MY THREE BIRTHDAYS. J K SIVAN

85க்குள்  நுழைகிறேன்.     நங்கநல்லூர்   J K  SIVAN

ஒவ்வொரு வருஷமும்  சொல்வதை தான் இந்த வருஷமும் மீண்டும் கிளிப்பிள்ளை போல் சொன்னதையே  சொல்கிறேன். என் கடைசி மூச்சு இருக்கும் வரை  என்னால்  இந்த  மூன்று  பிறந்த நாட்களைபற்றி நினைப்பதை  தவிர்க்க இயலாது.  அதுவும்  முக்கியமாக  இந்த  ஏப்ரல் 1  என்பது நான் பிறக்காத  ஆனால்  நான் அன்று தான் பிறந்தேன் என்று சுப்ரமணிய அய்யர் என்கிற  என்னுடைய  ஆரம்ப  கல்விக்கான  முதலாம் வகுப்பு ஆசிரியரால் என் மீது திணிக்கப்பட்ட  பிறந்த நாள். அதுவே  இன்று இதை எழுதும் வரை எல்லா  ஆவணங்க ளிலும் கடவு சீட்டிலும், ஆதார்,  pancard, ரேஷன் கார்ட், ஓட்டர் கார்ட் , டிரைவிங்  லைசன்ஸ்  சகலத்திலும் நான் அன்று தான் பிறந்தேன்  என்று சத்தியம் செய்வதை  ஏற்றுக்கொண்டு விட்டேனே. 18வயதில் வேலைக்கு சேர்வதை நிர்ணயித்த நாள் அல்லவா இது.  இந்த 84 வருஷங்களாக  எத்தனை வாழ்த்துக்கள்.  நன்றிக் கடனுக்காக  எல்லோருக்கும் நான் அன்று பிறக்காமலேயே மனசாட்சிக்கு விரோதமாக  நன்றி தெரிவித்து வருகிறேன். 84 வருஷங்களுக்கு  முன்பு  யாரிடமும்  பிறப்பு சான்றிதழ் என்பது கிடையாது. அதை தேடியதும் கிடையாது. வெள்ளைக்காரன் காலத்தில் நாங்கள் அப்போது  பள்ளிக்கூடத்தில் சேரும்போது  6 வயது முடிந்து இருக்கவேண்டும் என்ற ஒரு கட்டாயம்.  அதை உத்தேசித்து ஏதோ ஒரு நாளை பிறந்த நாளாக  பெற்றோர்கள் அறிவிப்பார்கள்.  பள்ளிக்கூடமும் ஏற்றுக்கொள்ளும்.  இப்படி ஏதோ ஒரு நாள் பிறந்தநாளான  விஷயம்  பலபேர் வாழ்க்கையில் நடந்திருக்கிறது என்று அறிகிறேன்.எனக்கே நிறைய நண்பர்கள்  தெரிவிக்கிறார்கள். ஆகவே  இது எனக்கு மட்டுமான  3 பிறந்தநாள் அனுபவம் இல்லை. பலருக்கும் இதே கதை தான்.    ஒரு பிறந்த நாள் குறிப்பிடப் பட்டால் அதை மாற்றும் வழக்கம் கிடையாது.  பள்ளிக்கூட  ரிக்கார்ட் தான் ப்ரமாணம். அதையே  எங்கும் ஆதாரமாக ஏற்றுக்கொண்டார்கள்.  இப்படித்தான்  ஏப்ரல் 1ம் தேதி என் வாழ்வில் என்னோடு ஒட்டிக்கொண்டு என்னை ஏப்ரல் முட்டாளாக்கிவிட்டது.
எனது  இன்னொரு  பிறந்தநாள்  வருஷா வருஷம் அக்டோபர் 9.  இதற்கும் எனக்கும் என்ன சம்பந்தம் என்றால் 1939ம் வருஷம் புரட்டாசி மாதம்  மஹம் நக்ஷத்ரம் அன்று இந்த  ஆங்கில  தேதி தான் நான் உண்மையில் பிறந்த நாள்.   என் பிறந்த நாளாக என் பெற்றோர் மூலம்  நானும் என் குடும்பத்தாரும் அறிந்த நாள்.  ஆகவே  வருஷா வருஷம் அக்டோபர் மாதம் 9ம் தேதி  எனது ஆங்கில பிறந்தநாள். ஆகவே  ஆங்கில தேதி ப்ரஹாரம்   பிறந்த நாள் கொண்டாடும் பழக்கம் வெள்ளைக் காரர்களால் நமக்கு உண்டான  ஒரு ஓட்டுவாரொட்டி.    ஆகவே  இந்த நாள் என் பிறந்த நாள்.  வருஷா வருஷம்  எங்கள் குடும்பத்தில் எல்லோரும்  என்னை  வாழ்த்துவார்கள். என் குழந்தைகள் என்னை எங்காவது ஹோட்டலுக்கு  சாப்பிட கூப்பிட்டுக் கொண்டு போவார்கள்.  அன்று புது சட்டை,ஜிப்பா,கம்பியூட்டர், மொபைல் போன்,  ஸ்கூட்டர் என்றெல்லாம்  எனக்கு எத்தனையோ   பரிசுகள் அவர்கள் மூலம் வந்து சேர்ந்து கொண்டே இருக்கிறது. அப்பா மேல் இவ்வளவு பாசமா?. பாசத்தை பாசத்தோடு தான் அணுகவேண்டும். என் அன்பை  மனதார  எப்போதும்  எல்லோருடனும் பரிமாறிக் கொள்கிறேன்.   அக்டோபர்  9   எந்த ஆவணத்திலும்   என் பிறந்த நாளாக  அமையாதது எனக்கு கொஞ்சம்  வருத்தம் தான்.     இதற்கும்  சான்றிதழ் எதுவும் கிடையாது. இதை எனக்கு அறிவித்தவர்  என் அம்மா அப்பா.  எனக்கு  ஜாதகம் என்று ஒன்று தயாரித்ததில்  இதை தெரிந்து கொண்டு  இந்த  தேதி என் பிறந்த நாளாக ஒட்டிக்கொண்டது.  இது  வெளியுலகத்தில் எல்லோருக்கும் தெரியாததாக தான் இருந்தது.
 என்னுடைய   முகநூலில்  உன் பிறந்த நாள் எது என்ற கேள்விக்கு இதை குறிப்பிட்டிருந்தேன். வருஷா வருஷம் முகநூல் எனக்கு வாழ்த்து தெரிவிக்கிறது. என் முகநூல் நண்பர்களுக்கும்  என் பிறந்தநாள் தெரிந்து வாழ்த்துகிறார்கள்.  இப்படி  பல  நண்பர்களிடையே இந்த சேதி   பரவி எனக்கு வாழ்த்துக்கள் குமியும்போது  நன்றியோடு உண்மையாகவே என் பிறந்த நாள் வாழ்த்தாக  மனமார  ஏற்று மகிழ்கிறேன்.
பெரியோர்களுக்கு நமஸ்காரம். இன்று  84  வருஷங்கள் வாழ்ந்து விட்டு 85 க்குள் இன்று இப்படியாக  நான்   இன்று காலடி எடுத்து வைக்கிறேன். வயதில் சிறிய நண்பர்களுக்கு  வாழ்த்துக்கள். கிருஷ்ணன் எல்லோரையும்  திடகாத்திரமாக, அமைதியோடு நீண்ட நாள் வாழ வைக்க வேண்டிக்கொள்கிறேன். இது என்னால் முடிந்தகாரியம். இதைச் செய்ய நான் தவறியதே இல்லை.யாருக்கு பிறந்த நாள் என்றாலும் கிருஷ்ணனை வேண்டிக் கொள்வது வழக்கமாகி விட்டது.
மூன்றாவது பிறந்தநாள்  எங்கள்  குடும்பத்தில் மட்டுமே என் ஜென்ம நக்ஷத்ரமாக  நினைவு கூர்ந்து வரும் நாள். வருஷா வருஷம் புரட்டாசி மாதம் மக நக்ஷத்ரம் அன்று பக்கத்தில்  திருமால் மருகன் ஆலயத்தில்  ஒரு அர்ச்சனை பண்ணும் வழக்கம். அன்று வீட்டில் பாயசம் பண்ணுவார்கள். புதிதாக  வஸ்திரம் எதுவும்  வாங்கி பெரிசாக கொண்டாடாத  உண்மையான  பிறந்த நாள். இந்த  நாள் வருஷா வருஷம்  ஆங்கில தேதியில் மாறி மாறி வரும்.  இந்த வருஷம்   அக்டோபர்  11ம் தேதி. அன்று  வழக்கத்தை விட  ஒரு பாயசமோ இனிப்போ  தட்டில் விழும் என்பதைத்  தவிர எந்த  சத்தமும்  வெளியே கேட்க  வாய்ப்பில்லை.
ஒன்று நிச்சயம்.   இன்னும் நிறைய  நான் தெரிந்து கொள்ளவேண்டியது கடலளவு இருக்கிறது.  எவ்வளவு நாள் முடியுமோ அவ்வளவு நாள் நானும்கிருஷ்ணனைப் பற்றி மேலும் மேலும்  தெரிந்து கொண்டு மற்றவர்க்கும்  அதை பரிமாற  வேண்டும் என்ற  தணியாத ஆவல் தொடரும். கிருஷ்ணன் தான் அதை முடிவு செய்பவன் ஏன் கிருஷ்ணனை பற்றி மட்டும் சொல்கிறேன் என்றால் அவனைச் சொன்னால் எல்லோரையும் பற்றி சொன்னதாக  எண்ணுகிறேன். அவன் சர்வ வியாபி, எங்கும் எதிலும் எவராகவும்  எந்த உயிரினமாகவும் அவனே எனக்கு தோன்றுபவன் அல்லவா?.. 

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1426

One comment

  1. So is the case in my Dates too!

    1st July (1955) As per Record
    12th Nov Original Birth date date as per English date
    Chitra Nakshthiram oh Iypasi Month ( Mostly it will be on Dewali Day every year!!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *