KANNAN AND KAVIGNAN J K SIVAN

பாரதி பாரதன் உறவு     —   நங்கநல்லூர் J K  SIVAN

”கண்ணா,  வருகிறேன் உனைத் தேடி!”

மஹா கவி  பாரதியாரைப் பற்றி அடிக்கடி  நினைக்காமலோ,  அவரது எழுத்தை ரசிக்காத  தமிழன் இல்லை.  தமிழுக்கு உயர்ந்த  பரிசு பாரதியும் அவன் எழுத்தும்.   பாரதி கிருஷ்ண பக்தன். ஆகவே  என் போன்ற  கிருஷ்ண பக்தர்களுக்கு டபுள் அதிர்ஷ்டம். க்ருஷ்ண பக்தியும்  பாரதியின் தமிழும் சேர்ந்த அம்ருதம் ஒன்றை இன்று அளிக்கிறேன்.
++
காதல் வயப்பட்டவனுக்கு  கண்டதெல்லாம் சொர்க்கம்.  அவ்வளவு  சந்தோஷம் அவன் மனதை நிறைத்திருக்கும்.   மனதைப் பறிகொடுப்பது என்பது  காதலில்  மட்டுமே சாத்தியம்.  சாதாரண மனிதர்களுக்கே,  அல்ப ஜீவன்களுக்காகவே  இவ்வாறு மனதை இழப்பதில் சந்தோஷம் என்றால்  அந்த  பரமாத்மாவிடம் காதல் கொண்டால், எப்படி இருக்கும்?   அனுபவித்தர்களுக்கு மட்டுமே  தெரியும். ”அவனுக்கே நாம்  ஆளாமே”  என்றால், அவனாகவே  ஆகிவிட்டால்,   எத்தனை சந்தோஷம் என்று யாராலாவது அளந்து சொல்ல முடியுமா? எதனால் அளப்பது?  எவ்வளவு என்று அளப்பது? இதுவே சிற்றின்பத்துக்கும் பேரின்பத்துக்கும்  உண்டான  வித்தியாசம் என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம்.

அற்புதக்கவி, அமரகவி, பாரதி  திடீரென்று ஒரு அழகிய  பெண்ணாக மாறி  ஒருவன் மேல்  மையல் கொள்கிறாள். ஆழ்வார்கள்  சிலர்,  மாணிக்கவாசகர்  போன்றார் இந்த  அற்புத அனுபவம் பெற்றவர்கள்.  பாரதி என்ற  ”கற்பனைப் பெண் ”காதல் கொண்ட  அந்த ஒருவன்  வேறு யாரோ  அல்ல. புருஷோத்தமனான கண்ணன்.  அவனே காதலன்.  அந்த காதலில் அவள் படும்  உணர்ச்சிகளை  உயிருள்ளவை  யாக்கி மெருகூட்டிய  தமிழில் பருகும்போது கிடைக்கும்  ஆனந்தம் தான் உண்மையிலே  பரமானந்தம். ஏன்  இன்னும் யாருமே  மஹாகவி பாரதிக்கு  பாரத ரத்னாவோ  அதை விட சிறந்த ஒரு விருதோ நன்றியோடு வாங்கித் தர முன் வரவில்லை?.  அங்கும்  ஜாதி  தான் முன்னே நிற்கிறதோ?  அவருக்கு  ரிசர்வேஷன் கோடா கூட கிடையாதே.   தமிழ் தமிழ்  என்று மூச்சுக்கு முன்னூறு முறை பேசி  தமிழே பேச தெரியாத, காசு தேடும்  ஜீவன்களுக்கு  நல்ல எண்ணம் எப்படி தோன்றும்?

பாரதிப்  பெண் தோழியரிடம் என்ன சொல்கிறாள்?
”என் உயிருக்குயிரான  தோழியரே,  என் மனத்தைப்  பிளந்து  உள்ளே  ஓடும்  உணர்ச்சிகளை கொட்ட  முடியாமல்  துடிக்கின்றேன்.    நேரம்  ஓடிக்கொண்டே இருக்கிறதே  தவிர  தூக்கம் ஏனோ  நெருங்க வில்லையே. நீங்கள் இருப்பதும்  நினைவில் இல்லையடி. கும்மாளமடிக்கிரீர்கள்.  அதைப் பார்த்தும் எனக்கு ஏன்  சந்தோஷம் இல்லை?   இரவில்  திருடும்  திருடன் கூட தூக்கத்தில் ஆழ்ந்து கீழே பொத்தென்று விழும்  நேரம் ஆனபோதிலும்  ஒரு   பொட்டு  தூக்கம் கூட  என்னை   ஏன் அணுகவில்லை?
வீட்டில்  என்னென்ன  அட்டகாசம்  கோலாகலம் களேபரம் எல்லாம் நீங்கள்  பண்ணுகிறீர்கள்.  சத்தம்  ஊரைக் கூட்டுகிறது. உங்களது   உற்சாக கூச்சல். வீட்டில்  அம்மா என்று ஒருவள் இருக்கிறாள்  என்று கூட  ஞாபகம் இல்லாமல் போய் விட்டதே.
உங்கள் பேச்சில் சாரம் இருக்கிறது என்கிறீர்கள். எனக்கோ சலிப்பு தான் வருகிறது.
எவ்வளவோ  நாள்  நானும் பொறுத்திருந்து  பார்த்தாகி விட்டது. நாளுக்கு நாள்  இது அதிகமாகத் தான்  போகிறது.
கூனன்  ஒருவன்  வந்தான்.  சும்மா இருந்தானா?  மெதுவாக நாணிக் கோணி  பின்னலிட்ட கொண்டை யில் மலர்கள் கலைந்து கீழே விழுமாறு  இழுத்தான்  என்கிறீர்கள்.
ஒரு   மதம் பிடித்த யானை வேகமாக பிளிறிக் கொண்டு வஞ்சியின் அருகில் ஓட  அவள் அலறிக்கொண்டே மூர்ச்சையுற்றாள்  என்று கதை  விட்டீர்கள்.
வெண்ணைப் பானையிலிருந்த  அத்தனை வெண்ணையும்  தோழி ரோகிணி  விழுங்கியதால்  வயிற்று வலி  தாங்காமல்  குய்யோ முறையோ என்று  கத்துகிறாள்  என்று  கதை விட்டு   கை  கொட்டி  சிரிக்கிறீர்கள்.  எனக்கு மட்டும் ஏனோ அதைக் கேட்டு  சிரிப்பு வரவில்லை.
பண்ணையில் வேலை செய்யும்  உழவன் மனைவியை பத்து சிறுவர்கள்  சூழ்ந்து கொண்டு  ஆசையாய்  முத்தமிட்டார்கள் என்றீர்கள்.  என் மனதில் அது  பதியவில்லை.
ஒரு பெண்ணுக்கு  ஜோசியம் பார்த்து சொல்கிறேன் என்று ஒருவன் சொல்ல  அவள் கையை  நீட்டினாள். கையைப் பார்த்து விட்டு ஜோசியன்  40 அரசர்கள் போட்டி போட்டுக்கொண்டு உன்னைக்   கல்யாணம் பண்ணிக்கொள்ள வரப்போகிறார்கள்  என்று  டபாய்த்து விட்டு  ஒரு  வாய்  கஞ்சி வாங்கி  குடித்து விட்டு  அவளுக்குப் பரிசம் போட்ட  மாமன்  அங்கே வருவதற்குள் அந்த இடத்தை விட்டு ஓடிய  ஜோசியனின்  ‘நல்ல’  காலம்  பற்றி  நடித்துக் காட்டினீர்கள். ஜோசியன் ஓடினதை வேடிக்கையாக  சொன்னீர்கள்.  எனக்கு  ஸ்ரத்தையே இல்லை கேட்க.
ஒரு பெண்ணோடு  கோபத்தில்  மற்றவள் சண்டை போட்டாள்  என்றீர்கள்.
நிறைய வித்தைகள்  கற்றவள் என்றும்  மேற்கு திசையில் உள்ள மேனாட்டு மக்கள்  பேசும் பல பாஷைகள் அவள் பேசுவாள் என்றெல்லாம்   மூட்டை மூட்டையாக  பொய் சொன்னீர்கள். எனக்கு  அதில் மனம் போகவில்லையே.
எனக்கு  ஏதடி  தூக்கம்?  அது என்னை விட்டு போய் பல காலம் ஆகிவிட்டதே
தோழியர்களே, உங்களால்  எனக்கு  இம்சை  அதிகமாகிக்கொண்டு தான் வருகிறது.
உங்கள்  வாத்தியங்களை மூடி  மூலையில் சுவற்றில்  சார்த்துங்கள்.  வீணை,  மேள தாளங்கள்  எனக்கு வேண்டவே வேண்டாம். கண்ணுக்கு தெரியாமல் எங்காவது  கொண்டு போய் வையுங்கள். அதிலெல்லாம் ஈடுபாடு எனக்கு எப்போதோ குறைந்து போய்விட்டது.
கதவு ஜன்னல் எல்லாம் சார்த்துங்கள்.  முணுக் முணுக் என்று  ஒரு  சிறு தீபம் மட்டும் எரியட்டும் அதை மேல் பக்கம்  சுவற்றில்  மாடத்தில்  வைத்து விட்டு இங்கிருந்து எல்லோரும்  இடத்தைக் காலி செய்யுங்கள். உங்கள் வீட்டை பார்க்க போங்கள். இங்கு என்னிடம் ஒருவருமே இருக்க வேண்டாம்.
”கண்ணா, இங்கு நடந்ததை பார்த்தாயா?  நீ  என் மனதை  ஆக்ரமித்த போது  என் மனம் வேறு எதிலும் செல்லவில்லை என்பது புரிகிறதா?”
தோழிகள் எல்லோரும் சென்று விட்டார்கள்.
என் நண்பி ஒருத்தி  ”தூக்கம் உன்  கண்களை  தழுவட்டுமே”  என்று  அடிக்கடி பாடுவாள். என் கண்கள்  தூக்கத்தை தழுவுமா? ஐயோ   அது என்னிக்கு?
”கண்ணா  உன்னை  இன்றிரவு கட்டாயம்  பார்த்தே  தீரவேண்டும்.   அதற்கு முன்னாடி  தூக்கம் வருமா நீயே  சொல்?
”வா  கண்ணா  வா,  என்  நண்பிகள்  யாரும் இல்லை.  எல்லோரையும்  அனுப்பிவிட்டேன்.
”என்ன  சொல்கிறாய்  நீ?   என்னை  வரச்சொல்கிறாயா  கண்ணா?
”இதோ வருகிறேன். உன்னைப் பார்க்க  ஓடோடி வருகிறேன்.?  சொல்  எங்கே வரவேண்டும்?
”என்னது?    கடைத்தெருவில்   கிழக்கே  வெண்கல பாத்திரங்கள்  செய்து விற்கும்  வணிகர் கடை வீதி இருக்கிறதே, அங்கேயா? ஓ, அந்த தெரு முனையிலா? திருப்பத்தில் ஓரமாகவா?  ஓஹோ  அதற்கு  எதிர்ப்பக்கம்  இருக்கும்  வயல் வெளி ஓரத்திலா?
”சரி,  நான்  அங்கே வந்தால் உனைக் கண்ணார நான்  காண முடியுமா,  கண்ணா? இதோ பறக்கிறேன்.
என் கண்கள்  இந்த நிலையில்  தூங்குபவையா?
உன்னைக்  கண்டு   என் இரு கரங்களாலும்  உன்னைக் கட்டி  அணைப்பதற்கு முன்  தூக்கம் வருமா ??
++
மேலே சொன்ன  அழகான  கற்பனையை  பாரதியின் தெள்ளு தமிழ் கவிதை வடிவில் இப்போது படியுங்கள். சுவை புரியும்.  நான்  ஏதோ  ஒரு தற்குறி. வெறுமே  தகர குவளையில் கல்லை போட்டு காற்று ஏற்படுத்துகிற சப்தத்தைப் போல  ஏதோ எழுதினேனே  தவிர  இந்த கவிதை தரும்  இன்பம் என் குவளையில் ஏது? பாரதியார்  பாரதியார் தான்.

கண்ணன் – என் காதலன் – 2
உறக்கமும் விழிப்பும்      நாதநாமக்கிரியை – ஆதி தாளம்   ரசங்கள்: பீபத்ஸம், சிருங்காரம்.

நோம் மிகுந்ததின்னும் நித்திரையின்றி – உங்கள்
நினைப்புத் தெரியவில்லை, கூத்தடிக்கிறீர்;
சோரன் உறங்கிவிழும் நள்ளிரவிலே – என்ன
தூளி படுகுதடி, இவ்விடத்திலே.
ஊரை யெழுப்பிவிட நிச்சயங் கொண்டீர்! – அன்னை
ஒருத்தியுண் டென்பதையும் மறந்து விட்டீர்;
சாரம் மிகுந்த தென்று வார்த்தை சொல்கிறீர், – மிகச்
சலிப்புத் தருகுதடி சகிப் பெண்களே! . … 1
நானும் பல தினங்கள் பொறுத்திருந்தேன் – இது
நாளுக்கு நாளதிக மாகி விட்டதே;
கூன னொருவன் வந்திந் நாணி பின்னலைக்
கொண்டை மலர்சிதற நின்றிழுத்ததும்,
ஆனைமதம் பிடித்திவ் வஞ்சி யம்மையின்;
அருகினி லோட இவள் மூர்ச்சை யுற்றதும்,
பானையில் வெண்ணெய் முற்றும் தின்றுவிட்டதால்
பாங்கி யுரோகிணிக்கு நோவு கண்டதும், … 2
பத்தினி யாளையொரு பண்ணை வெளியில்
பத்துச் சிறுவர் வந்து முத்தமிட்டதும்,
நத்தி மகளினுக்கோர் சோதிடன் வந்து
நாற்ப தரசர் தம்மை வாக்களித்ததும்,
கொத்துக் கனல் விழியக் கோவினிப் பெண்ணைக்
கொங்கத்து மூளிகண்டு கொக்கரித்தும்,
வித்தைப் பெயருடைய வீணியவளும்
மேற்குத் திசை மொழிகள் கற்று வந்ததும், … 3
எத்தனை பொய்களடி! என்ன கதைகள்!
என்னை உறக்கமின்றி இன்னல் செய்கிறீர்!
சத்தமிடுங் குழல்கள் வீணைக ளெல்லாம்
தாளங்க ளோடுகட்டி மூடிவைத் தங்கே,
மெத்த வெளிச்சமின்றி ஒற்றை விளக்கை
மேற்குச் சுவரருகில் வைத்ததன் பின்னர்
நித்திரை கொள்ளஎனைத் தனியில் விட்டே.
நீங்களெல் லோருமுங்கள் வீடு செல்வீர். … 4

(பாங்கியர் போன பின்பு தனியிருந்து சொல்லுதல்)
கண்கள் உறங்கவொரு காரண முண்டோ ,
கண்ணனை இன்றிரவு காண்பதன் முன்னே?
பெண்களெல் லோருமவர் வீடு சென்றிட்டார்
பிரிய மிகுந்த கண்ணன் காத்திருக்கின்றான்;
வெண்கல வாணிகரின் வீதி முனையில்
வேலிப் புறத்திலெனைக் காணமுடி யென்றான்;
கண்கள் உறங்கலெனுங் காரிய முண்டோ ,
கண்ணனைக் கையிரண்டுங் கட்ட லின்றியே? … 5

கண்ணன் பற்றிய பாரதி பாடல்களை  ”எந்தையே நந்தலாலா” என்ற புத்தகமாக்கி நிறைய  பிரதிகள் கைவசம் உள்ளன. வேண்டுமென்போர் என்னை வாட்ஸாப்ப் நம்பர்  9840279080ல்  தொடர்பு கொள்ளவும். விவரங்கள் அளிக்கிறேன்.
 

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *