ORU ARPUTHA GNANI = J K SIVAN

ஒரு அற்புத ஞானி – நங்கநல்லூர் J K SIVAN

சகுனம்

ஹிந்துக்கள் நமக்கு எத்தனையோ நம்பிக்கைகள். இப்போதும் சிலருக்கு வெளியே எங்கு போவதானாலும் வாசலில் நின்று இருபக்கமும் சகுனம் பார்த்து விட்டு புறப்படும் வழக்கம் தற்காலத்தில் இருக்கிறது. மற்றவர்கள் மறந்து விட்டார்கள். நாம் புறப்படும் நேரத்தில் நல்ல சகுனமாக அமைந்தால் போன காரியம் ஜெயம் என்று ஒரு நம்பிக்கை. அப்படி நாம் கிளம்பும்போது எதிரே யார், எது வந்தால் நல்ல சகுனம், கெட்ட சகுனம்? என்பதை பற்றி தான் இப்போது சொல்கிறேன்.

ஒரு பழைய ஜோசிய புத்தகம் எங்கள் வீட்டில் இருந்ததை வேடிக்கையாக புரட்டினேன். பக்கங்கள் எல்லாம் ஒடிந்து விட்டன. கீ ghee ரோஸ்ட் தோசைபோல தொட்டால் டொப் என்று காகிதம் தூளான புத்தகம். அதில் சில விஷயங்கள் கண்ணில் பட்டது.

வெளியே கிளப்பும் எதிரே ஒரு கன்னிப்பெண் தண்ணீர் குடத்துடன் வருதல் நல்ல சகுனம் ஆனால் . இப்போது யார் தண்ணீர் கொண்டு எதிரே வருகிறார்கள்?, வந்தாலும் அவள் கன்னிப்பெண்ணா என்று எப்படி அறியமுடியும்?.

பிணம் எதிரே வந்தால் நல்ல சகுனம் என்பதற்காக பிணம் வருமா என்று காத்திருக்க முடியாது. பிணம் பார்க்கமுடியாதபடி வண்டியில் பெட்டியில் வைத்து மூடப்பட்டு வருகிறதே.

அழுக்குத் துணியோடு வண்ணான் எதிரே வந்தால் ரொம்ப நல்ல சகுனம். ஸாரி இதுவும் நடக்காது. வண்ணான் இப்போது கிடையாது. எங்கள் வீட்டில் சூளைமேட்டில் மாதத்துக்கு ரெண்டு முறை முனுசாமி ஒரு பெரிய மோட்டோடை துணி வெளுத்து இஸ்திரி போட்டுக்கொண்டு வருவார். அவர் சிறந்த கிருஷ்ண வேஷதாரி. அவர்கள் ஊரில் ராவெல்லாம் தெருக்கூத்து நடக்கும். அதில் கிருஷ்ணன் வேஷம் முனுசாமிக்கு தான். பீடி பிடிப்பார். கிட்டே வரும்போது நாறும். வழுக்கை மண்டை. நாலடி உயரம். முதுகு கூனல். லுங்கி கட்டிக்கொண்டு கிருஷ்ணன் வேஷ டயலாக் தானே இட்டுக்கட்டி பாடிக்கொண்டு கையில் அட்டை கத்தி, அட்டை கிரீடம் ஜிகினா ஒட்டி அணிந்து கொண்டு டான்ஸ் ஆடுவார். வேஷத்தை கிடைக்கும் பணம் அன்று சாயந்திரம் கள்ளுக்கடைக்கு போய்விடும். இப்படி ஒரு கிருஷ்ணன். யோசித்து பாருங்கள்.

ஆகவே வண்ணான் கிடையாது. லாண்டரி கடைக்கு நாம் தான் போகிறோம். அதுவும் அழுக்கு மூட்டையோடு இல்லை. துவைத்து காயவைத்து இஸ்திரி போடுவதற்கு. வீட்டில் வாஷிங் மெஷின் வந்த பிறகு நாம் அனைவருமே வண்ணான்கள் தானே. ஒரு துணிக்கு முப்பது நாப்பது ரூபாய் என்றால் எப்படி மூட்டை துணி இஸ்திரிக்கு போட முடியும்? அப்போது ஒரு துணிக்கு எட்டணா.

தாயும் பிள்ளையும் எதிரே வந்தால் நல்ல சகுனம். எப்படி அமையும் இது? வருவது பிள்ளையா, அல்லது தாயா என்று தெரியாதே. ஸ்கூட்டரில் வந்தாலும் நல்ல சகுனம் தான்.

புறப்படும்போது கோவில் மணி அடித்தால் ரொம்ப நல்லது. ரொம்ப கம்மி சான்ஸ் இதற்கு.கோவில்கள் அதிகம் கிடையாது.

எதிரே சுமங்கலிகள் வருவது சகுன பாக்யம். நோ கமெண்ட்ஸ்.

என் தந்தையார் ஜே . கிருஷ்ணய்யர் வெளியே கிளம்பும் போதெல்லாம் மேலே கருடன் தெரிகிறதா என்று பார்த்து விட்டு கைகளை தலைக்கு மேல் கூப்பி ஒரு சுற்று சுற்றிவிட்டு தான் போவார். ஒவ்வொரு தடவையும் அவர் வெளியே கிளம்பும்போது கருடனுக்கு எப்படி தெரியும் மேலே சுற்றவேண்டும் என்று?

போகும்போது திருவிழாவைக் காண்பது நல்ல சகுனம். திருவிழாக்கள் தினமும் நடப்பதில்லை.கிடைத்தால் அது உங்கள் நல்ல சகுனம் அதிர்ஷ்டம்.

அடுத்த சில நல்ல சகுனங்களை நிச்சயம் இப்போது பெற முடியாது. காலம் மாறி விட்டது. எருக்கூடையை காண்பது, யானையை பார்ப்பது, நரி இடமிருந்து வலமாக ஓடுவது… பாம்புகள் ஜாலியாக ஜோடியாகி பிணைந்திருப்பது.

அந்தக்காலத்தில் அநேகர் வாழ்ந்திருந்த இடங்கள் காடு மாதிரி இருந்ததால் இதெல்லாம் பாசிபிள் POSSIBLE . கருடன் வலப்பக்கத்திலிருந்து இடப்பக்கம் செல்லல். காகம் இடப்பக்கத்திலிருந்து வலப்பக்கம் செல்லல். கழுதை கத்துதல். பசு கன்றுக்குப் பால் கொடுப்பதை காண்பது எல்லாம் இப்போது நினைத்தே பார்க்க முடியாது. இருந்தாலும் கோடியில் ஒரு சான்ஸ் தான். யாராவது சங்கீத பயிற்சி செய்வது காதில் விழுந்தால் ”க” கத்துகிறது என்று நல்ல சகுனமாக எடுத்துக் கொள்ளவேண்டியது தான்.

ஜோசிய புத்தகத்தில் இன்னும் சில நல்ல சகுன லிஸ்ட் இருந்தது. அதெல்லாம் நிச்சயம் நமக்கு கிடைக்க சான்ஸ் இல்லை என்று தோன்றுகிறது:

மஞ்சள், குடை, கிளி, மான், பழம், பசு, புலி, யானை, இரட்டை பிராமணர், பல்லாக்கு, வெண்ணெய், தயிர், மோர், மயில், இரட்டை விதவைப் பெண்கள், தேர், தாமரை மலர் இதெல்லாம் இப்போது யார் கண்ணிலாவது படுமா? கிடைத்தால் நல்ல சகுனங்களாகும்.

நூறு வருஷங்களுக்கு முன்னால் பசு, புலி, யானை, முயல், கோழி, நாரை, புள்ளிமான், கொக்கு ஆகியவை வலப்பக்கமாக வந்தால் நினைத்த காரியம் வெற்றியடையும் என்ற நம்பிக்கை பலித்திருக்கலாம். நல்ல சகுனத்துக்காகவே எருமை, ஆடு, பன்றி, கரடி, நாய், குரங்கு, கீரிப்பிள்ளை ஆகியன இடப்பக்கமாக வந்திருக்கலாம்.

இந்த லிஸ்ட் மாதிரிரே கெட்ட சகுன சமாச்சாரமும் இருக்கிறது. கீழே கொடுத்த ஜீவன்கள் எதிரே வந்தால் நிச்சயம் போன காரியம் சைபர் தான்.

பூனை கண்ணிலே பட்டதுமட்டுமில்லாமல் குறுக்கேஓடுவது.
ஒற்றைப் பிராமணன் எதிரே வருவது. .
விதவையைக் கண்ணால் பார்ப்பது.
எண்ணெய்ப் பானை கண்ணில் படுவது.
விறகு தூக்கிக்கொண்டு எதிரே வருவது.
யாராவது ஆசாமி மண்வெட்டியுடன்எதிரே வருவது
ஆந்தை கத்துவது, நாய் குறுக்கே செல்வது, காகம் வலது பக்கத்திலிருந்து இடது பக்கம் பறப்பது .நாய் ஊளையிட்டு அழுவது. முடி திருத்துபவர் எதிரே வருவது.
போர் வீரனை காண்பது. ஏணி எதிரே தூக்கிக் கொண்டு வருவது.
பாய் விற்பவன் பாய்களோடு எதிரே வருவது. அதேபோல் வீடு பெருக்கும் விளக்குமாறு விற்பவர் எதிரே வருவது.

மேலே சொன்னது நடக்காவிட்டாலும் தலை முக்காடு இட்டுக்கொண்டோ, தலை விரித்துக் கொண்டோ எதிரே வரும் பெண்களை நிச்சயம் காண வாய்ப்பு இருக்கிறது. அவர்கள் கடந்து போன பிறகு வெளியே புறப்படலாம்.

நிச்சயம் இது ஒவ்வொரு வீட்டிலும் நடக்கும் அப சகுனம்: அது என்ன வென்றால் ஜலதோஷம் பிடித்தவர் யாராவது வீட்டில் இருந்து வெளியே போகும்போது ”நச்” என்று தும்முவது. கல்யாணங்களில் தாலி கட்டும் நேரம், மந்திரம் சொல்லும்போது அபசகுன வார்த்தைகள் சப்தங்கள் தும்மல் சத்தம் காதில் விழக்கூடாது என்பதற்காக கெட்டி மேளம் ”பீ பீ ” உரக்க சப்தம் எழுப்ப தவில் பிய்ந்து போகும் அளவு அடிப்பார்கள். இன்றும் கெட்டி மேளம் கெட்டி மேளம் என்று சொன்னதும் பிய்த்து விடுகிறார்கள்.

சேஷாத்ரி ஸ்வாமிகள் பக்தர் குழுமணி நாராயண சாஸ்திரி. அவர் ஒருநாள் காலை 6 மணிக்கு சாது சாத்திரத்திற்கு பக்கத்தில் ஸ்வாமியை தேடி வந்து பார்த்து வணங்கினார். ‘

”சுவாமி, நான் ஊருக்கு போகிறேன், தாங்கள் ஆசிர்வதித்து உத்தரவு தர வேண்டும்”

சாஸ்திரியின் கழுத்தை கட்டிக் கொண்டு ஸ்வாமிகள் மேலே பார்த்தார். ஏதோ பக்ஷி ஒன்று பறப்பது போல் வெகு உயரத்தில் ஒரு சிறிய உருவம் தென்பட்டது.
”அது என்ன கருடனா?”
”ஆமாம் சுவாமி, கருடன் போல தான் தோன்றுகிறது”
சுவாமி மேலே கையை மூன்று தடவை காட்டி ”வா” என்று சைகை செய்தார். ” அது வரும் நீ போ ”

சாஸ்திரி ரயில் நிலையம் நோக்கி நடந்தார். ரயிலடிக்கு போகும் வழியில் ஐந்து நிமிஷத்தில் ரெண்டு கருட பக்ஷிகள். இடதும் வலதும் தலைக்கு மேல் பறந்தன. இன்னும் சற்று நேரத்தில் ஐந்தாறு கருடன்கள் அவ்வாறே சென்றன. ஸ்டேஷன் போய் சேர்வதற்குள் கிட்டத்தட்ட நூறு கருடன்கள் தலைக்கு மேல் வட்டமிட்டுக் கொண்டிருந்தன. தற்செயலாக இவ்வளவு கருடன்களை சேர்ந்தாற் போல் எங்காவது பார்க்க முடியுமா? வருமா? எப்போது ஸ்வாமிகள் அவைகளை ”போகலாம்” என்று சொன்னாரோ? அப்போது போயிருக்கும்.

இன்னொரு சம்பவம் இதே போல் நடந்தது. வெங்கடாசல முதலியாரும் அவர் மனைவி சுப்புலெட்சுமியும் ஸ்வாமியின் நெருங்கிய பக்தர்கள். அவர்கள் வீட்டுக்கு வருவார். கொடுத்ததை சாப்பிடுவார். அந்த வீட்டில் ஒரு பூவரச மரம் , ரெண்டு முருங்கை மரம் இருந்தது. அன்று அமாவாசை .

முற்றத்தில் அவர்களோடு சிரித்துப் பேசிக்கொண்டே இருந்த ஸ்வாமிகள் ”சுப்புலக்ஷ்மி உனக்கு ஒரு வேடிக்கை காட்டட் டுமா வந்து பார் ” என்று ஆகாயத்தை நோக்கி கையை தூக்கி ”வா” என்று ஜாடை காட்ட, முதலில் ஒரு காக்கை, அப்புறம் ரெண்டு மூன்று, அப்புறம் பத்து, ஐம்பது, நூறு போல திரண்டது. அவற்றோடு கிளிகள், குருவிகள், மஞ்சள் குருவி, கறுங்குருவி , எல்லாமும் முற்றத்தில் தரையில், மரங்களில், ஓட்டின் மேல் நிரம்பி விட்டன. காச் மூச் என்று சத்தம். நடுவில் அவைகளோடு நின்று ஸ்வாமிகள் ஏதோ பேசுகிறார். அவை திரும்ப ஏதோ சப்தம் கொடுக்கின்றன.

சுப்பு லட்சுமி இந்த வேடிக்கையை ரசித்து கொண்டு ஏழெட்டு நிமிஷங்கள் நின்றாள்.

”சுப்புலக்ஷ்மி, விளையாடினது போதும். பொழுது போய் விட்டதே. அவர்கள் தம் வீட்டுக்கு போகவேண்டாமா, பசிக்காதா. வீட்டில் குஞ்சுகள் காத்திருக்காதா? ”

ஸ்வாமிகள் தனது மேல் துணியில் இருந்து ஒரு நூலை பிய்த்து வாயால்” பூ” என்று ஊதி ”போ” என்று ஜாடை காட்ட அவை எல்லாமே பறந்து போய்விட்டன.

சேஷாத்ரி ஸ்வாமிகள் ப்ரம்ம ஞானி. என்ன அதிசயம் வேண்டுமானாலும் நிகழ்த்துவார். பிரபஞ்சம் அவர் சொன்னபடி கேட்குமே.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1426

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *