UDUPI KRISHNA J K SIVAN

கோபி சந்தன களிமண் — நங்கநல்லூர் J K SIVAN

உடுப்பி கிருஷ்ணன்.

அப்பப்பா.. எத்தனை நல்ல விஷயங்கள் உலகத்தில் இருக்கிறது. அத்தனையும் நமக்குத் தெரியவில்லையே என்ற குறை உண்டாகிறது.அதை எடுத்துச் சொல்லவேண்டும். அதற்கு நான் தான் பொறுப்பா, ஸ்பெ ஷலிஸ்டா? இல்லவே இல்லை. எத்தனையோ மஹநீயர்கள் அப்பப்போது தோன்றி வாரி வழங்குகிறார்கள். நான் ஒரு காய்ந்த மரத்திலிருந்து உதிர்ந்த பழுத்த சருகு. கீழு விழுந்து குப்பையாக ஓரமாக ஒதுக்கப்படுபவன். பச்சையாக மரத்தில் இருந்தபோது கண்ணுக்கினிமை. காய்ந்து உதிர்ந்த சருகை எவர் நினைப்பார்கள்? ஆனால் எனக்கு என்று ஒரு காரியத்தை,கர்மத்தை, தர்மத்தை நானே உருவாக்கிக்கொண்டு இரவும் பகலும் ஏதெல்லாமோ படித்து புரிந்து கொண்டு சுருக்கமாக சொல்ல ஆசை. யார் படித்தால் என்ன படிக்காவிட்டால் என்ன? என் ஆத்ம திருப்தி நிறைவேறுகிறது.அம்புட்டுதான் அதற்கு மதிப்பு.
ஹிந்து சனாதன தர்மத்தில் மூன்று பெரிய தூண்கள் அத்வைதம், த்வைதம், விசிஷ்டாத்வைதம். நான்காவது தூணாக பல ஆச்சார்யர்கள் ஞானிகள் அதை மக்களிடம் எடுத்துச் செல்பவர்கள், சொல்பவர்கள். அப்போது என் போன்ற அஞ்ஞானிகள் புரிந்து கொள்ள முடியும் ஒரு சிம்பிள் உதாரணம்:
ராமையா வெளியூருக்கு தயிர் சாதம், கட்டு சாத மூட்டை கட்டி தலைமேல் சுமந்துகொண்டு நடக்கிறான். இப்போது ராமையா வேறு.அவன் தலைமேல் அவன் சுமக்கும் தயிர் சாத சோற்றுமூட்டை வேறு. ரெண்டுமே வெவ்வேறு வஸ்துக்கள். ராமையாவை பரமாத்மா எனவும் தயிர் சாத மூட்டையை ஜீவாத்மா எனவும் வேறு வேறாக புரிந்து கொள்வோம். இது தான் சார் த்வைதம்.
வெகு நேரம் நடந்தாகி விட்டது. சூர்யன் உச்சிக்கு போய்விட்டான். ராமையாவுக்கும் கால் வலியோடு பசி வேறு கப கப வென்று வயிற்றைக் கிள்ளுகிறது. ராமையா ஒரு மரத்தடியில் உட்கார்ந்து தயிர் சாத மூட்டையை அவிழ்த்து அத்தனையும் காலி பண்ணிவிட்டான். இப்போது தயிர் சாதம் ராமையாவின் வயிற்றுக்குள் இருக்கிறது. தயிர் சாதமும் ராமையாவும் ஒன்று. வேறு வேறல்ல. ரெண்டல்ல . எல்லாம் ஒன்றே. இது அத்வைதம். இப்படித்தான் நமக்குள் இருக்கும் ஜீவாத்மாவும் பரமாத்மாவும் பிரிக்க முடியாத ஒன்று. இரண்டும் வேறு வேறாக காணப்பட்டாலும் எல்லாம் ஒன்றே.
இப்போது ராமையாவின் வயிற்றில் உட்கார்ந்திருக்கும் தயிர் சாதம் இன்னும் ஜீரணமாகவில்லை. இன்னும் முழுதுமாக ஜீரணம் ஆகி கரைந்து அவன் ரத்தத்தோடு கலந்து மறையவில்லை.குறைந்தது ஒன்றரை ரெண்டு மணி நேரமாகவாவது ஆகும். அப்புறம் அது அவனோடு கலந்து விடுகிறது. இது விசிஷ்டாத்வைதம். ஜீவாத்மா பரமாத்மா ரெண்டும் ஒன்றாக காணப்பட்டாலும் வேறு வேறு குணங்களைக் கொண்டது. ஒன்று நிர்குணம், இரண்டும் ஒன்று சேர்ந்து தனித்துவத்தை இழந்து ஒன்றே ஆனால் அது விசேஷமான அத்வைதம். ஜீவாத்மா பரமாத்மாவை சரணாகதி அடைந்த பின் சேர்கிறது.
இதற்கு மேல் விவரமாக நான் தத்வார்த்தம் சொல்லப்போனால் என்னை புளியோதரை ஆக்கி விடுவீர்கள் என்பதால் இது புரிந்தால் போதும் என்று நிறுத்திக் கொள்கிறேன்.
த்வைத சித்தாந்தத்தை பரப்பியவர் மத்வாச்சாரியார் (1238-1317). கிருஷ்ண பக்தர். உடுப்பியில் ஒரு அற்புதமான கிருஷ்ணன் கோவிலை உண்டாக்கியவர். அது தான் மேற்கே அரபிக்கடல் ஓரத்தில் இன்றைய கர்நாடகாவில் நாம் சென்று தரிசிக்கும் உடுப்பி ஸ்ரீ க்ஷேத்ரம், ஸ்ரீ கிருஷ்ண மடம் என்றும் பெயர். கோடிக்கணக்கான பக்தர்கள் சென்று உடுப்பியில் கிருஷ்ணனை தரிசனம் செய்கிறார்கள். எனக்கும் மூன்று முறை சென்று தரிசிக்க பாக்யம் கிடைத்தது.
உடுப்பி என்ற பெயர் வர ஆதார காரணம் கன்னடத்தில் உடு + பா எனும் வார்த்தைகள். ”உடு” என்றால் நக்ஷத்ரம் , சந்திரன். ”பா” என்றால் அணிபவன், தலைவன். சிவன் தான் சந்திர சேகரன், சந்திரமௌளி. மத்வாச்சாரியார் காலத்துக்கு முன்பே இருந்த பெயர் இன்றும் உள்ளது. எத்தனையோ பேருக்கு சந்திரமௌளி என்ற பெயர் இருக்கிறதே. சிவன் பெயர் இருந்தாலும் உடுப்பி என்றால் கிருஷ்ணனுடைய க்ஷேத்ரம் என்று உலகப் பிரசித்தம். . உடுப்பியை ‘வைகுண்டம்’ என்பார்கள். கிருஷ்ணன் மத்வாச்சாரியார் வேண்டுகோளுக்கிணங்கி தானே அவரை அடைந்து தங்கிய க்ஷேத்ரம்.உடுப்பி மங்களூரிலிருந்து 60 கி.மீ. தூரம். உடுப்பி கிருஷ்ணனை பற்றி நிறைய பதிவுகள் இட்டிருக்கிறேன். படித்திருப்பீர்களா என்பது சந்தேகம் தான்?, எனக்காக எழுதிக் கொண்டது என்று சொல்லலாம். உடுப்பி கிருஷ்ணன் ஆலயத்தில் மூல ஸ்தானத்தின் வலது பக்கம் ப்ரதக்ஷிணம் வரும் இடத்தில் மத்வாச்சாரியார் சிலை உள்ளது. வடக்குப் பக்கம் பாண்டுரங்கன் விக்ரஹம்.
உடுப்பியில் ஸ்ரீ கிருஷ்ணன் எப்படி மத்வாச்சாரியாரை தானே தேடி வந்து அடைந்து தங்கி கோவில் கொண்டான் என்பது ஒரு ஆச்சர்யமான ருசிகர தகவல்.
மத்வ விஜயம் என்கிற மத்வாச்சாரியார் வாழ்க்கை வரலாறு புத்தகத்தில் படித்த ஒரு அற்புத விஷயம் :
உடுப்பியில் நிற்கும் பால கிருஷ்ணன் எப்படி அரபிக்கடலில் பிரயாணம் செய்து இந்தியாவின் வடமேற்கில் உள்ள துவாரகாவிலிருந்து தெற்கு மார்க்கமாக உடுப்பிக்கு வந்தான்?
ஐந்தாயிரம் வருஷங்களுக்கு முன்பு, இந்த பால கிருஷ்ணன் நாம் நெற்றியில் இட்டுக்கொள்ளும் கோபி சந்தனம் செய்ய உதவும் களிமண் கட்டிக்குள் விக்ரஹமாக ஒளிந்து மறைந்து இருந்தது யாருக்காவது தெரியுமா?. அந்த கோபிசந்தனம் செய்யும் களிமண் கட்டியை துவாரகையில் ஒரு படகு கப்பல் சொந்தக்காரன் வாங்கி தனது மரக் கப்பலில் அதை பாரமாக ஏற்றி வைத்து அந்த வியாபாரக் கப்பல் கடலில் தெற்கு நோக்கி ஒருநாள் மிதந்தது.
குதிரை, மாட்டு வண்டிகளில் சவாரி செய்ததுண்டா? அப்படியென்றால் பின் பாரம் என்றால் என்ன என்று தெரியும். வண்டியில் ரெட்டை நாடி குண்டு ஆசாமியை மாட்டு, குதிரை, வண்டியில் பின்னால் உட்காரவைத்து, காலைத் தொங்கப் போட்டுக் கொண்டு கம்பியை வயிற்றுக்கு குறுக்காக பாதுகாப்பாக செருகி விட்டு பிடித்துக் கொண்டு உட்கார வைத்தால் குதிரை வண்டி யின் முன் பக்க நுகத்தடி மேலே எகிறி அதிலிருக்கும் கயிறு மாட்டையோ குதிரையையோ கழுத்தை நெறிக்கும். பாவம் அதால் நகர முடியாது. வண்டி குடைசாயும். அந்த குண்டு ஆசாமி தான் பின் பாரம். பின்பக்க எடையை விட முன் பக்கம் எடை கொஞ்சம் குறைந்து வண்டியின் முன்பக்க நுகத்தடி சற்று மேல் நோக்கி இருந்தால் மாடோ, குதிரையோ வண்டியை இழுக்க சௌகர்யமாக இருக்கும். ரொம்பவும் உசரமாகவும் இருக்கக் கூடாது. அதே போல் கடலில் கப்பல் மிதக்கும் போது கப்பலின் பின் பக்கம் ஒரு குறிப்பிட்ட அளவு நீரில் அமிழ வேண்டும். முன்பக்கம் சற்று உயர்ந்து நீர் மேல் மிதக்கும். அப்போது தான் எதிர்நோக்கி செல்லும்போது கப்பல் காற்றினால் தூக்கி எறியப்படாமல் அலைகளை எதிர்கொண்டு மிதக்கும். ரொம்ப அமிழ்ந்தால் முழுகிவிடும். கப்பல் விஷயத்தில் இந்த பின்பாரத்தை ஆங்கிலத்தில் BALLAST என்று சொல்வோம். இப்போது களிமண் கட்டி எல்லாம் இல்லை. கடல் நீரை கப்பல் அடிபாகத்தில் bottom tank எனும் இரும்பு தொட்டிகளில் நிரப்பி எடையை வேண்டிய அளவு சமன் செய்வது தான் STABILITY.
மத்வாச்சாரியார் காலத்தில் மேலே சொன்ன கோபி சந்தன களிமண் கட்டி வைத்த மரக் கப்பல் அரபிக்கடலில் துவாரகையிலிருந்து தெற்கு நோக்கி சென்றது. உடுப்பி அருகே கப்பல் புயலில் சிக்கியது. மாலுமியால் புயலைச் சமாளிக்க முடியவில்லை. கப்பல் கரையை நோக்கி புயல் காற்றில் வீசப்பட்டு கடற்கரை மண்ணில் தரை தட்டியது.
தரை தட்டிய கப்பலை கப்பலில் மீண்டும் மிதக்க வைக்க, அனைவரும் கரையில் இறங்கி மீண்டும் இழுத்து கடலில் தள்ள ரொம்ப பிரயாசை பட்டுக் கொண்டிருந்ததை அந்த பக்கமாக தனது சிஷ்யர்களோடு சமுத்திர ஸ்னானத்துக்கு வந்த மத்வாச்சாரியார் பார்த்துவிட்டார். அன்று தான் ”துவாதச ஸ்தோத்ரம்” எனும் 12 ஸ்லோகங்களை கிருஷ்ணன் மேல் புகழ் மாலையாக இயற்றிக் கொண்டிருந்தார். முதல் ஐந்து ஸ்தோத்ரம் பாடி முடித்திருந்தார். கிருஷ்ணனை புகழ்ந்து பாடப்பட்ட அந்த அற்புதமான 12 துவாதச ஸ்லோகங்கள் கொண்ட ஸ்தோத்ரத்தை ஒருநாள் விளக்குகிறேன்.
தரை தட்டிய மரக்கப்பலை மீண்டும் கடலுக்குள் தள்ளி மிதக்க வைக்க மாலுமிகள் கூட்டமாக வெகுநேரமாக பிரயாசைப் படுவதைப் பார்த்த மத்வாச்சாரியார் அவர்கள் அருகே வந்து தனது மேல் அங்கவஸ்திரத்தை உயரே தூக்கி அதை கடல் பக்கமாக காற்றில் அசைத்தார் .
என்ன ஆச்சர்யம்? அவர் அசைத்த அங்கவஸ்திரம் அங்கே வீசிக்கொண்டிருந்த பலத்த காற்றை அவர்களுக்கு சாதகமாக மாற்றி கப்பல் மெதுவாக தரையிலிருந்து கடலுக்குள் நகர்ந்தது. மீண்டும் நீரில் மிதந்தது. கப்பல் சொந்தக்காரன் மாலுமிக்கு ஆச்சர்யம். பரம சந்தோஷமும் கூட. தனது கப்பலை காப்பாற்றி மீண்டும் கடலில் செலுத்தியதற்கு மத்வாச் சார்யரை வணங்கி நன்றி சொன்னான்.
”சாமி, உங்களுக்கு கோடி நன்றிங்க. நீங்க செய்த இந்த உதவிக்கு கப்பல்லே இருக்கிற சரக்குலே எதை வேண்டு மானாலும் கேளுங்க. தரேன்”
”கப்பல் பின்னாலே அதோ வச்சிருக்கியே கோபி சந்தன மண் கட்டி. அதைக் கொடுப்பியா?. அது தான் வேணும். கோபி சந்தனம் செய்து பக்தர்கள் எல்லோருக்கும் கொடுக்கலாம்”
”சாமி கப்பல் ஜாக்கிரதையா மிதக்க அது பின் பாரம் ஆச்சே சாமி. அதை எப்படி கொடுக்கிறது என்று தான் யோசிக்கிறேன்.”
”நீ ஒண்ணும் யோசிக்க வேண்டாம், அந்த களிமண் கட்டிக்கு சரிசமமான எடையா இதோ பார் இங்கே நிறைய பாறாங்கல்லு கிடக்கு பாரு. அதோ இருக்கிற உருண்டை பாறை சரியான எடையா இருக்கும். களிமண் கட்டியை கொடுத்துட்டு அதை எடுத்துக் கொண்டு போ”.
பாறாங்கல்லை தூக்கி படகில் பின் பாரமாக வைத்துவிட்டு மத்வாச்சார்யரும் அவருடைய முப்பது சீடர்களுமாக அந்த பெரிய கோபிசந்தன களிமண் கட்டியை தூக்கிக் கொண்டு திரும்பினார்கள். கடற்கரையை தாண்டி உடுப்பிக்குள் நுழையும் வழியில் களிமண் கட்டி டபார் என்று ரெண்டாக உடைந்தது. அதன் உள்ளே இருந்த அற்புத வடிவம் கொண்ட அழகான ஒரு பால கிருஷ்ணன் கீழே மண்ணில் விழுந்தான். அவனுக்கு மண் பிடிக்குமே. சின்ன வயசில் மண் தின்றவனாச்சே!. அவர்கள் கடற்கரையிலி ருந்து நாலு மைல் தூரம் உள்ளே வந்த போது இப்படி நடந்தது. அவர்களால் கீழே விழுந்த பால கிருஷ்ணனை தரையிலிலிருந்து தூக்கவே முடிய வில்லை.
”ஹா, என் பரமானந்த தெய்வமே” என்று ஆசையாக மத்வாச்சாரியார் பாலகிருஷ்ணனை பார்த்து பெற்ற தாய்ப் பாசத் தோடு அவனை அணைத்ததும் எளிதில் அசைந்தான் கிருஷ்ணன். அவரால் குழந்தையைப்போல் அவனைத் தூக்க முடிந்தது. ஏற்கனவே பலிஷ்டர் மத்வாச்சார்யார். மல்யுத்த வீரர். கிருஷ்ணனைத் தூக்கியபடியே மீதி ஏழு ஸ்லோகங்கள் கடகடவென்று அவரால் இயற்ற முடிந்தது. உரக்க பாடிக்கொண்டே, ஆடிக் கொண்டே நடந்தார்.
உடுப்பியில் மாத்வ ஸரோவர் எனும் குளத்தில் கிருஷ்னனுக்கு ஸ்னானம் செய்வித்தார். அதன் கரையிலேயே ஒரு ஸ்ரீ கிருஷ்ணமடம் நிர்மாணித்து அவனை அதில் ஸ்தாபனம் செய்தார். பால கிருஷ்ணனுக்கு எப்படி பூஜை வழிபாடுகள் செய்யவேண்டும் என்று வழிமுறை வகுத்தார். உடுப்பியில் இருக்கும்போதெல்லாம் தானே நித்ய பூஜைகள் செய்வார். மத்வாச்சார்யார் ஏற்படுத்திய ஆலய பராமரிப்பு தான் ‘பர்யாயம்’ என்ற வழிபாட்டு முறை. இதற்கு எட்டு மாத்வ மடங்கள் பொறுப்பேற்பவை. அவற்றின் பெயர்கள்: புட்டிகே, ஷிருர் , பெஜவார், பாலிமார் ,சோதே , கணியூரு, அத்மார், க்ரிஷ்ண புரா, அஷ்டமடம் ஆகியவை.
மேலே சொன்ன மடங்கள் ஒவ்வொன்றிலிருந்தும் ஒரு ஸ்வாமிஜி ரெண்டு மாதத்திற் கொருமுறை மாறி மாறி பூஜை வழிபா கள் செய்து உடுப்பி ஆலயத்தை பராமரிப்பவர்கள். பின்னர் வந்தவர்கள் ரெண்டு மாதம் என்பது மிகவும் குறைவான காலம் என்பதால் அதை ஒவ்வொரு மடத்துக்கும் ரெண்டு வருஷ காலமாக்கி னார்கள்.
இதில் நீங்கள் ஒரு முக்கியமானகேள்வியை இன்னும் கேட்கவில்லையே?
கிருஷ்ணன் எப்படி த்வாரகையில் நாமக்கட்டிக்குள் அடைந்தான்? இதை ”ப்ரமேய நவமாலிகா டிகா” எனும் 17ம் நூற்றாண்டு ரகுவாரிய தீர்த்தரின் நூல் சொல்கிறது.
அன்னை தேவகி பிற்காலத்தில் ”அடே கிருஷ்ணா, பிருந்தாவனத்தில் உன் பால்ய சுட்டித்தனத்தை எல்லோரும் கண்டு வியந்தார்கள். ஆனால் உனைப் பெற்ற தாய் நான் காணவில்லையேடா கண்ணா, எனக்கும் காண ஆசையாக இருக்காதா? ‘ என்று வருந்துகிறாள்.
‘சரி அம்மா, முதலில் உன் கண்ணைத் துடைத்துக்கொள், உனக்கு நான் என் பால்ய லீலைகள் சிலவற்றை ரீ வைண்ட் செய்து காட்டுகிறேன் ” என்றான் கிருஷ்ணன். அடுத்த கணம் ஒரு சிறு குழந்தை தேவகியின் மடியில் புரண்டு விளையாடி யது. அவள் தயிர் கடைய சென்றபோது பின்னாலேயே புடவையை பிடித்துக் கொண்டு நடந்து அவள் மத்தை பிடுங்கியது. தயிர் சட்டியில் கையை விட்டு அளாவி நிறைய வெண்ணையை எடுத்து மேலே பூசிக்கொண்டது. அவள் மேலும் பூசியது. வாயெல்லாம் வெண்ணை. மத்து கடையும் கயிற்றை எடுத்து ஒளித்து வைக்கிறான். பின்னர் கயிற்றை கையில் வைத்துக் கொண்டது. கணநேரத்தில் குழந்தை மறைந்து அங்கே துவாரகை கிருஷ்ணனாக கம்பீரமாக நிற்கிறான். இதெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ருக்மணிக்கு கிருஷ்ணன் பால்ய வயது சிறு குழந்தையாகி மத்து, கயிறோடு நின்றது மனதில் பதிந்து விட்டது. இதை என்றும் காணவேண்டும் என்று தோன்றியது. உடனே அதைப் போல ஒரு பொம்மை செய்தாள். தான் படைத்த அந்த பதுமையை ருக்மணி விடாது பூஜை செய்தாள்
பின்னர் அந்த விக்ரஹம் அர்ஜுனனை அடைகிறது. கிருஷ்ணன் பூலோகத்தை விட்டு மறைந்ததும் துவாரகை யை விட்டு எல்லோரும் வெளியேறியபோது அருகே ஒரு இடத்தில் ருக்மிணிவனம் எனும் ஸ்தலத்தில் அர்ஜுனன் பால கிருஷ்ணன் விக்ரஹத்தை பிரதிஷ்டை செய்கிறான்.
பல நூறு ஆண்டுகளில் அதை சுற்றி இருந்த களிமண் மேட்டில் அந்த விக்ரஹம் புதையுண்டு மறைகிறது. ஒரு பெரிய மண் கட்டியாகிறது. இந்த மண் கட்டி யாரோ ஒரு துவாரகை வியாபாரி கண்ணில் பட்டு அதை அவன் ஒரு கப்பல் காரனுக்கு விற்கிறான்.
இப்போது நீங்கள் மறுபடியும் மேலே 11வது பாராவில் ”ஐந்தாயிரம் வருஷம்….. என்று துவங்குவதிலிருந்து மீண்டும் படித்தால் உடுப்பி கிருஷ்ணன் நன்றாக புரிவான். தெரிவான்…
பாலகிருஷ்ணனை மத்வாச்சாரியார் கிழக்கு நோக்கி பார்த்தவாறு பிரதிஷ்டை செய்தாலும் இன்று வரை மேற்கு நோக்கி தான் நமக்கு உடுப்பியில் தரிசனம் தருகிறானே எப்படி என்பதை விளக்க இன்னொரு அற்புதமான பதிவு ஏற்கனவே பதிவிட்டிருந்தாலும் மீண்டும் அதை இன்னொரு பதிவில் கனகதாசரைப்பற்றி எழுதுவதில் விளக்குகிறேன். என் பதிவுகள் ரொம்ப நீளமாக இருக்கிறது என்று பலர் என்னை ‘வைகி’ றார்கள். (திட்டுகிறார்கள், கோவிச்சுக் கிறாங்க என்பதன் ப்ராமண பாஷை.)

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *