LIFE IN THE PAST AND PRESENT = J K SIVAN

பழசும்  புதுசும்   –   நங்கநல்லூர்  J K  SIVAN

நமக்கு  பிடிக்கிறதோ இல்லையோ, காலம்  மாறிக்கொண்டே  தான்  வருகிறது.  ஒவ்வொரு நாளும் ஒரு மாற்றம். இது உலகம் தோன்றியதிலிருந்து  அழியும் வரை தொடரும் ஒரு நிகழ்ச்சி.   பச்சோந்தி  தான் வாழும்  இடத்துக்கு ஏற்றமாதிரி  தனது வர்ணத்தை மாற்றிக்கொள்வது போல நாம்  அந்தந்த  காலத்திற்கேற்றவாறு  மாறுதல்களை  ஏற்று அதற்கேற்ப நம்மை மாற்றிக்கொள்ள  வேண்டிய  நிர்பந்தம்.  நான்  மாறமாட்டேன் என்றால்  ஓடும்  ரயிலில் நமக்கு இடம் கிடைக்காது.
நானாக  படித்துத் தெரிந்து கொண்டதை விட  காதால்  கேட்டு, மனப்பாடம்  பண்ணியது தான்  அதிகம். பள்ளிக்கூடத்தில்  அருமையான  ஆசிரியர்கள, ஆசிரியைகள் தங்கள் மாணவர்கள் மேல் அளவற்ற  பாசமும் நேசமும்  கொண்டவர்களாக கற்றுக்கொடுப்பதில் ஆர்வம் காட்டியது எங்கள் அதிர்ஷ்டம்.  மனப்பாடம்  என்று  தினமும்  பல  பாடல்கள்  ஒப்பிக்க வேண்டும். இல்லாவிட்டால்  ஸ்கேலால் அல்லது  பிரம்பால்  கை  நீட்டி  அடி வாங்கவேண்டும்.  அர்த்தம் தெரியாமல் அப்போது  மனப்பாடம்  பண்ணியது  இப்போது பாங்கில்  இருக்கும் பணம். வட்டியோடு  உதவுகிறது.
 வீட்டில் அத்தை, பாட்டி  அம்மா  பெரியம்மா என்று பலர்  விதம் விதமான  ரசமுள்ள  இதிகாச, பாகவத புராண  கதைகள் சொன்னார்கள்.  ரேடியோ, வீடியோ, டிவி, புத்தகங்கள்  டெலிபோன்   மொபைல்  எதுவுமே  கிடையாது.   பள்ளிக்கூடத்தில்  ஆசிரியர்களும் இது போன்ற  அற்புத  கதைகளை சொன்னார்கள்.   இப்படி  காதால்   கேட்டு மனப்பாடம் பண்ணி  கல்வி அறிவு   பெற்ற  காலம் இப்போது மறைந்து விட்டது.
எங்களுக்கு முன்னால்  இருந்தது  ஓலைச்சுவடி,  திண்ணைப் பள்ளிக்கூடம், மணலில் எழுதி படித்த காலம்,  அதற்கும்  முந்தி  குருகுல வாச  கல்வி.
எங்கள் காலத்திலேயே  உபாத்யாயர்  போர்டில் எழுதி நாம் நோட் புத்தகங்களில் எழுதி படித்தது  வளர்ந்து அப்புறம்   அச்சடித்த புத்தகங்கள்,  நோட்ஸ்கள்,  அப்புறம்  போட்டோஸ்டாட்  பக்கங்கள்,  க்செராக்ஸ் அப்புறம்  ரேடியோ டிவி   வீடியோ  பாடங்கள், அப்புறம்  யூட்யூபில், இப்போது  zoom  பாடங்கள். அடேயப்பா  எவ்வளவு மாற்றம். 

 காகிதத்தில் அச்சடித்த  பத்திரிகைகள், வாராந்திர, மாதாந்திர, இதழ்கள் வாடி விட்டன. ஆரம்ப காலத்தில்  விரல்விட்டு எண்ணக்   கூடியவையாக இருந்தது  கொசு  போல் பெருகி, இப்போது காணாமல் போய்விட்டன.  டிஜிட்டல் உலகம் இது.   சாக்கடை அடைப்பிலிருந்து  சக்தி  உபாசனை வரை பலவித எழுத்துக்கள், கருத்துக்கள், படங்கள், பாடங்கள், பாட்டுகள்  குவிகிறது.  ஆம்   வாட்ஸாப்ப்  வந்தாலும் வந்தது, அதில் வராத விஷயமே இல்லை.  3G  4G  5G  என  புது புது  டிஜிட்டல் டெலிபோன்கள்  சகலத்தையும்  வாரி வளைத்து  கொட்டுகிறது.   இப்போது காமிரா  வாங்க  ஆளில்லை.  ரேடியோ   டிவி   டேப்  சகலத்தையும்   விழுங்கி விட்டது.டிஜிட்டல்  உலகம்.  கைக்கடிகாரம், டேபிள் கடிகாரம், சுவர் கடிகாரம் பரம்பரையே  அழிந்துவிட்டது.  வண்டி மாடு கட்டிக்கொண்டு வந்து  பல மைல்கள் பிரயாணம் செயது இரவெல்லாம்  கச்சேரி, ஒன்ஸ்மோர் என்று மீண்டும் மீண்டும் பாடவைத்த காலம்,  மைக்,  ஒலி பெருக்கி இல்லாமல்  அடித்தொண்டையில்  கத்தி ரத்தம் கக்கி செத்த  பாடகர்கள் மறைந்து,   ரேடியோ  டேப்  வந்தது.  ஒரு  காலத்தில் 30-40  ரூபாய் கொடுத்து  ஆடியோ  டேப் வாங்கினேன்.  ஒரு பெட்டி  நிறைய வெளியே சமீபத்தில்  கொட்டினேன். அதேபோல் தான் 20 ரூபாய்  முதல் 200 ரூபாய் வரை வாங்கிய  ஹிந்தி, ஆங்கில, தமிழ் படங்கள் வீடியோ காஸெட்ட்கள் கேட்பாரின்றி, பார்ப்பாரின்றி  வீட்டில் இடத்தை  அடைத்துக் கொண்டு   வெளியேற காத்திருக்கிறது. அதெல்லாம்  குப்பை  இப்போது!!

வாட்சப்பில் எழுதாத, ஆடியோ வீடியோ பேசாத, பாடாத, ஆணோ பெண்ணோ  இல்லை. நிறைய பேர்  எனக்கு  செய்திகள் வாரி கொட்டுகிறார்கள்.  எனக்கு கூட   தெரிந்தவர் தெரியாதவர் என்று பலபேர்  குரூப்பாக  விடாமல்  ஏதெல்லாமோ அனுப்புகிறார்கள். அழித்து அழித்து  என்   விரலின்   நீளம் குறைந்து  கொண்டே வருகிறது.    எனது தொலைபேசி  நிரம்பி வழிகிறது. அனைவருக்கும்  நன்றி.  

எதை  வேண்டுமானாலும்   எழுதமுடியும்  என்பதால்  எழுதுவது  நியாயமா?.   ரொம்பவே   நன்றாக  மனதுக்குப் பிடித்த  விஷயங்களை  மட்டும் சுருக்கமாக  சொல்லத்தான் மனம்  விழைகிறது.    முகநூல், வாட்சப்பில்    நண்பர்களிடமிருந்து  சூரியன் உதிக்க மறந்தாலும்  செய்தி வருவது தப்பாது. எங்கே  யிருந்தெல்லாமோ  விஷயங்களை  தேனீ போன்று  சேகரித்து  என்  போன் நிரம்பி விடுகிறது.  இப்படி படித்ததில்  எனக்கு  பிடித்த  ஒரு விஷயம்  மட்டும்  தமிழில் தருகிறேன்.

நமது வாழ்வில்  சில  நீதிகளை  அடிக்கடி  ஞாபகப்படுத்துவது உபயோகமாக இருக்கிறதே.   ஒரு சில  கருத்துகளை மட்டும் பரிமாறிவிட்டு  நிறுத்திக் கொள்கிறேன். 

பலத்த  மழை  எதை  நினைவூட்டுகிறது? நமது  வாழ்வில் சந்திக்க  நேரும்  எதிர்ப்புகளை.
.வானம்  பொத்துக்   கொண்டு பூமியில் விடாது  கொட்டும் மழையே  நீ  வேண்டாம். கடவுளே,   இதைத் தவிர்  என்று கேட்காமல், ”கிருஷ்ணா,   ஒரு  ஸ்ட்ராங்கான குடையைக் கொடேன், இந்த மழையைச் சமாளிக்க” என்று கேட்கும்போது தான்  உன்  நெஞ்சின்  உரம்  விளங்கும்.  குடை என்றதும் அந்தக்  கால  மான் மார்க்  குடை  ஞாபகம் வருகிறது.  ரொம்ப பிரசித்தமானது.  விலையும்  கூட.   பர்மா பஜாரில் வாங்கிய கலர் கலரான  கைப்பையில் வைக்கும் அளவு   மடக்கும் குடைகள்,  லேடிஸ் அம்பரெல்லா என்று  பெயர்,  மழை வந்தபோது   பிரித்ததும்  கோபத்தோடு எதிர்ப்  பக்கமாக  வளைந்து வானத்தை  நோக்கி கப்பலாக வளைந்து விடும். அதை சாந்தப்படுத்தி  நிமிர்த்தும் போது ஒத்துழைக்காமல் சில கம்பிகள் குடையி லிருந்து பிரிந்து சன்யாசம் கொண்டுவிடும்.
காலம் எப்போதும்  மாறிக்கொண்டே  தான் இருக்கும்.  நீர்  நிறைந்திருந்த  போது மீன்  தண்ணீரில் தத்தளித்த  எறும்புக ளையும்  பூச்சிகளையும்  உண்டதே.  நீர் வற்றி மீன்  இறந்து விட்டதே  இப்போது  அந்த  எறும்புகளும் பூச்சிகளும் தானே மீனை உண்கின்றன. கடவுள்  எப்போதும்   சந்தர்ப்பங்களை ஆள்  பார்த்து  தான்  தருகிறான். இது தானய்யா  வாழ்க்கை.!   ஓடம்  ஒருநாள்  நீரினில்  ஏறும்.  நீரும் ஒருநாள் ஓடத்தில் ஏறும்.

மனிதனால்  என்றும்  தனித்து வாழ முடியாது. மனிதன்  ஒரு சமூக  விலங்கு.  நாம்  எப்போதும் நமது கூட்டாளிகளை,  நண்பர்களைத் துணைக்கு   தேடுகிறோம். இதில்  ஒரு சிக்கல் நமக்குப் புரியாதது  என்னவென்றால்.  நல்லவர்கள் என்று  நாம்  நினைப்பவர்கள்  உண்மையிலேயே  நல்லவர்களா? இல்லையா ?  இது  எதில் தெரியும்  என்றால் நாம்  அவர்களிடம்  கொண்டுள்ள  நட்புறவின்  தன்மையைப்  பொருத்து. இந்த  நட்புறவு  எப்படி  ஆரம்பித்தோம்  என்பதில்  அல்ல எப்படி  தொடர்ந்து போற்றி வருகிறோம் கடைசி வரையில் என்பதில்  தான் ரஹஸ்யம்  இருக்கிறது.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1426

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *