MANI THVEEPAM 2 – J K SIVAN

மணித்வீபம்  2 –     நங்கநல்லூர்   J K  SIVAN 

மகோன்னதமான  பரமேஸ்வரியின்  வாசஸ்தலம் மணித்வீபம். அது எந்த கோவில்,எந்தவூரில்   என்று சிலர்  கேட்கும்போது என்னால் எப்படி மணித்வீபத்துக்கு வழி சொல்லமுடியும்?  ”எந்த ஊர்  என்றவனே  இருக்கும் ஊரை சொல்லவா?”  என்று  பாட வேண்டி இருக்கிறது.

லலிதாம்பிகை சர்வ ஜீவராசிகளின்  த்ரிகரணத்துக்கும்  ஆதாரமாக  வீற்றிருக்கிறாள். அனைத்து சக்தி பீடங்களிலும் மணித்வீபம் மிகவும் உயர்ந்தது. இந்த க்ஷேத்ரத்தை   மஹா தபஸ்விக்களும், ஆத்ம ஞானிகளும் மட்டுமே  உணரமுடியும். அறிய முடியும்.  அவர்கள்  உயர்ந்த சாயுஜ்ய பதவி பெறுபவர்கள். மணித்வீபத்தை உணர்தவர்களுக்கு வியாதியோ, கவலையோ, பசி,தாகம், மூப்போ, வயதோ கிடையாது.    நித்யமான சுகத்தை அனுபவிப் பவர்கள். சதா சர்வமும் அம்பாளின் அனுக்ரஹம் பெற்று அவளை நினைத்து தியானத்தில் மூழ்குபவர்கள்.  மணி த்வீபத்தை நினைப்பதற்கே நாம் பல ஜென்ம புண்யம்  செய்திருக்கவேண்டும்.   அம்ருதத்தின் ஒரு துளி பருகினாலே அமரத்துவம் கிடைக்கும் எனும்போது  அம்ருத கடலில் நடுவே மணித்வீபத்தில் வீற்றிருக்கும் அம்பிகையை நினைத்தால் எவ்வளவு புண்யம் என்று யோசித்தாலே அதன் மஹிமை புலப்படும்!.  

அம்பாளின் இருப்பிடமான  அம்ருத ஸாகரத்தின் நடுவில் சிந்தாமணி க்ரஹத்தில்  சகல வைபவங்களோடு ஜகன்மாதா  வீற்றிருக்கிறாள். சிந்தாமணி க்ரஹம்  பல நவரத்ன மணிகளால்  ஆன ப்ரஹாரங்களை  ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக உடையது.  அடேயப்பா,   இந்த  ப்ராஹாரங்களின் இடையில் கணக்கில்லாத  புஷ்ப ஜாதி  விருக்ஷங்கள் வாடாத நறுமணமிக்க  வண்ண வண்ண புஷ்பங்கள் பூத்துகுலுங்க நிற்கின்றன. அந்த புஷ்பங்கள் கீழே  சொரிந்து  வர்ண வர்ண  பட்டுப் பாய்களாக மிருதுவாக நடக்க உதவுகிறது.  நவரத்ன கற்கள் ஒளி கண்ணைப் பறிக்கிறது.  ஸ்படிக மணி மண்டபங்கள்  சித்ர வேலைப்பாடுகளுடன்  ஆங்காங்கே காணப்படுகிறது. வர்ணிக்க இயலாத அழகுடைய  அம்பாளின்  மணித்வீபத்தை நினைப்பதற்கே  புண்யம் செய்திருக்கவேண்டும்.  ஆயிரங் கால் மண்டபத்தைத்  தாண்டியவுடனே ,  நான்கு மண்டபங்கள்  கம்பீரமாக உயர்ந்து காணப்படுகிறது.  ஒன்று  ஸ்ருங்கார மண்டபம், ஒன்று  ஞான மண்டபம்,  மூன்றாவது முக்தி மண்டபம், அடுத்த நாலாவது  ஏகாந்த மண்டபம். ஸ்ருங்கார மண்டபத்தில் காமேஸ்வரனோடு பரமேஸ்வரி வீற்றிருக்கிறாள்.  அவளுடைய மந்த்ரிணிகளுடன் கலந்து ஞானமண்டபத்தில்  சர்வ ஜீவராசிகளின் ஞான நிலையை அருள்கிறாள். முக்தி மண்டபத்தில் ஜீவன் முக்தர்களுக்கு அருள் பாலிக்கிறாள். பரமேஸ்வரனை தியானித்தவர் ஏகாந்த மண்டபத்தில் காமேஸ்வரி தனித்திருக்கிறாள்.

சர்வ சாஸ்த்ர உபநிஷத்துக்களின்  சாரம் தான் சிந்தாமணிக்ரஹம்.அதை நினைத்தாலே  சகல பாபங்களும் அழியும். அம்பாளை ஸர்வாலங்கார  ப்ரியையாக,  சர்வ பூஷண பூஷிதையாக,  ஸருங்கார ரஸப்ராதானியாக,  ஸ்ரீ சக்ர ஸாம்ராஜ்ய அதிபதியாக, சங்கீத ஸாஸ்த்ர  ரசிகையாக, ரமாவாணி ஸேவிதையாக ஸ்ரீவித்யா மந்திரமயமாக இருக்கிறாள். 

அம்பாளை என்னவென்றெல்லாம் அழைக்கலாம்?  பாசாங்குசை,  சர்வ வேதாந்த  ஆச்ரிதை, கம்பீராம்ருத  ரூபிணி, மதுர ம்ருது  பாஷிணி,  பக்த வாத்சல்ய பரிமிதை, மாத்ருகாக்ஷர  மாலாலங்க்ரிணி,  தேவ நமஸ்க்ரித  வைபவி ,  ஸ்ரீ சக்ர மத்ய  த்ரிகோண  பிந்து சிவா ஸாமாஸ்யானந்தமயி,  ஏகாக்ஷர,  பஞ்ச, தசாக்ஷர,நவாக்ஷர,  பாலா மந்த்ர, மஹா ஷோடஸ அக்ஷர  மஹோன்னத  ஸ்ரீ சரணி, திவ்ய பரம மங்கள விக்ரஹ மூர்த்தி.

அவளைப்பற்றி எழுதவோ, சொல்லவோ,பேசவோ, பாடவோ, பல யுகங்கள் போதாது. ஆயிர முகங்கள் போதாது.  இரவு பகல் போதாது, கணக்கற்ற காலங்கள் போதாது. மனதால் முடிந்தவரை நினைத்துப் பார்ப்போம்.
அம்பாளுக்குப் பக்கத்தில் இருப்பது யார் தெரியுமா?  வாக் அதிபதி, வானோர்களால் வணங்கப்படும், வெண் தாமரை மலரில் வெண்  பட்டாடை உடுத்திய  கலைவாணி, ஸரஸ்வதி .  இன்னொரு புறம்   குபேரனுக்கே  செல்வமளிக்கும் நிதி தலைவி, செந்தாமரை மலரில் வீற்றிருக்கும்,  சிவந்த பட்டு உடுத்திய ஸ்ரீ தேவி, மஹாலக்ஷ்மி.  இருவரும் கவரி வீச நடுவே   மஹாராஞி அம்பிகை, திரிபுர லலிதாதேவி. ஸ்தோத்திரங்கள் சொல்வது எங்கும் எதிரொலிக்கிறது.
தொடரும் 

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *