KANDHA PURANAM 2 J K SIVAN

கந்த புராண சுருக்கம்   2-  நங்கநல்லூர்  J K  SIVAN
தேவர்கள்  வேண்டுகோளுக்கிணங்க,  சூரனையும் அவன் சகோதரர்ககளையும்  அவர்கள் செய்யும் கொடுமையும்  நீங்க பரமேஸ்வரனின் நெற்றிக்கண்ணிலிருந்து  தீப்பொறிகள்  பாய்ந்து  சரவணைப் பொய்கையில்  ஆறு  பொறிகளாக  சிதறின. ”தேவர்களே, ஆறு ரிஷி பத்னிகள்  சரவணப் பொய்கைக்கு  சென்று  கார்த்திகைப் பெண்களாக அந்த ஆறு  தீப்பிழம்பு, பொறிகளை ஆறு முகங்களாக கொண்ட  என் மகனாக  வளர்ப்பார்கள். அவன் மூலம் சூரனது வம்சம் முடிவு பெறும்”  என்று  அருளினார் பரமேஸ்வரன்.
சிவனருளால் அந்த  கார்திகைப் பெண்கள் ஒன்பது காளிகளை ஈன்றனர். அவர்களே நவகாளிகள். ரக்தவல்லி என்பவ ளுக்கு  வீரபாகு என்ற வீரன் பிறந்தான்.
”வீரபாகு, நீயும்  உன்னோடு பிறந்த மற்ற வீரர்களும் இனி சரவணன், ஆறுமுகனுக்கு  உதவியாளர்களாக  பணி புரிந்து தக்க சமயத்தில் சூரனையும் அவனைச் சேர்ந்தவர்களையும் அழிப்பீர்களாக’  என்று சிவன் ஆசிர்வதித்தார்.

பார்வதி தேவி  ”கார்த்திகைப் பெண்களே,உங்களால் வளர்ந்த என் மகன்  இந்த ஆறுமுகம் கொண்டவன் இனி  கார்த்தி கேயன் என்ற பெயரோடு ஒருவனாக  என்னிடம் வளர்வான். உங்கள் திருநக்ஷமான கார்த்திகையில் இந்த ஸ்கந்தனை வணங்குவோர்  கல்வி வீரம் முதலான சகல ஐஸ்வர்யங்களையும் பெறுவார்கள்” என்று அருளினாள் .பால முருகன் ஆறு முகம், பன்னிரு கரம் கொண்ட  எண்ணற்ற பலம் கொண்டவன், சர்வ சக்திகொண்டவன். அவனது பால்ய லீலைகள் கணக்கிலடங்காது. மேரு மலையையே கிள்ளி எறிந்தவன்.
சிவன் அருளிய கால அளவு நெருங்கியது.  ஆறுமுகன் எனும்  ஷண்முகன்,   வீரபாகு முதலிய தேவ சேனையோடுபுறப்பட்டான்.  சிக்கல் சிங்காரவேலனுக்கு  அம்பாள் வேலாயுதம் அளித்தாள் . சக்தியின் ஆசியோடு வேலாயுதன்  தேவ சேனாபதியாக  சூரனை அழிக்கப்  புறப்பட்டான்.   வழியில் கிரவுஞ்சமலையை  பிளந்து  அதன் அதிபதி தாரகாசுரனை வதம் செய்தார்.  திருச்செந்தூரில் ஷண்முகன்  பாசறை அமைத்தான்.  ஆறு நாட்கள் யுத்தம் நடந்தது. சூர பத்மன் மகன் பானுகோபன்  ஷண்முகனை  பெரும்படையுடன் எதிர்த்தான்.  மூன்று நாள் போரில் பானுகோபன் கொல்லப்பட்டான். அடுத்து சிங்கமுகா சூரன் எதிர்த்தான். வேலாயுதம் அவனை பிளந்து கொன்றது.  அவனைத் தொடர்ந்து  சூரபத்மனின் தலைமை அமைச்சர் தருமகோபன், சூரபத்மன் மக்கள் மூவாயிரம் பேரும்  அடுத்ததாக  கொல்லப்பட்டனர். முடிவில் எஞ்சி நின்றது சூரபத்மன் மட்டுமே.
சூரன் மாயை  அம்சமாதலால்  மறைந்து நின்று  மாயப் போர் புரிந்தான். முருகனது வேலில் இருந்து தப்பிக்க மிருகங்கள், பறவைகள், மரங்கள் என மாறி மாறி உருவெடுத்தான். முருகனின் சக்தி வேல் திருச்செந்தூர் அருகே உள்ள மரப்பாடு என்ற மாந்தோப்பில் மாமரமாக மறைந்திருந்த சூரப த்மனை இருகூறாக பிளந்து சம்ஹாரம் செய் தது. சூரபதுமன் ஆணவம், அகங்காரம் ஒழிந்தது.   அந்த இரண்டும் சேவலாகவும், மயிலாகவும் மாறி முருகப்பெருமான் கொடியாகவும் வாகனமாகவும் மாறியது.
சூரனை சம்ஹாரம் செய்த முருகனது வேல் கங்கைக்கு சென்று நீரில் மூழ்கி தோஷம் நீங்கி மீண்டும் முருகனது கைகளில் வந்தது.
அதை கடற்கரை ஓரத்தில் பூமியில் குத்த, உள்ளே இருந்து நீர் பீறிட்டு வெளிவந்தது. அந்த நீர்தான் திருசெந்தூர்  ஆலயத்தில் உள்ள  நாழிக்கிணறு நீர் . அந்த நீரையும், மணலையும் சேர்த்து சிவலிங்கம் செய்து முருகன் பூஜை செய்தார். விண்ணும் மண்ணும் குளிர்ந்தது. தேவர்கள், முனிவர்கள் மலர் மாரி பொழிந்தனர்.
தேவாதி தேவர்கள் புடைசூழ திருப்பரங்குன்றம் என்ற தலத்துக்கு முருக பெருமான் வந்தார். குன்றத்தில் தவம் செய்து வந்த ஆறு முனிவர்களுக்கு திருவருள் புரிந்தார்.  ஆறு முனிவர்களும் முருக பெருமானை தேவ தச்சனால் நிர்மாணிக்கப்பட்ட பொன் வண்ண கோவிலினுள் எழுந்தருளச்  செய்தனர்.  தேவேந்திரன் தன் மகளாகிய தெய்வானையை  கந்தனுக்கு மணமுடித்தான் . அவள் தேவசேனா, அவன்  தேவ சேனாபதி.
கந்த ஷஷ்டி என்பது முருகக் கடவுள் சூரனை அழித்த பெருமையை சைவ சமயத்தவர்கள் கொண்டாடும் ஒரு விழா.ஷஷ்டி என்றால் ஆறு.. ஐப்பசி மாதம் சுக்கிலபட்ச பிரதமை முதல் சஷ்டி ஈறாக உள்ள ஆறு நாட்களும்கந்த ஷஷ்டி காலமாகும். இந்த ஆறு நாட்களிலும்  சைவர்கள் விரதம் அனுஷ்டிப்பார்கள்.
கந்தபுராணத்தில் வரும் சூரபத்மன், சிங்கமுகன், தாரகாசுரன் ஆகியோர் முறையே சைவ சித்தாந்தத்தில் பேசப்படும் ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களைக் குறிக்கிறது.  ஆணவமலத்தின் பலத்தைக் குறைத்து அதனைத் தன் காலடியில் இறைவன் வைத்திருப்பதை உணர்த்துவதே சூர ஸம்ஹாரம் .
ஷன்முகனுக்கு பிரியமான ராகம்  ஷண்முகப்ரியா.  இதில் சதா நின் பாதமே… என்ற  மஹாராஜபுரம் சந்தானம்  இயற்றிய சொந்த சாஹித்யம்  அற்புதமாக இருக்கிறது கேட்பதற்கு.செவிக்கு  கந்தன் தரும் விருந்து. இதை  நானுமே  பாடி அடைந்த மகிழ்ச்சியை  உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.  யூட்யூப்  லிங்க்  கிளிக் பண்ணுங்கோ  https://youtu.be/kzVMaQ9BjjY?si=KH6u29erphUuOvQE

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *