THE FOUR AMAVASYAS = J K SIVAN

அமாவாசை  நாலு  இருக்கிறது   –  நங்கநல்லூர்  J K  SIVAN

நண்பர்களே,  நமக்கு  அமாவாசை என்றால் என்ன என்றே  பல பேர் அறியாமல் இருப்பது  ரொம்ப துர்பாக்யமான நிலை.    காலம் அந்த அளவு க்ஷீணித்து விட்டது என்று காலத்தின் மேல் பழியைப் போட்டுவிடலாம்.  தந்தி பாஷையில் சிலர்   இது கலிகாலம் என்று முணுமுணுப்பது கேட்கிறது.
அமாவாசை  எப்படி ஏற்படுகிறது என்று  விஞ்ஞான பூர்வமாக  பார்ப்பது ஒருபுறம் இருந்தாலும் பல குடும்பங்களில்  அமாவாசை ஒரு முக்கியமான  திதி யாக  அனுஷ்டிக்கப்படுகிறது.

கிராமத்தில் அமாவாசை திதி துவங்குவதற்கு முன்பு வீட்டில் தரையை மெழுகி சுத்தம் செய்வது, உடுத்திய துணிமணிகளை வைத்து உலர வைப்பது, பூஜை பாத்திரங்களை விளக்கி வைப்பது போன்ற பணிகளை செய்வார்கள்.  விடியற்காலையிலேயே  குளிக்க  ஆறு குளம் போன்றவற்றுக்கு சென்றுவிடுவார்கள்.  ஆற்றங்கரை குளத்தங்கரையில்  புரோஹிதர்கள்   பூஜா  உபகரணங்களோடு   முடிச்சு முடிச்சாக  உட்கார்ந்து   திதி மந்திரங்கள் சொல்லிக் கொடுத்து  தர்ப்பணம் செய்ய  வைப்பார்கள்.

அமாவாசையில்  விரதம்  இருப்பார்கள்.  ஒரு திதி முதல் நாளில் தொடங்கினால் மறுநாள் பகல் பொழுதிலும் இருக்கும்.  என்று அதிக நேரம் இருக்கிறதோ அன்று அமாவாசை திதி நாளாக கருதப்படும்.

அமாவாசை விரதம் இருப்பவர்கள் பசுவுக்கு அகத்திக்கீரை கொடுக்கும் வழக்கம் உண்டு.  ஊறவைத்த பச்சரிசி, வெல்லம் கலந்து  சில குடும்பஸ்தர்கள் கொடுப்பார்கள். அநேகர்  வீட்டில் பூஜை அறையில் தெய்வ படங்களுக்கு பூ சாற்றி அலங்காரம் செய்து வழிபடுவார்கள்.

மதிய உணவு வாழை இலை போட்டு ”படையல்” செய்து முன்னோர்களை நினைத்து வழிடும்  வழக்கம் இன்றும் உள்ளது.

 காகங்களுக்கு உணவு வைத்த பிறகு வீட்டில் உள்ளவர்கள் உணவு உண்ணவேண்டும் என்பது  சம்ப்ரதாயம். .குறிப்பாக வாழை இலையில்  தான்  நைவேத்தியம், படையல், பரிமாற வேண்டும்.  விரதம் இருப்பவர்கள் அன்று இரவு பால் பழம் மட்டும் எளிய உணவாக எடுத்துக் கொள்வார்கள்.

சாதாரண  அமாவாசையை  விட  மற்ற   மூன்று  அமாவாசைகள்  இருக்கிறதே அவை ம்ப  ரொம்ப விசேஷமானவை. ஒன்று  ஆடி அமாவாசை.   அன்று சந்திரனும் சூரியனும் கடக ராசியை ஆக்ரமிக்கிறார்கள். மிகவும் முக்கியமான நாள் இது. முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யும்  விசேஷமான அமாவாசை.

வருஷா வருஷம் பலர்  சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் ஆடி அமாவாசை சிறப்பாக கொண்டாடு வார்கள்.  லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருவது ஒரு கண் கொள்ளாக்  காட்சி. என்னால்  மேலே  ஏறமுடியாமல்  மனதில் ஆசையை  தேக்கி வைத்துக் கொண்டிருக்கிறேன். 

ரெண்டாவது முக்கிய அமாவாசை  தை  அமாவாசை.இதுவும்    ஹிந்துக்களுக்கு  ஒரு  சிறப்பு வாய்ந்த அமாவாசை.  இந்த அமாவாசை விசேஷத்துக்கு  ஒரு  கதை  இருக்கிறது. அது மறந்து போவதற்கு  முன்பாக
சொல்லிவிடுகிறேன்.
 தனது பக்தன் ஒருத்தனை சோதனைக்குள்ளாக்கி அவனை அன்னை அபிராமி ஆட்கொண்ட நாள் தை  அமாவாசை . அந்த பக்தர் பெயர்  சுப்ரமணிய ஐயர்.   இந்த பெயர்  அவருக்கே  மறந்து போய் எல்லோரும் அவரை அபிராமி பட்டர்  என்று அழைப்பார்கள். திருக்கடையூர் அபிராமி மேல் அவ்வளவு பக்தி அவருக்கு.
 தை அமாவாசை  அன்று அம்மன் முன் தியான நிலையில் இருந்த அவரிடம் தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னர் இன்று என்ன திதி என்று கேட்டதாகவும் அதற்கு பவுர்ணமி என்று சொல்லியதாக வரலாறு. தன்னை  அவ்வாறு சொல்ல வைத்தவள் அன்னை அபிராமி தான் என்பதை அவர் அனைவருக்கும் அம்மனின் அருளால் நிரூபித்தார். திருக்கடையூர் அபிராமி கோயிலில் அபிராமி பட்டர் விழா தை அமாவாசை அன்று மஹோன்னதமாக  நடந்து வருகிறது.

 மூன்றாவது அதி முக்கிய அமாவாசை  மஹாளய அமாவாசை : புரட்டாசி மாத பவுர்ணமிக்கு அடுத்த நாள் தொடங்கி அமாவாசை வரையில் உள்ள 15 நாட்கள் மஹாளய பக்ஷம் எனப்படும். பக்ஷம் என்றால் பாதி மாசம்.  இந்த பதினைந்து நாளும்   இறந்த நமது முன்னோர்கள் அனைவரும் பித்ரு லோகத்திலிருந்து பூமிக்கு வந்து நம்மோடு தங்கும் காலம்.

என்னென்னவோ  காரணத்தால்  நடக்காமல் விடுபட்டுப் போன தாத்தா,பாட்டி, அப்பா அம்மா ஸ்ராத்தங்கள் இந்த  பக்ஷத்தில் செய்வதன் மூலம்  நிவர்த்தி யாகும். அவரவர்கள் வசதிக்கு ஏற்றவாறு இந்த மஹாளய  பக்ஷத்தில்  அருகே உள்ள விசேஷமான ஊர்களுக்கு சென்று தங்களால் முடிந்ததை முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் கொடுப்பது  வழக்கமாக இருக்கிறது.  ஹிந்து மத சம்பிரதாயத்தை மதிக்கும் நாம் கட்டாயம்  பசியோடு வீடு நோக்கி வரும் நம் முன்னோர்களை திருப்தி படுத்த இந்த மஹாளய  பக்ஷ திதிக்களை தவற விடக்கூடாது.

இன்னொரு விசேஷ அமாவாசை பற்றி உங்களுக்கும் தெரியும்.  கிருஷ்ணனை தெரிந்தவர்கள், மஹா பாரதம் படித்தவர்கள்  கேட்டவர்கள் அனைவரும் அறிவோமே .  துரியோதனன்  எதிரி பாண்டவர்களில் ஒருவன் சஹாதேவனை  சந்தித்து சாஸ்திர  நிபுணன் அவனிடமிருந்து மஹாபாரத போருக்கு நாள் குறித்துக் கொண்டான். அது அமாவாசை அன்று.  அன்று யுத்தம் ஆரம்பித்தால் நிச்சயம் பாண்டவர்கள் தோல்வி உறுதி.  அமாவாசைக்கு முதல் நாளே கிருஷ்ணன்  தர்ப்பணம் பண்ண, எல்லோரும்  ஒருபுறம் அதிசயிக்க, சூரியனும் சந்திரனும் அவசரமாக சந்தித்து  நாம்  நாளை தானே ஒன்று சேர்கிறோம்,ஏன் இன்றே   கிருஷ்ணா நீ  அம்மாவாசை தர்ப்பணம் செயகிறாய்  என்று கேட்டார்கள்.  கிருஷ்ணன் ”சூரிய சந்த்ரர்களே, நீங்கள் ஒன்று சேர்ந்த நாள் தான் அமாவாசை, இதோ என் முன்னால் நீங்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து நிற்கிறீர்கள்  அதனால் தான் இன்றே அமாவாசை ஆகிவிட்டது என்றார். அன்று யுத்த நாள் குறித்து பாண்டவர்கள் வென்றார்கள். இந்த அமாவாசைக்கு போதாயன அமாவாசை என்று பெயர்.சதுர்த்தசி திதியில் வரும் அமாவாசை.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1426

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *