THIRUVAAVADUDHURAI SIVAN TEMPLE J K SIVAN

திருவாவடுதுறை – நங்கநல்லூர் J K SIVAN
மயிலாடுதுறை -கும்பகோணம் சாலையில் திருவாவடுதுறை ஸ்தலம் உள்ளது. வாசலில் ஆதீன வளைவு தெரியும். திருவாவடுதுறை ஆதீனக் கோயில். அங்கே இருக்கும் ரயில் நிலையம் நரசிங்கன் பேட்டை. அம்பாள் பசு வடிவத்தில் ஈஸ்வரனை வழிபட்ட க்ஷேத்ரம். ஆதீன மடமும் கோயிலும் பக்கத்திலேயே உள்ளன..
இங்கே என்ன விசேஷம்?
ஞானசம்பந்தர், தன் அப்பா யாகம் நடத்த ஈஸ்வரனிடம் பொற்காசுகள் கேட்டார்.
சுந்தரர் தனது தேக வியாதி தீருவதற்காக பிரார்த்தித்தார்.
திருவிடைமருதூரின் பரிவார ஸ் தலங்களுள் இது நந்தி ஸ்தலம்.
தேவர்கள் ‘படர் அரச,மரமாக விளங்க அதன்கீழ் லிங்கம்.
திருமூலர் தங்கியிருந்து தவம்செய்து 3000 திருமந்திரம் அருளியது,
போகசித்தருடைய சிஷ்யர் திருமாளிகைத் தேவர் பல அற்புதங்களை நிகழ்த்தியது,
சேரமான் பெருமான் நாயனார், விக்ரம பாண்டியன் ஆகியோர் வழிபட்டது,
முசுகுந்தனுக்கு புத்ரபாக்யம் அருளி இது தான் திருவாரூர் நான் தான் தியாகேசன் என ஈஸ்வரன் காட்டியது.
சித்தர்கள் சிலர் அட்டமா சித்திகளை வெளிப்படுத்தியது.
தருமதேவதை ஈஸ்வரனை வழிபட்டு வாகனமாகியது
திருமூலர், திருமாளிகைத் தேவர் போன்ற மகான்களின் சமாதிகள் இருப்பது.
இங்கே ஒரு பெரிய நந்தி அபூர்வமாக இருக்கிறது.
ஈஸ்வரன் வீரசிங்க ஆசனத்திருந்து சுந்தர நடனம் ஆடி மகாதாண்டவம் புரிந்த ஸ்தலம்.
கோமுக்தி நகர், அரசவனம், முத்தி க்ஷேத்ரம், கோகழி, சிவபுரம், பிரமபுரம், அகத்தியபுரம், தருமநகர், கஜாரண்யம், நந்திநகர், நவகோடி சித்திபுரம் என்றெல்லாம் திருவாவடுதுறைக்கு வேறு பெயர்கள்.
ஆ+ஆடுதுறை = பசுக்கள் நிறைந்துள்ள காவிரிக் கரையிலுள்ள ஊர். சமஸ்கிருதத்தில் கோமுக்திபுரம்.
ஈஸ்வரன் இங்கே மாசிலாமணீசுவரர், கோமுக்தீஸ்வரர் என்றும் அம்பாள் ஒப்பிலாமுலையம்மை என்றும் நாமம் கொண்டவர்கள்.
ஸ்தலவிருக்ஷம் படர்ந்த அரசமரம்.
தீர்த்தம் – கோமுக்தி தீர்த்தம், பத்மதீர்த்தம், கைவல்ய தீர்த்தம்.
இங்கே விநாயகர்பெயர் துணைவந்த விநாயகர்.
நந்தி – தருமநந்தி.
மூவர் பாடல் பெற்ற ஸ்தலம்.
கிழக்கு நோக்கிய ஆலயம். எதிரில் கோமுக்தி தீர்த்தம் உள்ளது. பசுவான உமைக்குத் துணையாக வந்த விநாயகர், முருகன் சந்நிதிகள். இரண்டாங் கோபுர வாயிலில் பெரிய நந்தி. பின்னால் உள்ள பலிபீடமே ஞானசம்பந்தருக்குப் பொற்கிழி அளித்த இடமாகும்.
வழக்கம்போல அம்பாள் சந்நிதி தெற்கு பார்த்து இருக்கிறது. இங்கே நவக்கிரஹங்கள் இல்லை. தியாகேசர், செம்பொன் தியாகர், புத்திரத் தியாகசேர், சொர்ணத் தியாகேசர் மூர்த்தங்கள் உள்ளன. திருமாளிகைத் தேவர் வாழ்ந்த இடம் தான் ஆதீன மடம். அவருக்கு கோயில் உண்டு. பக்கத்தில் நமசிவாய மூர்த்திகள் கோயிலுள்ளது. இவருக்குப் பூஜை நடைபெறுகிறது. மேற்குப் பிராகாரத்தில் திருமூலர் சந்நிதி.
திருமாளிகைத் தேவர், நரசிங்கன் என்னும் மன்னனின் படைகளை, கோயில் மதிலில் உள்ள நந்திகளை உயிர் பெற்றெழச் செய்து விரட்டியமையால் இன்றும் கோயில் மதில்களில் நந்திகள் இல்லை.
பழமையான ஆலயம். பராமரிக்கப்பட்டு வருகிறது சந்தோஷம் தருகிறது. முதலாம் பராந்தகன் கால கல்வெட்டு புரட்டாசி விழாவில் திருமூலர் நாடகமும் – ஆரியக் கூத்தும் நடந்ததாக சொல்கிறது.
“இடரினும் தளிரினும் எனதுறு நோய்
தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்
கடல்தனில் அமுதொடு கலந்த நஞ்சை
மிடறினில் அடக்கிய வேதியனே
இதுவே எமை ஆளுமாறு ஈவது ஒன்று எமக்கில்லையேல்
அதுவோ உனதின்னருள் ஆவடுதுறையரனே. (சம்பந்தர்)
“மஞ்சனே மணியுமானாய் மரகதத் திரளுமானாய்
நெஞ்சுளே புகுந்து நின்று நினைதரு நிகழ்வினானே
துஞ்சும் போதாகவந்து துணையெனக்காகி நின்று
அஞ்சல் என்றருள வேண்டும் ஆவடுதுறையுளானே”. (அப்பர்)
“மண்ணின்மேல் மயங்கிக் கிடப்பேனை
வலிய வந்தெனையாண்டு கொண்டானே
கண்ணிலேன் உடம்பில்அடு நோயால்
கருத்தழித்து உனக்கே பொறையானேன்
தெண்ணிலா எறிக்குஞ் சடையானே
தேவனே திருவாவடு துறையுள்
அண்ணலே எனை அஞ்சல் என்றருளாய்
ஆர் எனக்கு உறவு அமரர்கள் ஏறே”. (சுந்தரர்)
வீழும்பொய் தீராவடுவுடையார் சேர்தற் கருந்தெய்வச்சீராவடுதுறையெஞ் செல்வமே.” (அருட்பா)
அப்பரின் அருமையான ஒரு பாடல்:
திருவேயென் செல்வமே தேனே வானோர்
செழுஞ்சுடரே செழுஞ்சுடர்நற் சோதி மிக்க
உருவேஎன் னுறவேஎன் ஊனே ஊனின்
உள்ளமே உள்ளத்தி னுள்ளே நின்ற
கருவேயென் கற்பகமே கண்ணே கண்ணிற்
கருமணியே மணியாடு பாவாய் காவாய்
அருவாய வல்வினைநோய் அடையா வண்ணம்
ஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே
என் செல்வமே. வானோர்க்குப் புகழ் உண்டாருக்காட்சி வழங்கும் பெரிய ஜோதியே. என் கற்பகமாகவும் உறவாகவும், உடலாகவும் உள்ளமாகவும் உள்ளத்தின் உணர்வாகவும் கண்ணாக ஆற்றலை அருளும் ஞானமே. அடியார்க்குத் திகவும் கண்ணின் கருமணியாகவும் கருமணியின் பாவையாகவும் செயற்படும் ஆவடுதுறையிலுள்ள தேவர் தலைவனே. வடிவு புலப்படாத என் வல்வினை னாய் என்னைத் தாக்காதபடி காப்பாயாக.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *