A DEEPAVALI YEARNING – J K SIVAN

தீபாவளி பதிவு 3   –   நங்கநல்லூர்  J K  SIVAN

ஒரு தீபாவளி ஆதங்கம்-  

காலம் என்றைக்கு  நிதானமாக  ஆற அமர  சென்றது.  என்னவோ தலை தெறிக்க  ஒரு ஓட்டம்.  கண் மூடி கண் திறப்பதற்குள் ஒரு வருஷம் ஓடி  இன்னொரு தீபாவளி வந்தாச்சு.

முன்பு  குழந்தைகளுக்கு  தீபாவளியில் இருந்த நாட்டம்  இப்போது காணோம்.  பட்டாசு  வாணங்களின்  விலைவாசி உயர்வு ஒரு காரணம் இல்லை.  பட்டாசு  தெருவில் வெடிப்பதே பிடிக்காமல் போய்விட்டது.  எந்த குழந்தையானாலும்  கையில்  ஒரு  மொபைல் வைத்துக்கொண்டு யூ  ட்யூப் பார்க்கிறது.  எண்ணற்ற   வாண  வேடிக்கைகள் அதில் காட்டுகிறார்களே . தீபாவளி பட்டாசு வாண  வேடிக்கையெல்லாம்  மொபைல் போனிலேயே கொண்டாடும் குழந்தைகள் அதிகரித்து விட்டார்கள். மற்ற குழந்தைகளோடு சேர்ந்து ஓடி ஆடுவது தெரியாமல் போய்விட்டது.  தனியாக  ஒவ்வொரு குழந்தையும் கையில் மொபைல் உலகத்தில் சஞ்சரிக்கிறது.

தீபாவளி  சாதாரணமானவர்களை விட  புதுசாக கல்யாணமான  பெண் மாப்பிள்ளைகளுக்கு  மதிப்பானது.  தலை தீபாவளி என்ற விசேஷம்  நமது பாரம்பரிய கலாச்சாரம்.  பெண்ணும் மாப்பிள்ளையும்  VIP களாக  மாமனார் வீட்டில்  உபசரிக்கப் படுவார்கள்.  எனக்கும் அந்த மரியாதை நடந்திருக்கிறது. தலை கால்  புரியவில்லை அப்போது எனக்கு.  பெண் வீட்டார்கள் முன்னெச்சரிக்கையாக எல்லா ஏற்பாடுகளும் செய்து மாப்பிள்ளையையும், அவர் வீட்டார், சம்பந்திகளையும்  உபசரித்து வரவேற்று தக்க வசதிகளோடு  தலை தீபாவளி சிறப்பு விருந்து விழாக்களில் பங்கேற்க வைப்பார்கள்.  அந்த காலம் மலையேறிவிட்டது.  

ஒரு சினிமா  எம். கே. தியாகராஜபாகவதர் நடித்த  ஹரிதாஸ் ஐந்து வருஷம் ஓடியது.  நான்கு ஐந்து தீபாவளிகள்  பார்த்தது.  இப்போது புது மாப்பிள்ளை பெண்  ஒரு  தலை தீபாவளி பார்த்தாலே  ரொம்ப ஆச்சர்யம்.  ஒரு வாரம் ஓடும் படம்  வெற்றிகரம் என்று சொல்வதைப் போல இருக்கிறது இந்த சமாச்சாரம்.  என்ன காரணம்?.  பொருந்தாத இருவரை பணம் அநேகம் செலவழித்து சாஸ்திரிகள் சேர்த்து வைத்து  நடத்திய கல்யாணத்தை   கருப்பு கோட்டு  ஆசாமி பணம் வாங்கிக் கொண்டு  பிரித்து விடுகிறான்.  இதில் தப்பு அவர்களுடையதல்ல.  பெற்றோர் மேலும்  மணமக்கள் மேலும் தான்.

ஒரு சில  கல்யாண  சம்பந்தங்களில் இப்படி எல்லாம் கண்டிஷன்கள்  போட்டு அதை ஏற்று நடக்கும் திருமணங்களின் கதை  இம்  மாதிரியாகி விடுகிறது. போன வருஷம் கல்யாணமாகி இந்த வருஷம் தலை தீபாவளி சந்தோஷமாக கொண்டாட வழியில்லாமல் வக்கீல் வீட்டுக்கு  அலையும் குடும்பங்களின் பரிதாபம் கண்களில் நீரை நிரப்புகிறது.  ஒருவேளை அதிகமாக தேவைக்கு மேல் சுதந்திரம் கொடுத்து பிள்ளை பெண்களை வளர்க்கின்றோமோ ? தப்பு  நம்மை யார் லக்ஷியம் பண்ணுகிறார்கள். அவர்கள் கை  நிறைய சம்பாதிப்பதால் தானே  முடிவெடுப்பதால்,  நான் பெரியவனா நீயா என்ற கேள்விகள் பூதாகாரமாக கிளம்ப அதனால் விளையும் கொடூரமா?

சமீபகாலமாக  கண்ணில் பட்ட சில அச்சம் தரும் திருமண சம்பந்த விளம்பரங்களில் காணும் வாசகங்கள்:
”வரன்,  மாப்பிள்ளையாக விரும்புபவர்  வருமானம்,   வருஷ  சம்பளம்  20 லக்ஷ ரூபாய்களுக்கு மேல் இருப்பவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்.
நன்றாக படித்த, நல்ல சம்பாத்தியம் உள்ள  வேலையில்  இருக்கும்,  மேல் தட்டு   வருமான வசதியுள்ள  குடும்ப பெண்கள் மட்டும்  விண்ணப்பிக்கவும்.
அமெரிக்கா, ஐரோப்பா,  இங்கிலாந்து  போன்ற நாடுகளில்   மேற்படிப்பு    MS  படிக்கும்,  நிரந்தர வேலை பார்க்கும்  பெண் தான் தேவை. மற்றவர்கள் அணுக வேண்டாம்.
பிள்ளை  அமெரிக்கா இங்கிலாந்து, ஐரோப்பா  நாடு ஏதாவதில் நல்ல வேலை பார்க்கும் மாப்பிள்ளை தேவை.
இந்தியாவில் பெங்களூர், டில்லி, பூனா, சென்னை  போன்ற பெரிய நகரங்களில் உயர்ந்த வேலையில்  வருஷம் 25 லக்ஷம் சம்பாதிக்கும் மாப்பிளை  மட்டும் விண்ணப்பிக்கவும்.
எங்கள் பெண்ணுக்கு நிறைய  பட்டங்கள் பெற்ற,  ஐந்து லக்க  சம்பளம் வாங்கும் பையன் மட்டுமே  தேவை.
பெண்களின் பெற்றோர்  திருமணத்துக்குப் பிறகு பெண்ணோடு வசிக்கலாம்.  பிள்ளையின் பெற்றோர் களுக்கு இந்த சலுகை  எதிர்பார்க்க வேண்டாம்.  எங்கள் பெண்ணுக்கு  அதில் ஒப்புதல் இல்லை  என்பதை ஆரம்பத்திலேயே தெரிவிக்கிறோம்.
பெண் அழகாக, சிவப்பாக, ஒல்லியாக , உயரமாக இருக்கவேண்டும்.  ஒரே பெண்ணாக, வசதி அதிகம் உள்ள வீட்டில் பெற்றோர்  மல்டி நேஷனல் கம்பெனிகளில்  ஏதாவது ஒன்றில் வேலை பெண்ணுக்கு  கிடைக்கும் படியாக ஏற்பாடு செய்பவர்களாக  இருக்கவேண்டும்.
பையன்   MS, or Phd பட்டதாரியாக  வெளிநாட்டில் நல்ல  உத்யோகத்தில், நிறைய சம்பளம் வாங்குப வராக இருக்க வேண்டும்.
எங்கள் பெண்ணுக்கு   ஒல்லியாக, உயரமாக, சிவப்பாக இருக்கும்  மாப்பிள்ளை,  அழகாக, MNC வேலை பார்ப்பவராக இருக்கவேண்டும்.  பெண்ணுக்கும் பிள்ளைக்கும்  ஒரு வருஷம் ரெண்டு வருஷம்  மட்டும் தான் வித்யாசம் இருக்க வேண்டும்.
சென்னையில், பெங்களூரில் உள்ள  வரன்கள் மட்டும் விண்ணப்பிக்கவும். வேறு இடங்களில்  உத்யோக மாக இருப்பவர் கல்யாணத்துக்குப் பிறகு  மேலே சொன்ன ரெண்டு நகரங்கள்  ஒன்றில் வேலையை  மாற்றிக் கொள்ள ஒப்புக்கொள்ளவேண்டும். விருப்பமானவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்.” இது கொஞ்சம் தான். இன்னும் வினோதமான கண்டிஷன்கள் இருக்கிறது.
”பிள்ளைக்கு சமைக்க தெரியவேண்டும். எங்கள் பெண் சமைக்க மாட்டாள், காப்பி போட.க்கூட  தெரியாது. எல்லா வேலைகளையும்   டிரைவிங் உட்பட  மாப்பிள்ளை தான் செய்யவேண்டும்.. பெண்  சம்பளத்தில் பாதியை தனக்கும், மீதியை அவள் பெற்றோருக்கும் தான் அனுப்புவாள்.பிள்ளை பங்கோ, கணக்கோ, கேட்கக்கூடாது, எங்கள் பெண் கருப்பு, குண்டாக இருப்பாள், அதனால்  பிள்ளையும் அப்படி இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.  ஒல்லியாக, சிவப்பான, மாநிறம் கொண்டவர்கள் மட்டும் அணுகவும்.”
யாருமே குணம்,குடும்ப கௌரவம்,  பரம்பரை, பின்னணி, உடல் நிலை, ஆரோக்கியம், வாழ்க்கை லக்ஷியம், பக்தி, இறை நம்பிக்கை,  பற்றி பேசுவதில்லை.   ஜாதக பொருத்தம்  பார்ப்பதில்லை.
மேலே சொன்னது தான் பொருத்தம்.   முற்காலத்தில் போல்  பெண்ணுக்கு, கைவேலை, கோலம், சமையல் கலை,  இசை ஞானம்,  குடும்ப பாங்கு ,  பெரியவர்களை அனுசரித்து போகும் தன்மை,  மட்டு மரியாதை பற்றி கவலைப் படுவதில்லை.
குணத்தை விட பணம் முக்கியமாக போனால் மனம் எங்கே எப்படி  ஒன்றிணையும்?  அகம்பாவம் அமரிக்கையை தின்று விடாதா?
தும்பை விட்டு வாலைப் பிடிக்கும் பெற்றோர்கள் பின்னர்  லபோ  திபோ என்று கூச்சலிட்டு அழுது மனம் வருந்தி என்ன பயன்.  நிறைய கல்யாணங்கள் ஒரு சில மாதங்களிலேயே முறிந்து விடுவதன் காரணம் புரிகிறதா?
கல்யாணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்று  சொல்வது ஏட்டோடு நின்றுவிட்டது.  எத்தனையோ கனவுகளுடன் வாழ்க்கையை எதிர்ப்பார்க்கும் இளைய பெண்கள் பிள்ளைகள் இதை உணரவேண்டும். பெற்றோர் தக்க அறிவுரை வழங்க வேண்டும் அல்லது  தாங்களாகவாவது திருந்தவேண்டும்,  அறிவுரை  பெறவேண்டும்.  அனுபவஸ்தர்களை கலந்தா லோசித்து  கல்யாணம் நிச்சயம் செய்யவேண்டும். நிறைய  கொலை, கொள்ளை, வன்முறைச்  சம்பவங்கள் வேறு இதை ஆதாரமாகக் கொண்டு வளர்கின்றன.  மனோ வியாதிகள் அதிகரிக்கிறது.  ஆணோ பெண்ணோ  விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை  அவசியம் வேண்டும். அன்பும் பண்பும் கலந்த இல்வாழ்க்கை அமையவேண்டும்.  கல்யாணம் என்பது ஒரு காண்ட்ராக்ட் இல்லை. ஆயிரம் காலத்து பயிர். வம்சாவளிக்கு அத்தியாவசியமானது.  பணம் இதில் குறுக்கே தலையை நீட்ட அனுமதிக்க கூடாது.எனக்கு பெண்ணையோ, பெண் வீட்டாரையோ குறை கூறும் நோக்கம் இல்லை. அதே சமயம்  பிள்ளை, பிள்ளை வீட்டார் தவறே செய்யாத உத்தமர்கள் என்று ஒப்புக்கொள்ள மாட்டேன். ரெண்டு கை  தட்டினால் தான் சத்தம்.  கையை   தட்டாமல், பிறை சுட்டிக்காட்டாமல், ரெண்டு கைகளும் அன்போடு  கூப்பிட பழகுவோம். வாழ்வின் ஒவ்வொரு கணமும் ஆனந்தமாக அனுபவிக்க தான் ஆண்டவன் நம்மை படைத்து இந்த பூமியில் உலவ விட்டிருக்கிறான். அவனுக்கு நன்றி  செலுத்திவிட்டு இதை அனுபவிக்கலாமே. 

இனிமேலாவது, இந்த தீபாவளியிலிருந்தாவது  குறைகள்,துயரங்கள், துன்பங்கள், கோபங்கள், ஏமாற்றங்கள் , மாற்றங்கள் நன்றாக முழுதுமாக  குறைய  ஆண்டவனை வேண்டுவோமா ?
தொடரும்  

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1426

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *