VAZHOOR 12.2.23 – J K SIVAN

வழூர்  தரிசனம் –  நங்கநல்லூர்  J K  SIVAN
12.20.2023  யாத்திரை.
எப்படி அந்த அமைதியான  அதிகம் ஆள் இல்லாத வழூர்  க்ராமம்   என் மனதை காந்தம்  போல் கவர்ந்தது?. காரணம் அங்கே ஒரு  தெய்வம் பிறந்து வாழ்ந்தது, தெய்வீகம் இன்னும் காற்றில் கலந்து எங்கும் வியாபித்துள்ளது என்பதாலோ?
தாய்   தந்தையை இழந்த பிறகு   இப்போதெல்லாம்  சேஷாத்ரி  வீட்டில் தங்குவதில்லை.  காற்றைக் கையில் பிடிக்கலாம். விரலிடுக்கில் நீர் கீழே கசியாமல் நிறுத்தலாம். ஆனால் சேஷாத்ரி ஸ்வாமிகளை ஒரு இடத்தில் நிற்க வைக்க முடியவே முடியாது. திடீரென்று தோன்றுவார். காணாமல் போய்விடுவார். பல நாட்கள் தேடியும் அகப்படமாட்டார். எப்படி எங்கே மறைகிறார். எப்போது கண்ணில் படுகிறார்.. இதெல்லாம் ப்ரம்மாவுக்கே தெரியாத ரஹஸ்யம்.19 வயது  சேஷாத்ரி காலாற   20மைல்  நடந்து காஞ்சிபுரத்துக்கு மேற்கே காவேரிப்பாக்கம் என்ற ஊரை அடைந்தார்.    காவேரிப்பாக்கம் முக்தீஸ்வரர் ஆலயம் பறி சில வரிகள்  பார்ப்போம்.  (நிறைய  இது பற்றி  என்னுடைய  ”ஒரு அற்புத ஞானி” புத்தகத்தில் சேஷாத்ரி  ஸ்வாமிகள் வாழ்க்கை அனுபவங்கள் பற்றி எழுதி இருக்கிறேன்.)

அப்பா போயாச்சு, அம்மாவும் அப்பாவைத் தேடி சென்றுவிட்டாள். சித்தப்பா ராமஸ்வாமி ஜோசியர், கல்யாணி சித்தி வீட்டில் கண்டிப்பு, அதிகாரம், கெடுபிடிக்கெல்லாம் அவர் மசியவில்லை.  திடீரென்று வீட்டை விட்டு சென்று வழக்கம்போல் காணாமல் போய்விட்டார். என்பதால், ஆள் வைத்து எங்கெல்லாமோ தேடினார்கள். வீட்டிலிருந்து எங்கெல்லாம் அவர் போவாரோ அங்கெல்லாம் தேடியது தோல்வியைத் தான் தந்தது. கோவில்கள் குளங்கள், மரத்தடிகள் சத்திரங்கள், ஸ்மஸான பூமி, மண்டபங்கள் எங்குமே காணவில்லை .எங்கே போயிருப்பார்? சித்தப்பா சித்திக்கு மனது குத்திக் காட்டியது. அப்பா அம்மா இருந்தால் இப்படி விட்டு விடுவார்களா? நமது பொறுப்பில் உள்ளவனை நாமே கவனிக்காமல் தேடாமல் இருக்க லாமா? மனது உடைந்து விட்டது. சொன்னால் கேட்பவனா சேஷாத்ரி?. நாம் கொடுமைப் படுத்தியதால் குழந்தை சேஷாத்ரி வீட்டை விட்டு வெளியே சென்று விட்டான் என்று தானே எல்லோரும் ஊரில் அபவாதம்  சொல்வார்கள்?  அம்மா அப்பா இல்லாத பையனை  சித்தப்பா சித்தி, வீட்டை  வீட்டை விரட்டி விட்டார்கள் என  அபவாதமும் பேசுவார்களே .
சில நாள் கழிந்தது. ஒருநாள் ஒரு நல்ல சேதி காதில் விழுந்தது. ”அப்பாடா, சேஷாத்ரி காவேரிப் பாக்கத்தில் இருக்கிறானாமே” . யாரோ சொன்னார்கள்.
20  மைல்  தள்ளி இருக்கும்  காவேரிப்பாக்கத்துக்கு சேஷாத்ரி எப்படி எப்போது நடந்து சென்றான்? அந்த ஊர் இருப்பதே அவனுக்கு தெரியாதே.” ஓஹோ பெரியம்மா சுந்தரக்கா (சுந்தராம்பாள்) அப்புறம் வேறே  யாரோ சில பேர் தூரத்து உறவினர்கள் அங்கே வசித்தார்கள் என்பதால் சேஷாத்ரி விசாரித்துக்கொண்டு அங்கே போயிருப்பானோ?”.சேஷாத்ரி ஸ்வாமிகள் யாரையும் எதிர்பார்த்து அங்கே செல்லவில்லை. யார் வீட்டுக்கும் போக வில்லை. அங்கே இருக்கும் பழமை வாய்ந்த முக்தீஸ்வரர் ஆலயம் சென்று தங்கினார்.
முக்தீஸ்வரர் ஆலயம் பல்லவர் காலத்தியது. எட்டாம் நூற்றாண்டில் நந்திவர்மன் கட்டிய பழைய ஆலயம். ஸ்ரீ அலங்காரவல்லி சமேத முக்தீஸ்வரர் சேஷாத்ரி ஸ்வாமிகளை கவர்ந்தார். அந்த ஆலயத்தை கண்டவுடன் உள்ளே நுழைந்து  ஒரு மண்டபத்தில் அமர்ந்தார்.
சென்னையிலிருந்து கிட்டத்தட்ட 100 கி.மீ. வேலூரிலிருந்து 41 கி.மீ. ஒரு காலத்தில் அபிமுக்தீஸ்வரம் என்ற பெயரோடு இருந்தது. நிறைய சோழ, பல்லவ கல்வெட்டுகள் உள்ளன. திருக்குறிப்பு தொண்டர் எனும் அறுபத்து மூவரில் ஒரு நாயனார் இருந்து சிவனை வழிபட்ட இடம் என்று சொல்வதுண்டு.
சேஷாத்ரி ஸ்வாமிகள் கோவிலில் இருப்பதையோ, கடை வீதியில் நடப்பதையோ சேஷு என்ற உறவுக்கார பையன் (சுந்தரக்கா பிள்ளையோ?) பார்த்துவிட்டான். அண்ணா சேஷாத்ரியை சிவன் கோவிலில் பார்த்தேன் என்று வீட்டில் போய் சொல்லிவிட்டான்.
அவ்வளவு தான். சொந்தக்காரர்கள் கோவிலுக்கு ஓடினார்கள். சேஷாத்திரியின் கோலம் அவர்களுக்கு வருத்தம் தந்தது. ”வீட்டிற்கு வாடா என்று கூப்பிட்டார்கள். மறுத்து விட்டார். வீட்டிலிருந்து உணவு கொண்டு வந்து கோவிலில் தந்தார்கள். சிலநாள் இப்படி ஓடியது.
சேஷு எப்போதும் சேஷாத்திரி ஸ்வாமிகளோடயே இருந்தான். இருவரும் ஒருநாள் முக்தீஸ்வரர் ஆலயத்தை ப்ரதக்ஷிணம் பண்ணிக் கொண்டிருந் தார்கள். அப்போது எங்கிருந்தோ ஒரு நாகம் உஸ்ஸ்ஸ் என்று சீறிக்கொண்டு அவர்கள் அருகே இருந்த புன்னைமரக் கிளையில் பட மெடுத்தது. பிறகு மெதுவாக இறங்கி கோவில் வடக்கு மதில் சுவர் மேல் ஊர்ந்தது. சேஷு அலறினான்.
”அண்ணா பாம்பு பாம்பு ”என்று கத்தினான். சேஷாத்ரி மதில் சுவர் ஓரமாக நடந்து கொண்டிருந் தார். சேஷுவின் கத்தல், பயக் கூச்சல், அவரை பதறச் செய்யவில்லை. அன்போடு ”வாயேன் இங்கே, என்கிட்ட” என்று அந்த நாகத்தை கை காட்டி அழைத்தார். அம்மா இரு கரம் நீட்டி ஆசையாக ”வாடா செல்லம்” என்று கூப்பிட்டால் குழந்தை ஓடி வருமே அப்படி அந்த பெரிய கரு நாகம் எந்த பதற்றமும் இன்றி மெதுவாக அசைந்து சேஷாத்ரி ஸ்வாமிகள் அருகே வந்தது. அவர் மேல் ஏறிக்கொண்டது. அவரது கழுத்தை சுற்றி மாலையாக படர்ந்தது. தலைமேல் படம் எடுத்துக் கொண்டு அங்குமிங்கும் பார்த்தது. அவ்வளவு தான் சேஷு அலறிக்கொண்டே வியர்த்து விறு விறுக்க தலை தெறிக்க ஓடினான். ”ஐயோ, அப்பா, அண்ணாவை பாம்பு கடிச்சுடுத்து” என்று உரக்கக் கத்திக்கொண்டே ஓடினான்.
கோவிலில் இந்த அலறல் சத்தம் கேட்டு நிறையபேர் அங்கே உடனே கூடிவிட்டார்கள். சுந்தரக்கா மார்பில் அடித்துக் கொண்டாள் . சேஷாத்ரி ஸ்வாமிகளை தேடிவந்த மற்ற உறவினர்களும் பயத்தால் நடுங்கினார்கள். அருகே வர பயத்தோடு சுற்றி சிலையாக நின்றார்கள். சிறிது நேரத்தில் நாகம் சேஷாத்ரி ஸ்வாமிகள் உடம்பிலிருந்து மெதுவாக கீழே இறங்கி புதர்களை நோக்கி ஓடி மறைந்தது. சேஷாத்ரி ஸ்வாமிகளை மூலநாதர் முக்தீஸ்வரர் தனது ஆபரணம் நாகேஸ்வரனை அனுப்பி வரவேற்றிருக்கிறார்.
இந்த கோவிலில் சேஷாத்ரி ஸ்வாமிகள் விடாமல் ஜபம் செய்து கொண்டிருப்பார். அலங்காரவல்லி ப்ரத்யக்ஷமாகி அவரை ஆசிர்வதித்தாள்.. அளவற்ற ஞானம் தந்தாள்.
ஆலயத்தில் நவராத்ரி மண்டபம் என்று ஒரு இடம் உண்டு. அங்கே அன்ன ஆகாரமின்றி அந்த சிறு வயதில் சேஷாத்ரி ஸ்வாமிகள் பலநாட்கள் நிஷ்டையில் இருந்திருக்கிறார்.பெரியம்மா சுந்தரக்கா பலமுறை வீட்டுக்கு வாடா என்று கூப்பிட்டும் ஸ்வாமிகள் எங்கும் போகவில்லை.
ஒருநாள் ”புளியோதரை, தயிர் சாதம் கொஞ்சம் கொண்டுவா” என்று அவளிடம் கேட்டார். அவள் உடனே தயார் செய்து கொண்டுவந்து தந்தாள். அதை அவர் என்ன செய்தார்? லபக் லபக் என்று நம்மைப் போல் விழுங்கவில்லை. தயிர் சாதத்தை கெட்டியாக பிசைந்து ஒரு லிங்கம் செய்தார். உதிரி உதிரியாக இருந்த புளியோதரையை எடுத்து ஸ்தோத் ரம் சொல்லி அர்ச்சனை பண்ணினார். அர்ச்சனை முடிந்தது. தயிர் சாத லிங்கத்தை கையில் பக்தி ஸ்ரத்தையோடு ஏந்திக் கொண்டு ஆழமான கோவில் குளத்துக்குள் இறங்கினார். ஜலத்தில் அமர்ந்துகொண்டு ரெண்டுநாள் தபஸ். வெளியே வரவில்லை.
இதற்குள் விஷயம் அறிந்த காஞ்சிபுரத்திலிருந்து கிளம்பிய சித்தப்பா ராமஸ்வாமி ஜோஸ்யர் , சித்தி கல்யாணியோடு காவேரிப்பாக்கம் வந்துவிட்டார். சேஷாத்ரி ஸ்வாமிகள் கண்ணைத் திறந்தார். அந்த ப்ரம்ம ஞானஸமுத்ரம் எல்லோரையும் சுற்றி முற்றி ஒருதரம் பார்த்தது. சித்தப்பா சித்தி கண்ணில் பட்டார்கள். கண்களில் நீரோடு அவர்கள் அழைத் தார்கள். சேஷாத்ரி ஸ்வாமிகள் கண்களில் எந்த உறவு பந்தமும் பாசம் பிணைப்பும் இல்லை,.
”எங்களை மன்னிச்சுடுப்பா. உன்னுடைய மஹிமை தெரியாம தப்பு பண்ணிருக்கேன். கண்டிச் சுருக்கேன். தொந்தரவு பண்ணிட்டேன். எங்களை விட்டு போயிடாதேப்பா. நீ இல்லாம நாங்க வாழமுடியாது.” சேஷாத்ரி ஸ்வாமிகள் காலில் விழுந்தார்கள்.
கல்யாணி சித்தி ஓவென்று கதறினாள் ‘அப்பா சேஷு, உன்னை இப்படி பார்க்கவா உங்கம்மா மரகதம் உன்னை எங்கிட்டே உட்டுட்டு போனா ?” நீ வீட்டை விட்டுட்டு போனப்பறம் எங்களால சாப்பிட, தீர்த்தம் குடிக்க கூட முடியலடா. தூங்கி ரொம்ப காலம் ஆச்சுடா. எங்களோடு பெரிய மனசு பண்ணி வந்துடுடா. ராஜா மாதிரி இருக்க வேண்டியவன் இப்படி பரதேசி கோலத்தோடு சோறு தண்ணி இல்லாம தெருவிலே நிக்கிறதை பார்த்தா கண்ணிலே ரத்தம் வடியறதுடா . கன்னம் ஒட்டி எலும்பு தெரியறது, கண்ணெல்லாம் குழி விழுந்திருக்கு. தாடியும் மீசையுமா அனாதை பிச்சக் காரனாயிட்டியேடா. நாங்க உயிரோடு இருக்கிறவரை உன்னை இப்படி விடுவோமா? கிளம்பு. வா. எங்களோடு வாப்பா.”

ஸ்வாமிகளுக்கு சிரிப்பு வந்தது. ”குடும்பமோ, உறவோ, பந்தமோ வீடோ வாசலோ எதுவுமே எனக்கில்லை. நீங்க சௌகர்யமா சந்தோஷமா திரும்பி போங்கோ” என்று சொல்லி விட்டு சேஷாத்ரி ஸ்வாமிகள் அங்கிருந்து நகர்ந்தார். பேசவேண்டாம். அந்த ப்ரம்மஞானி மௌன விரதம் மேற்கொண்டார்.
எவ்வளவோ முயன்று பார்த்தும் சித்தி சித்தப்பாவால் அவர் மனதை மாற்ற முடியவில்லை. அவர்கள் உலக ஸம்ஸார பந்தத்தில் ஆழ்ந்து மூழ்கியவர்கள். கரையேற பல காலம் ஆகும்.பகவானே, குழந்தை மனசு மாறணும் என்று முக்தீஸ்வரரை வேண்டிக் கொண்டு காஞ்சிபுரம் திரும்பினார்கள்.மீண்டும் ஒருமுறை  காவேரிப்பாக்கம் முக்தீஸ்வரர்  ஆலயம் செல்ல விருப்பம். கூடிய சீக்ரம் சென்று தரிசனம் செய்துவிட்டு  விவரம்  சொல்கிறேன்.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1426

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *