TWELVE IDEAS J K SIVAN

பன்னிரண்டு  ஐடியா  — நங்கநல்லூர்   J  K  SIVAN
 ‘ஸார்  என்னை தப்பா நினைக்காதேங்கோ. நான்  ரிஷி இல்லை.  மஹான் இல்லை. ரொம்ப படிச்சவன் இல்லை. பெரிய எழுத்தாளி இல்லை.  படிக்க பிடிக்கும். சின்ன   வயசிலேருந்தே அது ஒரு கெட்ட பழக்கம். படிச்சது பிடிச்சிருந்தா  அப்பப்போ  ஒரு பழைய டயரிலே அதை நோட் பண்ணி வைக்கிறது வழக்கம். இப்போ அதை ஒண்ணு  ஒண்ணா சொல்றேன் அவ்வளவு தான்.   ஒரு சில நல்ல விஷயங்கள் னு எனக்கு  தோணினதை உங்களுக்கு சொன்னா தப்பா?
இப்போ இருக்கிற  வசதி பல நூற்றாண்டுகளுக்கு முன்பு பாரத தேசத்திலோ  வெளி தேசங்களிலோ இல்லை. அவனவன்  ஓலை, இலை, கல், தகடு இதிலெல்லாம்  தனது எண்ணத்தை  எழுதி வச்சது அவ்வளவு  சுலபம் இல்லை.  நாம் இப்போ  ஒரு பேப்பரில் சர சர   ன்னு கிறுக்கி பேனாவில் எழுத முடியறது ஆனால் என்ன எழுதறதுன்னு தான்  தெரியலே.  ஏன்? என்ன காரணம்?அக்காலத்திலே  எழுத முடியாத போது  மனிதன் நிறைய மனசிலே யோசனை பண்ணினான். ராவும் பகலும்  சிந்தனை.  அற்புதமான எண்ணம் எத்தனையோ, மனதில் தோன்றியது. அப்புறம் பிற்காலத்தில் யார் யாரோ  அதை எல்லாம் இப்போ அச்சிலே  போட்டதால்  நமக்கு  சுலபமாகிவிட்டது.  சகல சௌபாக்கியம். எதை எப்போ வேணாலும்  கால் மேலே கால் போட்டுண்டு படிக்க முடியறது. அதிலே கொஞ்சம் நான் உங்களுக்கும் எடுத்து அப்பப்போ எழுதறேன். அவ்வளவு தான் கதை.
சரி நான்  சொல்ல வந்த 12 ஐடியா என்ன?
1.எதிர்காலம்  இருண்டது,ஏராளமான கஷ்டம் வரப்போவுது  என்று நினைக்கவே கூடாது.  அது நம்மை வீணாக்கி  பாசிட்டிவாக இருக்கவேண்டும்  ஒரு பொற்காலத்திலே தான்  நாம் இப்போ இருக்கிறோம். இனிமேலும் அது  தொடரப் போகிறது என்ற நம்பிக்கை வேண்டும்.. நமக்கு  திறமை இருக்கு. சக்தி இருக்கு.  சிந்திக்க முடிகிறது   சொல் செயல் எல்லாம் நம்மாலேயே கட்டுப்படுத்தமுடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.  அதனாலே  எதிர்காலம் நம்முடைய ஆளுமையில் நிச்சயம் இருக்க போகிறது. ஆகவே நல்லதாகவே இருக்கும்.

2.   பிறக்கும்போதே சர்வ சக்தியுடன் தான் பூமிக்கு வந்தோம். சின்ன வயசிலே யாராவது நமது சக்தியை குறைத்து மதிப்பிட்டிருந்தால் அதை லக்ஷியம் பண்ண வேண்டாம்.  ”இது உருப்படாது”  என்று எத்தனை பேர் சொன்னால் தான் என்ன. ”உருப்பட்டு காட்டமுடியும்” நம்மால். பயமே வேண்டாம். தன்னம்பிக்கை உழைப்பு  இருந்தால் போதும் ஸார். வாழ்க்கையையே மாற்றிக் காட்டலாம்.
3. நம்மால்  முடியும்  என்ற சுய பலம் மனதில் இருந்தால் மலையையே கிருஷ்ணன் மாதிரி தூக்கி நிறுத்த முடியும்.  மனித சக்திக்கும் முயற்சிக்கும் எல்லையே இல்லை. உங்க குடும்பம்  உங்க நிதி நிலைமை, உங்க சொந்த வாழ்க்கை எல்லாத்திலேயும்  உயர்வு காணலாம். எப்படி ஒவ்வொண்ணும் சரியாக செய்யணும் என்று திட்டம், செயல்பாடு, தன்னம்பிக்கை, கடவுள் நம்பிக்கை இருந்தால் போதும். நடந்தே தீரும்.
4.   நான் நிறைய  சம்பாதித்து செல்வந்தன், அம்பானி, அதானி போல ஆகணும் என்று ஒவ்வொருவருமே  எண்ணலாம். தப்பில்லை. சிரிக்க வேண்டாம்.   அவர்களுக்கு வானத்திலிருந்து குபேரன் கீழே தலைமேல் ரூபாய் நோட்டுகளை  கொட்டவில்லை. கஷ்டப்பட்டு எதிலே ஈடுபடலாம், உழைக்கலாம், எது பயன் தரும் என்று இரவும் பகலும் சிந்தித்து திட்டமிட்டு, பல தோல்விகளை கண்டு அயராமல் அதில் வெற்றி கண்டவர்கள். அது அவர்களைப்போல் நம் ஒவ்வொருவருக்குமே  வழிகாட்டும். எங்கே தோல்வி வரலாம்,எது வெற்றி தரக் கூடும் என்று அலசி ஆராய்ந்து ஒவ்வொன்றையும் சரியான முறையில்  கையாண்டால் திறமை உதவுமே. ஒரு லக்ஷியத்தை  நோக்கி நகரவேண்டும். வைராக்யம் வேண்டும்.
5.     நமக்கு நாமே தான் ஊன்றுகோல், சக்தி.  வெற்றியோ தோல்வியோ அது நம் எண்ணத்தால், செயலால் தான் என்று புரிந்து கொள்ளவேண்டும். முழு பொறுப்பும் நம்முடையது. சால்ஜாப்பு வேறே எதன் மேலோ, எவர் மேலேயோ  போடக்கூடாது.. நமது விதியை நாமே நிர்ணயிக்க முடியும். தைரியம் புருஷ லக்ஷணம்.
6. சிறந்த திறமைசாலிக்கு, உழைப்பாளிக்கு  பெருமை, புகழ் காத்துக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு கணமும் நமது திறமை  சாமர்த்தியம்  பெருகும் வளரும், வழிகாட்டும்.
7.  மற்றவர்களோடு  உறவு என்பது  நல்லபடியாக இருக்கவேண்டும். சிடு சிடு வென்று விழுவது, கத்துவது, கோபம். இதெல்லாம்  கை கொடுக்காது. நட்பில்லாமல் இருப்பது தப்பு.  தட்டிக்கொடுத்து  அன்போடு பலரை வெற்றி  கொள்ளலாம். குறை கண்டுபிடிக்க வேண்டாம்.  எல்லோரும் எதிர்பார்ப்பது அவர்களை மதிப்பது, புகழ்வது, பாராட்டுவது.  நாம் அதை நிறைவேற்றுவதில் என்ன கஷ்டம், காசா பணமா?  உங்கள் நல்ல குணம் தானே காரணம். நமக்கும் மற்றவர்களுக்கும் இதனால் சந்தோஷம் தானே.
8.  உன் திறமையை நீயே மெச்சிக்கொள். உன் உடலை ஆரோக்கியத்தோடு வைத்துக் கொள். அது தான்  முக்கியமான மெஷின்.வேலைக்காரன். உன் எண்ணங்களை நிறைவேற்றும் பணியாள். உடல் நலம் சரி யில்லாவிட்டால் மனதின் சக்தி குறையும் என்பது ஞாபகம் இருக்கட்டும்.
9.  மனவலிமை.  எண்ணங்கள் தான் உன் புதையல். உன் லக்ஷியத்தை  அடைய அது தான் உதவப் போகிறது என்பது ஞாபகம் இருக்கட்டும். இப்படி செய்தால்  இப்படி ஆகும் என்று பல விளைவுகளை சிந்தித்து தேர்ந் தெடுத்து தேவையான விளைவை அடைய உதவுவது. அதற்கு சந்தர்ப்பம்  நேரம் காலம் உறுதுணையாக இருக்கும்படி  பார்த்துக் கொள்ளவேண்டும்.
10.  எண்ணுவதற்கு, சிந்திப்பதற்கு  உதவ  நமது முன்னோர்களின்  எண்ணங்கள் எழுத்தில் இருக்கிறது. அவற்றை    ஆராய்ந்து அவர்கள் உழைப்பின், மனஉறுதியின் , செயல் திறனின் பலனை அறியவேண்டும். இது நமது மனதுக்கு கூடுதல்  சக்தி தந்து  வழிகாட்டும். அவர்கள் வெற்றி தோல்வி நமக்கு படிப்பினை. நாமும் அதே தவறு செய்யாமல் காக்கும். 

11.  உன் உழைப்பின் பலன் உன் எதிர்காலத்தை  நிர்மாணிக்கும் அல்லவா.? நல்ல உழைப்பு, நல்ல செயலின் பலன் நல்ல சுபிக்ஷமான எதிர்காலத்தை கட்டாயம் பெற வைக்கும். 

12. கடைசியாக ஒரு வார்த்தை. இந்தஉலக வாழ்க்கை யாருக்குமே சாஸ்வதமானது இல்லை. இது நாம் உருவாக்கும் உலகம். சந்தோஷமாக அதில் வாழ்வோம். அடுத்ததாக  வருவோர்க்கும்  அந்த சுகம்  கிடைக்க உதவுவோம்.  திறமை எவரிடம் எந்த ரூபத்தில் இருந்தாலும் அதை புத்திக்கூர்மையோடு அறிந்து அவர்களுக்கு ஊக்கமளித்து உதவுவோம்.
எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயன்றி வேறொன்றும் அறியேன் பராபரமே என்று தாயுமானவர் எவ்வளவு அழகாக  அர்த்த புஷ்டியோடு சொல்லிவிட்டு போயிருக்கிறார். இதைவிட சிறந்த அறிவுரை வேறென்ன?

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1421

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *