துக்கொண்டு தான் இருக்கி றேன்” என்று ஒருவன் இருக்கிறான்.. அவனை தெரியுமா அவன் தான்யா கிருஷ்ணன் ”

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1422

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *