ASHTAVAKRAR J K SIVAN

எட்டு கோணல்  ஆசாமி-   நங்கநல்லூர் J K SIVAN

எத்தனை யுகமானால்  என்ன? என்றும்  மழை கொட்டு கொட்டு என்று தான் மேலிருந்து  ஜலப்ரவாஹமாக  பூமியை நனைக்கிறது.  ஐந்தாயிரம் வருஷங்களுக்கு முன்பு ஒருநாள்  அதுவரை பெய்து கொண்டிருந்த மழை கிருஷ்ணன் வருவதை பார்த்து நின்று விட்டது. கூடவே ராதையுமல்லவா வருகிறாள். அன்று பகலில் காய்ந்த வெயில் விட்டுப்போயிருந்த உஷ்ணத்தை இந்த திடீர் மழை போக்கி விட்டது. கூடவே மெல்லிய இன்பமான தென்றல் இடைவெளியில்லாமல் வீசியது.

அஸ்தமனம் ஆகி வெகுநேரம் ஆகவில்லை. பறவைகள் கூடுகளுக்கு திரும்பும் நேரம். கறவைப் பசு க்கள் பழக்க தோஷத்தால் தானாகவே வீடு திரும்ப மெதுவாக நடந்தன. கன்றுக்குட்டிகள் அவற்றை ஒட்டி ஆடிக்கொண்டே ஓடின. நேரம் ஓடியது. எங்கும் இருள் சூழ ஆரம்பித்தது.

இருளை போக்க வானில் பூரணச்சந்திரன் பால் ஒளியை வாரி வழங்க ஆரம்பித்தான்.  அமைதியான அந்த வனத்தில் கிருஷ்ணன் இடையிலிருந்து புல்லாங்குழலை எடுத்தான். எங்கும் நிசப்தமான சூழ்நிலையில் அவன் குழல் தேனிசையைத்  தென்றலில் கலந்து கொண்டிருக்க ராதை ரசித்து தலையசைத்தாள். அவள் கால்கள் தாமாகவே நடனம் ஆடின. அவர்கள் அருகே வெள்ளி நிறமாக ஓடிக் கொண்டிருந்த யமுனை நதியும் கண்ணன் குழலோசைக்கேற்ப தனது திவலைகளை வீசியது. கிருஷ்ணன் கண்கள் யாரையோ தேடியது. அதோ அவர் வந்துவிட்டார்.
அவர் ஒரு வினோதமான மனிதர். மெதுவாக  அருகே  வந்து கண்ணனை வணங்கினார். கண்ணன் இசை நின்றது. அவரோடு ஏதோ பேசினான். பிறகு அவர் சென்றுவிட்டார். கிருஷ்ணன் அவர் போவதையே பார்த்துக்கொண்டிருந்தான். நேரம் நழுவியது.
“இப்போது வந்தாரே அவர் யார்?” என்றாள் ராதா. அவளுக்கு சிரிப்பு அடங்கவில்லை இன்னும்.
“எனக்கு உன் மீது வருத்தம் ராதா?”
“ஏன், ஏன்” என்று திடுக்கிட்டு நின்றாள் ராதா.
“அவர் எப்படிப்பட்ட உன்னதமான தவ ஸ்ரேஷ்டர் என்பதை அறியாமல் நீ அவரைக் கண்டதும் கேலியாக சிரித்தது தவறு?”
“எனக்கு அவரைக் கேலி செய்யும் எண்ணம் எதுவுமில்லை. அவர் உடல் வளைவுகள் வேடிக்கையாக இருந்து, என்னை அறியாமல் சிரிக்க வைத்தது தவறு தான். யார் அவர்?

“எனக்கு விருப்பமான அஷ்டாவக்ரர். அவர் கதை ஒரு சோக கதை.”
“எனக்கு சொல்லலாமா கிருஷ்ணா அதை”
“தாராளமாக. வாட்ட சாட்டமாக பெண்கள் மயங்கும் வடிவில் ஆணழகனாக ஒரு பிராமணர் கங்கைக் கரையில் வசித்து யாகங்கள் ஹோமங்கள் ஜப தபங்களோடு நாராயணனை வழிபட்டு வந்தார். அவர் மனைவி அவருக்கு நேர் மாறானவள். அதனால் அவர் இல்லற வாழ்க்கை வெறுத்துப்  போய் வனங்களில் தவம் புரிந்தார். இனி பெண்களை ஏறெடுத்தும் பாரேன்” என்று விரதம் பூண்டார்.
இந்திரனின் சபையிலிருந்து ரம்பை ஒருநாள் தோழியரோடு அந்த வனத்தில் வந்த போது இந்த பிராமண முனியின் தேஜஸ் கம்பீரம் அழகு அவளை கவர்ந்தது.

”இந்த முனிவரை உன்னால் மயக்க முடியுமா ரம்பா?” அவர் பெண்களை ஏறெடுத்தும் பார்க்காதவர் ”
என்றனர் தோழிகள். ”இப்போது நடப்பதைப் பாருங்கள்”  என்றாள்  கர்வம் கொண்ட  ரம்பா. 

”எனைக்கண்டு மயங்காத பேர்களுண்டோ”  என்று பாடினாள் ரம்பா. சிரித்துக்கொண்டே அவரை அணுகி வணங்கி வேண்டினாள்.
கண் விழித்த பிராமணர் ”என்ன ?” என்று ஜாடையாக கேட்பது போல்  பார்த்தார் .

“எனக்கு ஒரு எண்ணம் நிறைவேற அருள்வீர்களா”
“என்னால் முடிந்தால் அப்படியே ஆகட்டும்”
“நான் உங்களை மணக்க விரும்புகிறேன்” என்றாள் ரம்பை.
“அது முடியாது”
“ஏன்?”
“நான் எந்த பெண்ணையும் நினைத்து கூட பார்ப்பதில்லை. இது என் விரதம்”
ரம்பை கோபம் கொண்டாள்.
”ரம்பை கிடைக்கமாட்டாளா என்று மூவுலகும் ஏங்க , உம்மைத்தேடி வந்து கெஞ்சியும் என்னை ஏமாற்றம் அடையச் செய்த, என்னை அவமதித்த,  எனக்குக்  கிடைக்காத உங்களுடைய அழகிய உருவம்,  இன்று முதல் எவர்  பார்த்தாலும்  அருவருக்கத் தக்க, எந்த பெண்ணும் வெறுத்து கேலி செய்யும்படியான உடலாகக் கடவது” என்று ரம்பை சாபமிட்டாள்.

எட்டு வித கோணலாக அந்த வேத பிராமணர் உடல் வளைந்தது. அவர் பெயரே மறந்து போய் அது முதல் அவர் அஷ்டாவக்ரர் (எட்டு கோணல் ஆசாமி) என்று எல்லோராலும் அழைக்கப் படுகிறார்” என்றான் கிருஷ்ணன்.

“இதற்கு அவர் கடவுளிடம் முறையிடவில்லையா?”.
“முறையிட்டாரே “
“எப்போது அவருக்கு கடவுள் கிருபை செய்வார் அவர் உடல் மீண்டும் எப்போது பழைய நிலைக்கு திரும்பும்”
“கண்ணன் சிரித்தான்.
”கடவுள் கிருபை அவருக்கு கிடைத்து விட்டதே ”
“எப்போது “
“சற்று நேரம் முன் அவர் இங்கு பேசிக்கொண்டிருந்துவிட்டு சென்றபோது ” என்றான் கண்ணன்.

ராதை எதிரே பார்த்தாள் . தொலை தூரத்தில் பால் வெண்ணிலாவின் ஒளியில் நெடிது உயர்ந்த ஒரு சந்நியாசி நேராக நிமிர்ந்து நடந்து சென்றுகொண்டிருந்தார். அவர் உடலில் எந்த வளைவும் இல்லை.

 

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1426

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *