THIRUPPAVAI J K SIVAN

அழகிய  ஆழ்வாரே ,  ஆண்டாளே         –    நங்கநல்லூர்  J K   SIVAN மார்கழி 6ம்  நாள்:  

 ‘அரவில் துயில் அமர்ந்த வித்து”

ஆண்டாள்  என்ற பெண்ணை   நினைக்கும்போதே எனக்குள்  ஒரு  வியப்பு.  எப்படி  ஒரு சிறு பெண்  இப்படி எழுதினாள் என்று.  மனித  காரியம்  அல்லவே இது.  அவளைப்பற்றி  ஒரு  சிறு  புத்தகம்  2014  வைகுண்ட ஏகாதசி அன்று   ” பாவையும் பரமனும்”   என்ற  தலைப்பில்  எழுதி 2000  பிரதிகளும்  விநியோகமாகி விட்டது.  அதில்  ஆண்டாளை வடக்கே  யமுனைக்  கரையிலே ஒரு  ஆயர்பாடி   கோபியாக,   கிருஷ்ணன்  கால துவாபர யுக இடைப் பெண்ணாக,   உருவமைத்து மற்ற  பெண்களோடு   மார்கழி முப்பது நாளும் அவர்கள்   கிருஷ்ணனை அடைய  நோன்பு நோற்று  அந்த கிருஷ்ணன் வீட்டையே  சுற்றி சுற்றி வந்து  அவனையே விரத பலனாக அடைவதாகவும்,  மற்றொரு பெண்  கோதை  என்பவள்  எங்கோ தென் கோடியில்  வில்லிப்புத்தூரில்  ஒரு  காட்டின் மத்தியில்  துளசி நந்தவனத்தில்  ஒரு  சிறு  பர்ணசாலையில்  தன் வளர்ப்பு தந்தை  விஷ்ணு சித்தர்  என்கிற விஷ்ணு பக்தரிடம் வளர்வதாகவும், அவரிடம் கல்வி பயின்று  பாசுரம் இயற்ற தகுதி பெற்று  முப்பது பாசுரங்களை,   தானே அந்த  ஆயர்பாடி   ஆண்டாளாக  உருவகித்து,  நோன்பு நோற்பதாக கற்பனை செய்து  திருப்பாவையாக அளிப்பது பற்றியும்,  விஷ்ணு சித்தர்  நாள்தோறும்  காத்திருந்து  அன்றைய  பாசுரத்தை ஆவலாக  படித்து  ரசித்து  அதிசயித்து  ரங்க மன்னார் கோவிலில்  மற்றவர்களுக்கு திருப்பாவையின் உள்ளர்த்தத்தை   எடுத்து ரைப்பது  போன்ற ஒரே மேடையில்  மூன்று காட்சிகளாக   அமைத்திருந்தது எனக்கே  மகிழ்ச்சி  அளித்தது. இதை  ஸ்ரீ  ஆண்டாளின் அருள் என்று  தான் சொல்வேனே  தவிர என் முயற்சி  என்று  சொல்லத் தகாது..
ஆண்டாள்  வாழ்க்கையில் திருப்புமுனை அவள்  தன்னை  அரங்கனின் மனைவியாக மனதால் வரித்து செயலிலும் அவ்வாறு நடக்க முற்பட்டது.    உள்ளத்தைக்  கொள்ளை கொண்ட அரங்கனுக்கு   ஆசையாக மாலை தொடுத்து அதைத்  தான் தோளில்  சூடி, மாலையும்  கழுத்துமாக அழகு பார்த்துவிட்டு ” அரங்கா உனக்கு   திருப்தியா?”  என்று  கேட்டு அதை தோளிலிருந்து  கழற்றி பிறகு அரங்கனுக்கு  அது போய்  சேர்ந்து  ஒருநாள்   அந்த  மாலையில்   கோதையின் தலை முடி  இருப்பதைக் கண்டு ஆலய பட்டர்   இது மானுடர் யாரோ  உபயோகித்ததாக தோன்வதால்   அரங்கனுக்கு உகந்ததாகாதே  என்று  நிராகரித்து, வேறு யாருமே இல்லாததால் அந்த மாலையை கோதை தான்  சூடி இருக்க இருக்கவேண்டும்  என்று  விஷ்ணு சித்த்தர் அவளை  கோபித்து, வேறு மாலை  உடனே தயார் செய்து அரங்கனுக்கு  சார்த்த முயல்கையில்  அவன்  அதை ஏற்காமல்  கோதை  சூடிய   மாலையே  வேண்டும் என்று  சொல்ல,பிறகு தான்   விஷ்ணு சித்தர்  உணர்கிறார் இவர்கள்  இருவருமே  ஒருவருக்காக மற்றவர்  என்று. ஒரே  வரியில்  நீளமாக  கதைச் சுருக்கம் சொல்லி விட்டேன்.    இனி   மார்கழி ஆறாம் நாள் திருப்பாவை  பாசுரத்திற்குள் செல்வோம்:

சென்னையிலேயே குளிர் தாங்கவில்லை. காசு செலவழிக்காமல் எல்லா வீடுகளிலும் AC வசதி. இழுத்துப் போர்த்திக் கொண்டு சென்ட்ரல் ஸ்டேஷன் பார்ஸல்கள் போல் அடையாளம் தெரியாத மூட்டைகளாக படுத்தால் அதுவே சுகம்.

ஆயர்பாடியில் விடியற்காலை, குளிர் ஊசியாய் மேலே குளிர் கீற்றுகளை வீச, சிறுமிகள் சிலர் மட்டுமே ஆண்டாளின் எதிரில் நிற்கின்றனர்.
” என் ஆசை தோழியரே, இன்று மார்கழி மாசம் பிறந்து 6 வது நாளல்லவா? ”
” என்ன ஆண்டாள் அதற்குள் ஆறு நாளா?
“ ஆமாம் . என்னடி நீங்க ரெண்டே  பேர் மட்டும் வந்திருக்கிறீர்கள்.  எங்கே மீதி  பேரை எல்லாம் காணோம்? சரி நேரமாகிறதே வாங்க நாம போய் அவர்களை எல்லாம் தட்டி எழுப்பிக் கூட்டி வருவோம். ஒவ்வொரு கதவாக பலமாக தட்டுவோம்.   என்ன தான் தூக்கமோ?”

ஒவ்வொரு வீட்டுக் கதவும் தட்டப்படுகிறது. ஆண்டாள் கதவின் வெளியே இருந்து குரல் கொடுக்கிறாள்.

“என்னடி இன்னுமா தூக்கம்? எழுந்திரு சீக்கிரம். பெருமாள் கோவில் சங்கு ஊதியாகிவிட்டதே.  காதில் சத்தம் விழ வில்லையா? இந்த நேரத்திலே தான் நாம் அவசியம் பெருமாள் முன்னே போய்  நிற்க வேண்டும்.  எதுக்கு தெரியுமா? நமக்கு முன்னே பறவைகள் கூட கூட்டை விட்டு கூட்டம் கூட்டமாக சப்த ஜாலங்களோடு கிளம்பிவிட்டன. இதோ பார் கோவில் கோபுரத்திலேயே எத்தனை நமக்கு முன்னாலேயே  அமர்ந்து நாராயணனை நமஸ்கரிக்க வந்துவிட்டன. அந்த நாராயணன் யார் என்று மறந்துவிட்டதா ?  அவன் தான் நமது மாய கிருஷ்ணன். குழந்தையாக இருந்தபோது விஷப்பால் ஊட்ட முயன்றவளைக் கொன்றவன், சகடாசுரன்,  அகாசுரன், பகாசுரனை எல்லாம் அழித்தவன், ஆதிசேஷன்மேல் பள்ளி கொண்டவன் அப்படிப் பட்டவனை யாரெல்லாம் வந்து வழிபடுகிறார்கள் பாருங்கள். எதிரே பாருங்கள்.    வரிசையாக நிற்கும் அவர்களை எல்லாம் யார்  என்று தெரிகிறதா?  தவ ஸ்ரேஷ்டர்கள், மா முனிகள், யோகிகள்,  முற்றும் துறந்த  துறவிகள்,  ரிஷிகள், மனமெல்லாம் வாயெல்லாம் இனிக்க ஹரி ஹரி என்று அவர்கள்  ஸ்மரிக்கிரார்களே! காதில் விழுகிறதா?

மனம் திறந்து அவர்களின்  அடிவயிற்றிலிருந்து வெளிவரும் ஆனந்தமான பக்திப் பரவச உச்சரிப்பு கூடவா காதிலே விழவில்லை. நாங்கள் உன் வீட்டுக் கதவை தட்டுகிற   சத்தத்தில் பாற்கடலில் பாம்பணை மேல் துயிலும் அந்த நாராயணனே எழுந்து விடுவான் போலிருக்கிறதே?

” சீக்கிரம் எழுந்து வா பெண்ணே. நீ வந்தால் தான் நாம் யமுனையில் ஸ்னானம் செய்துவிட்டு  நமது நோன்பை ஆரம்பிக்க முடியும்.”
ஆண்டாள் துயிலேழுப்புகிறாள். எப்படி? இனிமையாகப் பாடி, பாசுரமாக, தேனாக ஒலிக்கிறது. .

“ஆண்டாள், ரொம்ப ஆவலாக  இருக்குதடி நீ பேசுவதெல்லாம் கேட்பதற்கு.    நீ எங்களுக்கு இன்று புதிதாக என்ன சொல்லித் தரப்போகிறாய் ?”

இன்று நான் உங்களுக்கு என்ன சொல்லவேண்டும் என்று யோசிக்கிறேன். எது சொன்னால் புரியும் என்று முதலில் சிந்திக் கிறேன். முதலில் இந்த வீட்டில் இருக்கும் பெண்ணோடு சேர்ந்து போய் நாம் எல்லோரும் யமுனையில் நீராடி விரத மிருப்போம் ”

ஆண்டாள் வந்து எழுப்பும்போது அவள் குரலைக் கேட்டு அனைத்து பெண்களும் சீக்கிரமாக எழுந்து கூட்டமாக சேர்ந்து யமுனையை  நோக்கி நடந்தவாறு,   பாடிக்கொண்டே  செல்கிறார்கள். .   அதற்குள் நாமும் வில்லிப்புத்தூர் பறந்து செல்வோம்.
ஆஸ்ரமத்தின் உள்ளே திண்ணையில் அமர்ந்தவாறே விஷ்ணு சித்தர் இடுப்பைச் சாய்த்து ஒரு கையை திண்ணையில் ஊன்றியவாறு வெளியே தெரியும் கோபுர அழகை ரசித்துக் கொண்டிருக்கிறாரே.

”கோதை, ஒவ்வொரு நாளும் நீ கொடுக்கும் இந்த மார்கழி விருந்து இருக்கிறதே அது வெகு அபூர்வம் குழந்தே . இன்னிக்கு உன்னோட பாசுரம் ரொம்ப அசாத்யமா அமைஞ்சுட்டுதும்மா. நேரே கண்ணாலே பார்க்கறா மாதிரி வர்ணனை பண்ணி யிருக்கே. எனக்கு அந்த இடைப்பெண் ஆண்டாளோடு நாமும்  ஆயர்பாடியிலேயே இருந்துட மாட்டோமா என்று தோணறது . எங்கே இன்னிக்கு நீ எழுதிய இந்த ஆறாம் நாள் பாசுரத்தை இன்னொரு தரம் வாசி.     காது குளிர கேட்கிறேன். வசனமா வாசிக்காதே, பாட்டா பாடு என்று ஏன் அடிக்கடி சொல்கிறேன் தெரியுமா? நீ  உன் பாசுரத்தை  தேனும் பாலுமாக கலந்து உன் இனிய குரலில் தரவேண்டும் என்பதற்காக.”

பறந்து கொண்டிருந்த பறவைகளும், ஆடிய மரங்களின் இலைகளும் ஒரு சில நிமிஷ காலம் அப்படியே ”நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே” என்று ரசித்து கொண்டிருந்ததன் காரணம் கோதையின் குயில்  கானம் .

” புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?
பிள்ளாய் எழுந்திராய்! பேய்முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக் கழியக் காலோச்சி
வெள்ளத் தரவில் துயில் அமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்து ஏல் ஓர் எம்பாவாய்.

”ஆஹா, நாராயணா, என் அரங்கா, என்ன பாக்கியம் பண்ணியிருக்கிறேன் நீ இந்த பரிசை எனக்கு கொடுக்க.”

கண்களில் நீர் ஆறாக பெருக வெறுமே தலையை மட்டும் அசைத்துக் கொண்டிருந்தார் விஷ்ணுசித்தர். இரு கைகளும் தலைக்குமேல் கூப்பியிருந்தன.

கோதை அவரைப்பார்த்து பெருமிதத்தோடு சிரித்தாள். ”இந்த பாசுரத்திலே அப்படி என்னப்பா விசேஷ அர்த்தம் தோன்றுகிறது இதில் உங்களுக்கு?”

”அம்மா, கோதை, நீ அந்த ஆயர்பாடி குழந்தை ஆண்டாளாகவே மாறி எவ்வளோ பக்தி ஸ்ரத்தையோடு மற்ற குழந்தை களோடு சேர்ந்து  கிருஷ்ணனைப் பற்றி   பாடியது   அற்புதம் தாயே.    தனக்காக இல்லாமல், பிறர்க்காக அந்த பரமனைத் துதி பாடறது ரொம்ப  உன்னதம்.  எல்லோரையும் எழுப்பி நற்கதிக்கு வழி காட்டுகிறதே சிறந்த தார்மிக குணம் அல்லவா? . பொழுது விடிந்து விட்டதா? என்று அந்த பெண்கள் கேட்பது போலேயும், என்ன சந்தேகம், இதோ பார் பறவைகள் இறக்கை அடித்துக் கொண்டும் இனிய சப்தங்களுடனும் கிளம்பிவிட்டன. வண்டுகள் ரீங்காரம் பண்ணத் துவங்கி விட்டன .ஆலயத்தில் சங்க நாதம் கேட்கிறது. ” ஹே ஆதிமூலமே என்றலறிய கஜேந்திரனுக்கு கருடவாகனனாய் விரைந்து சென்று, காலைப் பிடித்த முதலையை சக்ராயுதத்தால் அழித்த பரமன் நமக்கும் உதவுவான். அருள்வான் என்கிற வாக்கும் சேர்த்து சொன்னது  ஈடு இணையற்றது.

ஹரி ஹரி என்கிற நாமம் ரிஷிகளாலும் யோகிகளாலும் மற்றோராலும் முழங்கப்படுகிறதே. கிருஷ்ணன் சம்ஹாரம் செய்த பூதகியையும் சகடாசுரனையும் நினைக்கிறாள் ஆண்டாள்.   அந்த மாயக் குழந்தை கண்ணன் தன்னையா காத்துக் கொண்டான்? . அல்ல. அவர்களை அழித்ததன் மூலம் நம்மை அல்லவோ காத்தான். எழுந்திருங்கள் யமுனா ஸ்னானத்திற்கு.”

—  ஆஹா  நேரே பேசுவது போல், கண்முன்னே காட்சி நடப்பது போல் கற்பனை பண்ணியிருக்கிறாய் குழந்தே. உன்னாலே இதை எப்படி எழுத முடிந்தது தெரியுமா? — எனக்கு தெரியும்  சொல்கிறேன்.

நீ தான் அந்த ஆயர்பாடி குழந்தை ஆண்டாள் – அது மட்டுமல்ல இருவருமாகவே அவதரித்த அந்த லக்ஷ்மி தேவி” என்கிறார் விஷ்ணு சித்தர்.    

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1426

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *