AYANAVARAM SIVA TEMPLE – J K SIVAN

அயனாவரம்  ஸ்வயம்பு லிங்கம்  –  நங்கநல்லூர்   J K  SIVAN 

அப்போதெல்லாம் தெருவில்  ஸ்கூட்டர்களோ, ஆட்டோக்களோ கண்ணில்  பட்டதில்லை. கை ரிஃஷாக்கள் மறைந்து போய்  சைக்கிள் ரிஃஷாக்கள்  காலால்  மிதிப்படாமல்  மோட்டாரில் ஓடியது.  எல்லோரிடமும் சைக்கிள் இருந்தது. கொஞ்சம் வசதி படித்தவர்களிடம் மோட்டார் சைக்கிள் இருந்தது.
அப்போதெல்லாம்  என்னிடமிருந்த சைக்கிளில்  அடிக்கடி   திருவல்லிக்கேணியிலிருந்து  அயனாவரம் செல்வதற்கு காரணம் அங்கே  ஒரு அன்பு இதயம் சதா மனமார  புன்னகை பூத்து  ”வாடா சிவா”  என்று உளங்கனிந்து  கூப்பிடும். என் அம்மாவோடு பிறந்த  குட்டி தங்கை  செல்லம்மா. செல்லம்மாவைப் பற்றி ஒரே வார்த்தையில் சொல்லவேண்டுமானால்   மணிமாமாவின் முகம். மணிமாமாவுக்கு புடவை கட்டினால்  செல்லம்மா சித்தி.  சித்தப்பா  வெங்கட்ராமய்யர்   நாகபட்டணத்தில் என் தந்தையின்  மாணாக்கர்.  இன்னும் என்ன உறவு வேண்டும்?
அயனாவரம்  சயானி சினிமாக்கொட்டகை  தாண்டினவுடனே   ராமானுஜம் காலனி என்று  இடது புறம் ஒரு தெரு திரும்பும் அதில் எதிரெதிராக எ வரிசையாக  ஒரே மாதிரியான  வீடுகள்.  குவார்ட்டர்ஸ்.  அதில் 23 எண்  வாசலில் என் சைக்கிள் தானாகவே நிற்கும்.  என் மகன் கண்ணன் என்னோடு வருவான்.
அதன் பிறகு பல வருஷங்கள் கழித்து  அங்கே   பரசுராமலிங்கேஸ்வரர் கோயில் தெருவில்  ஒரு  நிதி நிறுவனத்துக்கு செல்வேன்.இன்றும் அருமையாக  செயல்பட்டு வரும் அயனாவரம்  பெனிபிட்  பண்ட்  AYANAVARAM BENEFIT FUND  என்ற நம்பகமான நிறுவனம். அதோடு இன்னும் தொடர்பு கொண்டிருப்பது மகிழ்ச்சியும் பெருமையும் அளிக்கிறது.
அதைவிட  இன்னொரு அற்புதமான விஷயம் அந்த தெருவில் உள்ள ஒரு பழைய கால  ஆயிரம் வருஷ  சிவாலயம். ஸ்வயம்புவாக,  மூலவராக.  லிங்கத் திருமேனியாக.  தீண்டாத் திருமேனியாகவும், நிறம் மாறும் தன்மை கொண்டுள்ள ஆஃற்புத  பரசுராமலிங்கேஸ்வரர்.  தாயைக் கொன்ற பாபம் , தோஷம் நீங்க  பரசுராமர் மற்றும் பிரம்மன் ஆகியோர் இத்தலத்திற்கு வந்து சிவபெருமானை வழிபட்டு உய்வு  பெற்றிருக்கிறார்கள். நானும்  போயிருக்கிறேன்.  அம்பாள் பர்வதாம்பிகை எனும்  நாமம் கொண்ட சக்தி தெய்வம். அர்ச்சகர்கள்  இன்றுவரை அரச்சனை மற்றும் அபிஷேகம் பண்ணுவதற்கு  மூலவரைத் தொடுவதில்லை. இச்சிவலிங்கம் பருவகாலத்திற்கு தக்கவாறு நிறம் மாறும் தன்மையுடையது. ஆவணி முதல் மார்கழி மாதம் வரை சிவலிங்கம் கருப்பு நிறமாகவும், பங்குனி முதல் ஆடி மாதம் வரை பொன் நிறமாக மாறும் லிங்கம்.   இச்சிவாலயத்தில் ஆருத்ரா தரிசனம்,  பிரதோஷம்  ரொம்ப விசேஷம். கோவிலுக்கு எதிரே  அழகான  ஒரு குளம்.  பிரம்ம தீர்த்தம்.  யாரும்  பொறுப்பின்றி நெருங்கி அசுத்தம் செய்யாதவாறு நாலு பக்கமும் கம்பி கட்டி  சுவர்கள். சிவனுக்கு  அயன் என்று பெயர்.  ஆகவே  இந்த ஊரே  அயன்புரம் நாளடைவில் அயனாவரம் ஆகிவிட்டது.கிழக்கு பார்த்த  ஐந்து நிலை ராஜகோபுரம்.  உள்ளே சென்றால் கொடிக்கம்பம், த்வஜ ஸ்தம்பம், பலிபீடம் அப்புறம்  நந்தி அதைக்கடந்தால்  அர்த் தமண்டபத்தை அடையலாம் . இங்கு விநாயகர் காட்சிதருகிறார். கருவறை முன்பு உள்ள முகமண்டபத்தில் துவார பாலகர்கள் உள்ளார்கள் . அர்த்தமண்டபத்தில் வலது புறத்தில் வடக்கு பகுதியில் பாலசுப்பிரமணியர் மிக பெரியதாக தனி சன்னதியில் காட்சி தருகிறார். நடராஜர் சன்னதி ,உற்சவர் மூர்த்தி சன்னதிகள்  உண்டு.  பெரிய லிங்கத்தோடு  தீண்டாத்  திருமேனி கொண்ட  பரசுராமலிங்கேஸ்வரருக்கு   ஜலம் ,இளநீர், பன்னீர்  அபிஷேகம் மட்டுமே.  மற்ற அபிஷேகங்கள் ஆவுடையாருக்கு.  கஜ ப்ரஷ்ட விமானம். கோஷ்ட மூர்த்திகளாக  நர்த்தன கணபதி ,தக்ஷிணாமூர்த்தி ,விஷ்ணு ,ப்ரம்மா மற்றும் துர்கை  அருள்பாலிக்கிறார்கள். .
பரசுராமர்  அப்பா ஜமதக்கினி மஹரிஷியின் கட்டளைக்கேற்ப அம்மா  ரேணுகா தேவியை சிரச்சேதம் செய்த  பாவத்தை போக்கிக்கொள்ள   இங்கே வ அந்த சிவனை வழிபட்டார்.  எனவே  மூலவருக்கு பரசுராமலிங்கேஸ்வரர் என்ற பெயர்.அருமையான பல்லவர்கள் கட்டிய 8-9ம் நூற்றாண்டு சிவாலயம்.
பிரம்மாவுக்கு  அயன்  என்று பெயர்.  பிரம்மன் இங்குள்ள குளத்தில் நீராடி சிவனை வழிபட்டதால் இக்கோயில் குளத்துக்கு “பிரம்ம தீர்த்தம் “ என்று பெயர் ஏற்பட்டது , இக்குளமானது கோயிலின் எதிர் புறத்தில் உள்ளது .  இவ் ஊருக்கு அயன்புரம் என்று பெயர் ஏற்பட்டது ,தற்போது அயனாவரம் என்று அழைக்கப்படுகிறது . இக்கோயில் மிக அழகாக பராமரிக்கப் படுகிறது .
வில்லிவாக்கத்தில் இருந்து கொன்னூர் நெடுஞ்சாலைக்கு தெற்க்கே ரயில்வே காலனி பேருந்து நிறுத்தத்தில் இறங்கி இக்கோயிலுக்கு செல்லலாம் .கீழ்ப்பாக்கத்தில் இருந்து செல்லும் நியூ ஆவடி சாலையில் வ . உ. சி . நகர் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி வடக்கே சென்றால் இக்கோயிலை அடையலாம்.  ஒரு வீடியோ இணைத்திருக்கிறேன் https://youtu.be/TXLiUn0N4Qo?si=UAGaSUnV8qXbjfeb

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1426

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *