ANXIETY OF BIRDS J K SIVAN

பறவைகள் பேச்சு.  –   நங்கநல்லூர்  J K  SIVAN 

ஒன்றிலிருந்து மற்றொன்றைப் பார்த்தால் தான் ரெண்டுக்கும்  உள்ள  வித்யாசம் புலப்படும்.  பட்டணங்களில் வசித்திருக்கிறேன்.  திருவல்லிக்கேணி, மைலாப்பூர், கோடம்பாக்கம், தி.நகர்,  கோமளீஸ்வரன் பேட்டை, எழும்பூர் என்று  பல  வாடகை வீடுகளில், போர்ஷனில்,  ஒண்டுக் குடித்தன  வாழ்க்கை பழக்கம்.   வடபழனி அரை நூற்றாண்டுக்கு முன் வளராத பொழுது, நங்கநல்லூர்  விழித்துக் கொள்ளாத போது, கிராமச்  சூழ்நிலையை அளித்து அதிலும் வாழ்ந்தவன்.
வாழ்க்கையில் மாறுதல் ஏற்பட்டு காலச்சக்கரம்  என்னை லண்டன், டோக்கியோ, துபாய், சிங்கப்பூர், ஜேர்மனி என்று எங்கெல்லாமோ தூக்கிச் சென்று  வாழ வைத்து அதுவும் அனுபவமானது.  ஆளே இல்லாத  கடற்கரையில் குட்டி குட்டியாகி, தானாகவே   இயற்கையாக  நடுக்கடலில் தலை நீட்டிய மாலத் தீவுகளிலும் வாழ்ந்தேன். அவ்வப்போது  தஞ்சாவூர், கும்பகோணம், மாயூரம்  போன்ற  பட்டணங்களை அடுத்த கிராமங்களிலும் சென்று  ஆலய தரிசனங்களை அனுபவித்தவன்.  அதை விட்டு விட்டு இப்போது ஒரு சின்ன கற்பனை.   கொஞ்சம் சுவாரஸ்யமாக  என்  மனநிலையை   அது விளக்கட்டும்.
ஒரு கிராமத்தின் பாதையில்  இயற்கையின் பூரிப்பில்  மூழ்கி திளைத்து கால் போன போக்கில் நடந்து கொண்டிருந்தேன். விடிகாலை சூரியனின்  பொன்னிற கிரணங்கள்  என்னையும் என்னைச் சுற்றியுள்ள வவைகளையும் பொன்னிறமாக  மாற்றிக் கொண்டிருக்க  சுகந்த மண மலர்கள் எங்கும் மரங்களில் பூத்துக் குலுங்கி, இளந் தென்றல் காற்றில்   ஆட,   அதை  ஸ்வாசித்துக்கொண்டு மண் பாதையில்  நடந்து சென்று கொண்டிருந்தேன்.  கும்பகோணம்  அணைக்கரை பகுதியில் ஏதோ  ஒரு கிராமம். பெயர் மறந்து போய்விட்டது. எங்கும்  பச்சைப் பசேல்.  கண்ணுக் கெட்டிய வரை  வரப்பு கட்டிய  பாத்திகள்,  சுற்றிலும் வித விதமான  அடர்ந்த மரங்கள், ஜிலு ஜிலு வென்ற காற்றில்  சல சல என்று   ஓடிக்கொண்டிருந்த  வாய்க் கால்,  ஒரு பெரிய  துரவுக் கிணற்றில் இருந்து ஏற்றம் இறைத்து நீர்  பாய்ச்சிக் கொண்டிருந்த சில விவசாயிகள்  பாடின தெம்மாங்கு பாடல் காதில் கேட்டது.  குளிர்ந்த காற்று  உற்சாகம் தந்தது.  ஒரு கண்மாயியின்  சுவற்று விளிம்பில்  போய் உட்கார்ந் திருந்தேன்.  மேலே  பவழமல்லி  மரத்தின் மலர்கள் என் மேல் அபிஷேகம்.

சூரியன் இன்னும்  மேலே  எகிறி ஏறி உஷ்ணத்தை வாரி வீசவில்லை.  தென்னங்குருத்து  பாளையை  சுற்றி கூடையில்  திருநீறு  பூசிய  பானையில்  பதநீர்  விற்கும் பெண்  எதிரே வந்தவள் சிரித்தாள். ஜாடையாக வேண்டுமா என்றாள . தலை  அசைத்து வேண்டாம் என்று வணங்கினேன். நான் அமர்ந்த இடத்தில் என் முதுகுக்கு பின்னால் ஒரு  புளியமரம். அடர்ந்த வளர்ந்த வயதான மரம். நிறைய கிளைகளில் பசேலென்று பச்சை இலைகளில் இன்னும் உயிர்ப்பு  நிறைந்திருந்தது.  என் கண்ணுக்கெதிரே  கிளையில் நிறைய  பறவைகள், ஒரு  கிளிக் குஞ்சு அதன் அம்மாவிடம் பேசிக் கொண்டிருந்தது எனக்கு திடீரென்று புரிந்தது. எப்போது நான்  விக்ரமாதித்தனாக மாறி  பறவை பாஷைகள்  எனக்கு  புரிந்தது. எப்படியோ  எனக்கு ஒரு தெய்வீக சக்தி வந்ததாக ஏன் எடுத்துக் கொள்ளக்கூடாது? அது தீபாவளி நெருங்கும் சமயம்.
”அம்மா பட்டாசு பட்டாசு  என்று எதையோ சத்தம்  பண்ணுகிறார்களே அது எதற்கு அம்மா?  ரொம்ப பயமா இருக்கே  எனக்கு?”-  கிளிக்குஞ்சு.
”ஆமாண்டா கண்ணு,  நானும் எல்லா இடத்திலேயும் பார்த்தேன். ஏதோ தீபாவளி  பண்டிகை, விழா,என்று என்னவோ காரணம் எல்லாம் சொல்லி கூட்டமா சேர்ந்து, நிறைய காசை செலவு பண்ணி  ”படார் படார்” னு வெடிக்கிற  வழக்கம் இந்த மனுசங்களுக்கு.  அதுகள்  வெடிக்கிற  சத்தம்  நம் பறவை வர்கத்தை மட்டுமில்லே, மிருகங்களைக் கூட  கதி கலங்க அடிக்குது”
”சில இடத்திலே நிறைய பளிச் பளிச்சுன்னு வெளிச்சம் எல்லாம் கூட இருக்கே.”
”ஆமாம் ஆமாம். அதெல்லாம் மத்தாப்பு,  வாண வேடிக்கை வகை என்பாங்க. திடீரென்று நமக்கு இருக்கிற மாதிரி ரெக்கை முளைச்சது போல் விர்ரென்று  கீழே இருந்து எதையோ பத்த வச்சு,  மேலே பறந்து போவுது.  சிலது  நிறைய கலர் கலரா சுறு சுறுன்னு எரியறது.  சிலது மேலே பறந்து போய் படார்னு வெடிக்கிறது. கலர் கலர் துண்டுகளாக சிதறுது. நமக்கு  பயமா இருக்கு. இறை தேட கூட எங்கும் போக முடியலே.  பசிக்குது. புகை நெஞ்சை கமருது. இருமல் வருது.  பட்டணத்திலே ரொம்ப இந்த தொந்தரவு ஜாஸ்தி.
”பட்டணம் என்றால் என்னம்மா?”
”அதுவா,  நாம இருக்கிறோமே  அந்த மாதிரி  மரமே இல்லாம  எங்கேயுமே  உயர உயரமா  கல்லுக் கட்டிடமா இருக்குமாம். தண்ணி இருக்காதாம். ஒரே சத்தமா இருக்குமாம்.  டீசல் பெட்ரோல்  என்று என்னமோ  சொல் றாங்க அதோட நாற்றம் மூச்சை திணற வைக்குமாம். ஜனங்க  ரொம்ப கத்துவாங்களாம்.  அங்கிருந்து வந்த  ஒரு கொக்கு சொல்லிச்சு.  நாம  அங்கே தங்கவே இடமே இல்லையாம்”
 ”அம்மா எனக்கு அங்கேயெல்லாம் பறக்கவே பயமா இருக்கே.”  மரத்திலேயே இருப்போம்னு பார்த்தா மரமே இல்லை என்கிறியே.”
” கொக்கு  கூட இதே தான் சொல்லிச்சு.  அதுக்கு உக்காரவாவது  ஒரு  குச்சிககாடு கிடைச்சதேன்னு சந்தோஷமாம் .
  நீ சொன்ன  பட்டணத்திலே  எம்மா இப்படி நமக்கு மரமே இல்லை.
” அவங்க  நம்ம வீட்டை எல்லாம் அழிச்சிட்டு அவங்க வீடு கட்டிட்டாங்கம்மா.”
‘ அப்படின்னா, மழையிலேயும் வெயிலில்லெயும் நாம் அலைஞ்சு பாதுகாப்பா ஒரு இடம் கண்டுபிடிக்கறது ரொம்ப கஷ்டம் இப்போ  அங்கே ”
”அது மட்டுமில்ல கண்ணு,  கொஞ்சம் அசந்தா நம்மை பிடிச்சு  வித்துடறாங்களாம்  இல்லேன்னா கொன்னு தின்னுடுவாங்களாம் . கொக்கு சொல்லிச்சு..
இன்னும் கொஞ்ச நாள் தான் நாம எல்லோரும் இருக்கப்போறோம். இப்பவே நம்ம கூட்டம் குறைஞ்சிண்டே வரதாம் பட்டணத்திலே”
 ”அம்மா இந்த ஊரு  மாதிரி அங்கேயும்  குழந்தைகளுக்கெல்லாம் நம்மை பிடிக்கும்  இல்லே?”
”ஆமாம். அங்கே  குழந்தைகளுக்கு  நம்முடைய  பொம்மையை எல்லாம் கலர் கலரா போட்டு புஸ்தகத்திலே காட்ராங்களாம்.  ப்ளாஸ்டிக்காம், ரப்பராம் , அதிலே பண்ணி தருவாங்களாம்.  அந்த குழந்தைகள் எல்லாம்  பெரியவங்களா ஆவதற்கு முன்னாலேயே   அவங்க மனசெல்லாம் மாத்திடுவாங்க.  யாராவது ஒத்தர் ரெண்டு பேர் தான் நம்மை பத்தி கவலைப்படறாங்களாம். வெயிலுக்கு கொஞ்சமாவது தண்ணியாவது வைக்கறாங்களாம்””இது அக்ரமம் இல்லையா?”
”இல்லை இது பேரு  நாகரிக வளர்ச்சியாம்”.
”இயற்கையை அழிச்சு   காசு ஆசையிலஅவங்க உண்டாக்கற  துரோகம்  என்று கூட சொல்லலாமா?தெரியலே.”

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1426

One comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *