LINGASHTAKAM 6 – J K SIVAN

லிங்காஷ்டகம் 6 – நங்கநல்லூர் J K SIVAN
ஆதி சங்கரர்

பரமேஸ்வரனுக்கு பல பெயர்கள், ஆயிரக்கணக்காக பக்தர்கள் போற்றி துதிப்பவை. ஸஹஸ்ர நாமன்.,
என்றாலும் நடராஜன் நடேசன் என்ற பெயர் பிரசித்தம். சிவன் ஆடல் வல்லான். அவனது ஆடலில் ஒரு ரகசியம் இருக்கிறது. இடது கையில் ஒரு டமருகம். உடுக்கை. ஆடி முடிக்கும்போது அதை 14 தடவை ஒலிக்கிறான். இதை த்தான் ‘ மஹேஸ்வ ராணி சூத்ராணி’ எனும் ஸம்ஸ்க்ருதத்தின் ஆதார அக்ஷரங்கள் சப்தங்கள் என அறிகிறோம். சமஸ்க்ரிதம் தவிர மற்ற மொழிகளுக்கும் கூடத்தான். பாணினி இதைத்தான் ”அஷ்டா த்யாயி”யில் சொல்கிறார். .

ஒரு கதை சொல்லவேண்டியது இங்கே அவசியமாகிறது.
சமஸ்க்ரித பண்டிதர் பாணினி பாடலி புத்ரத்தில் படித்துக்கொண்டிருந்த காலம். ரொம்ப மந்த புத்தி, லாஸ்ட் பெஞ்ச் ஸ்டுடென்ட் அவர். எனவே இமயமலைக்குச் சென்று தவம் செய்ய புறப்பட்டார். அங்கே தவம் செய்யும்போது தான் பரமசிவனின் ஆனந்த நடனம் காணும் பாக்யம் கிடைக்கிறது. டமருகத்தின் ஒலி கேட்கிறது. 14 முறை அது ஒலித்ததை கேட்டவர் பாடலிபுத்ரம் திரும்புகிறார். பின்னால் புகழ் பெற்ற இலக்கண மேதையாகிறார். இந்த மஹேஸ்வராணி சூத்ராணி யை தனது அஷ்டாத்யாயியில் இலக்கண விதிகளுக்கு குறுக்கு வழியாக அளிக்கிறார்.

முதலாவது சூத்ரம் ”அ ” என்கிற ஒலி யில் ( अ ) அக்ஷரத்தில் ஆரம்பித்து கடைசி அக்ஷரம் ல்”லு” ( ल् ), எனவே ”அலு ” ( अल् ) வரை சப்தம் ஒலிக்கும். எல்லாவற்றிற்குமே இந்த ” அ, லு” தான் ஆணி வேர். இங்க்ளிஷில் அல்பபெட் எனும் வார்த்தையில் ” அ ல் ” AL வந்துவிட்டதே. ஆடல்வல்லானின் திரு நடம் தான் சகலத்திற்கும் ஆதாரம்

சிவபெருமானை லிங்கமாக வழிபடுகிறோம். லிங்கம் என்பது அருவத்தின் ஒரு உருவம். லிங்கத்தின் பீடம் பராசக்தி. ஸ்வயம்புவாக இருக்கும் பல லிங்கங்கள் சிவனாக கோவிலில் பூஜிக்கப்படுகிறது.

லிங்கம் என்பது 12 வஸ்துக்களின் கலவை. மணல், அரிசி, சாதம், களிமண், பசுஞ்சாணம், வெண்ணை, ருத்ராக்ஷம், சாம்பல், சந்தனக்கட்டை, தர்பை, மாலை, பாகு என்பவை அவை என்று சிவபுராணம் சொல்கிறது.

லிங்கம் என்பதே ஒரு அடர்ந்த ஒளிக்கற்றை, பிழம்பு, என்று வேதங்கள் கூறுகிறது. அடி முடி காண முடியாதது. நம் உடலின் உள்ளே இருக்கும் ஜீவன் தான் சிவன். குண்டலினி என்னும் சக்தி நாண் , மூன்றரை சுற்றாக அதோடு பிணைந்திருக்கிறது. இதை உணர்த்தவே லிங்கத்திற்கு நாக ஆபரணம் அணிவிக்கிறோம். இதன் தத்வம், பரமாத்மா சிவன், சக்தி நாகமாகிய குண்டலினி. இதிலிருந்து தான் எவ்வாறு மூல பிரக்ரிதி, ஏனைய விக்ரிதிக்களை ஆகர்ஷிக்கிறது என்பது புலப்படும். உலகத்தின் செயல்பாடுகள் புரியும். ஆகவே உருவமற்ற சிவன், உருவமற்ற அசைவற்ற அண்ட பகிரண்டத்தைக் குறிக்கிறது. சக்தியோடு சேர்ந்த போது அசைகிற சக்தியால் பிரபஞ்சத்தில் சலனம் ஏற்படுகிறது.

சிவன் தான் ப்ரஹத் என்றும் புருஷன் என்றும் ஆணாக அறியப்படுகிறது. தஞ்சாவூர் சிவலிங்கத்தின் பெயர் ப்ரஹதீஸ்வரர் . சக்தி தான் பார்க்கா என்று பெண்ணாக, பிரக்ரிதியாக உணரப்படுகிறது. பிரபஞ்சத்தில் ஆக்கல் இவ்வாறு உருவாகிறது. ஆவுடையார் சக்தி தான் பிரக்ரிதி, லிங்கம் தான் புருஷன். இவ்வாறு தான் பல கோடி ஜன்மாக்கள் திரும்ப திரும்ப தோன்றி மறைகிறது. ஜீவன் பிறக்கிறது. மாயை என்னும் பிரக்ரிதியில் மூழ்கி மறைந்து பின்னும் தோன்றுகிறது. இது தான் பிரபஞ்ச ரகசியம்.

நமது உடலில் 5 கலைகள் தான் உள்ளன. பகவான் ஸ்ரீ கிருஷ்ணன், சிவன், போன்றோரிடம் 16 கலைகள் உள்ளன என்பதாலேயே அவர்கள் போற்றத்தக்கவர்கள். பதினாறு மட்டுமல்ல இன்னும் எத்தனையோ கூட. ”நிஷ்களா” என்று அதனால் தான் ஸ்தோத்ரங்கள் புகழ்கின்றன. சிவலிங்கம் அப்படிப் பெருமை வாய்ந்தது.

ஞாபகம் இருக்கிறதா? யார் பெரியவர் என்ற போட்டியில் விஷ்ணுவும் பிரம்மாவும் மோத இடையில் ஒரு ஒளிப்பிழம்பு ஆகாசத்திற்கும் பாதாளத்திற்கும் பரவி நிற்க. இதன் முடியும் அடியும் யார் கண்டவர்களோ அவர்களே பெரியவர் என்று சிவன் ஸ்தம்பமாக நிற்க (ஸ்தாணுமாலயன் என்ற பெயர் அதால் தான்) அடிமுடி காண முடியாத இருவரும் சிவனின் பெருமையை உணர்ந்து பிணக்கு தீர்ந்தனர் என்று ஒரு புராண சம்பவம். அனைத்து கலைகளுடன் கூடிய உரு ”ச-கல’ வும் நான் தான், ஒன்றுமே இல்லாத ” நிஷ்கலா”வும் நான் தான். இந்த ஒளிப்பிழம்பும் நான் தான் என்று சிவன் அவர்களுக்கு அறிவுறுத்துகிறார். 16 கலைகளுடன் என்னை ”சகல”னாகவும் ஒன்றுமே அறிய ஒண்ணா நிஷ்கலாவாக உள்ளபோது பிரமம் என்றும் அறியப்படுபவன் என்று காட்டுகிறார். ”பிரம்மம்” அளவிடமுடியாதது ” ப்ரிஹத்” அதாலே தான் சிவன் ”ப்ரஹதீச்வரன் ” . லிங்கம் அம்மையப்ப தத்தவத்தை அறிவிக்கிறது. அசலம், சலம், எனும் பிரபஞ்ச சக்தி ரகசியம் தெரிகிறது. சகல உயிர்களும் தோன்றக் காரணமாக இருப்பதால் தான் சிவனும் சக்தியும் உலகத்துக்கே அம்மா அப்பா— அம்மையப்பன்.

பாண லிங்கம் கோழி முட்டை வடிவம் போல ஈஸ்வரனுக்கு முடிவோ ஆரம்பமோ எதுவும் இல்லை என விளக்கும்.

லிங்கோற்பவர் என்ற லிங்கம், அருவத்தின் ஒரு உரு என கொள்ளளலாம். சிவராத்ரியில் நள்ளிரவில் தோன்றிய உரு. எனவே தான் சிவராத்ரியன்று நள்ளிரவு வரை பூஜைகள், வழிபாடுகள். லிங்கோற்பவரை முக்ய சிவன் கோவில்களில் மூல விக்ரஹத்தின் வெளி பிரகாரத்தில் காணலாம்.

சிவலிங்கத்தின் அடி பாகம் பிரம்மபாகம், பிரம்ம பீடம் என்ற பெயரில் பிரம்மனைக்குறிக்கும். அதற்கு மேல் உள்ள நடு பாகம் எட்டு பக்கம் கொண்ட விஷ்ணு பாகம். இது விஷ்ணு பீடம் என்று காக்கும் கடவுள் விஷ்ணுவைக் குறிக்கும். இவை இரண்டுமே சிவலிங்கத்தை தாங்கி நிற்கின்ற பாகம். இவற்றின் மேலே காணப்படும் உருளை பாகம் தான் ருத்ர பாகம். சிவ பீடம் எனப்படும். இதற்கு பூஜா பாகம் என்றும் பெயர் உண்டு. இதைத்தான் முக்யமாக வழிபடுகிறோம். இந்த மேல் பாகம் அக்னி பிழம்பாகவும் ஏற்றுக் கொள்ளப்படுவதால் சிவனை அழித்தலைக் கையிலெடுத்த சம்ஹார மூர்த்தி என்கிறோம்.

இந்தியாவில் 12 அதி முக்ய ஜோதி லிங்கங்கள் பரவி இருக்கின்றன. கேதார்நாத், காசி விஸ்வநாத், சோம்நாத், வைத்யநாத், ராம்நாத், க்ரிஷ்நேச்வர் , பீமசங்கரர், மஹாகாளர் , மல்லிகார்ஜுனர் , அமலேஸ்வரர், நாகேஸ்வரர், த்ரையம்பகேஸ்வரர், என்று அவருக்குப் பெயர்கள். பஞ்ச பூதங்களில் சிவன் விரைவி நிற்பதை, காளஹஸ்தி, ஜம்புகேஸ்வரம், அருணாசலம், காஞ்சி, சிதம்பரம், ஆகிய லிங்கங்களில் காளஹஸ்தீஸ்வரர், ஜம்புகேஸ்வரர், அருணாசலேஸ்வரர், ஏகாம்பரநாதர், நடராஜர் என்றும், திருவிடைமருதூரில் மகாலிங்கமாகவும் வணங்குகிறோம்.

சில கோவில்களில் பாதரச லிங்கம் காணலாம். இவை சக்தி வாய்ந்தவை. ‘பராத்பரா” என்ற பெயரில் ”பராத்” பாதரசத்தைக் குறிக்கும் சொல். சிவ தாது என்றும்வடமொழியில் அதற்குப் பெயர். பாதரச லிங்கங் கள் தெய்வீக சக்தி கொண்டவை. இம்மாதிரி பாதரச லிங்கங்களை வழிபட்டு பெருகின்ற பலன், நூற்றுக்கணக்கான அஸ்வமேத யாகங்கள் செய்த பலனுக்கு சமம். இன்னொன்றும் சொல்லலாம். இந்த சிவலிங்க பூஜையின் பலனுக்கு முன்பு, பல லக்ஷம் பசுக்களை கோ தானமாகக் கொடுத்த புண்யம் கூட ஈடாகாது. எந்த இல்லத்தில் பாதரச சிவலிங்கம் பூஜிக்கப்படுகிறதோ, அங்கு சகல சம்பத்துகளும் தானே கூடும். எடுத்த காரியம் யாவிலும் வெற்றி. சிவனே அந்த வீட்டில் ஒருவராக இருக்கிறாரே. வாஸ்து குறை பாடுகள் எதுவும் நெருங்காது. பிரதி திங்கள் அன்று பாதரச சிவலிங்கத்திற்கு பூஜை செய்து வந்தால் மந்திர தந்திர தீவினைகள் எதுவும் அந்த வீட்டையே அணுகாது. லட்சோப லட்சம் சிவலிங்கங்களுக்கு செய்த பூஜா பலன் ஒரு பாதரச சிவலிங்கத்திற்கு செய்த பூஜையின் பலனுக்கு சமானமாகும் என்று சிவ புராணம் சொல்கிறது. அந்த லிங்கத்தைத் தொட்டாலே மோக்ஷம்.

இன்னொரு விஷயம். சிவலிங்கத்தின் மீது குளிர்ந்த ஜல தாரை எதற்கு என்றால், சிவனின் ஜடாமுடி மீது கங்கை ஆகாசத்திலிருந்து இறங்கியதை குறிக்கிறது. சிவ வழிபாட்டில் ஹோமத்தில் இடும் நெய், நம்மையே அந்த சர்வ சக்திமான் சிவனுக்கு அர்ப்பணிப்பதாகும். இன்று உன்னை நினைத்து எழுத உட்கார்ந்தபோது எண்ணற்ற எண்ண அலைகள் மனதில் ஓடின. ஆதி அந்தமில்லாத அநாதி நாதா. மங்கள தாயகா எவ்வளவுக்கெவ்வளவு நீ எளிமையானவனோ அவ்வளவுக்கவ்வளவு சக்திமான் என்பது தெரிகிறது. சாந்தமான நீ மோன நிலையில் காணப்பட்டாலும் கண் பார்வை ஒன்றிலேயே காலாக்னி யாக ஊழித்தீ யாக அழிக்கும் தன்மையன்.

देवगणार्चितसेवितलिङ्गं भावैर्भक्तिभिरेव च लिङ्गम् ।
दिनकरकोटिप्रभाकरलिङ्गं तत् प्रणमामि सदाशिवलिङ्गम् ॥६॥

Deva Ganaarchita Sevitha Lingam Bhavair Bhakhi Bhirevacha Lingam
Dinakara Koti Prabhaakara Lingam Tatpranamaami Sadaashiva Lingam (6)

தேவகணார்சித ஸேவித லிங்கம் பாவை-ர்பக்திபிரேவச லிங்கம் |
தினகர கோடி ப்ரபாகர லிங்கம் தத்-ப்ரணமாமி ஸதாஶிவ லிங்கம் || 6 ||

சகல தேவர்களும் பூத கணங்களும், ரிஷிகள், முனிவர்கள், நரர்கள் அனைவரும் போற்றி சேவிக்கும் மகாதேவா, பக்தி யொன்றே பிரதானமாக ஏற்கும் பரமேஸ்வரா , கோடி கோடி சூர்யன் ஒன்றாக கூடி அளித்தாலும் அந்த பிரகாசத்தை விட பல மடங்கு ஒளி மிக்க ஓங்கார நாதா. உன்னை வணங்காவிடில் பின் யாரை வணங்குவேன் என்று நாயன்மார்கள் அடியார்கள் போற்றும் மனப்பூர்வ வெளிப்பாடு நன்றாக புரிகிறது.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *