PESUM DEIVAM – J K SIVAN

பேசும் தெய்வம்   —   நங்கநல்லூர்  J K  SIVAN
 திருச்சிலே  போய்  இரு .

நேற்று காலை  அனுஷ நக்ஷத்ரம் என்று காலண்டர் காகிதம் நினைவுறுத்தியதும் மஹா பெரியவா பற்றி ஏதோ என் நினைவுக்கு வந்ததை எங்கோ படித்ததை எழுதி வைத்தேன். நண்பர்களுக்கு  முகநூல், வாட்ஸாப்ப்,  டெலெக்ராம், வலைதளம் இதிலெல்லாம் பதிவிட மறந்து போயிருக்கிறேன்.  வயதானால் இதெல்லாம் நேரும் போல் இருக்கிறது.
இன்று  பேங்க்ல  ஒரு  இளம்  வயதினள்  எனக்கு   பணம் காட்டும் சலான் எழுதிக் கொடுக்க முன்வந்தாள். எனக்கு அவள் உதவி தேவைப்பட்டதன்  காரணம்  அந்த  பேங்க் செலான்  ரொம்ப ரொம்ப  பொடி  எழுத்துக்களாக  அச்சடிக்கப் பட்டிருந்தது? ஏன் இப்படி செயகிறார்கள், வயதானவர்கள் கண் பார்வை குறைந்தவர்கள் எப்படி அதை படிப்பார்கள்?  காகிதம் கொஞ்சம் பெரிதாக இருந்தால் என்ன, எழுத்துக்கள் பெரிதாக இருந்தால் என்ன? இதெல்லாம் யார்  கவனிக்கிறார்கள்.  அந்த பெண்ணை நீ என்ன படித்திருக்கிறாய் என்று கேட்டேன்.MSC  இன்ஜினியரிங்  என்றாள் . தூக்கி வாரிப்போட்டது.  இது தான்  நிலைமையா இப்போது? அவள்  செய்யும்  இந்த வேலைக்கு  10வது வரப்பிற்கு படித்தாலே  போதுமே.  வேலை வாய்ப்பு இந்த நிலையிலா இருக்கிறது?  பலரது படிப்புக்கும் வேலைக்கும் சம்பந்தமே இல்லையே.  பிழைக்க வயிறு கழுவ, ஏதோ ஒரு வேலையா?  என்று இந்த தேசத்தில் அவரவர் படிப்புக்கு ஏற்ற  உத்யோகம் கிடைக்கும்?
 எங்கள்  காலத்தில்  வேலைக்கு  பஞ்சமில்லை.  நூற்றில்  தொண்ணுறு பேர்   sslc  படித்தவுடனே, குறுக் கெழுத்து  தட்டச்சு  கற்றுக்கொன்று  ஓரிரு  வருடங்களில்  higher   என்கிற  மேல்  நிலை தகுதி பெற்றவுடன்  வேலை  அவர்களுக்கு  தானாகவே  கிடைத்தது.  அரசாங்க உத்தியோகங்களைவிட  தனியார்  துறையில்  வேலை  கிடைப்பது  நம்பிக்கை யூட்டியது.  வேலை  கடினமாகத்தான்  இருந்தது.  நேரம் அதிகம்  செலவழிக்கவேண்டியிருந்தது.  பிழிந்தெடுப்பது  என்றால்  என்ன  என்று  புரிந்தது. ஆனால்  செய்த வேலைக்கு  திருப்தியாக  அந்த  கால  வரை முறைக்குத்  தக்க  ஊதியம் கிடைத்தது.  கிளைக்கு  கிளை  குரங்கு தாவுவது போல்  அடிக்கடி  அதிக சம்பளத்துக்கு  வேலையும்  தனியார்  துறையில்  தாவ  முடிந்தது.   எனக்கு  இந்த  அனுபவம் இருந்தது.   எங்கோ  படித்ததில் சில விஷயம் இப்போது  சேர்த்துக்கொள்கிறேன்.

ஒருவர்   தனியார் ஆபீஸில் தன்னுடைய பதினெட்டாவது வயஸில், shorthand, typewriting, SSLC certificates உடன் வேலைக்கு சேர்ந்தவர், ஐம்பத்தெட்டாவது வயஸில் retire ஆகி வீட்டில் உட்கார்ந்தார் ஒரு  மஹா பெரியவா  பக்தர். அவர் வஹித்த பதவி, அவருக்கு ஏகப்பட்ட பணம், செல்வாக்கு எல்லாவற்றையும் கொடுத்திருந்தாலும், அவருடைய உள் மனஸில் வெறும் சூன்யமாகவே இருந்தது. வேலை, வேலை என்று உயிரைக் குடுத்து உத்யோகம் பார்த்ததில், “நான் யார்?” என்று அரை நிமிஷம் கூட சிந்திக்காமல் விட்டுவிட்டார். அதன் பலன்? retire ஆனதும், அத்தனை நாள் மாங்கு மாங்கென்று எந்தக் கம்பெனிக்காக உழைத்தாரோ, அந்த routine, நண்பர்கள்,எல்லாமே ஒரு நொடியில், ஒரு பிரிவுபசார பார்ட்டியோடு அவரை வாசலுக்கு வெளியே  தள்ளிவிட்டு மறந்து போய்விட்டது. !

பெற்ற பிள்ளையும் மாட்டுப்பெண்ணும் வேறு  ஊரில்  வடக்கே  இருந்தார்கள். அங்கேயெல்லாம் போனால், போய் இறங்கின அன்று இருக்கும் மரியாதையும் உபசரிப்பும், நாலு நாளைக்கு மேல் நீடித்தால், அது அவர் செய்த பாக்யம்!   மருந்தும் விருந்தும்  மூன்று  நாள்   என்று  அனுபவித்துத்  தானே  பெரியோர்கள்  சொல்லியிருக்கிறார்கள்.

பிள்ளைக்கு   நல்ல உத்தியோகம்; ரொம்ப நல்லவன்; ஆனால், என்ன ப்ரயோஜனம்? மாட்டுப்பெண்ணும் நல்லவள்தான்….யாருக்கு? பிள்ளைக்கு! பெற்றவர்களை ஒதுக்கி விட்டு, பிள்ளையை மட்டும் தன்னுடைய குடும்பமாக நினைப்பவள்; பிறந்த வீட்டார் மேல் அபரிமிதமான கரிசனம்; இப்படி இருக்கும் வீட்டில் தான் போய் அதிக நாட்கள் தங்கினால், இப்போதிருக்கும் பேச்சு வார்த்தை கூட அறுந்து போய்விடும் என்று அப்பா  தயங்கினார். யார் வழி காட்டுவார்கள்?

“நீனே அநாத பந்து” என்று  மஹா பெரியவாளுடைய திருவடியில் வந்து விழுந்தார். மனசுக்குள், எங்கே போவது? யாருடன் தங்குவது? ஜன்மாவை கடைத்தேற்றிக் கொள்ளாமல் ஐம்பத்தெட்டு வர்ஷம் கோட்டை விட்டாச்சு!….என்று ஒரே குழப்பம். எதுவுமே பேசாமல் நமஸ்காரம் பண்ணிவிட்டு ஒரு ஓரமாக நின்றார்.

காஞ்சியில்  மஹா பெரியவா கடாக்ஷம்  அவர்  மீது  விழுந்தது.  தலை  ஆடியது.  ….. முதியவர்  உடனே பெரியவா  அருகில் வந்து மிகவும் பவ்யமாக,

“பெரியவா அநுக்ரஹத்ல அனேகமா எல்லா க்ஷேத்ரங்களும் தர்சனம் பண்ணிட்டோம். போனவாரம் தலைக்காவேரி போயிட்டு, அப்டியே காவேரிப்பூம்பட்ணம் போய்ட்டு வந்தோம்…”
“காவேரி உற்பத்தி ஸ்தானத்லயும், சங்கமத்துலேயும் ரொம்ப குறுகலாத்தானே இருக்கு?”
“ஆமா  பெரியவா …..”
“காவேரி, ரொம்ம்…ம்ப அகலமா இருக்கற மத்ய ஸ்தானத்துக்கு என்ன பேரு?”
“அகண்ட காவேரி”
“அது எங்க இருக்கு தெரியுமா?”
“திருச்சி பக்கத்ல …”
“அந்த ப்ரதேசத்துக்கு என்ன பேரு?”
பக்தர் முழித்தார்!…..
“மழநாடு…ன்னு கேள்விப்பட்டிருக்கியோ?”
“எங்க தாத்தா சொல்லுவார்”
“காவேரி தீரம்தான் மழநாடு; ரொம்ப ஆசாரக்காரா இருந்த நாடு; ஒன்னோட தாத்தா இருந்த எடம்”

பக்தருக்கு இதெல்லாம் எதுவுமே தெரியவில்லை. நெளிந்தார். ஆஹா! அடுத்து  மஹா பெரியவா, இவர் எதுவும் சொல்லாமலேயே, இவருடைய குழப்பத்தை தீர்த்து வைத்தார்!

“நீ  கிளம்பி போய்  திருச்சில ஜாகை வெச்சுக்கோ! தெனோமும் ஒரு கோவிலுக்கு போ! உச்சிப் பிள்ளையார், மாத்ருபூதேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி, ஜம்புலிங்கம்,ஸ்ரீரங்கம் ரங்கநாதர், வயலூர் முருகன், குணசீலம் ஸ்ரீநிவாஸ பெருமாள்….இப்டியா தர்சனம் பண்ணிண்டு இரு!”

” பேசும்  தெய்வம்”  என்று எழுதுகிறீர்கள்  தெய்வம்  பேசுமா?”…என்று சந்தேஹம் வருபவர்களுக்கு, இதோ! தெய்வம் பேசுகிறது! என்று உண்மையான மஹான்கள் முன்னால் கொண்டு போய் நிறுத்தி விடலாம். கண்களில் நன்றிக் கண்ணீரோடு நமஸ்காரம் பண்ணிவிட்டு, பெரியவா சொன்னபடி திருச்சியில் ஜாகை பார்க்கச் சென்றார். மலைக்கோட்டை தெருவில் அம்சமான வீடும் கிடைத்தது! பெரியவா சொன்னபடி தன் வாழ்க்கை முறையை அமைத்துக் கொண்டபடியால் கட்டாயம் “வீடு பேறும்” கிடைக்கும்.  நம்பிக்கை தான்  வாழ்க்கைக்கு மூலதனம். 

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1426

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *