VAIKUNDA EKADHASI J K SIVAN

வைகுண்ட ஏகாதசி –  நங்கநல்லூர்    J.K. SIVAN

பரமபத வாசல் தரிசனம்-    

விடிந்தால் வைகுண்ட ஏகாதசி. ஏகாதசி என்றால் பதினொன்று. ஞானேந்திரியம் ஐந்து + கர்மேந் திரியம் ஐந்து+ மனம் ஒன்று =மொத்தம் பதினொன்று. 11. இதெல்லாம் பகவானிடம் ஈடுபடுவதே ஏகாதசி விரதம்.  ஏகாதசி அன்று பகவானை மட்டுமே நினைத்து, அவன் புகழ் பாடி விரதமிருந்தால், மனக் கவலைகள் விலகி மகிழ்ச்சியான வாழ்க்கை ஏற்படும். பெருமாள் கோவில் களில் இன்று வழக்கத்தை விட அமோக கூட்டம் கூடும்  காரணம்  அனைவருக்கும் மோக்ஷம் கிடைக்க வேண்டாமா?
மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை பதினோராம் நாள் விசேஷமான வைகுண்ட ஏகாதசி  ஆகும்.  மஹாவிஷ்ணுவின்  வாசஸ்தலமான வைகுண்டத்தின் கதவுகள் இன்று பக்தர்களுக்காக  திறக்கப்படும்.  முதல் நாள் ராத்திரி  தூங்காமல்  திருமாலின் புகழ்பாடி  விடிந்ததும் கோவில் செல்வோம். . விடிகாலையில் பெருமாள் கோவில்களில் பொதுவாக வடக்கு திசையில் என்றும் மூடப்பட்டிருந்து இன்று மட்டுமே திறக்கும் “சொர்க்க வாசல்” என்றழைக்கப்படும் வாயில் வழியே  உள்ளே சென்று  பெருமாளை  தரிசிப்போம். .

ஸ்ரீரங்கத்தில்  வைகுண்ட ஏகாதசிக்கு முந்திய பத்து நாள் “பகல்பத்து”. அப்புறம்  வரும் 10 நாள்  “இராப்பத்து” என்று சிறப்பாக கொண்டாடுவார்கள்.
ஏகாதசி உபவாசம்  பிரபலமானது.  விஷ்ணுபுராணம்   என்ன சொல்கிறது என்றால்  மீதி  எல்லா ஏகாதசிகளிலும் உபவாசம் இருந்த  பயனை  வைகுண்ட ஏகாதசி அன்று இருக்கும் ஒருநாள் விரதத்தால் பெறலாமாம் . வைகுண்ட ஏகாதசி அன்று தான் குருக்ஷேத்திர போர் ஆரம்பம். கீதையை  கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு உபதேசித்த நாள். வருஷத்தில்  மொத்தம் 24  ஏகாதசி. மாசம் ரெண்டு ஏகாதசிகள்.   ஒன்று சுக்ல பக்ஷம்,   இன்னொன்று கிருஷ்ண பக்ஷம். நான்  ஒருமுறை  புதுக்கோட்டையில் இருந்து சுமார் 17 கி.மீ. தொலைவில் உள்ள  திருமெய்யம் எனும் மழைக் குடைவரைக் கோவிலில்   ஸ்ரீரங்கநாதரை விட பெரிய  உருவில்  பெருமாளை சயன  கோலத்தில்  ரெண்டு  வாசல் வழியே பார்த்தேன்.  ஓனரின் வழியாக முகம். இன்னொன்றின்  வழியாக   தேகம்.பாதம். திருவனந்தபுரம்  பத்மநாபஸ்வாமியையும் இப்படி தான்  மூன்று வாசலில் தரிசிக்கிறோம்.
திருமெய்ய பெருமாள் கோவிலில் என்ன விசேஷம்  என்றால்  ஏகாதசி திதி நாளில், பரணி நட்சத்திர திருநாளன்று சொர்க்கவாசல் வைபவம்.. சில நேரம், ஏகாதசி திதியுடன் பரணி நட்சத்திரம் சேர்ந்து வந்தால், அன்றே பரமபத வாசல் திறக்கும்.  பரணி நட்சத்திரத்துக்காகக் காத்திருந்து, இரண்டொரு நாட்கள் கழித்தும் சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது. திருமலை திருப்பதியில் சொர்க்கவாசல் கிடையாது. ஆனால்  வைகுண்ட ஏகாதசி அன்று   ‘முக்கோடி பிரதக்ஷணம்’ என்று  ப் ராஹார  திறப்பு விழா வைபவம் உண்டு.

கேரளர்கள் வைகுண்ட ஏகாதசியை, ‘விருட்சிக ஏகாதசி’ என்பார்கள்.  குருவாயூர் கோயிலில் இந்த விழாவைப் பதினெட்டு நாட்கள் கொண்டாடுகின்றனர்.  தீப அலங்காரம் என்றால் கேரளா  கோவில்கள் தான் நினைவுக்கு வருகிறது.  ஆகவே  வைகுண்ட ஏகாதசி அன்று தீப ஸ்தம்பங்களில் விளக்குகள் ஜெகஜோதியாக , கோயிலை  அப்படியே   சொர்க்கலோகமாகக்  காட்டும்.

முரன்  ஒரு கிருத யுக அசுரன். மற்ற அசுரர்களை விட இவன் அதிகமாக  தேவர்களை எல்லாம்  வாட்டி வதைத்து தேவர்கள்   மஹாவிஷ்ணுவிடம் முறையிட  கிருஷ்ணனாக  அவதரித்தார் மஹாவிஷ்ணு.    முரனின்  படை, ஆயுதம்,  எல்லாம்  க்ளோஸ்.  முரன் திருந்துவதற்கு ஒரு  சான்ஸ்  கொடுக்கலாம் என்று  கிருஷ்ணன் நினைத்து யுத்த பூமியிலிருந்து  விலகி, பத்ரிகா சிரமத்தில் இருந்த ஒரு குகைக்குள் சென்று  தூங்குவது  போல் படுத்துக்கொண்டார்.  கிருஷ்ணனைத் தேடி வந்த முரன்  குகைக்குள்  தூங்குவது போல் இருந்த  கிருஷ்ணனைக்  கொல்ல  வாளை ஓங்கினான்.   அப்போது மகாவிஷ்ணுவான கிருஷ்ணனின்  தேஹத்திலிருந்து  ஓர் அழகான பெண்,  ஹைமவதி என்ற பெயர் கொண்டவள்  ஆயுதங்களோடு  தோன்றி  முரனை போருக்கு அழைத்தாள்.
 ‘பெண்ணே!  நீயா என்னோடு  யுத்தம் செய்ய வந்தாய்?உன்னைக் கொல்ல ஓர் அம்பே போதும்’ என்று  முரன்  ஒரு அம்பை எடுத்தான் . ஹைமவதி  ‘ஹூம்’ என்று  சப்தம் செய்தாள். முரன்  க்ளோஸ்.  அவன் இருந்தஇடத்தில் ஒரு பிடி சாம்பல்.

கிருஷ்ணன் ஒன்றுமறியாதவராக  தூக்கம் கலைந்து எழுந்து  ஹைமவதியின் சாகசத்தை  பாராட்டினார்.  ‘’உனக்கு இனிமேல்  ”ஏகாதசி”  என்று பெயர்.  ஏகாதசியே, நீ தோன்றிய இந்நாளில் விரதமிருந்து என்னை வழிபடுபவர்களுக்கு, சகல செல்வங்களையும் அருள்வதுடன், முடிவில் வைகுண்ட பதவியையும் அருள்வேன்” என்று அருளினார்.

 இன்னொரு கதையும்  சுவாரஸ்யமாக  இருக்கிறது.  பிரம்மாவுக்கு ஏனோ அடிக்கடி ஏதாவது தவறு செய்து  தண்டனை பெறுவது வழக்கம்.   ஒருமுறை பிரம்மாவுக்கு  அகந்தை பெருக, அதை ஒடுக்க மஹா விஷ்ணுவின்   காதுகளிலிருந்து மது, கைடபர் கள் என்ற இரண்டு அசுரர்கள்  உருவானார்கள்.  அவர்கள் பிரம்மாவைக் கொல்ல  புறப்பட்டார்கள்.  விஷ்ணு  அவர்களைத் தடுத்து பிரம்மாவை காத்து, ‘’மது கைடபர்களே, உங்களுக்கு என்ன வரம் வேண்டும் சொல்லுங்கள்?’என கேட்டார்.
”ஹே,  மஹா விஷ்ணு,  நீ யார்  எங்களுக்கு வரம் தருவதற்கு? உனக்கு ஏதாவது  வேண்டுமானால் கேள் நாங்கள்  தருகிறோம் ” என்கிறார்கள்.
”ஓஹோ,  அப்படியா   நீங்கள் வரம் தருவதானால் நான் கேட்கும் வரம் உங்களுக்கும் என்னால் தான்  மரணம் சம்பவிக்க வேண்டும்’’   என்றார் விஷ்ணு.
அந்த கால அசுரர்கள் இப்போது போல் இல்லை  என்று ஏற்கனவே சொன்னேனே.  சொன்னால்  சொன்ன  வாக்கை காப்பாற் றுவார் கள்.  ஆகவே.
 ”நாராயணா, ஒரு வேண்டுகோள். நீங்கள்  ஒரு மாதம் எங்களுடன் யுத்தம் செய்ய வேண்டும். அப்புறம்  தான்  நாங்கள் ஸித்தி அடைய வேண்டும்”
”சரி அப்படியே ஆகட்டும்” என்றார்  விஷ்ணு.  பிறகு என்ன.விஷ்ணு
விஷ்ணுவுக்கும் மது கைடபர்களுக்கும்  ஒரு மாத கால  யுத்தம் முடிந்து   விஷ்ணு  அவர்களை வீழ்த்தினார்.  அப்போது  அவர்கள்  விஷ்ணுவிடம் இன்னொரு வரம்  கேட்டார்கள்: ”நாராயணா,  உன்  பரமபதத்தில் தாங்கள் நித்தியவாசம் செய்ய வேண்டும்.  அதோடு கூட  ஒரு  ஆசை: ”விஷ்ணு பரமாத்மா. .எங்களுடைய இந்த கதையை யாராவது கேட்டு இந்த தினத்தில்   நீங்கள் உள்ளே இருந்து  கதவு திறந்து வருவதை பார்த்தால் அவர்களுக்கும் உள்ளே மோக்ஷம் செல்ல வழி விட வேண்டும்”’
‘’ஆஹா  அப்படியே’’ என்றார்  விஷ்ணு.  விஷ்ணு தந்த  வரத்தால்  நாம் நாளை  காலை  விஷ்ணு கோவில்களில் பரம பத வாசலில், சொர்க்கவாசலில்,  நுழைகிறோம். மோக்ஷம் பெறப்போகிறோம்.

 முரன்  ராக்ஷஸன் அல்ல:  நமக்குள் இருக்கும் ரஜோ, தமோ குணம். பேராசை, ஆசை, பாசம் சோம்பல், கர்வம், கோபம் ,  டம்பம் எல்லாம்  சேர்ந்த மொத்த உருவம்.  இதைப் போக்க தான் பட்டினி. உபவாசம். அதனால் கிடைப்பது சத்வ குணம்.. அது தான் மோக்ஷ சுகம் தரும். நல்ல எண்ணங்களும் சாத்வீக சிந்தனையும் நிறைந்தால் அது தான் சுகம். மனம் அமைதி பெறுகிறது. ஆன்மாவுடன் தொடர்பு நீடிக்கிறது. அப்புறம் விஷ்ணு  தாராளமாக  நமக்கு தெரிவாரே!. இது தான்  வைகுண்ட  ஏகாதசி உபவாசம் பலன்
சாப்பாடு தான் முரன். சாப்பிட்ட உடன்  தூக்கம்.  சாப்பிட்டால் தான்  கோபம் தாபம், உணர்ச்சிகள் பெருகும். ஆன்மாவை மனம் தேடாமல் செய்து விடும். 

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1426

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *