PARIPOORNA PANCHAMIRTHA VARNAM. J K SIVAN

பரிபூர்ண  பஞ்சாமிர்த  வர்ணம் பாடல்.  –
  நங்கநல்லூர்  J K  SIVAN

.பாம்பன் ஸ்வாமிகள் எழுதிய இந்த   பரிபூர்ண பஞ்சாமிர்த வர்ண  பாடல்கள் நிறையபேருக்கு  தெரிந்திருக்காதோ என்று தோன்றியது .   பழனி என்ற அறுபடை வீட்டை நினைத்தாலே   முருகனுக்கு  பஞ்சாமிர்த அபிஷேகம் நினைவுக்கு வருகிறது.  முருகனைப்போற்றி  இந்த  பாடல்களை பாடி இருக்கிறார் ஸ்வாமிகள்.   பாடல்கள் பஞ்சாமிர்த வர்ணமாகவே இருக்கிறது. ஐந்தாக பிரிக்கப் பட்டுள்ளது.  இதுவரை  அதிகம்  நான் அறியாத  ஒரு அற்புத பாடல் இது. 

பஞ்சாமிர்தம்  தயாரிக்க  ஐந்து வித திரவியங்கள் தேவை அல்லவா?  அவை  பால்,  தயிர், நெய், சர்க்கரை, தேன் .   பழங்கள் சேர்ப்பார்கள், சர்க்கரைக்கு பதிலாக  வெல்லம் , ஏலக்காய் எல்லாம் கூட  உண்டு. அதெல்லாம் சுவைக்காக.  மேலே சொன்ன ஐந்து பொருளில் அடக்கம்.  பாம்பன் ஸ்வாமிகள் முருக பக்தர். நேராக முருகனோடு பேசுபவர். சென்னையில் திருவான்மி யூரில் வாழ்ந்தவர். இன்னும் அவர் அதிஷ்டானம் அங்கே இருக்கிறது.  

ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் அருளிய பரிபூரண பஞ்சாமிர்த வண்ணம்  முருகப்பெருமானுக்கு மிகவும் விருப்பமானது. முருகப்பெருமானே, இப்பாடல் பாராயணம் செய்யும் இடங்களில் வருவேன், இருப்பேன் என்று கூறியதாக வரலாறு. இப்பாடலை நாளும் பாராயணம் புரிந்தால், முருகனருள் எளிதில் கிடைப்பது உறுதி.

பாகம் 1 – பால்
சுப்பிரமணிய பெருமான் சூரபத்மனுடன் போரிடும் மகிமை. முருகனின் போர் வெற்றி குறித்து ஜெயகோஷம். பிணிபோக்க விண்ணப்பம்.
”இலங்கு நன்கலை விரிஞ்சனோடு  அனந்தனும் சத மகன்சதா   வியன்கொள் தம்பியர்களும் பொனாடு உறைந்த புங்கவர்களும் கெடாது  என்றும் கொன்றை அணிந்தோனார் தந் தண் திண் திரளும் சேயாம்
என்றன் சொந்தமினும் தீதேது என்று அங்கங்கு அணி கண்டு ஓயாது ஏந்து வன்படைவேல் வலி சேர்ந்த திண்புயமே ஏய்ந்த கண்டகர்கால் தொடை மூஞ்சி கந்தரமோடு எலும்புறும் தலைகளும் துணிந்திட அடர்ந்த சண்டைகள் தொடர்ந்துபேய்
எனும் குணுங்குகள் நிணங்கள் உண்டு அரன் மகன் புறஞ்சயம் எனும்சொலே . . . . . . களமிசையெழுமாறே

வேதமோதுபவனும்,  நான்கு சிரங்களைக் கொண்டவனும், படைப்புத் தொழிலை மேற்கொண்டவனும் ஸ்ரிஷ்டிகர்த்தாவாக விளங்கும் பிரம்மனும்,  காக்கும் கடவுள் ஸ்ரீமந்  நாராயணனும், தேவலோக தலைவன் இந்திரனும், எண்ணற்ற தேவரும், விண்ணுலக தேவாதிதேவன்   கொன்றை அணிந்த  பரமேஸ்வரன் புத்ரன் சுப்ரமணியன் எனும் கந்தன் தேவசேனாபதி ஆகியோர் என் உறவினர் எனும்போது எனக்கு என்ன கெடுதல் வரும்?. எதிரே  சமுத்ரமாக திரண்டு நிற்கும்  படையோடு  முருகன்  சூரனை எதிர்கொண்டு யுத்தம் புரிய தயாராகிவிட்டான்.   அரக்கர்களின் கால், தொடை, முகம் மற்றும் கழுத்துடன்
எலும்பாலான கபாலங்களும் அடிபட்டுவிழ, மகா கோரமான  யுத்தம் புரிந்து  பேய்களும் பைசாசங்களும் அரக்கரின் கொழுப்பை உண்டு சிவ மைந்தன்  சுப்ரமணியன்  பக்கமே வெற்றி என்ற கோஷங்கள் போர்க்களத்தில் எழுகிறது.

”விளங்க வந்தவொர் சிகண்டியே, துணிந்திருந்து உயர்கரங்கண் மாவரங்கள் மிஞ்சிய விரும்புகூர்  துன்றும் தண்டமொடு அம்பு ஈர்வாள்
கொண்டு அண்டங்களில் நின்றூடே சுண்டும் புங்கம் அழிந்து ஏலாதுஅஞ்சும் பண்டசுரன் சூதே சூழ்ந்தெழும்பொழுதே கரம் வாங்கி ஒண் திணிவேல்தூண்டி நின்றவனே கிளையோங்க நின்றுளமா துவந்துவம் பட வகிர்ந்து வென்று அதி
பலம்பொருந்திய நிரஞ்சனா சுகம்கொளும் தவர் வணங்கும் இங்கிதம்உகந்த சுந்தர அலங்க்ருதா  . . . . . . அரிபிரமருமேயோ”

முருகனின் வாகனமான அழகு மயில் தனது தோகை விரித்து அசைய, வீரத்துடன் அங்கேயே நின்று தூக்கிய கரங்களோடு அரிய வரங்களும் மிக்க கூர்மையான இரும்பாலான  தண்டாயுதம், அம்பு   ரம்பம் முதலிய ஆயுதங்களோடு அண்ட சராசரங்களின் நடுவே  நின்று  சூரனுடைய படையோடு போர் செய்து   சூரனுடைய  படைக்கலங்கள் எல்லாம்  குறைந்து அழிவது கண்டு, ஒன்றும் செய்ய இயலாது  நடுங்கிப் போய் சூரனானவன் சூழ்ச்சி செய்ய  முயற்சிக்கிறான். நன்மையும் திண்மையும்  நாளும் நல்கும்   கதிர் வேலைக் கையில் கொண்டு  ஏவிய குமாரன் முருகன், எதிரே  உயர்ந்த கிளைகளைக் கொண்ட மாமரமாக  மாறி நின்ற சூரனை  இரு  கூறாகப் பிளந்து, வெற்றி கொண்ட  பராக்ரமம் கொண்ட களங்கம் இல்லாத குகனே,  ஆனந்தத்தை அடைய விரும்பும் முனிவர் வணங்கும்  இனிமை பொருந்திய அழகிய அலங்காரம் செய்து கொண்டுள்ள கந்தனே  ஹரியும் அரனும்  போற்றும் பாலகா. நமஸ்காரம்.

”அலைந்து சந்ததம் அறிந்திடாது  எழுந்த செந்தழல் உடம்பினார் அடங்கி அங்கமும் இறைஞ்சியே புகழ்ந்து அன்றுமெய் மொழிந்தவா அங்கிங் கென்பது அறுந்தேவா எங்கும் துன்றி நிறைந்தோனே
அண்டும் தொண்டர் வருந்தாமே இன்பம் தந்தருளும் தாளா ஆம்பி தந்திடுமா  மணி பூண்ட அந்தளையா
 ஆண்டவன் குமரா எனை ஆண்ட செஞ்சரணாஅலர்ந்த இந்துள அலங்கலும் கடி செறிந்த சந்தன சுகந்தமே
அணிந்து குன்றவர் நலம் பொருந்திட வளர்ந்த பந்தனண எனும் பெணாள் . . . . . . தனை அணை மணவாளா”

பன்றியாகவும் அன்னமாகவும்  ஹரியும் பிரமனும் பல காலம் திரிந்து தேடிய பின்பும்  ஒளிப்பிழம்பாக  நின்ற  ஹரனின் அடி முடி காண  முடியாமல்  நின்ற சினின்  குமாரா,  அப்படிப்பட்ட  பரமேஸ்வரனே கை  கட்டி பணிவுடன் உன்னைப் போற்றிய பொழுது மெய்ப் பொருளை அவருக்கு உபதேசித்தவனே, தந்தைக்கு  ப்ரணவ  மந்திரம் உபதேசித்த தனயா,அதோ
அங்கு தான் இருக்கிராய் என்று  கூற முடியாத அங்குமிங்கும் எங்கும் காணப்படுபவனே, குமரா, எங்கெங்கும்  நீக்கமற  நிறைந்தோனே,   உன்னை நாடி வந்த பக்தர் துன்பம் கொள்ளாதவாறு ஆனந்தம் தரும் திரு வடிகளை உடையவனே,  ஒலி செய்திடும் முத்துப் பரல்களை உடைய காற்சிலம்பை அணிந்தவனே,  ஈசனின் மைந்தனே, எமை   ஆட் கொள்ளும் செம்மையான பாதங்களை உடையவனே,  மலர்ந்த கடம்ப மாலையும்   மணம் மிகுந்த சந்தனத்தின் வாசமும்   அணிந்து வேடுவர் குலம் நன்மை அடைவதற்காக  அவர்களது  மகள் என  வளர்க்கப்பட்ட  குறத்தி வள்ளி மணாளா,

”குலுங்கிரண்டு முகையும்களார்  இருண்ட கொந்தள ஒழுங்கும்வேல் குரங்கும் அம்பகம் அதும் செவாய்  அதும் சமைந்துள மடந்தைமார்
கொஞ்சும் புன்தொழிலும் கால் ஓரும் சண்டன் செயலும் சூடே கொண்டு அங்கம் படரும் சீழ்நோய் அண்டம் தந்தம் விழும்பாழ் நோய் கூன்செயும் பிணி
கால் கரம் வீங்கழுங்கலும் வாய் கூம்பணங்கு கணோய் துயர் சார்ந்த புன்கணுமே குயின்கொளும் கடல் வளைந்த இங்கெனை அடைந்திடும்படி இனும்செயேல்
குவிந்து நெஞ்சமுளணைந்து நின்பதம் நினைந்து உய்யும்படி மனம்செயே . . . . . . திருவருள் முருகோனே”

அழகிய  இரண்டு  உருண்டு திரண்ட மார்பகங்களை கொண்டவள்,  மலரணிந்ததால் வண்டு மொய்க்கின்ற கருங்கூந்தலும் வேலைக் காட்டிலும் கூரிய விழிகளும்,  சிவந்த அதரங்களை உடைய பெண்களைப் புகழ்வதையே தொழிலாகக் கொண்டு அதன் விளைவால் இறுதி காலத்தை தெரிந்து கொண்டு வரும் யமனின் வருகையும் ,   வெப்பத்தால்,  உடலில் வரும் நோய்கள் அண்டவாதம் மற்றும் பல  விதமான வியாதிகள்,  கை  கால் வீக்க  நோய்களும்  வாய்  பேசமுடியாமல்  பாரிசவாயு நோயும், கண் நோய்களும்  வாட்டும்படியாக இந்த பூவுலகில் என்னை பிறந்து அவதிப்பட வைக்காதே. என் மனம் வாக்கு காயம் மூன்றுமே  உன்னை நோக்கி ஒருமுகப் படுத்தி உன்னைச் சரணடைந்து  உன் திருப்பதம்   நினைந்து உயும்படி செய்வாய் முருகா” என  வேண்டுகிறார் பாம்பன் ஸ்வாமிகள்.

பாகம் 2 – தயிர்
முப்பெரும் தேவிகளான மலைமகள், அலைமகள், கலைமகள், மற்றும் தெய்வயானையின் சிறப்பியல்புகள்.

மேலும் வள்ளியை நாடிச் சென்று அவளுக்குத் தன்னைத் தந்து கடிமணம் புரிந்து கொண்டது.

கடித்துணர் ஒன்றிய முகிற்குழலும் குளிர் கலைப்பிறை என்றிடு நுதல் திலகம் திகழ் காசு உமையாள்
இளம் மாமகனே களங்க இந்துவை முனிந்து நன்கு அது
கடந்து விஞ்சிய முகம் சிறந்தொளி கால் அயிலார் விழிமா மருகா . . . . . . விரைசெறிஅணிமார்பா  ”

நறுமணம் நிறைந்த  மலர்  கொத்து அணிந்த  கருமேகம்  போன்ற கூந்தலையும், குளிர்ச்சியான ஒளியை வழங்கும் பிறைச் சந்திரனை ஒத்த நெற்றியும் அதில் திலகமும், பேரொளி வீசும் பார்வதியின் பெருமை மிகுந்த மகனே, மாசு படிந்த சந்திரனைக் கடிந்து  அதனை மிஞ்சும்படியான அழகிய முகமும் வேல் போன்ற கூர்மையான கண்களை உடைய திருமகளின் மருகனே  அழகிய மணம் மிகுந்த மாலைகளை அணிந்த மார்பு உடையவனே, முருக வேளே.

”கனத்துயர் குன்றையும் இணைத்துள கும்ப கலசத்தையும் விஞ்சிய தனத்திசை மங்கைகொள்
காதலன் நான்முக னாடமுதே   கமழ்ந்த குங்கும நரந்தமும் திமிர் கரும்பெனும் சொலை இயம்பு குஞ்சரி
காவலனே குகனே பரனே . . . . . . அமரர்கள் தொழுபாதா
உடுக்கிடையின் பணி  அடுக்குடையுங்கன உரைப்பு உயர் மஞ்சுறு பதக்கமொடு அம்பத ஓவிய நூபுர
மோதிரமே  உயர்ந்த தண்தொடைகளும் கரங்களில் உறும் பசுந்தொடிகளும் குயங்களில்
ஊர் எழில்வாரொடு நாசியிலே . . . . . . மினும்அணி நகையோடே”

பெருத்து ஓங்கிய மலைகளுக்கும், இரண்டாக உள்ள  கும்பகலசங்களையும் மிஞ்சிய  மார்பகங்களை உடைய இசையில் வல்லவளான கலைமகளின்  நாயகனாம் பிரமன் தேடும் அமுதம் போன்றவனே   மணம் பரப்பும் குங்குமமும் கஸ்தூரியும் பூசி கரும்பின் சுவை போன்ற இனிய வார்த்தைகள் கூறும் தேவயானையின் கணவனே, குகனே கடவுளே  தேவர்கள் பணியும் திருவடிகளை உடையவனே,
  உடுக்கை போன்ற இடையில் ஒட்டியாணம், மடிப்பு உடைய ஆடையும்    மாற்று  குறையாத பொன்னிலான அழகிய பதக்கமும்   திருவடிகளில் சித்திர வேலைப்பாடுடைய சிலம்பும் மற்றும் விரலில் மோதிரமும்  அடர்த்தியாக தொடுக்கப்பட்ட குளிர்ச்சி நிறைந்த மாலைகளும்  கரங்களில் பசுமையான வளையல்களும்  குசங்களில் அழகிய கச்சையும்  மூக்கில் மினுக்கும் புல்லாக்கும்..

”உலப்பறு இலம்பகமினுக்கிய செந்திரு  உருப்பணி யும்பல தரித்து அடர் பைந்தினை ஓவலிலா
அரணே செயுமாறு  ஒழுங்குறும் புனமிருந்து மஞ்சுலம்உறைந்த கிஞ்சுக நறும் சொல் என்றிட ஓலமதே இடுகானவர் மா . . . . . . மகளெனு ம் ஒருமானாம் மடக்கொடிமுன் தலை விருப்புடன் வந்து அதி வனத்துறை குன்றவர் உறுப்பொடு நின்றளமானினியே கனியே இனிநீ  வருந்தும் என்றனை அணைந்து சந்ததம்
மனம் குளிர்ந்திட இணங்கி வந்தருளாய் மயிலே குயிலே எழிலே . . . . . . மட வனநினதேர் ஆர் மடிக்கொரு
வந்தனம் அடிக்கொரு வந்தனம் வளைக்கொரு வந்தனம் விழிக்கொரு வந்தனம் வாஎனும் ஓர்
மொழியே சொலுநீ   மணங்கிளர்ந்தநல் உடம்பு இலங்கிடுமதங்கி யின்றுளம் மகிழ்ந் திடும்படி மான்மகளே எனைஆள் நிதியே . . . . . . எனும் மொழி பலநூறே”

குறையில்லாத நெற்றிச்சுட்டி ஒளிவீசும் ஸ்ரீதேவி எனும் தலைக்கோலம்  பல ஆபரணங்களை தரித்து   அடர்ந்த தினை விளையும் புனத்தை இடைவிடாது காவல் புரியுமாறு சீராக வளர்ந்த பைம் புனத்தில் தங்கி , அழகிய கிளியின் இனிமையான குரலில்   ஆலோலம் என்று கூவும் வேடவர்  பெருமை மிகுந்த மகள் என புகழ் பெற்ற  ஒரு மானாகிய கொடி போன்ற வள்ளியின் முன் முதன்மைவாய்ந்த  ஆசையுடன் வந்து  இந்த  காட்டில் வேட ரூபத்தோடு நின்று அழகிய மான் போன்றவளே   கனிரசம் போல இனிப்பவளே இனிமேல் நீ உன்னை அடைவதற்காக ஏங்கியிருக்கும் என்னை அணைத்து  எப்பொழுதும் என் மனம் குளிர்ந்திடும்படி  இசைந்து வருவாயாக. உனது மடிக்கு ஒரு வணக்கம்   பாதத்திற்கு ஒரு வணக்கம்  கரத்திற்கு ஒரு வணக்கம்  பார்வைக்கு ஒரு வணக்கம்,   என்னை வா என்று ஒரு சொல் பகர்வாய்  நறுமணம் வீசிடும் மேனி பிரகாசிக்கும்  ஆடல் பாடலில் வல்லவளே,  என்னுடைய உள்ளம் இன்று இன்புறும்படி   மான்மகளே  என்னை ஆட்கொள்ளும் பொக்கிஷமே  என்று பலவாறாகப் பேசியும்..

”படித்தவள் தன்கைகள் பிடித்துமுனம் சொன படிக்கு மணந்து அருள் அளித்த அனந்த கிருபா கரனே வரனே அரனே படர்ந்த செந்தமிழ் தினம் சொல் இன்பொடு பதம் குரங்குநர் உளம் தெளிந்து அருள்
பாவகியே சிகியூர் இறையே . . . . . . திருமலிசமர் ஊரா”

என்றெல்லாம் சொல்லி அவள் கரங்களைப் பற்றிக் கொண்டு முற் பிறவியில் வாக்கு கொடுத்தவாறு மணந்து அருளியவனே எல்லையற்ற கருணை உள்ளவனே  வரம் அருள்பவனே, சிவனே  இனிய தமிழ்ப் பாடல்களை தொடர்ந்து கூறி அன்புடன் உன் திருவடியை  வணங்குவார் நெஞ்சம்   தெரிந்து அருள்பவனே  அக்னியில் தோன்றிய முருகனே  மயிலேறும் பெருமானே  செல்வம் மிக்க திருப்போரூர் பெருமாளே!

 ”பவக்கடல் என்பது கடக்கவுநின் துணை பலித்திடவும் பிழை செறுத்திடவும் கவி பாடவும்நீ நடமாடவுமே  படர்ந்து தண்டயை நிதம் செயும்படிபணிந்த என்றனை நினைந்து வந்தருள் பாலனனே எனையாள் சிவனே . . . . . . வளர் அயில் முருகோனே.”

பிறவிக்கடலைக் கடப்பதற்கும் உன் உதவி  கிடைக் கவும், என் குறைகளைப் பொறுத்திடவும் நான் செந்தமிழ்ப் பாடல் பாடவும் நீ நடனமாடவும் என்னிடம் எப்பொழுதும் தங்கி குளிர்ந்த அருள் செய்ய வேண்டி உன்னை வணங்கும் என்னை நினைந்து என்னிடம் வந்து அருள் செய்,   எனைக்  காக்கின்ற கடவுளே, எனை ஆளும் ஆறுமுகச் சிவனே. நீண்ட வேலாயுத்தை உடையவனே.

பாகம் 3 – நெய் (பட்டியலுக்கு)
வஞ்சகரின் கூட்டு இல்லாமலும், தொண்டர்களின் அணிமையும், சிவ – சக்தியரின் தாண்டவக் கோலமும், கந்தபிரானின் காட்சிக்காக ஏங்கும் தன்மையும் காண்மின்.
”வஞ்சம் சூதொன்றும்பேர் துன்பம் சங்கடம் மண்டும் பேர் மங்கும்பேய் நம்பும்பேர் துஞ்சும் புன்சொல் வழங்கும் பேர் மான் கணார் பெணார் தமாலினான்  மதியதுகெட்டுத் திரிபவர்தித்திப்பு  என மது துய்த்துச் சுழல்பவர் இச்சித்தே மனமுயிர் உட்கச் சிதைத்துமே நுகர்த்தின துக்கக் குணத்தினோர்  வசையுறு துட்டச் சினத்தினோர் மடிசொல மெத்தச் சுறுக்குளோர்  வலிஏறிய கூரமுளோர் உதவார்  நடு ஏதுமிலார் இழிவார் களவோர் மணமலர் அடியிணை விடுபவர் தமையினும் நணுகிட எனைவிடுவது சரி இலையே . . . . . . தொண்டர்கள் பதிசேராய்”

சூதும் வஞ்சனையும் மிக்கவரும்,துன்பத்திலும் வருத்தத்திலும் உழல்பவர்களும், அழியும் பேய்களை நம்புபவர்களும்  கடுமையாகப் பேசுபவர்களும்  மான்விழியுடைய வஞ்சியர்களிடம் கொண்ட மயக்கத்தால் அறிவு கெட்டு அலைபவர்  இனிமை என நினைத்து  மது அருந்திச் சுழன்று ஆடுபவர்கள் விருப்பமொடு கொல்லப் படும் பிராணிகள் உயிரும் உள்ளமும் நடுங்கும்படியாக உயிர்களைக் கொன்று  தினந்தோறும் உணவாகக் கொள்ளும் கொடும் குணத்தினர் பழிக்கும்படியான கோபத்தைக் கொண்டவர்களும் கோள் சொல்லுவதில் அவசரப் படுவோர்  வன்மை கொண்ட பொறாமை குணத்தவர், யாருக்கும் எதுவும் கொடுக்காதவர் நீதியில்லாதவர், கீழோர், திருடர்கள்   உன் இரு பாத கமலங்களைச் சேராதவர்  இவர்களிடையே இன்னும் எனை சேர்ப்பது சரியில்லை  தயாவான் ஆன உனக்குப் பொருந்தாத  செயல் இது. உன் அடியாரிடம் எனைச் சேர்ப்பாயாக.

”  விஞ்சும்கார் நஞ்சம் தான் உண்டுந் திங்கள் அணிந்தும்கால்  வெம்பும்போதொண்செந்தாள் கொண்டஞ்சு அஞ்சஉதைந்தும்பூமீன் பதா கையோன் மெய்வீயு மா  விழியை விழித்துக் கடுக எரித்துக்  கரியை உரித்துத் தனுமிசை சுற்றிக்கோள்
விழைவறு சுத்தச் சிறப்பினார்  பிணைமழு சத்திக் கரத்தினார்  விஜய உடுக்கைப் பிடித்துளார்
புரமது எரிக்கச் சிரித்துளார்    விதி மாதவனார் அறியா வடிவோர்  ஒருபாதி பெணாய் ஒளிர்வோர் சுசிநீள்
 விடைதனில் இவர்பவர் பணபணம் அணிபவர் கனைகழல் ஒலிதர நடமிடுபவர்சேய் . . . . . . என்றுள குருநாதா”

கடுமையான கரிய விஷத்தைத் தானே உண்டும்  சந்திரனை தரித்துக் கொண்டும்   மார்க்கண்டேயனை நோக்கி யமன் கோபித்து வரும்போது  செம்மையான கால்களினால் காலனின்  ஐம் பொறிகளும் கலங்குமாறு உதைத்தும் அழகிய மீன் கொடியோனாகிய மன்மதனுடைய  அழகிய உடல் அழியுமாறு  நெற்றிக் கண்ணைத் திறந்து விரைவில் அவனை எரித்து   கஜமுகாசுரனான யானையைக் கிழித்து  அவன் தோலைத் தன் உடம்பில் போர்த்திக் கொண்ட
விருப்பு வெறுப்பு அற்ற தூய்மையானவரும்  மான் மழு சூலம் ஏந்தியவரும் வெற்றியைத் தரும் உடுக்கையை கையில் ஏந்தியவரும்   புன்முறுவல் பூத்து திரிபுரத்தை எரித்தவரும்  பிரமனும் திருமாலும் அறியாத ஒரு வடிவமெடுத்தவரும்  பார்வதிக்கு தன் உடம்பில் ஒரு பாதியைத் தந்து விளங்குபவரும்  தூயதான வெள்ளை ரிஷபத்தின் மேல் விளங்குபவரும் படமெடுத்தாடும் பாம்பை தரித்தவரும் கால்களில் அணிந்த கழல்கள் ஒலி தருமாறு நடமாடும் சிவபெருமானின் குமரன் என்று விளங்கும் குருநாதனே.

”தஞ்சம் சேர் சொந்தம் சாலம்செம்பங்கய மஞ்சுங்கால்  தந்தந்தா தந்தந்தா தந்தந் தந்தன தந்தந்தா தாம் ததீ ததீ ததீ ததீ ததிமிதி தத்தித் தரிகிட தத்தத்  திரிகிட தத்தத் தெயென நடிக்கச்சூழ் தனி நடனக்ருத் தியத்தினாள் மகிடனை வெட்டிச் சிதைத்துளாள்  தடமிகு முக்கட் கயத்தினாள் சுரதன் உவக்கப் பகுத்துளாள் சமிகூ விளமோடு அறுகார் அணிவாள்  ஒருகோ டுடையோன் அனையாய் வருவாள்
சதுமறை களும்வழி படவளர் பவண்மலை மகளென வொருபெயருடையவள் சுதனே  . . . . . . அண்டர்கள் தொழுதேவா”

சரணடைவதற்கு உரிமை மிகுந்த அழகிய தாமரைமலர்களும் நாணும்படி உடைய அழகிய திருவடிகள்  தந்தந்தா தந்தந்தா தந்தந் தந்தன தந்தந்தா தாந்ததீ ததீ ததீ ததீ ததிமிதி தத்தித் தரிகிட தத்தத் திரிகிட தத்தத்தெயென சுழன்று நடனமாடும்
நடனத்தைத் தொழிலாய் உடையவள்  மஹிஷா சுரனைக் கொன்றவள்  விசாலமான முக்கண்கள் உடைய மேன்மை தங்கியவள்  சிவன் மகிழும்படியாக அவன் உடலில் பாதியானவள்  வன்னி, வில்வம் அறுகு மற்றும் ஆத்தி முதலிய மாலைகளை  அணிந்துள்ளவள்  ஓற்றைத் தந்தமுடைய கணபதியின் தாயாய் வருபவள் நான்கு மறைகளும் துதி செய்ய, அவைகளை எல்லாம் விட உயர்ந்து இருப்பவள்  பார்வதி எனும் சிறந்த நாமம் தாங்கி இருப்பவளின் மகனே தேவர்கள் வணங்கும் தலைவனே!

”பிஞ்சம்சூழ் மஞ்சொண் சேயும்சந்தங்கொள் பதங்கங்கூர்  பிம்பம்போல் அங்கம் சாருங்கண் கண்கள்இலங்கும் சீர் ஓங்கவே உலாவு கால் விணோர்  பிரமனொடு எட்டுக் குலகிரி திக்குக் கரியொடு துத்திப் படவர உட்கப்பார் பிளிற நடத்திக் களித்தவா  கிரிகெட எக்கித் துளைத்தவா பிரியக மெத்தத் தரித்தவா
தமியனை நச்சிச் சுளித்தவா  பிணமா முனமே அருள்வாய் அருள்வாய் துனியாவையு நீ கடியாய் கடியாய் பிசியொடு பலபிழை பொறுபொறு பொறுபொறு சததமு மறைவறு திருவடி தரவா . . . . . . என்களி முருகோனே ”.

தன்னுடைய பின்புறத்தில் உள்ள ஒளி வீசுகின்ற தோகையில்  விசிறி போன்று நீண்டு மெலிந்துள்ள இறக்கைகளில் ஆங்காங்கே சிறப்பான  கண்ணாடி போன்று ஒளி வீசும் கண்களை உடைய தோகையை உடலில் கொண்ட மயிலானது மிக அழகாக உலவி வரும் போது, தேவர்களும்  ப்ரம்மாவோடு  அஷ்ட திக் கஜங்களும் உடலில் புள்ளிகள் நிறைந்த ஆதிசேஷனும் அஞ்ச, நிலமும் அதிர  மயிலினை நடத்தி மகிழ்ந்தவனே,  க்ரௌஞ்ச மலையை துளைத்தவனே கடம்ப மாலையை விருப்பமுடன் அணிந்தவனே  அடியேனை விரும்பி வந்து கோபித்து ஆட்கொண்டவனே
நான் இறக்கும் முன் அருள்வாய் அருள்வாய் துன்பத்தை யெல்லாம் துடைப்பாய், பொய்யோடு பல குற்றங்களைப் பொறுத் தருள்வாய், எப்பொழுதும் வஞ்சனையற்ற நின் பதங்களைத் தர வா, எனக்கு இன்பப் பொருளான முருகனே.

 பாகம் 4 – சர்க்கரை
‘நாளும் கோளும் நன்மக்களுக்கு நன்மையே செய்யுமாம்.அவன் குடியிருக்கும் அறுபடைவீடு அவன் திருவடியின் தியானச் சிறப்புகூறக் கேண்மின்.

”மாதமும் தின வாரமும் திதி யோகமும் பல நாள்களும் படர் மாதிரம் திரி கோள்களும் கழல் பேணும் அன்பர் கள் பால் நலம் தர  வற்சலம் அதுசெயும் அருட்குணா சிறந்த விற்பனர் அகக்கணா மற்புய அசுரரை ஒழித்தவா அனந்த சித்துரு எடுத்தவாமால் அயன் சுரர்கோனும் உம்பர் எலாரும் வந்தனமே புரிந்திடு வானவன் சுடர் வேலவன் குருஞான ந்தபிரான் எனும்படி மத்தக மிசைமுடி தரித்தவா குளிர்ந்த கத்திகை பரித்தவா மட்டறும் இகல் அயில் பிடித்தவா
சிவந்த அக்கினி நுதற்கணா  . . சிவகுரு எனும் நாதா.”

மாதம், நாள், வாரம், திதி மற்றும் யோகம் பலநாள்களும்  பல நட்சத்திரங்களும் வானத்தில் உலவுகின்ற கிரகங்களும், உன் திருவடியை சரணாகதி அடைந்த அன்பர்கட்கு இவை யெல்லாம் நன்மை செய்ய பேரன்பு புரியும் அருள் உடையவனே கற்றறிந்த பெரியோரின் உள்ளத்தில் உலவுகின்றவனே  வலிமைகொண்ட தோள்களுடைய அரக்கரை அழித்தவனே
அளவில்லா ஞானத் திருமேனி எடுத்தவனே, திருமால், பிரமன், இந்திரன் மற்றும் தேவர்கள் யாவரும் வணங்கும் தேவாதிதேவன்  சுடர்வேலவன் குரு ஞான கந்தபிரான் எனும்படி  ஒளி வீசும் வேலை ஏந்தியவனே, குருவே, கந்தப் பெருமானே எனும்படி  கிரீடத்தை சூட்டிக் கொண்டவா,  சில்லென்ற கடம்ப மாலைகளை மார்பினில் சுமந்தவனே,  எல்லையில்லாத பெருமையை உடைய வேலைப் பிடித்தவனே,  செந்தழலை கண்ணாக நெற்றியில் உடையவனே பரமசிவனுக்கும் குருவான தலைவனே!

  ”நாத இங்கித வேதமும் பல்  புராணமும் கலைஆகமங்களும் நாத உன் தனி வாயில் வந்தனவே எனுந்துணிபே அறிந்தபின் நச்சுவது இவண்எது  கணித்தையோ செறிந்த ஷட்பகை கெடுத்துமே நட்புடை அருளமிழ்து உணில் சதா சிறந்த துத்தியை அளிக்குமேநாளும் இன்புஉயர் தேனினும் சுவை  ஈயும் விண்டலமே வரும் சுரர் நாடியுண்டிடு  போஜனம் தனி லேயும் விஞ்சிடுமே கரும்பொடு  நட்டம் இன் முப்பழ முவர்க்குமே  விளைந்த  சர்க்கரை கசக்குமேநற்சுசி முற்றிய பயத்தொடே கலந்த புத்தமு தினிக்குமோ . . . . . . அதை இனி அருளாயோ.”

 இனிமையான இசையுடைய வேதமும், பலவகை புராணங்களும் மற்ற எல்லா  கலைகளும் ஆகமங்களும் உன் திருமுகத்திலிருந்து தோன்றியவையே  என்று நிச்சயமாகத் தெரிந்து கொண்ட பின்னர்  எப்பொருளை மதித்து பெருமையாகக் கூறுவது ? ஆறு துர்க்குணங் களை அழித்து  நீ அன்புடன் கொடுக்கும் அமுதத்தை உண்டால் அனவரதமும் ஆனந்தத்தை கொடுக்குமே,  தினமும் தேனினும் சிறந்த சுவையைத் தரும் விண்ணுலகில் வாழும் தேவர்கள் விரும்பி உண்ணும்  உணவாகிய அமுதத்தையும் மிஞ்சிவிடும்; கரும்பிலி ருந்து வந்த சர்க்கரை கூட கசப்பாகும்  மேலும் குற்றமில்லாத முக்கனிகளும் சுவை தாரா,  தூய நல்ல பாலில் ஆக்கிய சோறும் தான் தித்திக்குமோ
அந்த மேலான அமுதத்தை நீ எனக்குத் தர மாட்டாயோ ?

  ‘பூதலம் தனிலேயு (ம்) நன்கு உடை மீதலம் தனி லேயும் வண்டு அறு பூ மலர்ந்தவு னாத வம்பத நேயம் என்பதுவே தினம் திகழ் பொற்புறும் அழகது கொடுக்குமே  உயர்ந்த மெய்ப்பெயர் புணர்த்துமே பொய்த்திட வினைகளை அறுக்குமே மிகுந்த சித்திகள் பெருக்குமே பூரணம் தருமே நிரம்பு எழில்  ஆதனம் தருமேஅணிந்திடு பூடணம் தருமே இகந்தனில் வாழ்வதும் தருமே உடம்பொடு பொக்கறு புகழினை அளிக்குமே  பிறந்து செத்திடல் தொலைக்குமே
புத்தியில் அறிவினை விளக்குமே நிறைந்த முத்தியும் இசைக்குமே . . . . . . இதைநிதம் உதவாயோ ”.

இந்த  பூமியிலும், மேன்மை தங்கிய விண்ணுலகிலும் ,வண்டு மொய்க்காத மலர்கள் போன்றதும், அணிகளினால் ஒலி செய்வதுமான திருவடிகள் மீது  ஏற்படும் அன்பு அனவரதமும் விளங்கும்
 பொலிவுறும் அழகைக் கொடுக்கும்  ஓங்கிய புகழைக் கொடுக்கும்,   இரு வினைகளைக் களையும்,   உயர்ந்த சித்திகள் அளிக்குமே , முழுமையைத் தரும் அழகுடன்  செல்வமும் தரும், ஆபரணங்களையும் தரும் ,  இந்த உலகத்தினில் இந்த உடலிலேயே நல்ல வாழ்வைத் தரும்   நல்ல புகழைக் கொடுக்கும் , ஜனன மரணத்தை அழிக்கும் ,  அதனால் கூடிவரும் முக்தியை கொடுக்கும், இதை நீ தினமும் அளித்து உதவி புரிய மாட்டாயா முருகா ?

  4*4. ” சீதளம் சொரி கோதில் பங்கயமே  மலர்ந்திடு வாவி தங்கிய  சீர் அடர்ந்தவிர் ஆவினன்குடி ஏரகம் பரபூத ரம்சிவ சித்தரும் முனிவரும் வசித்த  சோலையும் திரைக்கடல் அடிக்கும்வாய்  செற்கணம் உலவிடு பொருப்பெலாம் இருந்து அளித்தருள் அயில் கையா  தேன் உறைந்திடு கான கந்தனில்  மானிளம் சுதையால் இரும் சரை  சேர் உடம்பு தளாட வந்த சன்யாச சுந்தரரூப அம்பர சிற்பர வெளிதனில் நடிக்குமா  அகண்ட தத்துவ பரத்துவா  செப்பரும் ரகசிய நிலைக்குளே  விளங்கு தற்பர திரித்துவா . . . . . . திருவளர் முருகோனே”   

குளிர்ந்த குற்றமற்ற தாமரை  மலர்ந்திடும் குளங்கள் மிகுந்துள்ள  திருவாவினன்குடி, திருவேரகம், திருப்பரங்குன்றம் மற்றும்   சிவ சித்தர்களும் முனிவர்களும் உறையும்  பழமுதிர்சோலையும், கடல் அலைகள் பொங்கும் சீரலைவாயும் மேகங்கள் உலாவருகின்ற குன்றுதோராடலிலும் எழுந்தருளி அருள்செய்யும், கையில் வேல் ஏந்தியவனே
 தேன்நிறைந்த மலர்கள் உள்ள காட்டினில்  மான் ஈன்ற பெண்ணாகிய வள்ளியை மணக்க  நரை விழுந்த உடம்பு தள்ளாடி  வந்த அழகான துறவியே
வானமாகிய ஞானப் பெருவெளியில் நாடகமாடும் பெரிய  முழுமையான தத்துவ பரமாத்மனே
 கூறுவதற்கு அரிதான தத்பர ஆலயம் எனும் மனக்குகையில்  நிலை கொண்டவனே  உன் அருளை வளரச் செய்பவனே முருகனே.

 பாகம் 5 – தேன்
‘கந்தன் ஆடி வரும் வண்ணத்தைக் கண்டு, அண்ட சராசரமும் அதில் உள்ள அத்தனை பேர்களும் இன்பமுடன் ஆடும் அழகைக் காண்மின்.
”சூலதரனார் ஆட ஓதிமகளாட நனி  தொழுபூத கணமாட அரி ஆட அயனோடு தூயகலை மாது ஆட மா நளினி யாட உயர் சுரரோடு சுரலோக பதியாட எலியேறு  சூகைமுகனார் ஆட மூரிமுகன் ஆட ஓரு தொடர்ஞாளி மிசைஊரு மழவாட வசுவீர சூலிபதி தானாட நீலநம னாடநிறை சுசிநார இறையாட வலிசால் நிருதியாட . . . . . . அரிகரமகனோடே”

திரி சூலம் கையில் எடுத்த சிவன் ஆட,  மலைம களாட நன்றாகத் தொழும் பூதகணங்கள் ஆட,  திருமாலாட பிரமனொடு கலைமகளாட ,அழகிய லக்ஷ்மி ஆட,  உயர்ந்த தேவர்களுடன் இந்திர னாட ,,மூஞ்சூறை வாகனமாகக் கொண்ட யானை முகனாராட,  நந்தியெம்பெருமான் ஆட,  நாய் பின் தொடர வரும் பைரவரும் ஆட , அஷ்ட வசுக்களும், பத்திரகாளியும் அவள் பதியான வீரபத்திரனுமாட, க ருநிறத்தவனான யமன் ஆட, தூய்மையான கடலின் தலைவனாம் வருணனாடவலிமை மிகுந்த நிருதி (தென்மேற்கு திக்கின் அதிபதி) ஆட, அரி, அரன் மகன் ஐயப்பனுடன்  ஆட, இவ்வாறு பிரபஞ்சமே ஆட..

  5 – 2
”காலிலியு மேயாட வாழ்நிதிய னாடமிகு   கனஞால மகளாட வரவேணி சசிதேவி காமமத வேளாட மாமைரதி யாட அவிர் கதிராட மதியாட மணிநாக அரசு ஓகை காணும் முனிவோராட மாணறமினாட இரு கழலாட அழகாய தளையாட மணிமாசு இல்
கானமயில் தானாட ஞான அயிலாட ஒளிர் கரவாள மதுவாட எறிசூல மழுவாட . . . . . . வயிரமல் எறுழோடே”

கால் இல்லாத வாயு ஆட ,   குபேரனாட , பெருமை மிகுந்த பூமி மகள் ஆட , கங்கை, இந்திராணி மற்றும் மன்மதனாட  அழகு நிறைந்த ரதி தேவி ஆட , சூரியனும் சந்திரனுமாட , மணி அணிந்த நாகராஜன் ஆட ,  பேரின்பம் தெரிந்த முனிவர் ஆட, மாண்புமிக்க அறக்கடவுளாட ,  கழல்களும், அழகிய சிலம்புகளும் ஆட , அழகிய குற்றமற்ற மயிலாட ஒளிபொருந்திய வாள் கரத்தினில் ஆட ,  எறிகின்ற சூலம் ஆட , வயிரம் பாய்ந்த தண்டாயுதமாட.

..5 – 3
  ”கோல அரை ஞாணாட நூன்மருமமாட நிரை கொளுநீப அணியாட உடையாட அடல்நீடு
கோழி அயராது ஆட வாகுவணி யாடமிளிர்  குழையாட வளையாட உபயாறு கரமேசில் கோகநத மாறாறொடாறு விழியாட மலர் குழகாய இதழாட ஒளிராறு சிரமோடு கூறுகலை நாவாட மூரல் ஒளியாட வலர் குவடேறு புயமாட மிடறாட மடியாட . . . . . . அகன்முதுகுரமோடே…..

”அழகிய அரைஞாணாட,  மார்பில் பூணூல் ஆட , மணமுள்ள கடம்ப மாலை ஆட, ஆடை ஆட, வலிமை மிக்க சேவல் கோழி இடைவிடாது ஆட ,தோள் வளை ஆட, காதுகளில் அழகிய குழை ஆட , பன்னிரு கரங்களில் வளைஆட ,மென்மையான, குற்றமற்ற தாமரைமலர் போன்ற பன்னிரு விழிகளுடன் ஆறு நெற்றிக்கண்களும் ஆட ,மலர் போன்ற அழகுடன் இதழாட ஆறு சிரங்களும் அழகுடன் விளங்க ,வேதங்களைக் கூறும் முகமாட ,  பற்கள் பளீரென்று ஒளிவீசிட  பெரிய மலைகளை ஒத்த புயங்களாட, கழுத்தும் மடியும் ஆட ,கன்ற வலிய முதுகோடு…

5 – 4
”நாலுமறை யேயாட மேல் நுதல்களாட வியன்  நலியாத எழிலாட அழியாத குணமாடநாகரிகமே  மேவு வேடர்மகளாட அருள் நயவானை மகளாட முசுவான முகனாட நாரதமகான் ஆட ஓசை  முனி ஆட  விற நவவீரர் புதராட ஒரு காவடியன் ஆடஞான அடியாராடமாணவர்கள் ஆட இதை நவில் தாசன் உடனாட இதுவேளை எணிவாகொள் . அருள்மலி முருகோனே”.

‘ சதுர் வேதம் எனப்படும் நான்கு வேதங்களும் ஆட,  மேன்மையுடைய புருவங்களாட,பெருமை குன்றாத அழகே ஆட அழியாத குணமாட – கருணை நிறைந்த முருகா, உன் குணம்  ஆட , வசீகரம் கொண்ட வள்ளி ஆட நயந்து அருள்தரும் தெய்வயானை அம்மை ஆட ,முசுகுந்த மன்னன் ஆட ,  நாரத முனிவர் ஆட, சந்தப் புலவர் அருணகிரியார் ஆட , வெற்றிகொள் நவ வீரர்களும் அறிஞர்களும் ஆட,   ஒப்பற்ற காவடி எடுத்த இடும்பனாட ஞானம் நிறைந்த பக்தர்கள் ஆட, மாட்சிமை தங்கிய பெரியோர் ஆட,   இப்பாடலைப் பாடும் தாசனாகிய அடியேனும் ஆட இவ் வேளை
யில் என்னை எண்ணி இங்கு வா, என்னை ஆட்கொள்,  மிகுந்த அருளுடைய முருகோனே.

பரிபூரண  பஞ்சாமிர்த வண்ணம் இனித்ததே. “

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *