THE BLACK BOY’S HOROSCOPE – J K SIVAN

கருப்பனின் ஜாதகம் – ராசி பலன்  –    நங்கநல்லூர்  J K  SIVAN

அவன்  எல்லோரையும் போல  பிறக்கவில்லை.  எந்த வீட்டில் எப்போது  யாருக்கு  மகனாக  பிறக்கவேண்டும் என்று முன்கூட்டியே  முடிவெடுத்து பிறந்தவன்.  வீட்டில் இல்லை  சிறைச்சாலைக்குள்.  அவன் பிறந்தபோது, அவனை எவரும்  கொஞ்சவில்லை.   பெற்ற தாய் தந்தைக்கு அவன்  பொழுது விடிந்ததும் கொல்லப்படப் போகிறானென்று நன்றாகவே தெரியும்.  ஆகவே  இரவோடு  இரவாக அவனை  பெற்ற  தாயிடமிருந்து பிரித்தாகிவிட்டது. பிரித்து  தூக்கிக்கொண்டு போனதே  அப்பா தான்.  அவன் பிறந்ததோ, சிறையிலிருந்து வெளியேறியதோ கூட  யாருக்கும் தெரியாமல் அவனே  நள்ளிரவில், யமுனையில் வெள்ளத்தை லக்ஷியம் பண்ணாமல் கடந்து அக்கரையில்  கோகுலம் கிராமம் செல்ல, அங்கு நந்தகோபன் வீட்டில் யாரும்  அறியாமல்  அங்கே பிறந்த பெண் குழந்தையை  எடுத்துக் கொண்டு  கருப்பனை  அங்கே பெண்ணை பெற்ற  தாயின் அருகே விட்டுவிட்டு  மீண்டும் பெண் குழந்தையோடு மதுராவில்  சிறைக்குள் திரும்ப  கச்சிதமாக ஏற்பாடுகள் செய்தவன்.

ஆகவே  அவன் பிறந்ததே  வெளியே  தெரியாதபோது அவன்  பிறந்ததை  யார்  கொண்டாட முடியும்?.  வளர்ந்ததும் எங்கோ! .  அவன் ஜாதகம் பார்த்தார்களா?. இல்லையே. பெற்ற தாய் தந்தையிடமிருந்து பிறந்த  சில வினாடிக ளிலேயே பிரிந்த நிலையில்  தாய் தந்தை  எந்த  நல்ல  நாள்  பார்த்து  பேர்  வைத்தார்கள்?  அவன்  கருப்பாக இருந்ததால்  கருப்பன் என்கிற  அர்த்தம் கொண்ட  ”கிருஷ்ணன்”என்ற  காரணப்பப்பெயரை கொண்டவன்.  பிறந்த யாருக்கும்  ஜாதகம் கணிக்க முடியுமே.   அவன் பிறந்த நாள், நேரம்  எல்லாம்   சரியாக  தெரிந்ததால்  அதை வைத்து கொண்டு  பல   ஜோசியர்கள்  கணித்தது  அவன்  வாழ்க்கையை  படம்  பிடித்து காட்டி  விட்டதே! அவன்  ஏன்  மற்றவர்களை  விட  வித்யாசமாக   இருந்தான்??அவன்  ஏன்  ஒரு  காந்த சக்தியாக  இருந்தான்? .கண்ணற்ற சூர்தாசை கேட்டால்  அவர்  கவிதை ரூபமாகவே  அவன் ஜாதகத்தை  பாடிவிடுகிறார்!.

பிறந்த நாள்:  மதுராபுரியில் ( (27*25’ North; 77*41’ East) ஜூலை 19, 3228. Remainder of Moon’s main period at the time of birth = 4 yr – 2 ms -24 days. Planetary Positions at the time of birth of Bhagavan Sri Krishna:

(கி.மு)  நடு  ராத்திரி. கிருஷ்ண பக்ஷ அஷ்டமி ஆவணி மாசம் ரோகிணி  நக்ஷத்ரம்.  இந்த  கிருஷ்ணன்  பிறந்த  குறிப்பு கொடுத்தது  நானல்ல  ஸ்ரீ வியாச மகரிஷி.    பாகவதத்தில்.  ராசிபலன்  சொல்லுமுன்  நக்ஷத்ரங்கள்  கிரகங்கள்  எங்கு  எப்படி  இருந்தன என்று இந்த  கிருஷ்ணன்  ஜாதகமும்  நவாம்சமும்  சொல்லட்டும்   

இங்கே  பாருங்கள்  ரெண்டு பேர்  ரொம்ப ஆர்வமாக  பேசிக்கொண்டிருக்கிறார்கள்.  ஓஹோ பேச்சை பார்த்தாலே அவர்கள்  அனுபவமுள்ள  ஜோசியர்கள் என்று தெரிகிறதே.  யார்  இந்த  ரெண்டு  ஜோசியர்கள்  ரொம்ப  ஆர்வமுடன்  கிருஷ்ணன்  ஜாதகத்தை அலசுகிரார்களே?  அவர்கள்  என்ன சொல்கிறார்கள்  என்று  முழுமையாக  காதில் விழ வில்லை என்றாலும்  ஏதோ காதில் விழுந்தவரை அவர்கள்  பேசும்  ஜாதக பாஷை  நமக்கு  தெரியாததாலும்  காதில் பட்டதை  கை  எழுதுகிறது.  தப்போ  ரைட்டோ  அவரவர்தேவைக்கு  ஏற்றபடி  எடுத்து கொள்ளுங்கள்.  நமக்கு  தெரியாததில்  நமது  நீளமில்லாத மூக்கு  நுழையாது.

”சுப்பண்ணா,    கிருஷ்ணர் ஜாதகத்திலும் லக்னாதிபதி சுக்கிரன் , 12 – ம் அதிபதி செவ்வாயுடன் இணைந்து மூன்றாம் வீட்டில் இருக்கிறார். மேலும் பாவி ராகுவும் கூடவே நிற்கிறான்.ஆகவே ஸ்ரீ கிருஷ்ணர் சிறையில் பிறக்கும் அமைப்பு ஏற்பட்டது.    லக்னாதிபதி 12 ம் அதிபதியுடன் சம்பந்தம் பெற்றால் சிறை வாசம் உண்டு. கிருஷ்ணன்  தப்பு பண்ணி ஜெயிலுக்கு போகலே, அம்மா அப்பா ஜெயிலில் இருந்தா.  தேவகிக்கு அங்கே பொறந்தான் அதனாலே கொஞ்சம் சிறைவாசம்”

“நாணா, நான்  அப்பவே  சொன்னேனோல்லியோ.  இதோ பார் எப்படி  கரெக்டா அமைஞ்சிருக்கு இந்த  ஜாதகம்.   ஜாதகன்  பெரும்  புத்திசாலி,  பேர் அழகன்,  பெரிய செல்வந்தன், மாணிக்கம், மரகதம்,
 வைரங்கள் ஜொலிக்கும்  16000 மாளிகைகள்  கொண்டவனாக  இருக்கவேண்டும்.  ஜாதகம் பொய்  சொல்லாதுடா. !  

சுப்பண்ணா ,  நீ  சொன்னது சொன்னது  சரிதாண்டா.  ஆனா  எல்லாமே அவன் கிட்ட இருக்கிற  செல்வத்திலே  ஒரு  துக்குணியூண்டு  என்றால்  பார்த்துக்கோ!

சுப்புணியும்  நாணாவும் மாற்றி  மாற்றி  அலசுவதில்  யார்  எதை சொன்னார் என்று நான்  கவனிக்க வில்லையே.  அவர்கள் பேசியது காதில் விழுந்தவரை  இதுதான் :

 எல்லா கிரகங்களும் அவன் சொற்படியே கேட்கும்.  தியாக செம்மல். அவன்  ஒரு தனிப்பிறவி. இறைவனின்  மானுடஉரு.
அன்பை  தருவதிலும்  தானே  அதுவாகவும்  ஆனவன். அவன்  ரிஷப  ராசிக்காரன்யா!! . லக்னாதிபதி சுக்ரன்!  கேக்கணுமா?”  ரோஹிணி  நக்ஷத்ரம் வேறே! லக்னத்தில் மூன்றாம் அதிபதி சந்திரன் உச்சம் பெற்று இருக்கிறான். மூன்றில் செவ்வாய் இருக்கிறான். ஆகவே கிருஷ்ணர் மிகவும் வீரமானவராகவும் யுத்தத்தை வழிநடத்தும் தைரியமும் அரக்கர்களை வதம் செய்யும் வீரமும் உடையவராகவும் இருந்தார். பாகவதம் படிக்காமலேயே, பாரதம் கதை தெரியாமலேயே  நம்மளாலே ஜாதகத்தை பார்த்தே  இதை  சொல்ல முடியறது பார்த்தியா.”

.  சந்திரன்,  சனி, அங்காரகன் எல்லாம்  உச்சத்திலே இருக்கா. அவா அவா   கிரகத்திலே சூரியன், குரு,  புதன்  உக்காந்திருக்கா.பாக்கியாதிபதி சனி பகவான் லக்னத்தை பார்ப்பதாலும் லக்னத்தில் சந்திரன் உச்சம் பெற்றதாலும் லக்னாதிபதி சுக்கிரனாக இருப்பதாலும் அழகுக்கு பஞ்சமில்லாமல் தெய்வீக உருவம் பெற்றார்
நாணா , என்னடா சொல்றே,  கிருஷ்ணன் அழகுக்கு  கேட்கணுமா?ரிஷப ராசியிலே  லக்னத்தில்  சந்திரன் அக்கடான்னு இருந்தா  ஜாதகன்,அழகனா, பேரும்  புகழுமா  ஆள் மயக்கியா, செல்வத்திலே புரளாம என்ன பண்ணுவான்?  ஒண்ணாம் மடத்திலே  கேதுங்கிறதாலே கொஞ்சம்  அதிகமாவே கேளிக்கை  உண்டு. அபவாதங்களும் கூட!.

3ம்  வீட்டிலே  செவ்வாய்  நீச பங்கனா இருக்கான் என்கிறதாலே   ஆசாமி யுத்தத்திலே  பயமே இல்லாத படு சாமர்த்திய மானவன்,  தைர்யசாலி!

ரோகிணி அழகி, சந்திரனை  ஆக்ரமித்தவள். எனவே சந்திரனும் ரோஹிணியும் சேர்ந்த ஜாதகன்  அழகனாக ஆள் மயக்கியாக இருந்ததில்  என்ன அதிசயம்?. ரிஷபத்துக்கு  பசு  நேசம்  உண்டே!!  இந்த  ராசிக்காரன் பசுக்களிடையே பிரபலமானவன்  இதனால் தானோ?? 6ல்  புதன்,  10ல் சனி  பிரதானமாக  இருந்ததாலே   இந்த   ஜாதகன்  கிருஷ்ணனை,   தர்ம ஞாயத்தில்  ஸ்ட்ராங்காக  இருக்க உதவியிருக் கிறான்.  அங்காரகன்  ராஹுவுடன்  சேர்க்கையால்  ஜாதகன்  ராஜதந்திரி.   லக்னாதிபதி அம்சத்திலும் அவர் சொந்த வீட்டில் இருப்பதால் அவர் நல்ல பண்புடன் இருந்தார்.2 – ம் இடத்து அதிபதி புதன் ஐந்தாம் வீட்டில் உச்சம் பெற்றான். ஆகையால் அறிவுக்கு ஒரு குறையும் இல்லை. அணைத்து வேதமும் அறிந்தவராக இருந்தார். கிருஷ்ணனுக்கு தெரியாத  வேதமா, சாஸ்திரமா, நீதி நேர்மையா? நாலாம் வீட்டில் குரு ஆட்சி பெற்ற சூரியனுடன் இருப்பதால் கல்வியில் மிக சிறப்பாக இருந்தார். 64 கலைகளையும் அறிந்தவர் என்று பெயர் எடுத்தார்.   இரண்டாம் அதிபதி அறிவு ஸ்தானத்தில் உச்சம் பெற்றதால் அவர் பேச்சில் மிக உன்னத தத்துவம் அடங்கி இருந்தது.  க்ரிஷ்ணனாலே அதனால் தான் யுத்தகளத்தில்   கூட  அந்த அமர்க்களத்திலேயும்  கீதையை பொறுமையா அர்ஜுனனுக்கு, அவன் மூலம் நமக்கு சொல்ல முடிந்தது இல்லையா.?”
ஆமாம். கேது  ஒன்பதாம் வீட்டில் இருக்கிறார். இது பாக்ய ஸ்தானம். மேலும் கேது ஞான காரகன் . இந்த கேது திசை முடியும் போது தான் கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு கீதையை உபதேசம் செய்தார்.

சுப்பண்ணா, சுக ஸ்தானமான நாலாம் வீட்டில் குரு இருப்பதால் கிருஷ்ணருக்கு ஒரு குறையும் இல்லாமல் அணைத்து சுகத்தையும்  அனுபவிச்சார்.  கேட்டதை கொடுப்பவன் கிட்டே   எல்லாமே  நிறைய  இருக்கணுமே!

நாணா ,  நான்  கண்டுபிடிச்சதை சொல்றேன் நீ   இதை முதல்லே கேளுய்யா!!  ரெண்டுலே உடைமையானவன்  புதன்;  படு  ஜோரா 5ல் இருக்கான்.  அதனாலே  இந்த  ஜாதகன்  கிருஷ்ணன்  வாய்லேருந்து  வர வார்த்தை எல்லாம் முத்துன்னா முத்து தான்.  அவன்  பேச்சிலே மயங்காதவா,  புத்திசாலித்தனத்திலே  அடிமையாகா தவா  கிடையவே  கிடையாது.
ஆமாம் . இதை பாரு  சுப்பண்ணா. சூரியன்  தன்னுடைய  வீட்டிலே குருவோட  ஸ்வஸ்தமா  இருக்கான். எதிரிகள்  பொடிப் பொடி!!  ஆசாமியை  அசைக்க முடியாது.

இது என்ன வேடிக்கை பார்த்தியா?.  7ம் வீட்டுக்கு  சொந்தக்காரன்  அங்காரகனோடு  களத்ரகாரகன் சுக்ரன் சேர்ந்துட்டதாலே  மனைவிகள்  கொஞ்சம் ஜாஸ்தி தான்.  ஆமா,  நாணா ,  களத்திரதோஷம்  கிருஷ்ணரை  விட்டு வைக்கல்லே.  ஏழாம் இடத்தில் சனி , ஏழுக்கு உடைய செவ்வாய் ஆறுக்கு உடைய சுக்கிரனுடன் சேர்ந்து மேலும் பாவி ராகுவோடு  கூட   மூன்றாம் வீட்டில் நிற்பதால் ஜாதகனுக்கு  பொண்டாட்டி  ஜாஸ்தி.  பல  பெண்களுக்கு புருஷனாக வாழும் அமைப்பு இருக்கு.

”கவலைப்படாதே,  அதை  கிருஷ்ணனாலே  சமாளிக்க முடியும்.  அவன் நம்பளைப்  போல இல்லையே.  பரவாயில்லை!! ஏன்னா, ராகு  பக்கத்திலேயே இருக்கான். தெய்வீக உறவுதான்.

9லே, அதான்,  சனியோட இடத்திலே, கேது இருக்கான்.

யோககாரகனா சனி  7ல் இருந்துண்டு  வெற்றி மேலே  வெற்றியா தரான். யுத்தத்திலே  ஜாதகனை  அடிச்சிக்க  ஆளு  கிடையாது. புரியறதா??.  

சனி ஏழாம் வீட்டில் இருந்து லக்னத்தை பார்பதாலும் எட்டாம் அதிபதி குரு நாலாம் வீட்டில் இருப்பதாலும்  ஆயுசு   கெட்டி. வயஸு நீளம்  ஜாஸ்தி.  சனி தான் ஆயுள் காரகன், வர்கோத்தமன்  ஆச்சே. ஆசாமிக்கு  பூரண வயசு.  கிருஷ்ணன்  தான்  125வயசு இருந்தானே பாகவதத்திலேயே  படிக்கிறோமே . எல்லாம்  க்ளிப்தமாக கரெக்ட்டா  அமைஞ்சிருக்கு.

தான்  நீண்ட நாள் இருந்தா போதாதே ன்னு தான் கிருஷ்ணன் அப்பா  வசுதேவர், அம்மா தேவகி எல்லாம் நீண்ட காலம் வாழ்ந்தா ன்னு தெரியாது.ஜாதகம் தான் அப்பட்டமா எல்லாம் சொல்லுமே.   சந்திரன் ( தாய் கிரகம் ) உச்சம் பெற்று இருப்பதாலும் சூரியன் ( தந்தைக்குரிய கிரகம் ) ஆட்சி பெற்று இருப்பதாலும்  பெரியோருக்கு ஆயுசு ஜாஸ்தி.
ஜாதகம் என்ன சொல்றது பார்த்தியா?   கிருஷ்ணரின் குழந்தை பருவத்தில் சந்திர திசையும் செவ்வாய் திசையும் நடந்தது. செவ்வாய் ஏழாம் வீட்டுக்கு அதிபதி அதாவது 7 -ம் வீட்டு அதிபதி மாரகன் அதாவது மரணத்தை கொடுப் பவன் ஆகும்.   அதனால் தான்  பாவம்  சின்ன  குழந்தை கிருஷ்ணனுக்கு  கம்சனால் பல இன்னல்கள்  நேர்ந்தது.
வீர தீர கிரகம் செவ்வாய்  வீர தீர  க்ரஹம். செவ்வாய்  திசை முடியும் போது   தாய்  மாமன் கம்சனை சின்ன வயசிலேயே  கிருஷ்ணன்  கொல்ல  முடிந்தது பார்த்தியா”

 குருவும் ஆத்ம காரகன் சூரியனும் பார்ப்பதால் எப்போதும் தர்மத்தை காப்பதையே தொழிலாகவும் கடமையாகவும் செய்தார். தர்மத்தை காக்க  நானே  ஒவ்வொரு யுகத்திலேயும் வருவேன்னு சொன்னது இதனாலேயே தான் போல் இருக்கு”.கேது திசை முடிந்தது.   மகாபாரத யுத்தமும் முடிந்தது.

மீதமுள்ள சுக்கிர திசை, சூரிய திசை , சந்திர திசை இதை அனைத்தையுமே   கிருஷ்ணனுக்கு அமைதியாக த்வாரகாவில் காலம் கழிந்தது மறுபடியும் செவ்வாய் திசை ஆரம்பம் ஆச்சு .  ஆனது . இந்த செவ்வாய் 7 -ம் அதிபதி மரணத்தை கொடுக்கிறவன் ஆச்சே. செவ்வாய்  அதனாலே  கிருஷ்ணருக்கு மரணத்தை கொடுத்து விட்டார்.  உத்தவா, என்  அவதாரம்  முடிஞ்சுட்டுது. நான் வைகுண்டம் போறேன் ன்னு  கிளம்பிட்டார். . இங்கே கலியுகமும் ஆரம்பித்து விட்டது.  கொலை கொள்ளைகள் மீண்டும் பெருக ஆரம்பித்து விட்டன.

நமக்கு ஜோசியம் தெரியாவிட்டால் என்ன.  நடுநடுவே  அவர்கள் பேசுவது எல்லாம் நாம்  புத்தகங்களில்  கிருஷ்ணனைப் பற்றி தெரிந்தது தானே.   மேலே சொன்னதெல்லாம் இதெல்லாம் கிருஷ்ணனுடைய  ஜாதக பலன். இன்னுமிருக்கு  நிறைய  சொல்ல. நேரம் தான் இல்லை. இங்கே இடம்  தான்  இல்லை எழுத!!.

எல்லாத்துக்கும்  காரணமான தெய்வத்தின் ஜாதகத்தில்  எல்லாமே  சரியாக  அமைந்து இருப்பது ஆச்சர்யமா! நாணாவும் சுப்பண்ணாவும்  சொல்லாவிட்டாலும் நமக்கு  நன்றாக தெரியும் .

 இந்த  மனித  தெய்வம் கிருஷ்ணன்  வாழ்ந்த காலத்தில்  கூடவே இருந்தவர்கள்,பார்த்தவர்கள் பேசியவர்கள்  கேட்டவர்கள்  மிக புண்ய சாலிகள்  என்றாலும்  இன்றும் அந்த தெய்வத்தின் படத்தை வணங்கியோ, பெயரைச் சொல்லியோ, கதையைக்  கேட்டோ, பாடியோ, சொல்லியோ, எழுதியோ,  மகிழும்  நாம்  ரொம்ப  ரொம்ப பாக்யவான்கள்,  அவர்  அருளை  பெற்று பயனடைபவர்கள் என்பதற்கு ஜோசியம் பார்த்து சொல்ல வேண்டாம். 

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1426

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *