THIRUPPALLI EZHUCHCHI 8 J K SIVAN

திருப்பள்ளி எழுச்சி –  நங்கநல்லூர்  J K  SIVAN மணிவாசகர் மார்கழி 28ம்  நாள்
பாடல்  8.
நன்றாக ருசியான  ஹல்வா  ஒரு தடவை சாப்பிட்டாலும், மறுபடியும்  இன்னொரு ஸ்பூன் நிறைய  சாப்பிடுவது போல  மணி வாசகர் சம்பந்தப்பட்ட  விஷயங்களை மீண்டும்  ஒரு தரம் சொல்கிறேன். எப்படி திருப்பெருந்துறை வந்தார்? எப்படி நமக்கு  ஆவுடையார் கோயில் கிடைத்தது? திருப்பள்ளி எழுச்சி, திருவாசகம் எல்லாம் கிடைத்தது?
நமது இந்து சனாதன தர்ம வளர்ச்சிக்கு  வித்திட்டவர்கள் கணக்கற்றவர். அதில்  அறுபத்து மூன்று நாயன்மார்களும்  சைவ சமயக்  குரவர்கள், அப்பர்  சுந்தரர் சம்பந்தர்  ஆகிய நால்வரும் முக்யமானவர்கள்.   திருவாசகம் இயற்றிய  மாணிக்க வாசகரைப்  பற்றித்  தெரியாதவர்கள்  தமிழறியாத தமிழர்கள் என்று ஸ்டாம்ப் பேப்பரில் எழுதி  கையெழுத்து போட்டுக்  கொடுக்கலாம்.
மணிவாசகர்  பிறந்தது  திருவாதவூரில் . வாதவூரான் என்ற  பெயர் கொண்ட  பாண்டிய நாட்டு பிராமணர். இளமையிலேயே  சிவ பக்தி, ஞானம்  கொண்ட இவரை  பாண்டிய ராஜா  அரிமர்த்தன பாண்டியன்  அரசாங்க தலைமை மந்திரியாக்கி னான்.  கௌரவம் ஆடம்பரம், அந்தஸ்து, பதவி  இதில் எல்லாம்  வாதவூரருக்கு  விருப்பம் இல்லை.   எல்லாமே ஒரு வேஷம், கஷ்டமாகவே  இருந்து மன நிம்மதி  இல்லை. சிவ ஸ்மரணம்  தியானம்  ஒன்றே அவர்  மனதை ஈர்த்தது.   நிறைய  கல்வி மான்கள் பக்திமான்களை வரவழைத்து  வேதங்கள் தர்க்க சாஸ்திரங்கள்  எல்லாம்  அலசி அறிந்தார்.   ஒரு தக்க குரு அமையாவிடில் ஆன்மீக முன்னேற்றம் ஏற்படாது என உணர்ந்து ”எங்கே என் குரு?” என்று  அவர் உள்ளமும்  கண்களும் ஊர் எல்லாம்  தேடின. கால்களும் எங்கெங்கோ அலைந்தன.  

இந்த சமயத்தில் தான்  ஒரு நாள் அரசவையில்  பாண்டிய  ராஜ்ய குதிரைப்படை தலைவன்   ராஜாவிடம் ஒரு முக்கிய  விஷயம்  பேச அனுமதி  கேட்டான். ‘அஸ்வப்படை நாயகா,  என்ன சொல்ல விரும்புகிறாய் சொல்”  என்றான் அரி மர்த்தன பாண்டியன்.
 ‘அரசே,  நமது சேனையில் குதிரைப்படை பிரிவில், இப்போதுள்ள  குதிரைகள் வயது முதிர்ச்சி அடைந்து விட்டன, சில இறந்தும்  சில  நோயில் வாடியும் அவதிப்படுகின்றன. நமது படை பலமுள்ளதாக  இருக்கவேண்டுமானால்  வலிவு மிக்க  இளம் குதிரைகள் அவசியம்  நிறைய தேவைப்படுகிறது ”
”நல்லது நாம்  குதிரைகள் வாங்க ஏற்பாடு செய்வோம்.   ‘ வாதவூரரே, நீங்கள் தான்  இதற்குத்  தக்கவர். உமக்கு எங்கே நல்ல தரமான குதிரைகள்  கிடைக்கும்.  அவற்றின் மதிப்பு கணிக்கத் தெரியும்.  எவ்வளவு குதிரைகள்  நம் படைக்குத் தேவை என்பதும் தெரியும்?   உங்களால்  தான்  தீர்க்கமாக முடிவு செய்யும் தன்மை உண்டு. எனவே  இந்த பொறுப்பைத்   தங்களிடம் விடுகிறேன்”
வாதவூராருக்கு உள்ளூர புரிபடாமல்  ஏதோ  ஒரு சந்தோஷம்.  போகுமிடத்தில் தான்  இதுவரை தேடிக் கொண்டிருந்த குருவை கண்டு பிடித்து சரணடையப் போகிறோம் என்ற எண்ணம் தானாகவே மனதில் தோன்றியது.  

”அப்படியே  செய்கிறேன் மன்னா” என்று  பதிலளித்தார் வாதவூரார்.

”வாதவூரரே  நீர்  எந்த காரியத்தையும் புத்திசாலித்தனமாக சிந்தித்து ஆராய்ந்து செய்பவர் . எனவே நமக்கு நல்ல குதிரைகள் சீக்கிரமே கிடைக்கட்டும் ” என்றான் ராஜா.

கையில் பொற்காசு மூட்டைகளுடன், ஆள் படையுடன் புறப்பட்டார் வாதவூரர். குதிரையும் கிடைக்கவேண்டும், நல்ல குருவும் கண்ணில் படவேண்டுமே.  

”சோமசுந்தரா, எல்லாம் உன் சித்தம். நாட்டைக்  காக்க குதிரை. என் மனக் குதிரையை  அடக்க ஒரு  குரு. ரெண்டையும் தேட இது நல்ல சந்தர்ப்பமாக  அமையட்டும்”. மதுரை சொக்கனின் விபூதியை அள்ளி நெற்றியில் பூசிக்கொண்டு கிளம்பினார் .  திருப்பெருந்துறை அடைந்தார்.  ”இந்த ஊர்  அமைதியாக  இருக்கிறது. இங்கேயே தங்குவோம்” .  வாதவூரரை  ஏதோ காந்தமாக திருப்பெருந் துறையில் கவர்ந்தது.    திருப் பெருந்துறை  ஆத்மநாதருக்கு மட்டற்ற மகிழ்ச்சி ”இதோ வந்து விட்டான்  வாதவூரன் என் மனம் கவர்ந்த பக்தன்”
”இங்கே சிவன் கோவில் ஏதாவது உள்ளதா?  ஞானிகள் யாரேனும் உள்ளனரா?” என்று  வாதவூரர்  அந்த ஊர்க்காரர்களைக்  கேட்க,   ”ஐயா,  சற்று தூரத்தில் ஒரு குருந்த மரத் தடியில் ஒரு முதியவர் இருக்கிறார். யாருடனும் பேசுவதில்லை”  என்று பதில் வந்தது.

ஒரு வயோதிக பிராமணர் கையில் சிவ ஞான போதம் என்ற ஓலைச்  சுவடியை வைத்துக்கொண்டு ஒரு குருந்த மரத்தடியில் உற்கார்ந்திருந்தார். அருகே பழைய ஒரு சிறிய சிவன் கோவில். அந்த சாதுவைச் சுற்றிலும் பல சிஷ்யர்கள்.

அந்த   பழைய  சிதிலமான சிவன் கோவிலில் நுழைந்தார் வாதவூரர். தானும்  சிலையானார். ஆத்மநாதர் வாதவூரர் ஆத்மாவில் கலந்தார். கண்களில் பிரவாஹம். அந்த கோவிலை கால்கள் சுற்றின. ஹர ஹர மஹா தேவா, ஓம்  நமசிவாயா,  என்ற சப்தம் காதில் ரீங்காரமிட்டது. மனம் பாகாய் உருகியது. சற்று தள்ளி இருந்த ஒரு குருந்த மரத்தடியில் சிவந்த மெலிந்த வெண் தாடி சடை முடியோடு ஒளி வீசும் இரு விழிகள் அழைத்தன. கன்றுக்குட்டி தாயிடம் சென்றது. நீண்ட நாள் தேடிய தாய் சேய்க்கு கிடைத்துவிட்டாளே.
தடாலென்று அந்த பிராமண சாது  காலடியில் வீழ்ந்தார் வாதவூரர். இவரே என் குரு என அறிந்து மகிழ்ந்தார். வார்த்தைகள் வெளி வரவில்லை.  ‘சிக்கென”ப்  பிடிக்க அவருக்கு தெரியுமே.   குருவின்  கால்களை பிடித்துக்கொண்டு ”ப்ரபோ, என்னை அடிமையாக ஏற்றுக் கொண்டு அருள்வீராக” என்று கெஞ்சினார்.
”நான் இதற்காகத்  தானே வந்து காத்திருக்கிறேன்” என்று ஆத்மநாதர் பிராமண வடிவில் மனதில் மகிழ்ந்தார் .வாதவூரர் பாதாதி கேசம் வரை ஏதோ   ஒரு புரிபடாத சக்தி தன்னுள் புகுந்ததை  உணர்ந்தார். சிவஞானம் அவரை ஆட்கொண்டது.   வானில் மேகக்கூட்டத்தில் பார்க்கும் இடத்தில் எல்லாம்   கரிய சிவலிங்க கூட்டங்கள். அத்தனைக்கும்  மழை அபிஷேகங்கள்.  இடி எனும்  பேரிகை, உடுக்கு, மத்தள முழக்கம். சிவகணங்கள் கண்ணுக் கெட்டிய வரை பேரானந்தத்தில் ஆழ்த்து கிறார்கள்.  முனிவர்கள், ரிஷிகள், மானுட பக்தர்கள் வெண்ணிற பூச்சோடு…….

வாதவூரரின் செருகியிருந்த கண்கள் திறந்தன.   மீண்டும்  மூடியது…நினைவு அழிந்தது. மீண்டும் நினைவு பெற்றபோது தான் குருநாதர் திருவடிகளில் மயங்கி இருந்ததை  வாதவூரர் உணர்கிறார்.

”குருநாதா, பரம்பொருளே, என்னை ஆட்கொண்ட தெய்வமே, என் நெஞ்சம் உருக்கி என்னை சிவமாக்கிய செல்வமே, எல்லாம் உன் உடைமையே, எல்லாம் உன் அடிமையே, எல்லாம் உன்னுடைய செயலே என்று தனது ஆபரணங்கள் செல்வங்கள் அனைத்தையும் அந்த பிராமண குருவின்  பாதத்தில் சமர்ப் பித்தார்.  சகலமும் துறந்தவர் துறவியானார். த்யானத்தில்  மனம் லேசானது. கண்களில் பரவசம். மணிப்ரவாளமாக சிவ ஸ்துதி நாவில்  பெருக்கெடுத்துப்  பாடினார். அருமை தீந்தமிழில் சிவனை துதித்து  வாசகங்கள்  மணி மணியாக வெளிவந்து அவற்றை மாலையாக சிவனுக்கு சூட்டினார்.
”அப்பனே, வாதவூரா, நீ  ”மணி வாசகனடா”. இங்கேயே இரு ” ஆத்மநாதர் அன்போடு அழைத்தார். நமக்கு மணிவாசகர் கிடைத்தார். கண் மூடி குருவை கீழே விழுந்து வணங்கிய மணிவாசகர் கண் திறந்து எழுந்தபோது ப்ராமணரைக் காணவில்லை. கதறினார். பக்தி பரவசமாக தன்னை மறந்த நிலையில் தேடல் தொடர்ந்தது.
நாட்கள் மாதங்களாயின.
அரி மர்த்தன  பாண்டியனின் ஆட்கள்   மணிவாசகரிடம்  குதிரை தேடி வந்ததை நினைவூட்ட ”நீங்கள் திரும்பி செல்லுங்கள், குதிரைகள் சீக்கிரம் ஒரு மாத காலத்தில் வந்து சேரும்” என்று ஏதோ ஒரு இயந்திரம் கூறுவதைப் போல் பதிலளித்தார் மணிவாசகர். அந்த சிறு பழைய  சிறிய  கோவிலில் ஆத்ம நாதரை வணங்கிய மணி வாசகர் தான் கொண்டுவந்த பொற்காசு களை செல்வங்களை செலவழித்து ஒரு  பெரிய   கோவில் நிர்மாணித்தார். திருப் பெருந்துறையில் சிவன் கோவில் உருவானது.  நமக்கு கிடைத்த  ஆவுடையார் கோயில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 1100 வருஷ பழைய கோவில். ஆதி கயிலாயநாதர் கோயில் கிழக்கு பார்த்தது. சிவகாமி அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கி. பராசரர், புலஸ்தியர், அகத்தியர், முதலிய மகரிஷிகள் தரிசித்த சிவன் ஆலயம். திருவாசகம் நமக்கு கிடைக்க மாணிக்க வாசகர் உருவாக்கிய ஸ்தலம். கி பி 10ம் நூற்றாண்டு பாண்டியநாட்டு ஆலயம்.++
வாதவூரன் பெருந்துறை அடைந்தது முதல்   முற்றிலும் மாறிவி ட்டதை அறிந்த பாண்டியன் சினம் கொண்டான். எதற்கும் ஒருமாத காலம் பொறுப்போம் என காத்திருந்தான். ஒரு மாதமும் முடிந்தது. குதிரைகள் வந்துசேரவில்லை.  கீழ கடற்கரைக்குக் குதிரை வாங்கச் சென்ற வாதவூரனை  திருப்பெருந்துறையில்  குருந்த மரத்தின் அடியில் பரமேஸ்வரனே  முதிய  குருவாக ஆட்கொண்டு, அவரிடம்  குதிரை வாங்க இருந்த பணம் கோயிலாகி, அரசன் குதிரைகள் கொண்டுவா என்ற போது நரிகள் பரிகளான கதை ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்.

ஆத்மநாதன்  கிழ பிராமணனாக குருந்த மரத்தடியில்  300 பிராமண  குழந்தைகளுக்கு வேதம் சாஸ்திரம் எல்லாம் சொல்லி கொடுத்தான்.   அங்கே  பிள்ளையாரை பிரதிஷ்டை செய்து ஒரு பாடசாலை நிறுவி, பிராமணர்கள் வீட்டிலிருந்து தினமும் புழுங்கலரிசி பாகற்காய் முளைக்கீரை சமைத்து கிழ பிராமணருக்கு உணவு தந்தனர். ஒருநாள் கிழ பிராமண வாத்தியாரை காணோம். சிஷ்ய பிள்ளைகள் தேடி வருந்தினார்கள். குழந்தைகளோடு விளையாடிய கிழவர் தீடீரென எங்கே  மறைந்தார்? கிடைக்கவே இல்லை.  அன்று ராத்திரி எல்லா சிஷ்ய பிள்ளைகள் கனவிலும் ” திருப் பெருந்துறை ஈஸ்வரன்  ஆத்மநாதன்   நான் தான் உங்கள் கிழ வாத்யார்.  நீங்கள்  தினமும் கொடுத்த கீரை உணவை விரும்பி உண்டேன் ‘ என்றான்.இன்றும் ஆவுடையார் கோயிலில்  ஆத்மநாதனுக்கு புழுங்கல் அரிசி, முளைக்கீரை, பாகற்காய் சமையல் அன்னம் தான் நைவேத்தியம்.

பிள்ளையார் பெயர் ஸ்ரீ வித்யாகணபதி.   பிற்காலத்தில் துண்டகன் என்ற முரட்டு மந்திரி  இந்த கிராமத்தை ஆக்கிரமித்து  பிராமணர்களை விரட்டிவிட்ட போது   மீண்டும்  வயதான முதியவர் திருப்பெருந்துறைக்கு வருகிறார்.”இந்த ஊர் எனக்கல்லவோ சொந்தம்.  இதோ பார் அதற்கான  ஆதாரம், பட்டயம்  என்னிடம்  உள்ளது என்ற முதியவர் பாண்டியன் முன் நிறுத்தப்பட்டார்.
‘யார் நீர் ? உமக்கு இங்கே என்ன வேலை?”- பாண்டியன்.
‘நான் தில்லையை சேர்ந்தவன். என் பெயர் பரமசுவாமி,’
”உமக்கு இந்த சிவபுரம் ஊர் சொந்தமென்று ஏதோ ஆதாரம் இருக்கிறது என்கிறீரே அதைக் காட்டும்” ”இதோ ரெண்டு பட்டயங்கள்”
பட்டயங்களைப்   பார்க்கிறான் பாண்டியன்.  நிலத்தின் அளவு எல்லைகள்  அவர் பெயருக்கானது என்று தெளிவாக தெரிகிறது.”உமக்கெதற்கு இந்த தரிசு நிலம்.. இங்கே எவ்வளவு வெட்டினாலும் நீர் வராது”- பாண்டியன் ”இல்லை அங்கே  அந்த  ஈஸான திசை மேட்டு நிலத்தில்  நீர் இருக்கிறது பார்.     அங்கே பாண்டியன்   ஆளைவிட்டு   பள்ளம் தோண்ட,   சிவபுரத்தில்  நீர் பொங்கி  அனைத்துத் தீர்த்தங்களையும் அங்கே வரவழைக்கிறார், திருப்தி அடைந்த பாண்டியன் துண்டகனை தண்டிக்கிறான். அவனிடமிருந்து திருப்பெருந்துறை  ஊர் மீட்கப்படுகிறது.
”இந்த நிலத்தை பிராமணர்கள் சமூகம் பாதுகாக்கட்டும். எனக்கு   சேரவேண்டிய  300ல் ஒரு பங்கு வருமானம் இங்கேயுள்ள  சிவன் கோவிலுக்கு இறையிலியாக சேரட்டும்” என்ற கிழவர் காணாமல் போக கிழவராக வந்தது ஆத்மநாத சுவாமி என்று பாண்டியனும் மற்றவர்களும் அறிகிறார்கள். எண்ணற்ற  அதிசயங்களை தன்னுள் கொண்டது திருப்பெருந்துறை எனும்  ஆவுடையார்கோவில் க்ஷேத்ரம். 

இனி இன்றைய  திருப்பள்ளி எழுச்சி  8வது பாடல்:
”முந்திய முதல் நடு இறுதியும் ஆனாய்
மூவரும் அறிகிலர் யாவர் மற்று அறிவார்?
பந்தணை விரலியும் நீயும் நின் அடியார்
பழம் குடில்தொறும் எழுந்தருளியபரனே!
செந்தழல் புரை திருமேனியும் காட்டி
திருப்பெருந்துறை உறை கோயிலும் காட்டி
அந்தணன் ஆவதும் காட்டி வந்து ஆண்டாய்!
ஆர் அமுதே! பள்ளி எழுந்தருளாயே.!”

அருமையான அமுதமே!  பரப்ரம்மமே,  எப்பொருளுக்கும் முற்பட்ட முதலும், நடுவும் முடிவும் ஆனவனே! ப்ரம்மா   விஷ்ணு மும்மூர்த்திகளும் உன்னை அறியமாட்டார்  எனும்போது  வேறு யாவர் அறியக்கூடியவர்? பந்தை ஏந்திய விரல்களை உடைய உமையம்மையும் நீயுமாக உன்னுடைய அடியார்களுடைய பழைய சிறு வீடுதோறும் எழுந்தருளின மேலானவனே! சிவந்த நெருப்பை ஒத்த வடிவத்தையும் காட்டித் திருப்பெருந்துறையில் வீற்றிருக்கின்ற திருக்கோயிலையும் காட்டி, அழகிய தண்ணிய அருளாளன்   அவன் என்பதையும் காட்டி வந்து ஆட்கொண்டவனே! பள்ளியினின்றும் எழுந்தருள்வாயாக.”

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *