SURAIKKAI SWAMIGAL – J K SIVAN

சுரைக்காய் ஸ்வாமிகள் —   நங்கநல்லூர்  J K  SIVAN 

சனிக்கிழமைகளில்   திருமலை  திருப்பதி வேங்கடேசனை நினைத்து ஏதாவது ஒரு நாலு வரி எழுதும் வழக்கம் ஆயிற்றே.  ஏனோ மனம்  முன்பொரு தரம் ஏழுமலையான் தரிசனம் முடித்து, காரில் கீழே வந்து திருச்சானூரில் அலமேலு மங்கத்தாயாரை தரிசித்து விட்டு சென்னையை நோக்கி வந்ததைப்  பற்றி  நினைவு  கூர்நதது.

திருச்சானூரை விட்டு மனம் நிறைய அலர்மேல் மங்காவை நிரப்பிக்கொண்டு காற்றோட்டமாக சென்னையை நோக்கி செல்லும் அருமையான ரஸ்தாவில் நண்பர்  அரும்பாக்கம் ஸ்ரீனிவாசன் காரில்  பயணித்தோம். திருப்பதியிலிருந்து கிட்டத்தட்ட நாற்பது கி.மீ. தூரத்தில் போகும் வழியில் தான் இருக்கிறது ஸ்ரீ கல்யாண வெங்கடேஸ்வரர் ஆலயம். அது இருக்கும் ஊர் நாராயணவனம். ”வனம்” பேரில் தான் இப்போது. காடெல்லாம்  நகரமாகி விட்டதே.

 ஸ்ரீனிவாசன் பத்மாவதியை கையைப்  பிடித்து அழைத்துக்கொண்டு திருச்சானூர் சென்றபோது இந்த ஸ்தலம்  வனம்  தான். எங்கும் அடர்த்தியான மரங்கள் நிறைந்த   நாராயண வனம். இங்கு தான் அந்த ஆகாசராஜன் பெண் பத்மாவதிக்கும் வகுளாதேவி வளர்த்த ஸ்ரீனிவாசனுக்கும்தெய்வத்  திருமணம் நடந்தது. அதனால் தான் இங்கே பெருமாளுக்கு பெயர்  கல்யாண வேங்கடேஸ்வரன் . காரில் சென்று கொண்டிருக்கும்போது தூரத்தில் திருமலைகள் ஏழின் எழில் தொடர்கள் அழகாக தெரிந்தன. அங்கு சென்று நின்று பல யுகமாக நிற்கும்  ஸ்ரீனிவாசனைத் தரிசித்தது மனதில் மீண்டும்  மீண்டும்  தோன்றியது. கொஞ்சம் கொஞ்சமாக அந்த இனிய மலைகள் மறைந்து கொண்டே வந்தன.
நாராயண வனத்தில் உள்ள  வெங்கடேசன் ஆலயம் பல ஆயிரம் வருஷங்கள் வயதானவன். அமைதி  கொஞ்சும்  தெலுங்கு தேச கோவில். ஐந்து மாட கோபுரம் .முதலில் இந்த ஆலயத்தை நிர்மாணித்தவர் பத்மாவதியின் சகோதரனும் ஆகாச ராஜன் புத்ரனுமான இளவரசன். இந்த பிரதேசத்தை  சூர்ய வம்ச ராஜாக்கள் ஆண்ட காலம். . நாராயணவனத்தில் நான்கு கோவில்கள் இருக்கின்றன.
ஸ்ரீ பத்மாவதி அம்மவாரி கோவில். ஸ்ரீ சீதா லக்ஷ்மண சமேத ராமுலவாரி கோவில்.ஸ்ரீ ஆண்டாள் திருக்கோவில். ரங்கநாயகுல ஸ்ரீ சுவாமி கோவில்.
இந்த பிரதேச கோயில்களை திருப்பதி திருமலை  தேவஸ்தான நிர்வாகம் தான்  பராமரிக்கிறது. ஒரு பழைய விஷயம் இங்கு சொல்கிறேன்.  எனது சின்ன வயதில் என் வீட்டில் என் தகப்பனார் அடிக்கடி வீட்டில் சுரைக்காய் ஸ்வாமிகள் என்று பேசிக்  கொண்டிருப்பது ஞாபகம் வருகிறது. அது என்ன சுரைக்காய் மாங்காய் தேங்காய் ஸ்வாமிகள் என்று யோசிக்கிறீர்களா?. அப்படித்தான் எனக்கும் அப்போது தோன்றியது. எங்கள் வீட்டில் பூஜை அறையில் சுரைக்காய் ஸ்வாமிகள் படம் என் தாயார் வைத்திருந்ததை பார்த்த நினைவு  இருக்கிறது.  நாராயணவனம்  பெருமாள் கோவிலில்   நான் சின்ன வயதில் பார்த்த சுரைக்காய் ஸ்வாமிகள்  படம்  இருந்தது.  இவரை எங்கேயோ பார்த்திருக்கிறேனே என்று யோசித்தது, எங்கள் வீட்டில்  பூஜை அறையில் 75 வருஷங்களுக்கு முன்னால்  பார்த்தது ஞாபகம் வந்தது.
 கல்யாண வெங்கடேஸ்வரர் ஆலயத்திற்கு எதிரே தெருவில் கூப்பிடு தூரத்தில் ஒரு ஜீவ சமாதி இருக்கிறது. அதில் தான் சுரைக்காய் ஸ்வாமிகள் படத்தை  பல வருஷங்களுக்குப் பிறகு மறுபடியும் பார்த்தேன். தலைகொள்ளாமல் ஒரு பெரிய தலைப்பாகை அணிந்த முதுகு கூன் விழுந்த வயோதிகர் தான் ஸ்வாமிகள். அவரை சுரைக்காய் சித்தர் என்று போற்றி வழிபடும் பக்தர்கள் நிறைய பேர் உண்டு. என் அப்பாவையும் சேர்த்து தான் சொல்கிறேன். சுரைக்காய்  அவருக்கு ரொம்ப  பிடித்து சாப்பிடுவதால் அந்த பேர்  என்று முடிவு கட்டவேண்டாம். அவர் கையில்  எப்போதும் காய்ந்த சுரைக்காய் ஓட்டை தண்ணீர் குடிப்பதற்கும் உண்வை சாப்பிடவும் பாத்திரமாக  வைத்திருந்ததால் அந்த பெயர்.
சுரைக்காய் ஸ்வாமிகள் தினமும் தெருக்களில் செல்வார். எப்போது தோன்றுகிறதோ அப்போது யார் வீட்டிலாவது நுழைந்து உணவும் தண்ணீரும் பெறுவார். அவருக்கு தானம் கொடுத்தவர்கள்  வீட்டில் அமோகமாக செல்வம் கொழிக்குமாம் . நினைத்ததெல்லாம்  நடக்குமாம். கவலைகள் துன்பங்கள், நோய்கள் தீருமாம். சித்தர்களை பற்றி வரையறுத்து இப்படி தான் இருப்பார்கள்,  இப்படி  எல்லாம் செய்வார்கள் என்று எதுவும் சொல்லவே முடியாது.  ‘சித்தன் போக்கு சிவன் போக்கு’  என்பது ரொம்ப சரி.  சித்தர்கள்  ரொம்ப சக்திகள் நிரம்பியவர்கள் என்று மட்டும் புரிந்து கொண்டால் போதுமானது. சுரைக்காய் சித்தரோடு கூடவே இருந்த ஒருவர் திரு. செங்கல்வராய முதலியார். சுரைக்காய் சித்தரை சந்தித்து அருள் பெற்ற பக்தர்கள் அனுபவங்கள் பற்றி புத்தகம் எழுதியிருக்கிறார். 1911 இல் தெலுங்கில் ஒரு நூல் வந்தது. அது ஆங்கிலத் திலும் தமிழிலும் மொழி பெயர்ந்தது.
சித்தரை சுரைக்காய் இராமசாமி என்று சொல்லியிருக்கிறது. இரு நாய்களை கயிறு கட்டி இழுத்துச் செல்வார். குடும்பம் இல்லாதவர். உருவத்தில் இவர் சற்றே குட்டையானவர், மாநிறத்தவர். கிழிந்த உடையும், பெரிய தலைப்பாகையும் அணிந்திருப்பார். அவர் பேசும் சொற்கள் எளிதில் புரியாது. உள்ளர்த்தம் வேறாக இருக்கும். சமாதி அடையும்போது வயது இருநூறு என்பார்கள். சரியா தப்பா என்று யாருக்கும் தெரிய வழியில்லை.
திருப்பதிக்கு அருகில் ஒரு கிராமத்தில் பிறந்து திருவள்ளூரில் ஒரு கையில் கருடனை ஏந்திக் கொண்டு செல்வார் என்றும் ஒரு கதை உண்டு. சான்றுகள் வழக்கம்போல நமது நாட்டில் ஒன்றுமே இல்லை. ஓரிரவு 12.30 மணிக்கு சுரைக்காய் சித்தர் ஓர் ஏழைப்பெண் இறக்கப் போகிறாள்! குளத்தில் விழுந்து தற்கொலை செய்துகொள்ளப் போகிறாள்! உடனே விரைந்து சென்று அவளைக் காப்பாற்றுங்கள் என்று அழுதுகொண்டே சொன்னார். உடனே அவரது பக்தர்கள் அங்கிருந்த தோட்டத்தின் தொலைவான மூலையில் இருந்த ஒரு குளத்தில் சென்று தேடியபோது அங்கே எவரும் இருக்கவில்லை. ஓடிச் சென்று சித்தரிடம் தெரிவித்தபோது தவறான இடத்தில் தேடி இருக்கிறீர்களே. என்று கோபித்து வேறு ஒரு தொலைவிலுள்ள குளத்தைப் பற்றிய விவரம் சொல்ல அங்கே விரைந்து சென்று தேடியபோது ஒரு பெண் தற்கொலை செய்துகொள்ளும் முயற்சியாக குளத்தின் ஆழமான பகுதியில் அந்த நள்ளிரவில் குளத்தில் மூழ்கிவிட முயல்வதை பார்த்த அவர்கள் அவளை தடுத்து நிறுத்தி காப்பாற்றினார்கள் என்று ஒரு சேதி. சித்தர் சமாதி அடைவதற்கு சில மாதங்கள் முன்னர்  ஒரு பக்தர் அவரை தரிசித்து விடை பெறச் சென்றபோது  ”சுவாமி, மறுபடியும் எப்போ உங்களை தரிசிக்கிறது?” என கேட்க, ”சித்திரத்தில் இங்கே வைத்திருக்கும். அதைப் பாரேன் ” மறைமுகமாக தான் சமாதி அடையப்போவதை தெரிவித்தார் என்கிறார்கள். அந்த படத்தை தான் நானும் பார்த்து மேலே விவரித்தேன்.
ஓருநாள்  ஒரு  கிழவி தன் பேத்தியை அழைத்து வந்து  சுரைக்காய் ஸ்வாமிகள் சித்தரிடம் காண்பித்தாள். அந்த பெண்ணுக்கு நெடுநாள் விடாமல் தொடர்ந்து ஜுரம்.   பெண் மெலிந்து எலும்பும் தோலுமாக இருந்தாள். வைத்தியர்கள் கைவிட்டுவிட்டனர். சுரைக்காய்ச் சித்தர் அப்பெண்ணை ஆசிர்வதித்து தரையில் இருந்த மண்ணை எடுத்து அவள்  கையில் கொடுத்து   ”இந்தா மருந்து,  இதைச்  சாப்பிடு” என்கிறார். நோய் அகன்று பெண் சரியானாள் . 

இன்னொரு ஆச்சர்யம்.  ஒரு துணி வெளுக்கும் வண்ணான் ராஜ பிளவை  ரத்தக் கட்டியால் வலி தாங்க முடியாமல் துடித்துக்  கொண்டே  ஸ்வாமிகளிடம் வந்தான். அவனை ஆசிர்வதித்துக் கழுத்திலும் முதுகிலும் உள்ள பிளவையில் ”புளியை அரைத்து தடவு .சரியாயிடும்” எனச் சொல்ல அவ்வாறே செய்தவனுக்கு   ரெண்டு மூணு  நாளில்  கட்டி காணாமல் போய், பூர்ண குணம்.
1902 ஆகஸ்ட்  சுரைக்காய் சித்தர் சென்னையில் ஒரு வாரம் தங்கி இருந்த பொது  ” எனக்கு நேரமாகிவிட்டது. நீங்கள் எல்லாம் இங்கேயே இருங்கள்” என்று கூட இருந்தோரை விட்டுவிட்டு புருஷோத்தம நாயுடுவுடன் நாராயண வனத் திற்கு திரும்பிப்   அன்று இரவே புத்தூர் வந்து  அங்கே  தாங்கினார். அடுத்த நாள் காலை  ஒரு  பஜனை கோஷ்டியுடன்  சேர்ந்துகொண்டு பாடல்கள் பாடிக்கொண்டு நாராயண வனத்தை  அடைந்தார்.
 புருஷோத்தம நாயுடு, பாப்பைய செட்டி ஆகியோரிடம் ‘நான் நாளை மறுநாள் என்னுடைய ஊருக்குப் போகிறேன்’ என்றார். அன்று இரவு தம் தாகத்தைத் தணிக்க 10 படி தண்ணீர் குடித்தார். மறுநாள் ”என் மேல் நிறைய ஜலம் ஊற்று” என்கிறார். புருஷோத்தம நாயுடு 150 குடங்கள் தண்ணீர் கொண்டுவந்து அவர்மேல் ஊற்றினார். அப்போது நள்ளிரவு 12 மணி. சித்தர் வடக்கு நோக்கி அமர்ந்து கொண்டு   புருஷோத்தம  நாயுடுவிடம் ”தேங்காய் கற்பூரம் இருக்கா” ? என கேட்டார். நாயுடு பாப்பைய  செட்டி இருவருக்கும் தெரிந்துவிட்டது. சாமி சமாதியாகப் போகிறார் என்று.
மறுநாள் பகல் பன்னிரண்டு மணிக்கு தான் விடைபெறப்   போவதாக சித்தர் சைகை காட்டி வாய்  திறவாது அபய  ஹஸ்தம் காட்டி தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்று” என ஜாடை காட்டினார். அவ்வாறு செய்த  பின் புருஷோத்தம நாயுடுவின் மேல் மெதுவாகச் சாய்ந்தார். இறைவனோடு ஒன்றிவிட்டார்.
அடுத்த நாள் அவர் ஏற்கெனவே வழியில் வளர்த்திருந்த  நாகதாளிச் செடிகளை அகற்றி அங்கிருந்த குழிகளில் கூழாங் கற்களையும் மணலையும் நிரப்பிச் சீர்திருத்தி வைத்திருந்த நிலத்தில்  அவரது  பூத உடல்  அடக்கம் செய்யப்பட்டு   சமாதி நிறுவப்பட்டது.  அந்த இடம்  கோவிலானது.  இதெல்லாம் செங்கல்வராய முதலியார் புத்தகத்தில் சொல்லப்பட்ட  விஷயங்கள்.
ஒரு ருசிகர விஷயம். ஏழாம் எட்வர்டு மன்னர் (9th August 1902) முடிசூட்டிய நாளில் சுரைக்காய் சித்தர் சமாதி அடைந்தார். நான் முதல் முதலாக  நாராயண வனம் சென்றபோது   அநேக  பக்தர்கள் சுரைக்காய் ஸ்வாமிகள் நினைவாக சுரைக் காய்களை கொண்டுவந்து அவர் சமாதி கோவிலில் கட்டுவதைப் பார்த்தேன்.

நாராயணவனம் திருப்பதி செல்லும்  மெயின் பாதையில் இருப்பதால் நிறைய பஸ் வசதி இருக்கிறது. புத்தூர் ரயில் நிலையத்திலிருந்து மெதுவாக ஒரு சில கி.மீ. நடந்தும் செல்லலாம். சென்னையிலிருந்து சென்றால் ஏறக்குறைய 100 கி.மீ. இங்கிருந்து சற்று தூரத்தில் கைலாச கோனை நீர்வீழ்ச்சி இருக்கிறது. தண்ணீர் அதிகம் இல்லை.சொட்டு சொட்டு தான். இங்கிருந்து இன்னும் தள்ளி சென்றால் நாகலாபுரம் வரும். 

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1426

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *