SOORA SAMHARAM – J K SIVAN

சூரசம்ஹாரம் –    நங்கநல்லூர் J K  SIVAN
நேற்று எனக்கு  அழகிய  பெரிய  மயிலின் தரிசனம் கிடைத்தது. சூரசம்ஹார  தினத்தில் என் கண்ணில் மயில் பட்டது, அருகிலேயே  அது ஏதோ ஒரு துளசிச் செடியை கடித்துக் கொண்டிருந்தது  கண்ணுக்கும் மனதுக்கும் குளிர்ச்சியும் மகிழ்ச்சியும் அளித்தது. ஒரு கிராமப்  பாதையில் சென்று கொண்டிருந்தேன்.
நேற்று  சூர்  ஸம்ஹாரம்  வெகு விமரிசையாக  நாடெங்கும்  சுப்ரமணிய சுவாமி கோவில்களில் கொண்டாடப்பட்டுள்ளது.    யார்  இந்த  சூரன்?  காசியபர் என்ற முனிவருக்கும் மாயை என்ற பெண்ணிற்கும் பிறந்த  மூத்த மகன். அவன் சகோதரர்கள்  தாரகன் மற்றும் சிங்கமுகன் . சூரபத்மன் – பதுமகோமளை தம்பதியினருக்கு பாநுகோபன் என்ற மகன்.   சூரனை  ஏன்  ஸம்ஹாரம்  செய்ய வேண்டும்?
கந்தபுராணம்  சொல்வதை அறியும்போது  சூரன்  சிவனை நோக்கி    கடுந் தவமிருந்து  பெற்ற வரத்தின் படி  1008 அண்டங்களை ஆள  சக்தி பெற்றான்.  சிவனின் வழி வந்தவர்களைத் தவிர வேறு யாரும் தன்னை அழிக்கக் கூடாது என ஒரு விசித்ர  வரமும்  கேட்டுப்  பெற்றான்.திருமுருகாற்றுப்படை  இதை அழகாக சொல்கிறது.  சிவனிடம்  சூரன் இந்த வரம் பெற்ற  நேரம் அவர்  தக்ஷிணாமூர்த்தியாக ஆழ்ந்த தவத்தில் இருந்தார்.  சிவன் தவத்தை கலைப்பவர்களுக்கு மரணம் நிச்சயம். மன்மதன்   இப்படித்தான்   பரமேஸ்வரனின் தவத்தைக் கலைக்க நெற்றிக்கண் திறந்து சிவன் அவனை எரித்து விட்டார்.   சூரன் விஷயத்தில்  அது நடக்காது.  சிவனால் அவன் சந்ததியால் சூரனுக்கு மரணமில்லை  என்று அவரே  வரமளித்து விட்டாரே.  ஆகவே  சூரன்  சிவன்  தவத்தைக் கலைத்தபோது  பரமேஸ்வரனின்  நெற்றிக்கண் திறந்து  ஆறு  தீப்பொறிகள்  பறந்து  சரவணப்பொய்கையில் ஆறு முகங்களோடு  அவை  ஷண்முகனாக  மாறி   சூரன்  ஸம்ஹாரம்  செய்யப்பட்டான்.
முருகன் சூரபத்மனை அழித்ததை கந்த சஷ்டி விழாவாக  விரதமிருந்து  சூரா ஸம்ஹாரம்  நடைபெறுகிறது.  சூரபத்மன் அழிவற்றவன்.  அவன்  அகந்தை ஒழிந்து மயிலாகவும்,   சேவலாகவும்  உருவானான். மயில்  சுப்பிரமணியன் வாகனம். சேவல் அவன் கொடி. முருகனை வணங்கும்போது சூரனையும்  மயிலாகவும்  கொடியாகவும் வணங்கும்படி அவன் தவம் செய்தவன். திருச்செந்தூரில் சூரபத்மனை ஆறுமுகன் அழித்தார்  என்பதால் அங்கே கந்த ஷஷ்டி   சூரஸம்ஹாரம்  வெகு வைபவமாக  கொண்டாடப்படுகிறது.
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் திருச்செந்தூர் 2ம்  படை வீடு.  குரு  பரிஹாரஸ்தலம். வருஷாவருஷம் ஆவணி,  மாசி,  தை, வைகாசி  என்று  பல  மாதங்களில்  பல விழாக்கள் நடைபெறுகிறது.  ஐப்பசி அமாவாசைக்கு அடுத்து வரும் பிரதமை யில் தொடங்கி   கந்த ஷஷ்டி  6 நாட்கள் விழா அற்புதமாக  நடைபெறும்.

மாலையில் சூரபத்மன், திருச்செந்தூர் சிவன் கோயிலில் இருந்து மேளதாளத்துடன் கிளம்பி ரத  வீதிகளைச் சுற்றி வந்து, முருகப் பெருமானுடன் போர் புரிய கடற்கரைக்கு வருவார்.  சஷ்டி மண்டபத்தில் இருந்து ஏராளமான  முருக பக்தர்கள் திருப்புகழ் , திருமுருகாற்றுப்படை  எல்லாம்  பாடுவார்கள், பஞ்சவாத்தியங்கள் முழங்க, வேல் வகுப்பு, வீரவாள் வகுப்புப் பாடல்கள் பாட, மேளதாளத்துடன் கடற்கரைக்கு  ஊர்வலம்  புறப்படும்.  ஆறு  முருக பக்தர்கள் கையில் வேல் ஏந்தியபடி முருகப்பெருமானைப் பின் தொடர்ந்து செல்வார்கள்.  கடற்கரை  அடைந்ததும்  சூரசம்ஹார நிகழ்ச்சி தொடங்கும்.  சூரன் ஷண்முகன் யுத்தம்  ஆரம்பிக்கும். முதலில் சூரபத்மனின் மூத்த தம்பி  கஜமுகன் முருகப்பெருமானுடன் போர் புரிவான் . இடமிருந்து வலமாக மூன்று முறையும், வலமிருந்து இடமாக மூன்று முறை சுற்றி வந்தவுடன் முருகப் பெருமானிடமிருந்து வேல் எடுத்து கஜமுகாசுர சம்ஹாரம் நடைபெறும் .
முருகப்பெருமான் தன் பாசறைக்குத் திரும்புவார் . அடுத்து  சூரபத்மனின் இளைய தம்பி சிங்கமுகாசுரனுடன்  ஆறுமுகனைக் கொள்ள  போரிட்டு மடிவான்.  கடைசியாக  சூரபத்மன்  போரிட  தானே  வருவான். மாயையின் உதவியால் பல  உருமாற்றம் செய்து கொண்டு மறைவான். தன் மாயா சக்தியின் காரணமாக ஒரு  வேங்கை மரமாகி நிற்பான்.  அவனுடைய மாய  லீலையைத் தெரிந்து கொண்ட முருகப்பெருமான், தான்  தாய்  அம்பிகையிடம் பெற்ற சக்தி வேலை ஏவி, மரமாகி நின்ற சூரபத்மனை சம்ஹாரம் செய்வார்.   சூரனை  சேவல் கொடியாகவும் மயில் வாகனமாகவும் ஆட்கொண்டு  எல்லா  ஆலயங்களிலும் ஷண்முககனை தரிசித்து வணங்குகிறோம். சூர சம்ஹாரம் முடிந்ததும் பக்தர்கள்  திருச்செந்தூர் கடலில் புனித நீராடி முருகப்பெருமானை தரிசனம் செய்வார்கள். .

ஆனை  முகச் சூரனை ஒழிப்பது ஆணவத்தை ஒழிப்பதாகும். சிங்க முகச் சூரனை ஒழிப்பது கன்மத்தை ஒழிப்பதாகும். சூரபத்மனை ஒழிப்பது `நான்’, ‘எனது’ என்ற அகங்காரத்தை ஒழிப்பதாகும்  என்பது ஐதீகம். திருச்செந்தூரில்  சூரனை  ஸம்ஹாரம்  செய்யும்  ஷண்முகனுக்கு  ஜெயந்திநாதர்  என்று ஒரு பெயர்.   கடற்கரையில் வைகுண்டபதி கோயில் அருகில் உள்ள சந்தோஷ மண்டபத்தில்  ஜெயந்திநாதருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். அலங்கார தீபாரதனைக்குப் பின்னர், சுவாமி, உள்பிராகார மண்டபத்தைச் சுற்றி உலா வருவார்.  108 மகாதேவர்கள் சந்நிதி முன்பு சுவாமி ஜெயந்திநாதரின் திருவுருவம் தெரியும் கண்ணாடி பிம்பத்துக்கு `சாயாபிஷேகம்’ நடைபெறுவது வழக்கம்.
தெய்வானை அம்பிகை தபசுக் காட்சிக்கு எழுந்தருளலும், தோள்மாலை மாற்றுதல் நிகழ்ச்சியும் தொடர்ந்த பின்  ஷண்முகன் தேவசேனா-  தேவசேனாபதி  திருக்கல்யாணம்  நிகழ்த்துவார்கள். சஷ்டி விரதம் இருக்கும் பக்தர்களின் கந்த சஷ்டி கவசம், சண்முகார்ச்சனை, பஜனைப் பாடல்களின் குரல் திருச்செந்தூர்  பூரா  எதிரொலிக்கும் . எங்கும்  பக்திப் பரவசத்தை   அங்கே  அன்று காணலாம்.
சூரசம்ஹார நிகழ்ச்சியைக் காண தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர், மதுரை  என்று  பல  இடங்களிலிருந்து பல நூறு  கி.மீ. தூரம் நடந்து பக்தர்கள் ஆணும் பெண்ணும் குழந்தையுமாக நடந்து வருவதை  திருச்செந்தூரில் குவிகிறார்கள்.  காவி, மஞ்சள் என்று பல வண்ண  உடைகளில்  வரும்  அவர்களை மனதார  போற்றி பல வருஷங்கள் வணங்கி இருக்கிறேன். 

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *