PESUM DEIVAM – J K SIVAN

பேசும் தெய்வம். — நங்கநல்லூர் J K SIVAN –
” கோவிலை நீயே கட்டு ”

எல்லோருக்கும் பிடித்த, எல்லோராலும் பாராட்டப்பட்ட ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் முக்கூர்  ஸ்வாமிகள். தமிழக கடற்கரையில் எல்லியட்ஸ் பீச், குடிகொண்டுள்ள ஒரே மஹா லக்ஷ்மி ஆலயம் சென்னை பெசன்ட் நகரில் உள்ள அஷ்டலக்ஷ்மி ஆலயம். இந்த அபூர்வ ஆலயம் நமக்கு கிடைக்க முக்கிய காரணம் மஹா பெரியவா.    ஓங்கார க்ஷேத்ரம் என்று பெயர்  இந்த ஆலயத்துக்கு  உண்டு. இது போல அஷ்டாங்க விமான கோவில் திருக்கோஷ்டியூரில் உள்ளது. மற்றபடி மதுரை கூடலழகர் கோவில், காஞ்சியில் திருத்தாங்கல் வைகுண்டநாதர் ஆலயம், உத்திரமேரூர் நின்றான், இருந்தான் கிடந்தான் ஆலயம் எல்லாம்  பெருமாளின் அழகான  அஷ்டாங்க  விமான திருக்கோயில்கள்.
அஷ்டலக்ஷ்மி ஆலயம் மூன்றடுக்கு மாடி நவீன கோவில்.   இங்கும் மஹா விஷ்ணு ‘நின்றான், இருந்தான் கிடந்தானா’ க அருள் பாலிக்கிறார். மூலவர் சந்நிதியில் மஹாவிஷ்ணு, மஹா லக்ஷ்மி இருவரும் நின்ற திருக்கோலத்தில் அருள் பாலிக்கிறார்கள். ஆலயம் 65 அடி நீளம், 45 அடி அகலம் . உத்திரமேரூர் சுந்தரராஜ பெருமாள் ஆலய அமைப்பு. மூன்றடுக்குகளில் விஜயலக்ஷ்மி, வித்யாலக்ஷ்மி, கஜலக்ஷ்மி, தனலக்ஷ்மி, ஆதிலக்ஷ்மி , தான்ய லக்ஷ்மி, தைர்ய லக்ஷ்மி, மற்றும் விஷ்ணுவின் தசாவதாரம், குருவாயூரப்பன், கணேசர், தன்வந்தரி, ஆஞ்சநேயர் சகலரையும் தரிசிக்கலாம்.
பெசன்ட் நகர் கடற்கரை மீனவர் சூழ்நிலையில் இந்த மஹா லக்ஷ்மியின் தர்பார், மற்ற ஏழு லக்ஷ்மிகள் மந்திரிகளாக உடனிருக்க அரசாட்சி செய்கிறாள், பார்த்ததுண்டா? இல்லையென்றால் உடனே பெசன்ட் நகர்  ஓடவும்.
முக்கூர் ஸ்ரீனிவாச வரதாச்சார்யார் என்கிற பெயர் ஆஸ்திக உலகத்தில்  ஒருகாலத்தில் பிரபலமானது. அற்புதமான உபன்யாசகர். மணிக்கணக்காக பக்தர்களை அவரது பிரசங்கம் ஒரே இடத்தில் அசையாமல் கட்டிப்போடும் சக்தி கொண்டது. பக்தி ரசம் மிக்கது. மஹா பெரியவா என்றால் அபரிமிதமான பக்தி அவருக்கு. அடிக்கடி காஞ்சிபுரத்தில் மடத்தில் அவரைப் பார்க்கலாம். முக்கூரைப் பார்த்துவிட்டால் மகா பெரியவா முகத்தில் ஒரு தனி பிரசன்னம் ஒளிவிடும். ஸ்ரீ வைஷ்ணவர் சைவர் என்கிற பேதம் இருவருக்குமே கிடையாது.
அவருக்கு பம்பாய் மஹா லக்ஷ்மி கோவிலை தரிசித்தத்திலிருந்து சின்னதாக நமது ஊரிலும் ஒரு மஹாலக்ஷ்மி ஆலயம் வேண்டும். இருந்தால்  தமிழகத்திலும் சுபிக்ஷம் தாண்டவமாடும் என்று தோன்றியது. அவர் மஹா பெரியவா பக்தர்.  காஞ்சிபுரத்துக்கு  மஹா பெரியவாளை தரிசிக்க அடிக்கடி செல்வார். அப்படி ஒருநாள் சென்றபோது ஏதோ பேச்சு நடுவிலே ஒருநாள் தனது மனதில் இருந்த விருப்பத்தை தெரிவித்தார்.
”பெரியவா என் மனசிலே  ரொம்பநாளா  ஒரு எண்ணம்….”சொல்லுப்பா ””பெரியவா   ஏற்பாடுலே, மெட்ராஸ்லேயும் பம்பாய் மாதிரி ஒரு சின்ன மஹாலக்ஷ்மி கோவில் நிர்மானிச்சா, வந்தா ரொம்ப நன்னா இருக்கும்னு மனசுலே  தோண்றது’
”’அப்போ நீயே கட்டிடலாமே அதை ”
”பெரியவா என்ன சொல்றேள்…நானா , என் ஸ்திதிக்கு என் குடும்பத்துக்குன்னு   ஒரு வீடு கட்டவே வழியில்லை, நான் எப்படி கோவில் கட்டமுடியும். பெரியவா ஏதோ தமாஷுக்காக சொல்றா போலிருக்கு. நினைச்சு பாக்கக்கூட  முடியலே. ஏதோ  என் மனசிலே இருக்கிற ஒரு அபிலாஷையை நான் சொன்னேன். ”
‘அதெல்லாம் இல்லே, நீ தான் இங்கேயும் ஒரு மஹாலக்ஷ்மி கோயில்  கட்டப்போறே, உன்னாலே முடியும்னு எனக்கு  பட்டுடுத்து.  அது விஷயமா  எல்லா ஏற்பாடும் நீ தான் பண்ணப்போறே. மேற்கொண்டு பண்ணவேண்டியதை உடனே ஆரம்பிச்சு   உடனே ஏற்பாடு பண்ணு…. போ. ”
முக்கூர் மஹாலக்ஷ்மி ஆலயம் சமுத்திர கரையில் இருக்கவேண்டும் என்று நினைத்தார். ” பாற்கடலில் உதித்தவள் , சமுத்திர ராஜ தனயே” இல்லையா அவள்.? ஆல் இந்தியா ரேடியோ அருகே இடம் தேடினார். கிடைக்கவில்லை. யாரோ ஒருவர் பெசன்ட் நகர் கடற்கரை அருகே எட்டு ஏக்கர் நிலம் தருகிறேன் என்றார். கோவில் கட்ட என்பதால் ஒரு ஏக்கருக்கு  ஐந்தாயிரம் ரூபாய் கொடுத்தால் போதும். மொத்தம் நாற்பதாயிரம் தேவை ?? எங்கே போவது. பெரியவாளிடம் சொன்னார். பெரியவாளை பார்க்க வந்த  ஸ்டேட் பேங்க் ஆப் ஹைதராபாத் மானேஜர் ஒருவர் நான் பணம் ஏற்பாடு பண்ணுகிறேன் கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்துவிடுங்கள் என்கிறார்.
எந்த கண்டிஷனும் இல்லாமல் சுலபமாக நிலம் கிடைத்து விட்டது. கோவில் எப்படி இருக்கவேண்டும் என்று பெரியவாளிடம் அறிவுரை கேட்டார். ”மஹாலக்ஷ்மியை சுற்றி அஷ்டலக்ஷ்மி களும் மேலே  வரிசையாக எல்லா பக்கத்திலும்  இருக்கும்படியாக காட்டினா,   தரிசனம் பண்ணும்போது   கீழே  மஹாலக்ஷ்மி  இருக்கிற  இடத்துக்கு மேலே  கால் படாது.”” ஸ்தபதியிடம் சொல்லிட்டேன். பெரியவா”விக்ரஹங்களும் மகாபலிபுரத்தில் தயாராகி விட்டது. ஒவ்வொரு லக்ஷ்மியும் எப்படி இருக்கவேண்டும், மஹா லக்ஷ்மி உருவம் எல்லாம் பெரியவா பார்த்து அப்ரூவ் பண்ணி விட்டார் கல்கி சதாசிவத்தை கூப்பிட்டார். ஸ்தபதியிடம் சொல்லி ஒரு மஹாலக்ஷ்மி படம் வரைய சொல்லி அதை பெரியவா கல்கி நிறுவனம் முதலாளி சதாசிவத்திடம் கொடுத்தார்.

”இந்த படத்தை கல்கி புஸ்தகத்திலே லே போடுங்கோ’பெரியவா லக்ஷ்மி  படத்தை  சதாசிவத்திடம் கொடுத்தார்.  ”கலர்லே  மஹா லக்ஷ்மி படம் நிறைய பிரிண்ட் பண்ணுங்கோ. லக்ஷ்மி படத்தின் கீழே ” வீட்டுக்கு அஷ்டலக்ஷ்மி மெட்ராசுக்கு மஹா லக்ஷ்மி”. காஞ்சி மஹா பெரியவா அனுகிரஹத்துடன்’ என்று கீழே ஒரு வாசகத்தை சதாசிவம் சேர்த்து விட்டார். . படம் ஒன்று பதினோரு ரூபாய்க்கு விற்பனை யாகியது.
முக்கூர் ஸ்ரீநிவாஸாச்சாரியாரின் நண்பர் கோயம்பத்தூர் லக்ஷ்மி  மில் சொந்தக்காரர் ஸ்ரீ G K தேவராஜுலு நாயுடு. கடவுள் நம்பிக்கை அவ்வளவாக இல்லாதவர். அவர் ஒரு லக்ஷ்மி படம் கேட்டார். ரெண்டு படம் கொடுத்தார் முக்கூர்.
”நான் இந்த படத்தை கேட்டது எதற்காக தெரியுமா?”
”தெரியாதே சொல்லுங்கோ ”
”காஞ்சி பெரியவா அனுகிரஹத்துடன்” என்கிற வார்த்தைக்காக ”
கோவில் கட்டும் முழு செலவையும் தேவராஜுலு நாயுடு ஏற்றுக்கொண்டார். காற்றில் பறந்தார் முக்கூர். உடனே பெரியவாளிடம் விஷயம் சொல்லிவிட்டார். அடுத்து யார் யாரோ யார் யாரோ பணம் தந்தார்கள். கோவில் கிடுகிடுவென்று கிளம்பிவிட்டது. தயாராகிவிட்டது. கோவில் கட்டி முடித்து ஸம்ப்ரோக்ஷணத்துக்கு முக்கூர் ஸ்ரீனிவாச வரதாச்சாரியார் பெரியவாளையே அழைத்தார். பெரியவா அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. நீ தான் கோயிலை கட்டியவன்.  வைஷ்ணவ ஆச்சார்யர் ஒருவரை  கூப்பிட்டு  அவர் கையாலே ஸம்ப்ரோக்ஷணம்  பண்ணசொல்றது தான் முறை. அஹோபிலம் ஜீயரையே கூப்பிடலாமே ”-  மஹா பெரியவா.
அஹோபிலம் ஜீயர் அழைப்பை ஏற்றுக்கொண்டார். ஆனால் மஹாலக்ஷ்மி ஆலயத்தில் மஹா விஷ்ணு இல்லாமல் தனியாக மஹா லக்ஷ்மி ஸ்தாபனம் செய்வது ஏற்புடையதல்ல என்று சொல்லிவிட்டார். சம்ரோக்ஷணம் ஏற்பாடுகள் செய்தாகி விட்டது. ஒரே ஒரு வார காலம் தான் இருக்கிறது. எங்கே போவது மஹா விஷ்ணு  விக்ரஹத்துக்கு? ”பெரியவா  இது தான் நிலைமை. என்ன பண்றதுன்னு சொல்லுங்கோ”பெரியவா மஹாபலிபுர ஸ்தபதி ஒருவரிடம் சொல்லி ஒருவாரத்தில் மஹா விஷ்ணு  கோவிலுக்கு ஜம்மென்று  வந்து சேர்ந்துவிட்டார். அவரையும் மஹாலக்ஷ்மி சந்நிதியில் ஸ்தாபித்தாகி விட்டது.
1976ம் வருஷம் ஏப்ரல் 5 அன்று கும்பாபிஷேகம். அஷ்டாங்க விமானம் கொண்ட இந்த கோவில் உருவாக பெரிதும் காரணமான மஹா பெரியவா உருவப்படம், கோவிலில் வைக்கப்பட்டது. அனுஷம் பூஜைகள் நடக்கும். பிரசாதம் ராத்ரி கோவில் மூடிவிட்டு எடுத்துக் கொண்டு காஞ்சிபுரத்துக்கு சென்று இரவு 11.30 மணிக்கு மஹா பெரியவாளுக்கு தரும் வழக்கம். அவர் காத்திருப்பார்.
மார்கழி மாதத்தில் ஆண்டாள் திருப்பாவை சொல்வதோடு மணிவாசகர் திருவெம்பாவையும் சொல்ல வேண்டும் என்று மஹா பெரியவா யோசனை சொன்னார். ”பெரியவா அனுகிரஹத்துலே  நானே  அதை சொல்றேன்” என்று சொல்ல ஆரம்பித்தார் முக்கூர். இதை எதிர்த்து சிலர் அவர் மீது கல் வீசினார்கள். அடிபட்டுக்கொண்டு பெரியவாளிடம் வந்து விஷயம் சொன்னார் முக்கூர். மேற்கொண்டு திருவெம்பாவை பிரசங்கம் செய்யப்போவதில்லை என்றார் .” இதற்கெல்லாம் நீ கவலைப்படாதே.  நீ சிறந்த பக்தன் ஸ்தானத்துக்கு உசந்துட்டே.  சிறந்த பக்தர்கள் லிஸ்ட்லே சேர்ந்துட்டே. பக்தன் என்றால் அடிபட்டு தானே ஆகணும். அப்பர், மாணிக்க வாசகர் போன்ற  பக்தர்கள் எவ்வளவு கஷ்டங்களை அணுவைச்சிருக்கா” முக்கூர் தொடர்ந்து திருவெம்பாவை உபன்யாசம் செய்து நிறைவு செய்தார்.
முக்கூர் ஸ்ரீனிவாச வரதாச்சார்யார் , நிறைய மோதிரங்கள் அணிவார். விலையுயர்ந்த புது செருப்புகள் வாங்கி அணிவார். ஒரு முறை மஹா பெரியவாளை தரிசிக்க ஒரு புது செருப்புடன் சென்றவர் வாசலில் அதை மறைவாக எங்கே வைக்கலாம் என்று இடம் தேடி வைத்துவிட்டு உள்ளே சென்றார்மஹா பெரியவாளுக்கு தெரியாத விஷயம் ஏதாவது உண்டா?” ஏன் சீக்கிரமா உள்ளே வரலே. உனக்காக காத்திருந்தேன் . நீ அப்பவே வந்துட்டதா என் கிட்ட சொன்னாளே? வாசல்லே என்ன ப்ராப்ளம் ?”
”ஒண்ணுமில்லே பெரியவா, புது செருப்பேச்சே  ன்னு   ஏதாவது  மறைவா  ஒரு இடத்திலே ஜாக்கிரதையாக தேடி வைச்சுட்டு வந்தேன்.”
”ஓஹோ அதான் லேட்டா? செருப்பை சரியான இடத்திலே வைக்கணும்  இல்லியா ?”இந்த கேள்விக்கு பிறகு முக்கூர் மோதிரங்கள், செருப்புகள் அணிவதில்லை.
அஷ்ட லக்ஷ்மி கோவில் இன்று நமக்கு கிடைத்தது முக்கூர் ஸ்ரீனிவாச வராதாச்சாரி சுவாமிகளை முடுக்கி விட்ட மஹா பெரியவா திட்டமிட்டதால். கையில் காலணா இல்லாமல் ஆரம்பிக்கப்பட்டு மஹா பெரியவா அனுகிரஹத்தால், முக்கூர் ஸ்வாமிகள் முயற்சியில் இன்று நமக்கு கிடைத்த வரப்பிரசாதம்.முக்கூர் ஸ்வாமிகளின் மகன் ஸ்ரீ முக்கூர் ஸ்ரீனிவாச ராகவன் ஒரு வீடியோவில் இந்த ஆலயம் பற்றி பேசியதை   கேட்டபிறகு தான் மேலே சொன்ன விவரங்கள் ஆச்சர்யமாக எனக்கு விளங்கியது. .

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *