PESUM DEIVAM J K SIVAN

”பிரதோஷமும் ப்ரதோஷ மாமாவும்”-          நங்கநல்லூர்  J K  SIVAN

இன்று ப்ரதோஷம்.   ஜலதோஷம்,  சந்தோஷம், என்ற வார்த்தைகள் தெரிந்த அளவுக்கு ப்ரதோஷம்  பற்றி அநேகர் அறியாதது, அதை தெரிந்து கொள்ளவேண்டும் என்ற ஆர்வம் இல்லாமை தான்.  நான் எதற்கு இருக்கிறேன்?  ஏதோ தெரிந்தவரை அறிந்ததை சொல்லிவிடுகிறேன்.
பரமேஸ்வரனை வழிபட சிறந்த நேரம்  ப்ரதோஷ காலம்.   ஒவ்வொரு மாதமும் வளர்பிறை, தேய்பிறை  எனும் ரெண்டு பக்ஷங்களிலும் திரயோதசித் திதியில் சூரியன் மறைவதற்கு முன் மூன்றே முக்கால் நாழிகையும்,  அஸ்தமனம் ஆனபின் மூன்றேமுக்கால் நாழிகையும் உள்ள  நேரம் தான் பிரதோஷ காலம். அந்த காலத்தில் தான்  அனுஷ்டிக்கப்படுவது ப்ரதோஷ விரதம்.
அசுரர்களும்  தேவர்களும்  ஆளுக்கொரு பக்கமாக  மந்த்ரமலையை மத்தாக உபயோகித்து,  வாசுகி எனும் நீளமான பாம்பை கயிறாக மந்திரமலையை சுற்றி  பாற்கடலைக் கடைந்தார்கள். அம்ருதம் வருவதற்கு முன், வாசுகி வயிறு நசுங்கி கொடிய   ஹாலஹால விஷத்தைக்  கக்கிவிட்டது.  குபுகுபு வென்று பெருகி வரும்  கொடிய  விஷத்திலிருந்து தப்பிப்பது எப்படி?   இருக்கவே இருக்கிறார்  சர்வேஸ்வரன் சதாசிவன்.  அவரை எப்படியாவது காப்பாற்றுமாறு வேண்டினார்கள்.  அவர் யோசிக்கவே இல்லை.  அத்தனை ஹாலஹால விஷத்தையும்  எடுத்து ஒரு சிறு உருண்டையாக்கி, கபக்  என்று  ஒரே  வாயில் விழுங்கி விட்டார். ” ஐயோ இப்படி பண்ணிவிட்டீர்களே” என்று அதிர்ந்து போய், நடுங்கி, உமாதேவி  விஷம் அவர் உடலுக்குள் இறங்காமல் கழுத்திலேயே தங்குமாறு கெட்டியாக அவர் கழுத்தை பிடிக்கப்போய் கழுத்து  விஷம் நிறைந்து நீலநிறமாகி, அவருக்கு நீலகண்டன் என்ற பெயர் இன்றும்  நிலைத்துள்ளது.   நீலகண்டன் என்ற பெயர்கள் உள்ளவர்கள் அநேகர் இருக்கிறார்கள். கொடிய விஷத்திலிருந்து தேவர்கள், முதலானோரை பரமேஸ்வரன் காத்த  அந்த நேரம் தான் ப்ரதோஷம் காலம் எனப்படுவது. அந்த நேரத்தில் நந்திகேஸ்வரனையும் , சிவபெருமானையும் வேண்டி வழிபட்டால்  சகல நன்மையையும் பெறலாம் என்பது நமது நம்பிக்கை.
மஹா பெரியவா பக்தர்களில் சிறந்த ஒருவர் பெயர்  ப்ரதோஷம் மாமா.  இயற் பெயர் வெங்கட்ராமன். ரயில்வே டிபார்ட்மெண்டில் வேலை. ஒவ்வொரு பிரதோஷமும் மஹாபெரியவா  தரிசனம் தப்பாது என்பதால்  ”ப்ரதோஷம்”மாமா.மஹா பெரியவா ஜெயந்தியை  மாதா மாதம் அனுஷா ஜெயந்தியாக அற்புதமாக கொண்டாடுபவர்.  மடத்தில் வேறு இடங்களில் பார்த்திருக்கிறேன்.அதிகம் பேசிப்  பழகியதில்லை.
ஒரு தடவை, எழும்பூரில் மாத ஜயந்தி உத்ஸவப் புறப்பாட்டுக்கு எல்லா ஏற்பாடுகளும் முடிந்துவிட்டன.  பிரதி மாதம் புஷ்ப அலங்காரம் பண்ணும் பக்தர் வரமுடியாத சூழ்நிலை.  பிரதோஷம் மாமாவுக்கு வருத்தம் .

அந்த நேரம் பார்த்து  திடீரென்று ஒரு பக்தர் அங்கே வந்தார்.    ”யார் நீங்க?”” நானொரு முருகனடிமை.எனக்கு  புஷ்பாலங்காரம் நன்றாக பண்ண தெரியும்” என்கிறார்.மாமா  ஆஹா என்று அனுமதிக்க அவர் புஷ்பாலங்காரம் பண்ண அந்த மாச புஷ்பாலங்காரம் மாதிரி எப்போதுமே அமைந்ததில்லை.  உத்சவ ஊர்வலம் தொடங்கும்போது  ப்ரதோஷம் மாமா  அந்த  பக்தரை தேடினபொது  அந்த  ”முருகனடிமை”யை  எங்குமே காணோம்.  மஹா பெரியவாளே  யாரையோ அனுப்பி இருக்கிறாரோ?”
வேறொரு சம்பவம்.   பெரியவா ஜெயந்தி பண்ண மீரஜ் நகருக்கு  ப்ரதோஷம் மாமா   போக  திட்டம் போட்டார். ஆனால் மஹா பெரியவா அனுக்ரஹம் கிடைக்கவில்லையே.  ”நீ ஆதிசங்கர பகவத்பாதர் ஜயந்தியை மிகவும் விமரிசையாகக் கொண்டாடு” என்று உத்தரவு போட்டு விட்டார். எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்று விவரங்களும்  தந்தார்.   ஸ்வாமி புறப்பாட்டின்போது, கபாலி ஓதுவார் தேவாரம் பாட வேண்டும்; வேங்கட வரதனின் திருவாய்மொழி இசைக்கப்பட வேண்டும்; திருப்புகழ் சொல்லப்பட வேண்டும்; மராத்தி பஜனைப் பாட்டெல்லாம் பாட வேண்டும்.  கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகளின்  பிருகுவல்லி பாராயணம்  ஏற்பாடு செய்யணும்  அப்போது தான் கேட்பவர்களுக்கு  ஆத்ம தரிசனம் கிடைக்கும்.” என்கிறார் பெரியவா. பிரதோஷம் மாமாவைப் பொறுத்தவரை  மஹா பெரியவா  ஜெயந்தி உத்சவம் கொண்டாட முடியவில்லை என்று கண்ணீரோடு சென்றார். மஹா பெரியவா பார்த்துவிட்டார். அருகில் இருந்த ஒருவரைக் கூப்பிட்டார்.
‘அதோ போறான் பார், அவன் என்னோட பக்தன். அழுதுண்டு போறான். கூப்பிடு அவனை. என்னோட ஜயந்தியையும் பேஷா கொண்டாடட்டும்னு சொல்லிடு அவன்கிட்டே!’ என்று உத்தரவு கொடுத்துவிட்டார். ப்ரதோஷம் மாமாவுக்கு சந்தோஷம். அந்த வருஷம் ரெண்டு ஜெயந்திகளும் கோலாகலமாக நடந்தது.
‘ஒரு மகா ஜயந்தியின் போது, அக்ஷதை குறைவாக இருந்ததால்   ப்ரதோஷம் மாமா கலங்கிப்  போய்விட்டார். மூணு நாள் உத்ஸவத்துக்கு இது போதாதே”. அவர்  வருந்தி  ஒரு நிமிஷம் கூட ஆகவில்லை… மடத்திலுள்ள ஒரு பையன் ஓடி வந்து, ‘வாசல்ல கார் வந்திருக்கு!’ என்றான். காரில் வந்தவர்கள் பரசுராமன் தம்பதி. காஞ்சிப் பெரியவாளின் பரம பக்தர்கள். ப்ரதோஷம் மாமாவுக்கு  ஆச்சர்யம்.  காரில் இருந்து இரண்டு மூட்டை அரிசி இறங்கியது!. மஹா பெரியவா கருணை தான் இது” என வியந்தார் மாமா. 

வேறொரு சமயம்  ஸ்வாமி புறப்பாடு.எல்லா ஏற்பாடுகளும் முடிந்தது.  வழக்கமாக வருஷா வருஷம் வரும் யானை இந்த வருஷம் ஊர்வலம் வர இன்னும் அனுமதி கிடைக்கவில்லை. மாமா  கலங்கினார்.  அப்போ  ராதாகிருஷ்ணன் என்பவர் ஐ.ஜி. அவரிடம் யானை ஊர்வலத்துக்கு  அனுமதி கேட்கலாம் என்று ஒருவர் யோசனை சொல்லி  விண்ணப்பம்  தயார் பண்ணினார்கள் .   ஆச்சர்யமாக அப்போது  ராதாகிருஷ்ணனே  நேராக அங்கே வந்து விட்டார். அவரே பந்தோபஸ்து யானை ஊர்வலம் அனுமதி கொடுத்து  ஊர்வலம் ஜோராக நடந்தது.    இதற்கெல்லாம் யார்  காரணம்? மஹா பெரியவா  சாக்ஷாத்  ஈஸ்வர அம்சம்.  ஒரு சமயம் ப்ரதோஷம் மாமாவுக்கு  ரொம்ப நாளாக பெரியவாளை தர்சனம் பண்ண  மடத்துக்கு வர முடியாத ஒரு சூழ்நிலை. ஒருநாள் அவர் வீட்டுக்கு  மஹா பெரியவாவின் இன்னொரு பக்தர்  கடம் வித்வான் விநாயக்ராம் வந்தார். மாமா அவரிடம் தன் மனக்குறையை சொன்னார்……“இப்பல்லாம் எனக்கு எல்லார்கிட்டயும் ரொம்ப கோவம் வருது. ரொம்ப கோவிச்சுக்கறேன். முன்னெல்லாம் என் கோவத்துக்கு பயந்துண்டு அவாளும் ஒழுங்கா இருந்தா…..ஆனா, இந்த கோவம் இப்போ ரொம்ப சாதாரணமா போயி டுத்தா……அதுனால யாரும் என் கோவத்தை பொருட்படுத்தறதே இல்லே! இதே இவனுக்கு வழக்கமா போய்டுத்துன்னு நெனைக்க ஆரம்பிச்சுட்டா போலருக்கு. பெரியவாகிட்ட கோவிச்சுண்டா……அவர் யாரையாவது அனுப்பிச்சு என்னை சமாதானப் படுத்திடறா! அவருக்கும் என் கோவம் ரொம்ப பழகிப் போய்டுத்து………. பாரேன்!…….கிட்டத்தட்ட மூணு மாசமா நான் பெரியவாளைப் பாக்கவே இல்லே! இந்த கோவத்தை எப்பிடியாவது கொறைக்கணும்…ன்னு நானும் படாதபாடு பட்டுண்டு இருக்கேன்.” .என்று கூறிக்  கொண்டிருக்கும் போதே……சைக்கிளில் வேகமாக வந்த ஒருத்தர் தன் கையில் இருந்த வில்வமாலையை ‘சட்டென்று’ மாமாவின் கழுத்தில் போட்டுவிட்டு புறப்பட்டார். அவரை நிறுத்திக் கேட்டபோது சொன்னார்…“அரைமணி நேரத்துக்கு முன்னால நான் பெரியவாளை தர்சனம் பண்ணப் போனேன்…..அப்போ, பெரியவா தன் கழுத்துல இருந்த இந்த வில்வ மாலையைக் கழட்டி எங்கிட்ட குடுத்து, “இதை இப்போவே கொண்டுபோய் பிரதோஷம் வெங்கட்ராமன் கழுத்துல போட்டுட்டு வா!..”ன்னு சொன்னா. அதான் வந்தேன்”. என்கிறார். சற்றுமுன் அங்கலாய்த்துக் கொண்டிருந்த மாமாவின் கவலை போன இடம் தெரியவில்லை!
எல்லார் உள்ளும் பகவான் வசிக்கிறான் என்பது சத்யம். பகவான் தான் உள்ளே வசிப்பதை புரிய வைக்க என்று தனியாக எதுவும் பண்ணுவதில்லை. பக்தர்கள் அவனை உணருகிறார்கள். ஆனால் இது எல்லோருக்குமே சாத்தியமான ஒன்று. சுலபமானது அதே சமயம் மிக கடினமானது. நாம் செய்ய வேண்டிய ஒரே கார்யம்……..அப்யாசம்.

சென்னை எழும்பூரில் ஒரு தடவை ஸ்ரீமகா பெரியவாளின் ஜெயந்தி உற்சவம். உற்சவத்துக்கு வரும் வேத விற்பன்னர்களை, மகானின் அம்சமாகவே கருதுகிற  ப்ரதோஷம் மாமா,  அவர்களை உபசரிப்பதில் எந்த விதமான குறையும் இருக்கக்கூடாது என்று சிரத்தையோடு உழைப்பவர். ஜெயந்தி மூன்று நாட்கள்  கோலாகலமாக நடக்கும்.
அடுத்த நாள் மஹா பெரியவளுடைய திருநக்ஷத்ரம்  அனுஷம். வைபவமாகக் கொண்டாடப்பட ஏற்பாடுகள் நடந்தது. அன்று  வைதீகர்களுக்கு நேர்த்தியான சாப்பாடு போடுவது  நடைமுறை.  ப்ரதோஷம் மாமாவுக்கு சொல்லியா தரவேண்டும்?
முதல் நாள் இரவு, மாமாவுக்கு திடீரென ஒரு ஐடியா தோன்றியது. எல்லோருக்கும் இனிய  அமுதமாக பால் பாயசம்போட்டால் என்ன ?  அதற்கு  நூறு லிட்டர் பால் தேவைப்படுமே. அட்வான்ஸாக  சொல்லாமல் அவ்வளவு பால் எங்கே, எப்படிக் கிடைக்கும்?  இதெல்லாம் பற்றி ப்ரதோஷம் மாமா கவலையே படவில்லை. “ஜெயந்திக்கு பால் பாயசம் போடணும் ஏற்பாடு பண்ணிடு” என்று, இரவே சமையலறை நிர்வாகியிடம் சொன்னார்.   நிர்வாகி திடுக்கிட்டு  பேசாமல் நின்றார். “என்னப்பா பதிலையே காணோமே?”-மாமா.
என்ன பதில் சொல்வது?  இவ்வளவு குறைந்த நேரத்தில் அவ்வளவு பால் எப்படி கிடைக்கும்?எங்கே கிடைக்கும்?”’இக்கட்டான சூழ்நிலை. அப்போது திடீரென போன் ஒலித்தது.  மாமாவின் உத்தரவின்படி,காரியஸ்தர் போனை எடுத்தார்.
”யாரோ ஜோஷி என்கிற வடக்கத்திய அன்பர், பெரியவா பக்தர்.பசுக்களை வைத்து பண்ணையை நடத்துபவர், அவர் பேசுகிறார்.“ஜெயந்திக்கு, பசும் பால் நிறைய  இருக்கிறது. அதை  அனுப்பினால்,  பிரசாதமாக ஏற்றுக் கொள்ள முடியுமா?”எப்படிப்பட்ட நேரத்தில் வருகிறது இந்தச் செய்தி!
காரியஸ்தர், ப்ரதோஷம்  ரெண்டு பேருமே  சிலையாக நின்றுவிட்டார்கள்.
பால் பாயசத்திற்கு வேண்டிய பால் கிடைத்துவிட்டது.பெரியவா  மேல் எந்த அளவுக்கு இப்படி பக்தியிருந்தால் இதெல்லாம் அதிசயமாக நடக்கும் என்று யோசியுங்கள்.  ப்ரதோஷம்  மாமா ஒரு முரட்டு  பெரியவா பக்தர்.  இடி மழை,காற்று,உடம்பு நிலை எதையும் லக்ஷியம் பேணாமல் எப்போது பெரியவா தரிசனம் பண்ணனும் என்று தோன்றுகிறதோ இரவோ பகலோ பாராமல்  உடனே ஏதாவது ஒரு வண்டி பிடித்து காஞ்சிக்கு  ஓடுபவர்.
ஒருநாள், பிரதோஷம் மாமா மடத்துக்குச் செல்லும்போது, திருவரத ஓதுவார் என்பவரும் தெருவில் தன் பரிவாரங்கள் புடைசூழ வந்தாராம். வழிநெடுக, தேவார- திருவாசகப் பாடல்களைப் பாடிக்கொண்டும், ‘நமசிவாய வாழ்க! நாதன்தாள் வாழ்க!’ என்று கோஷம் இட்டுக்கொண்டும் ஓதுவாரும் அவருடன் வந்தவர்களும் வர, பிரதோஷம் மாமாவுக்குச் சின்னதாக ஒரு வருத்தம். அவர், ‘அருணாசல சிவ’ எனும் நாமத்தைச் சொல்லியபடியே வருவது வழக்கம். ஆனால், அன்றைக்கு ஓதுவார் பாடியதால், அவர் சொல்வது தடைப்பட்டது.   ஸ்ரீரமணரிடம் அதீத ஈடுபாடுகொண்ட பிரதோஷம் மாமா, ஸ்ரீரமணர் அருளிய ‘அருணாசல சிவ’ எனும் திருநாமத்தை, எல்லோரையும் சொல்லச் சொல்வார். அதேபோல், ஓதுவார் உட்பட அங்கிருந்தவர்களிடம், ‘அருணாசல சிவ’ என்று சொல்லும்படி வலியுறுத்தினார். அதேநேரம் மனதுள் ஒரு எண்ணம்… ‘நமசிவாயமும் அருணாசல சிவமும் வேறு யார்? மகா பெரியவாள்தானே?!’

காஞ்சி மடத்தில் பக்தர்கள் பெரியவா தரிசனம் பெற்றார்கள்.  ஓதுவார் விடைபெற்றுச்  சென்ற  சிறிது நேரத்தில், ‘ஓதுவார் எங்கே?’ என்று கேட்டார்  பெரியவா. ”ஓதுவார் போய்ட்டார்  பெரியவா” ”சரி, பிரதோஷம்  வெங்கட்ராமனை கூப்பிடு ‘பிரதோஷம் மாமா  கையில் ஒரு   திருவாசகம்  புத்தகத்தை கொடுத்து ”இந்தப் புத்தகம்   எங்கே எந்த வருஷம் வெளியானதுன்னு ஓதுவாரைக் கேட்டுத் தெரிஞ்சுண்டு வா!”  என்கிறார்.ஓதுவாரைத் தேட  ஒரு பழைய  சக ரயில்வே ஊழிய   நண்பர்  உதவியை நாடலாம் என்று நினைத்து  ப்ரதோஷம்  மாமா தனது ரயில்வே ஆபிசுக்கு  ரிட்டையர் ஆனபின் அப்போது தான்  முதலாக சென்றார். அங்கே ஒரு அதிசயம் காத்திருந்தது.”ஆச்சரியமா இருக்கு  வெங்கட்ராமன் சார்! ஒரு லெட்டர் போட்டு உங்களை வரச் சொல்லணும்னு நினைச்சுட்டிருந்தேன். உங்களுக்குச் சேர வேண் டிய அரியர்ஸ் பணம் ஆயிரம் ரூபாய்க்கும் மேலே வந்திருக்கு. நீங்க இன்னிக்கு வரலேன்னா, திரும்பவும் அக்கவுன்ட்ஸ் செக்ஷனுக்கே போயிருக்கும். அப்புறம் வாங்கறது கொஞ்சம் கஷ்டம்தான்!” என்றார். ஐம்பது அறுபது வருஷம் முன்பு ஆயிரம் ரூபாய்  ரொம்ப பெரிய அமௌன்ட். இந்த பணம் தனக்கு தக்க நேரத்தில் கிடைக்க வேண்டும் என்பது  மஹாபெரியவா சங்கல்பம்.   இல்லாவிட்டால்  ஓதுவரைத் தேடவோ,அதற்காக  பழைய ஆபீஸ் நண்பரைத்  தேடியோ  ரிட்டையர் ஆன ரயில்வே ஆபிசுக்கு கடைசி நாளாக   பணம் திரும்பி போவதற்கு முன்  அங்கே போக வைப்பாரா.? எப்படி  இந்த  ” ஓதுவார்– திருவாசக  புத்தக”   ஏற்பாடு நடக்க வைத்திருக்கிறார் !
சென்னையில்  ஓதுவாரைக் கண்டுபிடித்து ஒருவழியாக  திருவாசக நூல் வெளியிடப்பட்ட விவரம்  அவருக்கு தெரியாது என்று ஓதுவார்  சொல்ல, வேறெங்கோ விவரம் தேடி   பெரியவாளுக்கு தெரிவிக்க  மடத்துக்குப்  போனார் ப்ரதோஷம்  மாமா.  மாமா  சொன்ன விவரம் எல்லாம் கேட்ட பெரியவா   திரு வாசகப் புத்தகத்தை நீட்டி, ”முதல்லேருந்து சில பக்கங் களைப் படி” என்றார்.   மாமா படித்தார்.   எடுத்ததும்  ‘நமசிவாய வாழ்க!’ என்று துவங்கும் சிவ புராணம்தான் தென்பட் டது.‘அருணாசல சிவனும் நமசிவாயமும் வெவ்வேறல்ல’ என்பதைப் பிரதோஷம் மாமாவுக்கு சூசகமாக உணர்த்தி விட்டார் மஹா பெரியவா!  என்பது மாமாவுக்கு புரிந்தது. கண்களில் நன்றி கலந்த ஆனந்த ஜலம்  வழிந்தது.
  மேற்கண்ட விவரங்களை  மாமாவின் நெருங்கிய உறவினரான. சிறந்த மஹா பெரியவா எழுத்தாளர்  ஸ்ரீ  அகிலா கார்த்திகேயன்  சொன்னதாக படித்ததில் எனக்கும்  ஆச்சர்யம்.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1426

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *