GAYATHRI MANTHRAM – J K SIVAN

காயத்ரி மந்திரம் – நங்கநல்லூர் J K SIVAN
2023ம்  வருஷம்  இன்று    31.8.2023  வியாழக்கிழமை  காயத்ரி ஜபம். காயத்ரி மந்த்ரத்தை பற்றி நிறைய பேசியாச்சு. எழுதியாச்சு.  ஆனாலும் அடிக்கடி  சொல்லிக்கொன்டே இருக்க வேண்டும். மனதில் மந்திரம் பதியும் வரை விடாமல் இரும்பை  நெருப்பில் காய்ச்சி சம்மட்டியால்  அடித்துக்கொண்டே இருக்கவேண்டும். அப்போது  தான் இரும்பு சொன்னபடி வளையும். நெளியும்.   காயத்ரி மந்த்ர மஹிமையைப் பற்றி சொன்னால் தானே அதன் மஹத்வம் புரியும். எனவே  இப்போதே  ஒரு  குட்டிக்கதை.  நான்  ஏற்கனவே சொன்ன கதை தான். இருந்தாலும் இன்னொரு தடவை படித்தால் காயத்ரி மந்த்ர சக்தி ஞாபகத்துக்கு வருமே.    காயத்ரி மந்த்ரத்தை பற்றி அதன் மகிமை பற்றியெல்லாம் எவ்வளவு தான்  சொன்னாலும்  எழுதினாலும் ஒரு கதை மூலம் அதை வலியுறுத்தினால் கப் என்று பிடித்துக்கொள்ளும். எனவே தான் இந்த குட்டிக் கதை.
ஒரு    சுண்டைக்காய் ராஜ்ஜியம்.   அதற்கு ஒரு சிம்பிள் ராஜா. அவனுக்கு ஒரு அமைதியான மந்திரி. அந்த மந்திரி ஒரு வேதாந்தி. ஏதோ அர்ஜண்டாக கேட்க வேண்டு மென்று ஒரு நாள் ராஜா தன்னுடைய மந்திரி வீட்டுக்குச்  சென்றான். மந்திரி மனைவி ராஜாவை வரவேற்றாள் .
”அவர் காயத்ரி மந்த்ரம் சொல்லிக் கொண்டு தியானத்தில் இருகிறார் இதோ முடித்துவிட்டு வந்துவிடுவார். உட்காருங்கோ  ராஜா”’ என்றாள் .   ராஜா ஊஞ்சலில் ஆடிக்கொண்டு  காத்திருந்த பின்  மந்திரி வந்தார்.
” நீ  ஏதோ காயத்ரி மந்திரம் என்று ஒன்றை  சொல்லிக்கொண்டிருந்தாயாமே. அதை  எனக்கும் சொல்லிக்  கொடு” என்றான் ராஜா.
“ராஜா, நான் காயத்ரி மந்திரத்தை  தங்களுக்கு உபதேசிக்கும் அளவுக்கு தகுதியானவனில்லையே. யாராவது  ஒரு நல்ல குரு வினி டமிருந்து உபதேசம் பெறுவது தான் முறை” என்றான்.
ராஜாவுக்கு யாரோ ஒரு குரு கிடைத்து காயத்ரி மந்திர உச்சரிப்பு தெரிந்து கொண்டான். ஒருநாள்  , மந்திரி வீட்டிற்கு வந்தபோது ”மந்திரி, நானும்  காயத்ரி மந்த்ரம் கற்றுக்கொண்டு விட்டேன். உனக்கு  சொல்லிக்  காட்டட்டுமா? என்று  பஜ்ஜி தின்று கொண்டே,  உரத்த குரலில்  ஊஞ்சலில் ஆடிக்கொண்டே ஒப்பித்தான். சரியா? என்றுகேட்டான்  ராஜா.
” ராஜா, நீங்கள் சொன்ன உச்சரிப்பு சரி ஆனால் இப்படி மந்திரத்தை உச்சரித்தால் பயன் கிடைக்காது”
”ஏன்?” மந்திரி யோசித்தான்.  ராஜாவுக்கு எப்படி புரிய வைப்பது.  ஆ!   ஒரு ஐடியா கிடைத்தது. அருகில் இருந்த தனது சேவகனை கூப்பிட்டான்.” டேய் ! இந்த ராஜாவை உடனே ஒரு கயிறால் இந்த  தூணில்  கட்டிப் போடு” என்றான்.”
ராஜாவுக்கு ஷாக். ஆனால் சேவகன் துளியும் லட்சியம் செய்யாமல் ராஜாவையே பார்த்துகொண்டு நின்றான்.
“என்னடா நிற்கிறாய், உடனே சொன்னதை செய், ராஜாவை கம்பத்தில் கட்டு” என்று உரத்த குரலில் மந்திரி கட்டளையிட்டான்.
”உஹும் !! சேவகன் அசையவே இல்லை. ராஜாவுக்கு ஷாக்.  பயம். கோபம்.  இந்த  கொடியவன்  மந்திரி நம்மைக்  கொன்று விட்டு ராஜ்யத்தை எடுத்துக்கொள்ள   ஏதோ  சதி செய்கிறானோ என்று மந்திரி மீது சந்தேகம் வந்தது”அடேய் ! சேவகா, இன்னும் ஒரு நிமிடத்தில் இந்த மந்திரியை கை கால் கட்டி அரண்மனைக்கு இழுத்து வா.  இவனுக்கு  எல்லோர் முன்னிலையிலும் தக்க தண்டனை வழங்குகிறேன்” என்றான்  ராஜா.   சேவகன் புலி போல் பாய்ந்து மந்திரியைக்  கட்ட விரைந்தான். அப்போது மந்திரி சிரிக்கவே ராஜாவுக்கு ஒன்றுமே புரியவில்லை.

” என்ன சிரிக்கிறாய். சொல் இல்லையேல் உன் கழுத்தை இந்த வாளால் இப்போதே சீவிவிடுவேன்”
என்று  ராஜா மந்திரியிடம்  சொன்னான்.
“ராஜாவே! நான் இதைத் தான்   நான் உங்களுக்கு விளக்கிக்  கொண்டிருந்தேன். ” கட்டளை ஒன்று தான். நான் சொன்னால் கேட்காத சேவகன் நீங்கள் சொன்ன அடுத்த கணம் அதை நிறைவேற்ற வில்லையா.காயத்ரி மந்த்ரமும் வேதங்கள் சொல்லும் முறையாக உச்சரித்தால் தான் பலன் கொடுக்கும்”   என்றான்  மந்திரி.   ராஜா  மந்திரங்களை அஸ்ரத்தையுடன் சொல்வது பலனளிக்காது என்று நம்மைப்போல்  புரிந்துகொண்டான்.   உலகில் நாம் காண்பது, கேட்பது, அறிவது எல்லாமே  விஞ்ஞானத்தில் அடக்கம் என்பது  சரியில்லை. விஞ்ஞானம் அறிவின் வளர்ச்சி. இன்னும் முழுமை அடையாத   ஒரு விஷயம்.. ”பால் வீதி, MILKY WAY  ஆகாச கங்கா என்றெல்லாம்  லக்ஷோப லக்ஷம்  நட்சத்ரங்கள்  கண்ணுக்குத் தெரியாதவை,  பார்க்கவே பல நூற்றாண்டுகள் ஆகக்  கூடியவை   உண்டு.  சூரியனையே விழுங்கும் அளவு பெரியவை. பார்ப்பதற்கு மூர்த்தி சிறியதாக  தோன்றும்.  சந்திரன் பூமியை சுற்றுகிறான். பூமி  சந்திரனோடு சேர்ந்து சூரியனை சுற்றுகிறது என்பது நமது சூரிய மண்டலம்.   எல்லா கோளங்களும்   சூரியனைச் சுற்றுபவை.   ஒரு சின்ன விஷயம் சொல்கிறேன். பக்கத்தில் சுவற்றை, தூணை அல்லது யாராவது ஒரு தாத்தாவை கெட்டியாகப்  பிடித்துக் கொள்ளுங்கள்.  சூரியன் தனது எல்லா பரிவாரத்தோடும், எல்லா கிரஹங்களுடனும் நக்ஷத்ரங்களுடனும்  ஒரு  ரவுண்ட் அடிப்பதற்கு உண்டான காலம் 22.5. கோடி வருஷங்கள்!! இத்தனைக்கும்  அவை ஊர்ந்து போகும் வஸ்துக்களல்ல. கிரஹங்கள் எல்லாமே  கிட்டத்தட்ட   ஒரு நொடிக்கு   20,000 மைல் வேகம்  ‘ஓ’ வென்ற பேரிரைச்சலோடு  நகர்வன. கண்ணைமூடி யோசித்துப் பார்த்தால்  பயத்தில் இதயம் நின்றுவிடும்.

பூமி மேல் வசிக்கும் நாமும் பூமியோடு சேர்ந்து வேகமாகத்  தான்  நகர்ந்து கொண்டிருக்கிறோம்.  வேகமான ரயிலிலிருந்தோ,  ஆகாய விமானத்தில்  இருந்தோ   பார்க்கும்போது  வெளியே   எல்லாமே  மெதுவாக நகர்வது போல், அசையாமல் நிற்பது போல்  தோன்றுகிறதே  அது போல்  நாம்  நமது வீட்டில் அசைவற்று இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறோம்.  எல்லா கிரஹங்களும் சூரியனையே தான் சுற்றுகிறது. இது புரிந்தால்  காயத்ரி மந்திரம் புரிந்து கொள்ளலாம்.
”ஓம் பூர் புவ ஸ்வஹ:”
‘பூர்”  என்றால் பூலோகம்,  பூமி.  ‘புவ’ என்றால்  சூரிய மண்டல  கிரஹங்கள்.’ஸ்வஹ’ என்பது  இந்த  பிரபஞ்சம்:    நமது தலைக்கு மேலே ‘லொட லொட’ என்ற சப்தத்தோடு சுற்றும்  பழைய  வோல்டாஸ்  மின்விசிறி சுற்றும் வேகமே  ஒரு  நிமிஷத்துக்கு  900 சுற்று  Rpm. அது போடும் சப்தமே  அடுத்த வீட்டுக்காரன் சண்டைக்கு  வரும் அளவுக்கு இருக்கிறதே. நொடிக்கு  20, 000 மைல் . கி.மீ. அல்ல என்றால் ?? அப்படி ஓடும் கிரஹங்களின் சப்தத்தை த் தான்   ”ஓம்”  என்று  இந்த காயத்ரி மந்திரம் சொல்கிறது. இதை முதலில் கேட்டறிந்தவர்  விஸ்வாமித்ரர்.  ஏன் மற்றவர்கள் செவிடா? என்று கேட்பது காதில் விழுகிறது.  ஒரு  200 அடி  தூரத்தில்  யாரோ  ‘டேய் சிவா” என்று  கத்தினால் கூட காதில்  விழுவதில்லை.    எத்தனையோ சைபர்கள்  கொண்ட  நம்பர் மைல்களுக்கு அப்பால் அதே வேகத்தில் ஓடும் சப்தமா காதில் விழும்?
எப்படி டெலெஸ்கோப்பில் சாதாரண கண்  பார்க்கமுடியாததை  பார்க்க  முடிகிறதோ அப்படிபட்டது நுட்பமானது   விஸ்வாமித்ரரின்  தவ வலிமை. அதனால்   அவர் அந்த  ‘ஓம்’    என்ற பெரும் சப்தத்தை தியானம் செய்து கேட்டு மற்ற ரிஷிகளுக்கு  சொன்னவர். அது  தான் கடவுளின்   பெயர் என்று ரிஷிகள்  ஒப்புக்கொண்டார்கள். கடவுளை ஒலி வடிவாக கண்டவர் விஸ்வாமித்ரர்.. கீதை கூட   ”ஓம்  இதி  ஏகாக்ஷரம் ப்ரம்மம்”  என்கிறதே.  சில  ஜீவன் முக்தர்கள் சமாதியில் எப்போதும்  ”ஓம்”சப்தம் கேட்கும். ‘ஓம்’   என்பதை ப்ரணவம் என்போம். சக்தியின் ஒலி.
‘தத்  ஸவிதுர்  வரேண்யம்”
தத்:  அது  (பகவான்)  ஸவிதுர் :  சூரியன் .  வரேண்யம்:  என்றால்  பூஜிக்கத்  தக்கது.   ஒருவர் உருவம் தெரிந்தால், பெயரும் தெரிந்தால் அவரை எங்கும் கண்டுபிடித்துவிடலாம் அல்லவா.    குட்டை  ஆள்   ரெட்டை நாடி,  ஒருகால்  ஊனம் கொட்டையூர்  குப்புஸ்வாமி,  சுண்டக்காமுத்தூர்  கோவிந்தன்,  என்றால் ஒரு வழியாக  சுண்டக்காமுத்தூரில் போய் அவனைத் தேடி கண்டுபிடிக்கலாம்.
விஸ்வாமித்ரர்  ப்ரணவ சப்தத்தை கண்டுபிடித்து,  அந்த மந்த்ரத்தை , காயத்ரி மந்த்ரத்தை உச்சரித்து  பகவானை அடையும் வழி காட்டி விட்டார்.  சூத்ரம் தெரிந்துவிட்டால்  கணக்கை போட்டு முடிக்கலாம் அல்லவா.  சூரியன்,   பிரபஞ்சத்தை ஒளியாக காட்டிவிட்டார்.
”பர்கோ  தேவஸ்ய தீமஹி”
பர்கோ:  ஒளி. தீபம்,   தேவஸ்ய:  தெய்வங்கள், தீமஹி:  த்யானம் செய் .
கண்ணுக்கு தெரியும்  சூரியனைப்  பிடித்துக் கொள் . அதன் மூலம்  உருவமற்றவனைப்  பிடி. அவனைக் கட்டும்  கயிறாக  ‘ஓம்’   என்ற மந்த்ரத்தை விடாமல் சொல்.  இது மட்டும் போதாது என்பது தான் ரஹஸ்யம்.  மனது என்று நமக்குள் இருக்கிறதே  அதை முதலில் கட்டி அசையாமல் பண்ண வேண்டும்.  அதை நிலை நிறுத்தி  ஓம்  என்ற த்யானத்தில்  ஈடுபட்டு மனதில் சூரியன்  மற்றும் பிரபஞ்ச ஒளியை தேடினால்  பகவானைப்  பிடித்தாகி விட்டது.”தியோ யோ ந  ப்ரசோதயாத்”
தியோ:  புத்தி,  யோ  : யார் , எவர்?,  நா:  நாம் எல்லாரும்,   ப்ரசோதயாத்:   சரியான வழியில் அழைத்துச் செல்லப்படுவோம்.
‘பகவானே  என் புத்தியை நிலை நிறுத்தி சரியான வழியில் என்னை  நடத்திச்செல்’.

இந்த  பூமி,    சூரிய மண்டல  கிரஹங்கள்  அண்ட பேரண்டம் எல்லாமே தலை தெறிக்கும் வேகத்தில் ஓடுகிறது.  அவற்றின் சப்தம்  ‘ஓம்’ என்று கடவுள் பெயரைச்  சொல்கிறது.   அந்த கடவுள் தான்  எத்தனையோ சூரியன்களின்  ஒளி,   அவனே  வணங்கத்தக்கவன்.  ஆகவே  நாமெல்லோரும்   மனதை, புத்தியை  நிலைநிறுத்தி அவனையே  தியானித்து  ஒளியாகக்  கண்டு  ‘ஓம்’  என்ற அவன் நாமத்தை விடாமல் உச்சரிக்க  அவனே  வழிகாட்ட வேண்டும்.

சுருக்கமாக  சொன்னால்  இது தான் காயத்ரி மந்த்ர உள்ளர்த்தம்.  மஹான்கள் பெரியவர்கள், யோகிகள், ரிஷிகள், பண்டிதர்கள்  வித விதமாக  அர்த்தம் சொல்வார்கள். அடியேனுக்கு தோன்றியதை நான் எப்படி புரிந்து கொண்டேனோ அப்படி சொல்லிவிட்டேன். மேற்கொண்டு காயத்ரி மந்த்ர சக்தியை பற்றி தனியாக இன்னொரு பதிவில் சொல்கிறேன்.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *